Monday, August 24, 2009

சென்னை 370 - ஒரு மீள் பதிவு


நான் வசிக்கும் இந்த நகரம் தனது 370 வது பிறந்த நாளை கொண்டாடி விட்டு அதன் விழிகளை மெல்ல மூடி துயில் கொள்ள தயாராகி கொண்டிருந்தது, அதன் இயல்புக்கு மாறாக மெல்லிய சாரல் இரவின் ஈர பதத்தை இன்னும் அதிகரித்தது. நான் இருப்பது நரகமா, நகரமா என்ற கேள்வியை நோக்கி செல்லாமல், எனக்கும் இந்த நகரத்துக்குமான நெருக்கமான நாட்களை ஒரு கருப்பு வெள்ளை திரைப் படத்தை போல் மறு ஒலிபரப்பு செய்து கொண்டிருந்தது மனம் நான் கேட்காமலே.

மெட்ராஸ் என்று அழைக்கப்பட்ட இந்த சென்னைக்கு என் முதல் மூன்று வருகையும் ஒரு சுற்றுலா பயணமாகவே அமைந்தது.

பள்ளி மாணவனாக சுற்றுலா வந்த நாளில், பெரும் புயல் ஒன்று அதிகாலையில் சென்னையை கடந்து போய் இருந்தது. பார்க்கும் இடம் எங்கும் வெள்ளக் காடாகவும், அகன்ற சாலைகளை மறித்து உடைந்த மரங்களும் கிடந்தன. எங்களை வழி நடத்தி வந்த ஆசிரியர்கள் திகில் கொண்டனரே அன்றி நாங்கள் அல்ல. மெட்ராஸில் தான் தமிழ் சினிமா நட்சத்திரங்கள் எல்லோரும் இருக்கிறார்கள் என்று இங்கே வசித்த உறவுக்கார அக்கா ஒரு முறை கூறியிருந்ததால் அந்த மழை நாளிலும் ஏதாவது சினிமா நடிகர்களை பார்த்து விட மட்டோமா என்ற ஏக்கத்துடன், தலையை ஜன்னலுக்கு வெளியே விட்டு பார்த்து கொண்டிருந்தேன். எம்.ஜி.ஆர். சமாதியில் அவரது கடிகாரம் ஓடுவது கேட்கலாம் என்று யாரோ கிளப்பி விட காது வைத்து கேட்டது இன்னும் மனசுக்குள்ளே ஓடி கொண்டிருக்கிறது. அண்ணா சமாதியில் கிடந்த தண்ணீருக்கு அடியில் பாசி இருக்கிறது என அறியாமல் கால் வைத்து, பொத்தென விழுந்து விட கை வலியோடு தான் ஊர் திரும்ப வேண்டியது ஆயிற்று.


பின் சென்னைக்கான அடுத்த பயணம் சன் டிவி என்ற அதிஷ்ட தேவதை வழியாக வந்தது. போனால் போகிறது என்று கிரிக்கெட் க்விஸ்ல் நானும் எழுதி போட.... அட சென்னை சேப்பாக்கத்தில் நடந்த உலக கோப்பை கால் இறுதி ஆட்டத்தை காண வாய்ப்பு.... இந்த முறை சென்னையை நோக்கி ரயில் பயணம். என் வாழ்க்கையில் முதல் முதலாய் பொங்கலை ஆசையோடு வாங்கி சாப்பிட்டது நன்றாக ஞாபகம் இருக்கிறது. ஒவ்வொரு ரயில் பெட்டிகளின் முன் நின்று ஒவ்வொரு அழகிய பெண்கள் வரவேற்று கொண்டிருந்தார்கள். அட எங்கள் பெட்டியின் முன், உமா மகேசுவரி (பெப்ஸி உமா). நான் அப்போது தான் தொலைக்காட்சியில் வரும் ஒருவரை நேரடியாக முதல் முதலாக பார்க்கிறேன்,முகம், கை, கால் என் தோல் எங்கெல்லாம் தெரிந்ததோ அங்கெல்லாம் வெள்ளை பெயின்டை வைத்து அடித்திருந்தது போல் இருந்தது அவருடைய ஒப்பனை. இந்த அதிர்வு தீர்வதற்குள் இன்னொரு அதிர்ச்சியை சந்தித்தேன். ஆம் ஒவ்வொரு நபருக்கும் ஒரு ரோஜா பூவை பரிசாக கொடுத்து கை குலுக்கி கொண்டிருந்தார், எனக்கு முன்னால் சென்று கொண்டிருத்த அண்ணன்(!) ஒருவர், ரோஜாவை பெற்று கொண்டு கையை பிடித்து ஒரு முத்தத்தை கொடுத்து விட்டார். உண்மையில் உறைந்து விட்டேன், இப்படியுமா முத்தம் கொடுப்பார்கள், அதுவும் அறிமுகமே இல்லாமல், இவ்வளவு ஆள் கூட்டத்தில், எனக்கே வெட்கமாக இருந்தது. ஆனால் பெப்ஸி உமா சிரித்து கொண்டே எனக்கான ரோஜாவை எடுத்து என்னை எதிர் கொண்டார். கண்ணை மூடி திறப்பதற்குள் நடந்து விட்ட முந்தைய சம்பவம் என்றபடியால், எனக்கு கை குலுக்கவே உதறலாக இருந்தது, அவர் விரல் படாமலே ரோஜாவை பெற்று கொண்டேன். ஏன் அந்த கணத்தில் கை குலுக்காமல் இருந்தேன் என்று நினைத்து பின் ரொம்ப நாட்கள் அல்பத்தனமாக வருத்தப்பட்டதுண்டு.

ஏதோ ஒரு உயர்தர ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டோம் என்பது மட்டும் ஞாபகம் இருக்கிறது, என்னோடு வந்தவர்கள் 3 ஸ்டார் என பேசி கொண்டார்கள். அண்ணா அறிவாலயத்தில் தான் மதிய உணவு... பின் சேப்பாக்கம் மைதானத்தில் ஆஸ்திரேலியா- நியுசிலாந்து அணிகளுக்கு இடையேயான விளையாட்டை பார்க்க அழைத்து செல்லப்பட்டோம். எல்லாமே ஆச்சரியங்களாக இருந்தன. டி.வியில் பார்ப்பது போன்ற சுவாரசியம் இல்லை, ரீப்லே வசதி இல்லாததால்,இருப்பினும் அந்த நேரடி அனுபவத்தை ரசிக்கவே செய்தோம். இந்த போட்டிக்கு நான் கொண்டு சென்ற வசன அட்டை "Hi Mark you can't Beat our Sachin", அந்த உலக கோப்பை தொடரில் யார் அதிக ரன் குவிக்க போகிறார்கள் என்ற கேள்வி அலை மார்க் வாக்கை சுற்றியும், சச்சினை சுற்றியுமே இருந்தது. நான் சச்சினின் தீவிர விசிறி ஆனதால் போட்டிக்கு சம்மந்தமே இல்லாமல் இப்படி ஒரு அட்டை. இந்த சென்னை பயணம் என் வாழ்க்கையில் மிக பெரிய மாற்றத்தை கொண்டு வந்தது, தீவிரமாக விளையாட்டு வீரனாக இருந்த நான் பின் கிரிக்கெட் விளையாடுவதையே குறைத்து கொண்டேன், ஆம் நாஷ் போட்ட பந்துகளில் கொஞ்சம் மிரண்டு விட்டேன், போதாததற்கு இந்தியாவும் அரை இறுதியில் பரிதாபமாக தோற்றது.

என் மூன்றாவது சென்னை பயணம் என் முதல் கல்லூரி பருவத்தில் வந்தது. பதினைந்து நாள் அகில இந்திய சுற்றுலா பயணத்தில் மும்பை துவங்கி ஸிம்லா வரை சென்று விட்டு இறுதியாக சென்னை வந்திருந்தோம். மற்ற மாணவர்கள் யாவரும் மெரீனாவின் அலைகளுக்குள் ஆனந்தமாய் விளையாட்டில் மூழ்கி விட நான் எனது உறவினர் வீட்டிற்கு சென்றேன். அங்கே சென்ற போது தான் தெரிந்தது எனது ஒரே தாத்தா மூன்று நாட்களுக்கு முன் மரித்து விட்டது. எந்த தொடர்பு வசதிகளும் இல்லாததால் என்னிடம் தகவல் சொல்ல இயலாமல் இறுதி சடங்கை முடித்து விட்டதும் அறிந்து கொண்டேன். தாத்தாவை பற்றிய நினைவுகள் என்னை அழுத்த மனதுக்குள் அழுது கொண்டே, பின் எதையும் ரசிக்க பிடிக்காமல் நண்பர்களுடன் ஊர் வந்து சேர்ந்தேன்.

நான் பகிர்ந்து கொண்ட மூன்று பயணங்கள் ஒவ்வொன்றிலும் சென்னையில் எனது இருப்பு இருபத்தி நான்கு மணி நேரங்களுக்கும் குறைவாகவே இருந்தன. அதை பற்றிய என் நினைவுகளும் சிறிதே. ஒரு அழகிய மின்னலை போல் மனதில் வெட்டி ஓடி போகின்றவை. .... ஆனால் பக்கம் பக்கமாய் அசை போட தக்க வலிகளையும், வசந்தத்தையும் எனக்கு அனுபவ பாடமாக வகுப்பு எடுக்க குரூர புன்னகையுடன் காலத்தின் வடிவில் காத்து கொண்டிருந்தது சென்னை ... ஆம் "வேலை தேடி" வந்த சென்னை பயணத்தில்......