Wednesday, December 22, 2010

அம்பேத்கரை கண்டேன்
சென்னை மினி உதயம் திரைரங்கில் அம்பேத்கர் திரைப்படம் 11 மணி காட்சிக்காக நுழைவு சீட்டு வாங்கி கொண்டு 11:02 - க்கு உள்ளே நுழைந்தால் பேரதிர்ச்சி. என்னை தவிர வேறு யாருமே இல்லை. வெளியே வந்து நுழைவு காவலரிடம் கேட்ட போது "எல்லாரும் 11:30 மணி ஷோ-ன்னு நினச்சிட்டு வருவாங்க சார். எப்படியும் முன்னூறு பேர் வருவாங்க" என்றார். லேசாக பெருமூச்சு விட்டு விட்டு, உள்ளே நுழைந்து எனது இருக்கையில் அமர்ந்தேன். பத்து நிமிடத்துக்குள் சுமார் இருநூறு பேர் வந்து அமர, மனம் ஆறுதல் அடைந்தது.

இந்திய சுதந்திரத்தை முன்வைத்து லஜபதி ராயோடு அம்பேத்கர் கொண்டமுரண் அரசியலோடு கதை துவங்குகிறது. காட்சிகள் விரிய, விரிய அம்பேத்கர் என்ற பிரமாண்டம் எனது உடல் முழுவதும் வியாபிக்க துவங்கினார். வறுமையினாலும், தீராத வியாதியினாலும் தனது மனைவி,நான்கு குழந்தைகள் என எல்லாவற்றையும் பறி கொடுத்தும், வாழ்க்கையின் கடைசி காலகட்டம் வரை புறக்கணிக்கப்பட்ட மக்களுக்காக போராடிய இந்த மனிதனின் வாழ்க்கை கதையை திரையில் கண்ட போது, ஒரு மகானின் வாழ்க்கையை கண்டதாவே உணர்ந்தேன். 1956-ம் வருடம் அம்பேத்கர் இறந்தார் என்ற வரிகளோடு திரைப்படம் முடியும் போது மனம் கொஞ்சம் உணர்ச்சிவசப்படவே செய்தது.

திரையில் அம்பேத்கராக வாழ்ந்து காட்டிய மம்மூட்டியை எத்தனை பாராட்டினாலும் தகும். இந்தியாவின் மிக முக்கியமான தலைவர் வேடத்தில் ஒருவர் நடித்து, அனைத்து தரப்பு மக்களையும் கவர்வது லேசான காரியம் அல்ல, மம்மூக்கா அருமையாய் வாழ்ந்து காட்டி இருக்கிறார். அம்பேத்கர் பேரை கேட்டாலே ஓட்டம் பிடிக்கும் நமது நடிகர்கள் மத்தியில், ஒரு சவாலான கதாப்பத்திரத்தை ஏற்று, அதை கனக் கச்சிதமாய் செய்து முடித்திருக்கும் மம்மூக்காவின் மேல் மரியாதை இன்னும் கூடுகிறது.

திரையில் என்னை கவர்ந்த இன்னொரு மனிதர் காந்தியாக நடித்தவர். அதுவும் அவருடைய உடல்மொழி இருக்கிறதே அப்பப்பா.... அட்டகாசம்... காந்தி பேசும் பல காட்சிகளிலும், 'அம்பேத்கர் ஒழிக' என முழக்கம் கேட்கும் பல காட்சிகளிலும் திரைரங்கு முழுவதும் சன்னமான சிரிப்பொலி எழும்புகிறது.

படம் பார்த்து வெளியே வந்த போது ஏதாவது நண்பர்களை சந்தித்து விட மாட்டேனா, அவர்களிடம் ஒரு இருபது நிமிடம் அம்பேத்கர் பற்றியும், இந்த திரைப்படம் பற்றியும் பேச வேண்டும் போல் இருந்தது.

'சினிமா' பற்றி ஒவ்வருவருக்கும் மாறுபட்ட கருத்து இருக்கும். என்னை பொறுத்தவரையில் 'சினிமா' பொழுதுபோக்குக்கான ஊடகம் மட்டும் அல்ல.அது ஒரு நவீன கலையின் வடிவம். அந்த நவீன கலை ஊடகத்தின் வழியாக இது போன்ற நல்ல திரைப்படங்கள் வருவதே சமூகத்தை செம்மைபடுத்த உதவும்.

'அம்பேத்கர்' திரைப்படம் இன்னும் விளம்பரப்படுத்தப்பட்டிருந்தால் இந்த வரலாற்று நாயகனுடைய குரல் இன்னும் பல மக்களுக்கு போய் சேர்ந்திருக்குமே என்ற ஆதங்கம் எழாமல் இல்லை. அரிவாளுடனும், பரட்டை தலையுடனும் திரியும் கதாநாயகர்களையும், அதன் இயக்குனர்களையும் கட்டி பிடித்து பாராட்டி மகிழும் நமது சூப்பர் ஆக்டர்களுக்கோ, ஸ்டார்களுக்கோ அது பற்றிய அக்கறையே இல்லை. ஒருவேளை அப்படி செய்தால் தானும் தீண்டத்தகாதவன் ஆகி விடுவோம் என்ற பயம் காரணமாய் இருக்கும் !.

அம்பேத்கரை தலித்துகளின் குறியீடாக இன்று காண்பது துரதிஷ்டவசமானது, அது ஒரு சமூக மன நோயும் கூட... உண்மையில் அம்பேத்கர் நவீன இந்தியாவில் புறக்கணிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கான குறியீடு.
வரலாற்றை நமக்கு சொல்லி தர மறந்த முந்தைய தலைமுறையும், வரலாற்றை கற்று கொள்ள போகும் நாளைய தலைமுறையையும் அம்பேத்கர் திரைப்படம் வெளியிடப்பட்டுள்ள திரைரங்குக்கு கூட்டி செல்லுங்கள். உண்மையான ஒரு சமூக போராளியின் வரலாறு அனைவருக்கும் சென்றடைய உதவுங்கள்.

அம்பேத்கர் திரைப்படம் குறித்து சக பதிவர்களின் பதிவுகள்


நன்றி : கீற்று

Friday, November 19, 2010

முத்துக்குமார்: நெருப்பாய் வாழ்ந்தவன் ---- புத்தக விமர்சனம்


ஜனவரி 29 - 2009 - "இலங்கையில் போர் நிறுத்தம் கோரி சென்னை வாலிபர் தீக்குளித்து மரணம்" என்ற செய்தியை தாங்கிய ஒரு தமிழ் மாலை நாளிதழை தேனீர் கடைகளின் முன் முகப்பில் பார்த்த போது 'என்ன முட்டாள்தனம் இது இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட இங்கே இறந்தால் போர் நின்று விடுமா?' என்ற பொதுபுத்தியால் உருவான கருத்தே எம்மிடம் மேலோங்கி இருந்தது.

அடுத்த நாள் "விதியே விதியே என்செய நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை.........." என துவங்கும் முத்துக்குமரனின் மரண சாசனத்தை படித்த போது முட்டாள்கள் நாங்கள் தான் என்பதை உணர வெகுநேரம் ஆகவில்லை.தன் உடலை புதைக்காமல் உயிராயுதம் ஏந்துங்கள் என்று சொல்லி மரித்து போன முத்துக்குமரனை பற்றி பின் வந்த செய்திகள் எல்லாமே எம்மை வெட்கப்பட வைக்கும் ஆச்சரியங்கள். தமிழ் மொழியை, தமிழ் இனத்தை நேசிக்கும் ஒவ்வொரு தமிழனின் உணர்விலும் அதன்பின் கலந்து சகோதரன் ஆகிப்போனான் எங்கள் முத்துக்குமரன்.

வறுமையை வாழ்க்கையாக உடுத்தி தூங்கி கிடந்த தமிழ் சமூகத்தை தன் மரணத்தின் மூலம் தட்டி எழுப்பிய சகோதரன் முத்துக்குமரனின் வாழ்க்கையை பால்யம் முதல் படம் பிடிக்கும் புத்தம் தான் "முத்துக்குமார்: நெருப்பாய் வாழ்ந்தவன்".

முத்துக்குமரனுக்கு தமிழ் உணர்வு ஊட்டிய புலவர் தமிழ்மாறனுக்கு படையல் இட்டு துவங்குகிறது இந்த புத்தகம்.

திருச்செந்தூரில் குமரேசன்- சண்முகத்தாய் ஆகியோருக்கு மூத்த மகனாக பிறந்த முத்துக்குமார், சென்னை கொளத்தூரில் நடைபயின்று, தேனியில் தன் ஆரம்ப கல்வியை துவங்கி, தன் உயர்நிலை கல்வியை சொந்த ஊரிலேயே படித்தார். பள்ளி பருவத்திலேயே தமிழ் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்த முத்துகுமரன், கலந்து கொள்ளும் பேச்சுப்போட்டிகளில் தனது பள்ளிக்கு பெருமை சேர்க்க தவறவில்லை. முத்துக்குமரனை பேசுவதற்காக அழைத்து சென்றாலே பள்ளிக்கு ஒரு பரிசு நிச்சயம் என்ற நிலையை உருவாக்கி இருந்தார்.

புத்தர் முதல் காந்தி வரை ஒரு சிறு நிகழ்வு தான் அவர்களின் அடுத்தகட்ட வாழ்க்கையை தீர்மானித்து இருகின்றது. முத்துகுமரனின் வாழ்க்கையிலும் அவ்வாறு நடந்த ஒரு நிகழ்வே அவரை பின்னாளில் ஒரு தியாகி ஆக்கி இருக்கிறது என குறிப்பிடுகிறார் நூலாசிரியர். அது.... ஒரு கிறிஸ்துமஸ் தினம். முத்துகுமரனின் வறுமை வாழ்கையை அறிந்திருந்த அவருடைய வகுப்பாசிரியை சசிலதா, அந்த பண்டிகை நாளில் மதிய விருந்துக்காக அழைத்திருந்தார். அப்போது முத்துகுமரன் இயேசுவை பற்றி கேட்க, ஆசிரியையும் சொல்லி விட்டு " மக்களின் நன்மைக்காக மகத்தான காரியங்களைச் செய்ய வேண்டும், அதற்கு நீ அனைவரையும் நேசிக்க வேண்டும், அன்பும் கருணையும் கடைசிவரை பற்றி இருக்க வேண்டும், நீ எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்க வேண்டும்" என்று அவர் சொன்ன வார்த்தைகள் அவருள் ஆழப்பதிந்தன.

முத்துக்குமரன் எட்டாம் வகுப்பு படித்து கொண்டிருந்த போது பள்ளியில் நடந்த இலக்கிய கூட்டத்திற்கு வந்த புலவர் தமிழ் மாறனின் பேச்சால் கவரப்பெற்று அவரோடு தொடர்பை ஏற்படுத்திக்கொண்டது அவரது வாழ்கையில் அடுத்த அத்தியாயம் பிறக்க காரணம் ஆனது என குறிப்பிடுகிறார் நூலாசிரியர்.

பத்தாம் வகுப்பில் 466 மதிப்பெண் எடுத்து பள்ளியில் இரண்டாவதாக மாணவனாக வந்தாலும், வறுமையின் கொடிய பிடியில் சிக்கி தவித்ததால் அவரால் படிப்பை தொடர முடியாமலே போயிற்று . படிக்கும் போதே தமிழ் தேசிய இயக்கங்களோடு தொடர்பை ஏற்படுத்திக்கொண்ட முத்துக்குமரன்"ஸ்டெர்லைட் எதிர்ப்பியக்கம்" ஆரம்பிக்கப்பட்ட போது அதில் கலந்து கொண்டு சுவரொட்டி ஒட்டி இருக்கிறார். பதின்ம வயதை கடந்த போது, புரட்சிகர இயக்கங்களோடு தன்னை இணைத்து கொண்டு களப்பணி ஆற்றினார்.இளமையில் வறுமை கொடிது என்பார்கள் ஆனால் முத்துக்குமரனின் பிறப்பு முதல் இறப்பு வரை வறுமை எப்படி அவரை தொடர்ந்து துரத்தி வந்திருக்கிறது என்பதையும் துல்லியமாக பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர் . ஒரு சீட்டு கம்பனியில் வேலைக்கு சேர்ந்து பின் தாயின் காசநோய் காரணமாக சென்னை வந்தும், தாயை மீட்க முடியாமல் போய் இருக்கிறது. மளிகை கடையில் உதவியாளனாக, குயின்ஸ்லாந்து கேளிக்கை பூங்காவில் பாதுகாவ
ராக என பல இடங்களில் வேலை பார்த்து தங்கை திருமணத்தை சிறப்பாக நடத்தி முடித்த சில காலத்திலேயே விபத்து ஒன்றில் தனது சகோதரர் வசந்தகுமாரை பறி கொடுத்து இருக்கிறார்.

வறுமை இன்னொரு உடன்பிறத்தவனை போல் கூடவே இருந்தாலும் புத்தங்கள் படிக்கவோ, வாங்கவோ மட்டும் அவர் தவறவே இல்லை. அவர் இறந்த போது அவருடைய சேமிப்பாக மட்டும் சுமார் 800 புத்தகங்கள் அவரிடம் இருந்திருக்கின்றன. வாசிப்பு அவர் வாழ்வின் அங்கமாகி, அதுவே அவருக்குள்ளான சமூகக் கோபத்தை அணையாது வளர்த்தெடுத்து போர் குணத்தின் உச்சத்திற்கே கொண்டு சென்றதாக கூறுகிறார் நூலாசிரியர்.

"இன்றைய கல்வி முறைகள் அறியாமையை போக்குவதற்கு பதிலாக வேலைக்காரர்களை உருவாக்குவதாக அமைகிறது" என முத்துகுமரன் மனம் வெதும்பி தன்னிடம் குறிப்பிட்டதாக கூறும் நூலாசிரியர் "படித்து அறிவில் சிறந்து இச்சமூக வளர்ச்சிக்கும் மாந்தர் குல முழுமைக்குமான அர்ப்பணிப்புமிக்க வாழ்வை அவர்கள் பெற்று கொள்ள வேண்டும் என்று விரும்புவதில்லை. கல்வி அமைப்பு முழுக்க முழுக்கச் சுயநலப் போக்கு கொண்டதாகவே இருக்கிறது" என வருத்தப்பட்டதையும் பதிவு செய்ய தவறவில்லை. தமிழ்நாட்டில், தமிழ் வழி கல்வியின் அவசியம் குறித்துஏக்கத்துடனே தன் குறிப்பேட்டில் எழுதியுள்ளார் முத்துக்குமரன்.

எழுத்து சீர்திருத்தம் தேவைற்றது என்பது குறித்து அவர் எழுதி, தீராநதியில் வெளிவந்த விமர்சனத்தையும் இந்த நூலில் குறிப்பிட்டு உள்ளார் நூல் ஆசிரியர்.


திரைப்படம் மக்களுடன் உரையாடுவதற்கான சிறந்த ஊடகம் என கருதி திரைப்பட
துறையில் தன்னை இணைத்துக்கொண்டார். குறும்படங்கள், ஆவணப்படங்கள் உருவாக்கப்பட வேண்டும். மாற்று சினிமா நோக்கி மக்கள் அணிதிரட்டப்பட வேண்டும் என்பதிலே ஆர்வமாகஇருந்திருக்கிறார். திருநங்கைகள் குறித்து ஒரு ஆவண படம் எடுப்பதிலும் பங்காற்றி இருக்கிறார்.

ஈழப்போராட்டம் முத்துகுமரனுடைய உதிரத்திலே கலந்து ஓடியது என கூறும் ஆசிரியர், பேச்சு வார்த்தைகள், ராணுவ தாக்குதல்கள், மாவீரர் தின உரைகள் என கடந்த பத்தாண்டு கால ஈழ போராட்ட செய்திகளை சேகரித்து வைத்திருந்ததாகவும் "வாழ்வில் ஒரு முறையாவது அந்த வீரம் விளைந்த ஈழம் மண்ணில் கால்பதிக்க வேண்டும், அங்குள்ள பனைமரங்களை கட்டிப்பிடிக்க வேண்டும், என் ஆசைகள் நிறைவேறுமா?" எனமுத்துக்குமரன் கேட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

முத்துகுமரன் வீரச்சாவை தழுவிய அந்த நாள் காலையிலே தன்னை தொடர்பு கொள்ள முயன்றதாகவும் ஆனால் தன்னால் பேச முடியவில்லை என்பதை வேதனையோடு குறிப்பிடும் நூலாசிரியர், அல்ஜீரிய பாடகர் மத்தூர் பின் - இன் பாடலோடு இந்நூலை முடிக்கிறார்.
அது...

நீ இறந்து விட்டாலும்
வாழ்ந்து கொண்டுதானிருக்கிறாய்
ஒரு வரலாறாக
ஒரு போராட்டமாக
ஒரு நம்பிக்கையாக......

ஆம்..... உண்மையில் இந்த புத்தகத்தை ஒரே வீச்சில் படித்து முடித்த போது என் அழுகையை அடக்கவே முடியவில்லை..... முத்துக்குமரனை இந்த தமிழ் சமூகம் கொலை செய்து விட்டதாகவே கருதுகிறேன்.. ஆம் இது ஒரு அப்பட்டமான கொலை தான் . இதன் முதல் குற்றவாளிகள் ஆளும் வர்க்கம் என்றால் ஈழபோரில் மவுனியாக இருந்த இந்த தமிழ் சமூகமும் குற்றவாளிப்பட்டியலில் சேர்க்கப்பட வேண்டியவர்களே.......

மூச்சு விடும் கடைசி தருவாயில் என்ன சாதி என செவிலி குறிப்பெடுக்க கேட்க, தமிழ் சாதி என்று கூறி இறந்த 'கரும்புலி' முத்துகுமாரின் வாழ்க்கை வரலாற்றையும் , அவருடைய கவிதைகள் தாங்கி வந்துள்ள இந்த புத்தகத்தை அருமையாக தொகுத்துள்ளார் நூலாசிரியர் ஆ.கலைச்செல்வன்.

தமிழ் மொழியை நேசிக்கும் ஒவ்வொருவரும் இந்த தமிழ் தேசியவாதியின் வரலாற்றை கண்டிப்பாக வாசிக்க பரிந்துரைக்கிறேன்.

தமிழ் தேசம் வெளியீடாக வந்திருக்கும் இந்த புத்தகத்தின் விலை ரூபாய் 60.இணையம் மூலம் வாங்க இங்கே சொடுக்கவும்.

தபால் மூலம் பெற்று கொள்ள....................
தமிழ் தேசம்,
87/31, காமராஜர் நகர்,
3 வது தெரு, சூளை மேடு,
சென்னை - 94


Sunday, September 19, 2010

'அதிகாலை' குறும்படம் வெளியீட்டு விழா

ஆண்டனியை அவருடைய இரண்டாம் பிறவியில் தான் முதல் முதலாக சந்தித்தேன்... ஒரு உதவி இயக்குனருக்கே உண்டான ஆழ்ந்த வாசிப்பு ஞானம்,பேச்சில் முதிர்ச்சி, நிகழ்வுகளை அற்புதமாக விவரிக்கும் திறன் என அந்த சந்திப்பிலேயே நிறைய ஆச்சரியங்களை எனக்கு அளித்தார்.தமிழர் நலன் குறித்த அவர் பார்வையும், அக்கறையையும் பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

விபத்து அவருடைய ஒரு கரத்தை பறித்து கொண்டதை தவிர்த்து அவருடைய போராட்ட குணம், கொள்கையில் நேர்மை, விடா முயற்சி என எல்லாவற்றிலும் கனக்கச்சிதமாகவே இருக்கிறார்.

ஒரு சிறந்த திரைப்பட இயக்குனர் ஆவது என்ற லட்சியத்தை நோக்கி இரண்டாம் படியை எடுத்து வைத்துள்ளார். ஆம்....... எந்த விபத்து அவர் ஓடுவதை சற்று தடுத்து நிறுத்தியதோ, அதே விபத்தை மையப்பொருளாக கொண்டு தனது இரண்டாம் குறும்படத்தை வெளியிட உள்ளார்.

பெரும் போராட்டங்களுக்கு இடையில் எடுக்கப்பட்ட இந்த குறும்படம் 24 செப்டம்பர் 2010 அன்று காலை பத்து மணிக்கு ரஷ்ய கலாச்சார மையத்தில் வைத்து வெளியிடப்பட உள்ளது. சமூக ஆர்வலர்கள், திரைத்துறை மற்றும் இலக்கிய ஆளுமைகள் கலந்து கொள்ளும் இந்த விழாவில் நீங்களும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அழைக்கிறோம்.

ஆண்டனியுடைய முதல் குறும்படம் இருள் மக்கள் தொலைக்காட்சியில் பரிசு பெற்றது போல, இந்த 'அதிகாலை' என்ற குறும்படமும் பல விருதுகளை பெற வாழ்த்துவோம்.

ஆண்டனி பற்றி 'ஆனந்த விகடன்'(04-08-2010) வார இதழில் வெளிவந்த சிறப்பு கட்டுரை கீழே........

ஆண்டனியால் அது முடியும்!

"மனசு வலிக்குது சார்" என்கிறார் ஆண்டனி ராஜ். நான் அவரைப் பார்க்கிறேன்

அவருக்கு வலது கை இல்லை. கை இருந்த இடத்தில் ஒரு துண்டு போர்த்தியிருக்கிறது. இல்லாத கை அவருக்கு வலியைத் தந்துகொண்டே இருக்கிறது. ஆண்டனி பேசிக்கொண்டே இருக்கிறார்.

"நல்லதா ஒரு சினிமா எடுக்கணும். நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து இது மட்டும்தான் சார் என்னோட ஆசை. ஓர் இடத்தில் இருக்காம துறுதுறுன்னு பயங்கர சேட்டை பண்ணுவேன். என்னைச் சமாளிக்க முடியாம பாண்டிச்சேரியில் ஒரு ஹாஸ்டலில் சேர்த்துவிட்டுட்டாங்க. ப்ளஸ் டூ வரைக்கும் அங்கதான் படிச்சேன். நாடகம், கவிதைன்னு ஆர்வம். அதுக்குப் பிறகு, சென்னை வந்து லயோலாவில் தமிழ் படிச்சேன்.

கல்லூரி முடிச்சு வெளியில் வந்ததும் சினிமாவுக்குள் நுழையப் பெரிய போராட்டம். கையில ஒரு பைக் இருந்துச்சு. அதை வெச்சுக்கிட்டு தினமும் ரவுண்ட் அடிக்கிறது. எப்படியாச்சும், யார்கிட்டேயாவது சேர்ந்துட முடியாதான்னு இருக்கும். படம் எடுத்து ரிலீஸ் பண்ண முடியாத எத்தனையோ இயக்குநர்களின் கதைகளில் வேலை பார்த்தேன். கொஞ்சம் கொஞ்சமா சினிமா பிடிபட ஆரம்பிச்சுது. ஜான் மகேந்திரன் சார் அறிமுகம் கிடைச்சு, அவருடன் வேலை பண்ணேன். அவர் மூலமா லக்ஷ்மிகாந்தன் சார் அறிமுகம் ஏற்பட்டு, அவரோட 'டாக்ஸி' படத்தில் உதவி இயக்குநரா வேலை பார்த்தேன்.

இதுக்கு இடையில் 'இருள்'னு ஒரு குறும்படம் பண்ணேன். மக்கள் டி.வியில் அப்போதான் குறும்படப் போட்டி ஆரம்பிச்சிருந்தாங்க. அதில் 'இருள்' இரண்டாவது பரிசு வாங்கியது. வசதி குறைவான குடும்பப் பின்னணி என்னோடது. ஆனால், எதுக்காகவும் எப்பவும் நான் கவலைப்பட்டது இல்லை... கலங்கி நின்னது இல்லை. நினைச்சதை செஞ்சு பார்த்துடணும்னு குறியா இருந்தேன். அந்தச் சமயத்தில்தான் என்னோட மிக நெருங்கிய நண்பன் தமிழ்ச்செல்வன் ஒரு பெரிய விபத்தில் சிக்கினான்" கொஞ்சம் நிறுத்தித் தொடர்கிறார்...

"தமிழ்ச்செல்வன் எனக்கு ரொம்ப நெருக்கம். படுத்த படுக்கையாக் கிடந்த அவனைப் பார்க்கப் போனேன். ஆனால், என்னை அவனுக்கு அடையாளம் தெரியலை. அவன் நினைவுகள் மாறிப்போயிருந்துச்சு. விபத்து என்பது எவ்வளவு கொடூரமானதுன்னு அந்தக் கணத்தில் நான் உணர்ந்தேன். சம்பந்தமே இல்லாம சாலையில் போயிட்டு இருக்கிற ஒருத்தரை ஒரு வாகனம் அடிச்சுத் தள்ளிட்டுப் போயிடுது. ஆனா, அடிபட்டவனுக்கு ஒரு குடும்பம், வாழ்க்கை, பொறுப்புகள், எதிர்காலம்... எவ்வளவு இருக்கு? விபத்தை வேடிக்கை பார்க்குற மக்கள் 'பாவம்'னு சொல்லிட்டுப் போயிடுவாங்க. அந்தப் 'பாவம்' எந்தவிதத்துலயும் உதவப் போறது இல்லை. உடனடியா விபத்தைப்பற்றி ஒரு குறும்படம் எடுக்க முயற்சி பண்ணேன்.

பேப்பர்ல வந்த செய்திகள், உலகத்தில் என்னென்ன வகையான விபத்துக்கள் நடக்குது... எல்லாத்தையும் சேகரிச்சேன். விபத்து தொடர்பான விதவிதமான வீடியோக்களைச் சேகரிச்சுப் பார்த்தேன். அந்தச் சமயத்தில் பாண்டிச்சேரியில் இருந்து என் நண்பன் ஒருவன் வந்திருந்தான். அவனைப் பார்த்துட்டு சும்மா அவன்கூட பாண்டிச்சேரிக்குப் போயிட்டு வருவோம்னு கிளம்பினேன். விபத்துபற்றிய சில படங்களை ரெஃபரன்ஸுக்காக வாங்கிட்டு பஸ்ல திரும்பிட்டு இருந்தேன். பாண்டிச்சேரியில் இருந்து பஸ் வெளியே வந்துச்சு. ஈ.சி.ஆர். ரோடு. வேகமா ஓட்டிட்டு இருந்தார் டிரைவர். நான் டிரைவர் ஸீட்டுக்குப் பின் பக்கமா நாலாவது வரிசையில் ஜன்னல் ஓரமா உட்கார்ந்து இருந்தேன். திடீர்னு எதிர்ல ஒரு பஸ் தாறுமாறா பயங்கர வேகமா வருது. எங்க பஸ் டிரைவர் பஸ்ஸை ஒடிச்சுத் திருப்பினார். நேருக்கு நேரா மோதியிருக்க வேண்டிய அந்த பஸ், நான் உட்கார்ந்திருந்த ஜன்னல் ஓரமா படார்னு மோதி அந்தப் பக்கத்தையே நொறுக்கிடுச்சு.

என்னோட வலது கை ஜன்னலுக்கு வெளியே தோள்பட்டையில் இருந்து தனியா தொங்கிட்டு இருக்கு. எனக்குச் சில நிமிடங்களுக்கு எந்த வலியும் தெரியலை. சொதசொதன்னு ரத்தம் கொட்டுது. ஆனா, மயக்கம் இல்லை. எனக்கு முன்னாலயும் பின்னாலயும் உட்கார்ந்திருந்த எல்லோருக்குமே என்னை மாதிரி கொடூரமான அடி. ஒரே சத்தம். எனக்கும் உயிரை எடுக்குற கொடூர வலி. 'ஐயோ, அம்மா'ன்னு கத்துறேன். அந்த இடத்தில் யாரும் இல்லை. எங்களை மோதின வண்டி நிக்காமப் போயிடுச்சு. டிரைவரும் கண்டக்டரும் அந்த வண்டியைப் பிடிக்கக் கிளம்பிப்போயிட்டாங்க. என் கை தோள் பட்டையில் இருந்து தொங்கிட்டு இருக்கு. ஆஸ்பிட்டல் அழைச்சுட்டுப் போக ஒரு வண்டி வந்து நிக்குது. தொங்கிட்டு இருந்த கையை எடுத்து மடியில் வெச்சுக்கிட்டு உட்கார்ந்தேன். பாண்டிச்சேரி பி.ஐ.எம்.சி. அரசு மருத்துவமனை. இரவு 11 மணிக்கு அடிபட்ட நாங்க எல்லோரும் போனபோது பெரிய டாக்டர்கள் யாரும் இல்லை. பயிற்சி டாக்டர்கள்தான் இருந்தாங்க. அப்போதைக்கு எங்க வலியைக் குறைக்க மருந்து கொடுத்துட்டு, 'காலையில் பெரிய டாக்டர் வருவார்'னு சொல்லிட்டாங்க. தோள்பட்டையில் இருந்து ரத்தம் வழியத் தொங்கிட்டு இருந்த கையைப் பார்த்தேன். வாழ்க்கை முழுக்க இனிமே எனக்கு வலது கை கிடையாதுன்னு அப்பவே எனக்குப் புரிஞ்சுபோச்சு. வலது கையை எடுத்துட்டாங்க. பிறகு பார்த்த டாக்டர்கள் 'உடனே ஆபரேஷன் பண்ணியிருந்தா கையை ஒட்ட வெச்சிருக்கலாமே'ன்னு சொன்னாங்க. யாரைக் குற்றம் சொல்றது? எல்லாம் முடிஞ்சுபோச்சு.

ரெண்டு மாசம். அந்தப் புது வாழ்க்கையை எதிர்கொள்றது பெரிய சவாலா இருந்துச்சு. 26 வயசுல புதுசா பொறந்தது மாதிரி ஒவ்வொண்ணாக் கத்துக்கிட்டேன். சினிமாவில் கையெழுத்து அழகா இருக்குற அசிஸ்டென்ட்டை ஸ்க்ரிப்ட் காப்பி பண்ணச் சொல்லுவாங்க. என் கையெழுத்து குண்டு குண்டா அழகா இருக்கும். அது போச்சு. நோட்டும் பென்சிலும் வாங்கி வெச்சுக்கிட்டு இடது கையால் எழுதப் பழகினேன். ஒரு கையால் துணி போட்டுக்க, ஒரு கையால் தலைவாரிக்க... எல்லாத்துக்கும் பழகினேன். மறுபடியும் பழைய ஸ்க்ரிப்ட்டை எடுத்து விபத்துபற்றிய அந்தக் குறும்படத்தை நண்பர்களின் பொருள் உதவியோடு பண்ணி முடிச்சேன்" என்று டி.வி.டியைக் கையில் தருகிறார். 'அதிகாலை' என்று தலைப்பிடப்பட்ட அந்தக் குறும்படம் இரண்டு விபத்துக்களைப்பற்றி விவரிக்கிறது.

"குடிச்சுட்டு வண்டி ஓட்டுறது, வேகமா ஓட்டுறது... இது எல்லாத்தையும் தாண்டி, மன உளைச்சலோடு வண்டி ஓட்டுறதுதான் உலகம் முழுக்கப் பெரும்பாலான விபத்துக்களுக்கான காரணம். ஒரு தனி மனிதனுக்கு ஏன் மன உளைச்சல் வருது? அலுவலக உயர் அதிகாரிகள், பொருளாதாரப் பிரச்னை... இப்படி சமூகத்தால்தான் தனி மனிதனுக்குப் பிரச்னைகள். அதனால் விபத்து என்பது ஓட்டுறவருக்கும் மோதுறவருக்கும் இடையில் நடக்குற ஒரு சம்பவம் மட்டுமே இல்லை. அதில் நாம் எல்லோருமே சம்பந்தப்பட்டு இருக்கோம். இதை அழுத்திச் சொல்லணும்னு ஆசைப்பட்டுதான் இந்தக் குறும்படத்தை எடுத்தேன். எனக்கு ஒரு சினிமா இயக்குநர் ஆகணும். அதுதான் ஆசையும் லட்சியமும். என் எதிர்கால வாழ்க்கைப் போராட்டம் முழுக்க அதை நோக்கித்தான் இருக்கும்" கோட்டூர்புரம் குடிசைமாற்று வாரியக் குடியிருப்பில் அமர்ந்தபடி பெரும் கனவுகளுடன் பேசுகிறார் ஆண்டனிராஜ். அதை அடையும் வல்லமை ஆண்டனிக்கு உண்டு!