Thursday, May 31, 2012

நன்றி விகடன்...


2007 ஆகஸ்டில் பதிவு எழுத வந்து 2012 மே மாதத்தின் இறுதி நாளான இன்று வரை வெளியிட்டிருக்கும் பதிவுகளின் எண்ணிக்கை 82 . அவ்வளவு சுறு சுறுப்பு... நான் இணையம், வலைப்பூ பற்றி முழுவதும் தெரிந்து கொண்டு பதிவு எழுத வரவில்லை என்பதை முதலில் நேர்மையோடு ஒப்புக் கொள்ள கடமை படுகிறேன். காகிதத்தில் கவிதை எழுதி சுருட்டி போட்டுக் கொண்டிருந்த நாட்களில் ஆர்குட் கவிதைகள் குழுமம் மிகப் பெரிய வரபிரசாதமாக இருந்தது. அப்படி ஒரு தருணத்தில் தான் என்னுடைய கவிதை ஒன்றை சேகரிக்கும் பொருட்டு வலைபூ துவங்கி அதில் இட்டு வைத்தேன்..


தொடர்ச்சியான் பணி சூழ்நிலைகளினாலும், இணையவெளியில் வலைபூக்களின் வீச்சு பற்றி அறியாததாலும் எனது வலைப்பூவை தூசி படிய இட்டிருந்தேன். என்ன நடந்ததோ தெரியவில்லை திடீரென இணையம் மீது மீண்டும் ஆர்வம் வர 2009 - ல் பழைய கவிதைகளை எடுத்து மீண்டும் பதிக்க துவங்கினேன்.

 ஈழத்தையும் அதன் துயரையும் முத்துகுமரன் தன் மரண சாசனத்தின் மூலம் சொல்லி அதன் துயரை தமிழர்களுக்கு கடத்திச் செல்ல மனம் வெம்பி எழுதிய கவிதையை வலையேற்றினேன்.

 கவிதைகளாகவே பதித்து கொண்டிருந்த நாட்களில் ஏன் நமக்கு பிடித்த விஷயங்கள் பற்றி எழுத கூடாது என யோசித்து, பயணங்கள் பற்றி நான் முன்பே அலைபேசியில் எழுதி வைத்திருந்ததையும் , நினைவின் இடுக்கில் நின்றிருந்த 'கூந்தவண்டி' பற்றியும் எழுதி வலையேற்றினேன். கடந்து போன கிராமத்து நாட்களை இணையத்தில் பதித்த போது கிடைத்த வரவேற்பு மீண்டும், மீண்டும் கிராமத்தையே சுற்றி வர செய்தது.


இந்த சூழ்நிலையில் தான் கிழக்கு பதிப்பகத்தின் மூலம் இலவசமாய் கிடைத்த 'ராதாயணம்' புத்தகத்தை பற்றி விமர்சனம் எழுதி பதிவிட்டேன். நூலில் ஆசிரியரே வந்து பின்னூட்டம் இட்ட உற்சாகத்தில் அடுத்தடுத்து புத்தக விமர்சனங்களாக எழுதி குவித்தேன்.

ஈழம் அப்போது தமிழர்கள் கையை விட்டு முற்றிலுமாக போயிருந்தது. ஆளும் அரசின் மீதும் அதிகாரவர்கத்தின் மீதும் திரும்பிய கோபத்தில் சில இடுகைகள் என்னிடமிருந்து வெளிவந்தன.

தொடர்ந்து சமகால அரசியலை கையிலெடுத்து எழுத துவங்க ஆதரவும், எதிர்ப்பும் சம அளவில் குவிய துவங்கியது கூடவே குற்றச்சாட்டுகளும். அஜித்தை பற்றி எழுதினால் நான் அவருக்கு ரசிகன் என்றும், அரசை எதிர்த்து எழுதினால் நான் எதிர்கட்சிகாரன் என்ற ரீதியில் வரும் பின்னூட்டங்களை சமாளிக்க முடியாமல் அரசியல் பதிவுகள் எழுதுவதில் இருந்து வெளியே வந்தேன்.

இணையம் எவளவு உன்னதமான ஊடகம் என்பதை என் நண்பனுக்காக யாசகம் கேட்ட போது தான் உணர்ந்தேன். உலகெங்கும் இருந்து தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் என தங்கள் நேசகரங்களை நண்பனை நோக்கி நீட்ட, ஒரு அணிலாய் என்னால் முடிந்த உதவியை செய்தேனே என்ற திருப்தி.. அது, ஆயுசுக்குமான திருப்தி.


இடைப்பட்ட நாட்களில் வாசிப்பு அதிகமாக மீண்டும் புத்தக விமர்சனங்கள் வலம் வர துவங்கின. அதில், எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்களின் முதல் நாவலான ரப்பருக்கு நான் எழுதிய விமர்சனத்தை மிகமுக்கியமான ஒன்றாக கருதுகிறேன். இணையவெளியில் பரவலான விமர்சனத்திற்கு இந்த பதிவு உட்படுத்தப்பட்டது. அவற்றை கடந்து வர எனக்கு சற்று காலம் அவகாசம் தேவைபட்டது என்பதும் உண்மை.

பின் மீண்டும் எனது பதிவுகள் எனது பால்யத்தையும் அதன் அனுபவங்களையும் வட்டமடிக்க துவங்கின. இந்த நிலையில் தான் ஆனந்த விகடன் வார இதழ் தன்னுடைய மதுரை 'என் விகடன்' பதிப்பில்(23 -மே -2012) வெளியிட்டு என் எழுத்துக்கான அடுத்த கட்ட அங்கீகாரத்தை தந்தது. எதிர்பார்க்கவே செய்யாத அளவில் சில அலைபேசி அழைப்புகளும், வாழ்த்து மடல்களும் வந்து மனதை பூரிக்க செய்தது. மீண்டும் ஒருமுறை திரும்பி பார்க்கும் போது பிரமிப்பாகவே இருக்கிறது.. என்னை, எனது எழுத்தை உருவாக்கிய அப்பா, அம்மாவில் இருந்து என்னை செப்பனிட்டவர்களை பட்டியல் இட்டால் ஒரு நாள் போதாது.

ஆனாலும்......

விகடனில் எனது பதிவு வெளிவர எனக்கு உந்து சக்தியாக இருந்த இணையம் எனக்களித்த தம்பி ஸ்நாபக் வினோத்தும், 'லே மாப்பிள எழுதுல.. இப்படி எழுதாம இருந்தா கையை ஓடிச்சு புடுவேன் பத்துகோ' என தொடர்ந்து என்னை மிரட்டிகொண்டிருக்கும் அண்ணன் 'தல' பாலபாரதிக்கும் நன்றி சொல்லாமல் இருக்க முடியாது. நன்றி தம்பி, தல.

மற்றபடி........

 'எப்பா இப்படி எல்லாம் இருந்தீங்களா?' என என் ஒவ்வொரு கிராமத்து பதிவையும் ஆச்சரியத்தோடு முதலில் படித்து என்னை உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கும் எனது மனைவிக்கும்...

பதிவு எழுதாவிட்டாலும் குறைந்தபட்சம் மின்னஞ்சல் குழுமத்தில் என்னை தொடர்ந்து எழுத வைத்துக் கொண்டிருக்கும் என் பண்புடன் குடும்பத்திற்கும்...

என் எழுத்துக்கு உயிர் கொடுத்துக் கொண்டிருக்கும் என் மண்ணுக்கும்-மண்ணின் மைந்தர்களுக்கும்...

 இந்த அங்கீகாரத்தை சமர்ப்பிக்கிறேன்..

Friday, March 30, 2012

இயக்குனர் விக்ரமன் - என்னை கவர்ந்த திரைக் கலைஞன்இரண்டு வாரங்களுக்கு முன் 'சூர்யவம்சம்' திரைப்படத்தில் இருந்து 'ரோசாப்பூ...சின்ன ரோசாப்பூ' பாடலை கேட்டுக்கொண்டிருந்தேன். அருகில் இருந்த நண்பர்கள் தாறுமாறாக கிண்டலடித்தாலும் பாட்டு முடியும் வரை நான் நிறுத்தவே இல்லை. ஆம், இன்றைய பப் கலாச்சார இளைஞர்களுக்கு முன்னால் நான் இயக்குனர் விக்ரமனின் ரசிகன் என சொன்னால் 'லாலாலா' என பாடி கேலிக்கு உள்ளாக்கப்படலாம்.ஆனாலும் முழு மனதுடன் எந்த சங்கோஜமும் இன்றி சொல்வேன் என் பால்யத்தை பாதித்த இயக்குனர்களின் மிக முக்கியமானவர் விக்ரமன்.விக்ரமனை பள்ளி நாட்களில் அதிகம் சிலாகித்ததாலே நெருங்கிய நண்பர்கள் இன்றும் என்னை 'சென்டிமெண்ட் ராசா' என அழைப்பது உண்டு. 'புது வசந்தம்' திரைப்படம் வெளிவந்த காலகட்டங்களில் இயக்குனர் யார் என பார்க்கும் மனோபாவமோ, வயதோ எனக்கு இல்லை. ஆனாலும் அந்த படமும், பாடல்களும் மனதுக்குள் ஏற்படுத்திய குதூகலம் கொஞ்சம் நஞ்சமல்ல. ஐந்தாம் வகுப்பில் பள்ளி ஆண்டு விழாவிற்கு 'போடு தாளம் போடு...' என்ற பாடலில் நடனம் ஆட நான் தகுதி பெற முடியாத வருத்தம் எனக்கு பல வருடங்கள் இருந்ததற்கு அந்த பாடலும் ஒரு முக்கியமான காரணம். அப்போது அறிமுகமான சித்தாரா இன்றளவும் எனக்கு பிடித்தமான நடிகை.

விக்ரமன் என்ற இயக்குனரை உற்று பார்க்க துவங்கியது 'கோகுலம்' மற்றும் 'நான் பேச நினைப்பதெல்லாம்' திரைப்படங்கள் வெளிவந்த காலகட்டங்கள் தான். புரட்சி கலைஞரும் ஆக்சன் கிங்-உம் தீவிரவாதிகளுக்கு எதிராக யுத்தம் நடத்திக்கொண்டிருந்த போது நாம் வாழவே முடியாத ஆனால் வாழ விரும்பும் வாழ்க்கை பக்கத்து ஊரிலே இருப்பது போல கண்களுக்கு முன்பாகவே காட்டினார். அப்படங்களும்,பாடல்களும் மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றது.

நாகர்கோவிலில் அதிக நாட்கள் ஓடிய திரைப்படங்களில் முக்கியமான ஒன்று 'பூவே உனக்காக'. எத்தனை தடவை பார்த்தேன் என்று கணக்கு வழக்கே இல்லாமல் பார்த்திருக்கிறேன். என்னுடைய 'all time favourite' லிஸ்டில் 'பூவே உனக்காக' கண்டிப்பாக உண்டு. விஜய் என்ற நடிகரை தமிழ் உலகிற்கு அடையாளம் காட்டிய முக்கியமான படம். அத்திரைப்படத்தின் க்ளைமாக்ஸ் வசனங்களை மனப்பாடம் செய்து எழுதி வைத்து பள்ளி இடைவேளைகளில் நண்பர்களுக்கு வாசித்து காட்டியது இன்றளவும் நெகிழ்ச்சியாக நினைவில் உள்ளது.

'பூவே உனக்காக' திரைப்படத்தின் பின் வந்த 'சூரிய வம்சம்', 'உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்', 'வானத்தை போல' மூன்றுமே அவரின் உச்சம் என்பேன். தமிழக மற்றும் இந்திய அரசின் விருதுகளை அவருக்கு பெற்று தந்த படங்கள். இத்திரைப்படங்கள் வெளிவந்த காலகட்டங்களில் அவரை நான் மிகவும் நேசிக்க துவங்கி இருந்தேன். வெகுஜன இதழ்களில் வெளிவந்த அவரது பேட்டிகளை தேடி தேடித் படித்திருக்கிறேன்.சாமானிய மக்களுக்காக படம் எடுக்க கூடிய ஒரு படைப்பாளி என தீர்க்கமாக நம்பினேன். எனது நம்பிக்கையை எந்த வகையிலும் இயக்குனர் குலைக்கவே இல்லை.

திரையரங்கு போய் அதிகபட்சமாய் பார்த்த ஒரு திரைப்படம் 'வானத்தை போல'-வாக தான் இருக்க முடியும். ஞாயிற்றுகிழமை என்றாலே சுவாமியார்மடம் 'அஜய் டாக்கீஸ்'-ல் கூடி விடுவோம். ஊர் நண்பர்களோடு முறுக்கு சாப்பிட்டவாறு படம் பார்த்த அந்த நாட்களில் கிடைத்த சந்தோஷம் மல்டி ப்ளக்ஸ்களில் உச்ச நடிகர்களின் திரைப்படங்களை முதல் நாள் பார்க்கும் போது கூட கிடைக்கவில்லை.

'உன்னை நினைத்து' மற்றும் அதற்கு பிறகான திரைப்படங்கள் முழுக்க கிராம சாயலில் இருந்து விலகி நகர்புற வாழ்வியலை பின்னணியாக கொண்டவை. இதை விக்கிரமனின் சறுக்கலாக பிறர் சொன்னாலும் என்னை பொறுத்தவரை அப்படி ஒரு நிலைக்கு அவரை தள்ளி விட்டோம் என்றே தோன்றுகிறது.சுழலும் உலகமயமாக்கலுக்கு தன்னை உட்படுத்தி வேகமாய் ஓடி தன்னை வடிவமைத்து கொண்ட தமிழ் சமூகங்களுக்கு விக்கிரமனின் எளிமையான திரைமொழி சலித்து போனதில் ஆச்சரியம் இல்லை.

விக்கிரமன் படத்தை குடும்பத்தோடு பார்க்கலாம் என்ற மக்கள் மனதில் இருக்கும் நம்பிக்கையை இத்தனை வருட திரைவாழ்வில் அவர் எப்போதுமே உடைக்கவே இல்லை. கோடி கோடியாய் கொட்டி கொடுத்தாலும் குடும்பத்தோடு பார்க்க கூடிய படத்தை மட்டுமே எடுப்பேன் என்ற அவரது உறுதியில் அவர் மாறவே இல்லை நாம் தான் நம்முடைய ரசனையை வெகுவாய் மாற்றிக் கொண்டோம்.

இன்று(மார்ச் 30) பிறந்தநாள் கொண்டாடும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவிப்பதோடு விரைவில் வெளிவர இருக்கும் அவரது 'இளமை நாட்கள்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற மனதார பிரார்த்திக்கிறேன்.

டிஸ்கி:
நான் நேசித்த,நேசிக்கும் ஒரு படைப்பாளியை என் நேசிப்பினூடே அணுகி இருக்கிறேன். எனவே இது நடுநிலையான பதிவா என நண்பர்கள் என் மீது பாய வேண்டாம். நன்றி.

Wednesday, February 29, 2012

வீட்டுக் கோழிகள்


கடந்த கோடையில் பண்டிகை ஒன்றிற்காக ஊருக்கு சென்றிருந்தேன். மீசை முளைக்கத் துவங்கிய காலகட்டத்தில் இருந்தே பண்டிகைகளின் முந்தைய நாளில் இளவட்டங்கள் சேர்ந்து ஊரின் ஒதுக்குபுறமாக ஏதேனும் சமைத்து, சாப்பிட்டு, கதை பேசி, மகிழ்ந்து, கலைந்திருக்கிறோம். இந்தத் தடவை என்ன செய்யலாம் என யோசித்து நாட்டுக் கோழியும், மரிச்சினி(மரவள்ளி) கிழங்கும் சாப்பிடலாமே என எனது ஆசையை தெரிவித்தேன்.
நமட்டு சிரிப்புடன் பங்காளி ஒருவன் "இங்க களவாணக்கு கூட கோழி கிடச்சேல , உனக்கு வெலைக்கு வாங்கக்கா கெடச்சம்"
என்றான்.
"சீசன் நேரம் ஆனதாலஇப்ப கடையில கூட கிடச்சாது மக்கா" இன்னொரு நண்பன்.
ஆசைப்பட்டது கிடைக்கவில்லை என்பதை விட ஊரில் யாருமே தற்போது வீட்டுக் கோழியே வளர்ப்பதில்லை என்ற செய்தியே பெரும் ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் தந்தது.

நகரம் உலகமயமாக்கல் என்ற தனது அகோர நாக்கைக் கொண்டு கிராமங்களைத் தன்பக்கமாக இழுத்து வருகிறது... கிராமம் அதன் தொன்மையையும், தனித்தன்மையையும் தன்னை அறியாமல் இழந்து கொண்டிருப்பது போல் தோன்றியது.

உணர்ச்சிவசப்படாமல் யோசித்து பார்த்த போது உண்மை புலனாகத் துவங்கியது.கோழியை வளர்த்தெடுப்பதற்கோ, வாங்குவதற்கோ, விற்பதற்கோ யாருக்குமே நேரமில்லை. பத்து வருடங்களுக்கு முன் ஊரில் ஒரே ஒரு பிராயிலர்கடை இருந்தது போய் இன்று ஐந்தாறு கடைகள் வந்து விட்டது. ஊரில் உள்ள இளவட்டங்கள் அனைத்தும் பிழைப்பு தேடி வெளியூர்களுக்கு புலம் பெயர்ந்து விட... முதியவர்களின் விடுதி போல் பகல் நேரங்களில் கிராமங்கள் காட்சியளிக்கின்றது.பால்யத்தில் எங்கள் ஊரில் கோழி வளர்க்காத வீடுகளே பார்க்க முடியாது. சைக்கிள் டயரை உருட்டியவாறு ஊரை ஒரு சுற்று சுற்றி வந்தால் ஒரு கோழி குஞ்சாவது காலில் மிதிபடும். 'இது **** வீட்ல உள்ள கோழியாக்கும்' என ஒவ்வொரு வீட்டில் வளரும் கோழியும் அவ்வீட்டின் ஒரு உறுப்பினராகவே ஊரை வலம்வந்தது.

சென்னையில் நான் தங்கியிருந்த மேன்சன் சமையலறையை விட பெரிதான அளவில் எங்கள் வீட்டில் கோழி கூடுஒன்று இருந்தது. பக்கத்தில் இருந்த சிறு நகரத்தில் அப்பா ஜவுளிக்கடை வைத்திருந்ததால் அம்மாவும், அப்பாவும் காலையிலே கிளம்பி விடுவார்கள். விடுமுறை நாட்களில் வேளாவேளை கோழிக்கு தவிடு வைப்பது, கோழி முட்டை இட்டிருந்தால் எடுத்து பத்திரமாக அரிசி பானைக்குள் வைப்பது, கோழிகளின் எண்ணிக்கையை சரிபார்த்து கோழிக் கூட்டைப் பூட்டுவது என எல்லா வேலைகளும் எனக்கே தரப்பட்டு இருந்தது.

சிறுவயதில் அம்மாவிடமிருந்து அதிகபடியான அடியை கோழிக் கூட்டை மூடவில்லை என்பதற்காகவே வாங்கி இருப்பேன். கோழிக் கூட்டை ஒழுங்காக மூடி இருந்தேன் என்றாலே அன்றைய வேலைகள் அனைத்தையும் சரியாக செய்திருக்கிறேன் என அர்த்தம்.

ஊரில் நரிகள் நடமாட்டம் அதிகமிருந்த காலகட்டம் அது. சரியாகக் கதவு சாத்தப்படாத கோழிக்கூடுகளை கன்னம் வைத்து நடு இரவில் ஒன்றிரெண்டை அப்பிக் கொண்டு போய் விடும். நரிகள் தவிர வெளியூர் நாய்கள், காட்டுப் பூனைகளுக்கும் வீட்டுக் கோழிகள் இலக்காவது உண்டு. குடும்ப திருமணங்களுக்காக வெளியூர் செல்லும் போது பக்கத்து வீடு மாமியிடம் கோழிக் கூட்டைப் பூட்ட அம்மா சொல்லிப் போவாள். ஆனாலும் "இண்ணைக்கு மைனி கோழி கூட்ட பூட்டிசின்மோ என்னமோ" - என அந்தி சாய்ந்தால் புலம்புவதை கேட்க முடியும்.நரிகள், காட்டு நாய்கள், பூனைகள் இவை தவிர்த்து கோழிகளை பிடிக்க அலையும் மனித நரிகளும் உண்டு. மனித நரிகள் - ஆம், ஊரில் சுற்றி திரியும் இளந்தாரிகள். ஊர் எல்லையில் இவர்களுக்கு கிடைக்கும் வெதுவெதுப்பான சாராயத்திற்கு எதேனும் வீட்டுக் கோழியே துணையாகும்.

காட்டு நரிகள் கோழியை பிடித்துச் சென்றதா, இல்லை மனித நரிகள் பிடித்ததா என எளிதாக அடையாளப்படுத்தி விடலாம். காட்டு நரிகள் கோழிகளைப் பிடிக்கும் போது ஏறக்குறைய ஊர் எல்லை வரை கோழியின் இறகுகளை பார்க்கலாம். இன்னும் சற்று தள்ளிச் சென்றால் முழுதாய்த் தின்னாமல் சிதறிய கோழி பாகங்களையும் பார்க்கலாம். நரிகள் கோழிக் கூட்டுக்குள் சென்று கோழியைப் பிடிக்க முற்படும் போது கோழிகள் வெளிப்படுத்தும் சத்தம் மிகவும் அகோரமாய் இருக்கும். அப்போது ஊரில் ஏதேனும் பெரிசுகள் விழித்திருந்தால் அப்புறம் நரிக்காக காத்திருக்கும் துணைக்கு வேறு ஆள் பார்க்க வேண்டியது தான்.

இளந்தாரிகள் கோழி பிடிக்கும் விதமே அலாதியானது. ஏதேனும் ஒரு வீட்டின் கூட்டைக் கன்னம் வைத்து அவர்கள் இறங்கும் போது கண்டிப்பாக ஒரு நீள டார்ச்சும், தண்ணீரில் நனைத்த ஒரு கோணிப்பையும் இருக்கும். டார்ச்சை கொண்டு ஏதேனும் ஒரு கோழியின் கண்களில் அடித்துக்கொண்டே கோணிப்பையை கொண்டு கோழியை மூடும் போது ஒரு சத்தம் வராது. கடந்த பத்தியில் சொன்ன எந்த தடயங்களும் இல்லாமல் இருக்கும் பட்சத்தில் அது கண்டிப்பாக மனித நரிகளின் வேலையாகத் தான் இருக்கும்.அப்புறம் என்ன?!?!?! முகம் தெரியாத அந்த இளந்தாரிகளுக்கு, அவர்கள் அப்பாவுக்கு, அவர்கள் அம்மாவுக்கு என இரண்டு நாட்கள் முழுக்க வசையாகவும், சாபமாகவும் கோழியைப் பறிகொடுத்தோர் வீட்டில் இருந்து கிடைக்கும்.

இப்போதெல்லாம் பண்டிகை காலம் என்றாலே கறிக் கோழிக் கடைகளில் காத்திருக்கும் கூட்டத்தை அந்தக் காலத்தில் பார்க்கவே முடியாது. கிறிஸ்மஸ், புத்தாண்டு, ஈஸ்டர் என எல்லா பண்டிகைகளுக்கும் அடித்து புசிப்பதற்க்காகவே வீட்டில் சேவல் கோழிகள் வளர்க்கப்படும். விருந்தினர்கள் யாராவது வந்தால் வீட்டில் இருக்கும் பெரிய சேவல் கோழிகளே முதல் இலக்கு. எனது அம்மாவின் அம்மா வீட்டில் மிகப்பெரிய கோழிக் கூடு ஒன்று இருந்தது... அது நிறைய கோழிகளும். பண்டிகை நேரத்தில் தனது மகள்களுக்கு படி(பண்டிகை கால சீதனம்) கொடுக்க வரும் போது ஒவ்வொரு கோழியாக எல்லா மகள்களுக்கும் பரிசளிப்பாள்.

வீட்டுக் கோழி வளர்ப்பில் முக்கியமான காலகட்டம் நோய்க் கால பராமரிப்பு. ஏதேனும் கோழிக்கு நோய் தொற்றி விட்டால் அதைத் தனியாகப் பிரித்து வேறு ஒரு கூடைக்குள் அடைத்து மருத்துவம் பார்ப்பார்கள். மூன்று அல்லது ஆறு மாதத்திற்கு ஒரு முறை வீட்டுக் கோழிகளுக்கு நோய்த் தடுப்பு ஊசி இட்டால் அது ஆரோக்கியமாக வளரும். வாரம் ஒரு முறை சனிக்கிழமைகளில் ஊரில் இருந்து சுமார் எட்டு மைல்களுக்கு அப்பால் இருந்த கால்நடை மருத்துவமனையில் தான் ஊசி இட வேண்டும். வீட்டில் மூத்தவன் என்ற முறையில் நான் தான் கோழிகளைக் கொண்டு செல்ல வேண்டும்.


வேறு யாராவது நண்பர்கள் வருகிறார்களா என விசாரித்துக் காலையிலே கிளம்பி விடுவோம். வீட்டில் ஒவ்வொரு கோழியின் கால்களையும் தனியாக கட்டி ஒரு பெரிய கடவத்தில் வைத்து தருவார்கள்.கோழிக்கு மூச்சு திணறல் வந்துவிட கூடாது என்பதற்காக அதன் தலைகள் வெளியில் பார்த்து இருக்கும் படி செய்ய வேண்டும். சைக்கிளில் கடவத்தை வைத்து கட்டிச் சென்றாலும் ஒவ்வொரு கணமும் பின்னால் கோழி பத்திரமாக இருக்கிறதா என ஊர்ஜிதப் படுத்திக் கொண்டு தான் செல்ல வேண்டும். கோழியின் கால்கள் தற்செயலாக அவிழ்ந்து அது ஓடி விடுவதற்கான வாய்ப்புகளும் உண்டு... மூச்சுத் திணறி மரித்துப் போவதற்கான வாய்ப்புகளும் உண்டு.. இரண்டில் எது நடந்தாலும் அன்று வீட்டுக்கு செல்ல முடியாது என்ற பயம் இருந்து கொண்டே இருக்கும்.

காலையில் ஒன்பது மணிக்கு முன்பே நாங்கள் கால்நடை மருத்துவமனைக்கு வந்தாலும் 'மாட்டு டாக்டர்' அவர் நேரத்திற்குத் தான் வருவார். அதுவரைக்கும் வரிசையில் கோழிகளோடு காத்திருப்போம். கோழிகளோ மிரட்சியோடு எங்களைப் பார்த்துக்கொண்டிருக்கும்.

சுமார் பத்தரை, பதினொன்றுக்கு வரும் டாக்டர் வரிசையாய் இருக்கும் எங்களை அலட்சியத்தோடு ஒரு பார்வை பார்த்துக் கொண்டு கட்டிடத்தைத் திறப்பார். பின் உடைகளை மாற்றிக் கொண்டு முதலில் பசு, ஆடு போன்றவைகளை கவனித்து விட்டு (ஆடு, மாடு கொண்டு வருபவர்கள் அவரை 'கவனிப்பார்கள்') கடைசியாய் எங்கள் அருகில் வருவார்...

அன்றைய நாளின் மிகப்பெரிய சவாலே அப்போது தான் எங்கள் முன் காத்திருக்கும். நாங்கள் கோழியை எடுத்து அவரிடம் நீட்டும் போது இடது கையால் அதன் சிறகை பிடித்து தூக்கி ஐந்தே வினாடிகளில் ஊசியை போட்டு விடுவார். ஒரு தடவை மருந்து நிரப்பட்ட ஊசியை வைத்து சுமார் ஐந்து கோழிகளுக்குப் போடுவதால் அவரிடம் இருந்து ஊசி போட்ட கோழியை வாங்கி வைத்து அடுத்த கோழியை எடுத்து அவரிடம் நீட்டும் முன் அவர் வாயில் இருந்து வசவாக வரும்.

கோழியை வாங்கி வைத்து அடுத்த கோழியை நீட்டும் அந்தச் சில நொடிப் பொழுதைக் கூட அவரால் தாங்க முடியாது. நாம் கோழியைக் கடவத்தில் வைத்து அடுத்த கோழியைக் கொடுக்கும் இந்த நேரத்தில் ஏதேனும் ஒரு கோழி பயத்தில் கடவத்தில் இருந்து துள்ளிக் குதித்து தத்தி தத்தி ஓடுவதும் உண்டு. ஓடும் கோழியை பிடிக்கப் போனால் அடுத்த கோழிக்கு ஊசி போட முடியாது, போடவும் மாட்டார்.

இந்த மாட்டு டாக்டருடைய அக்கப்போர்களை சமாளிப்பதற்க்காகவே நாங்கள் நண்பர்கள் சில நேரம் ஒவ்வொருகடவமாக பிரிப்போம். முதலில் எனது கடவத்தை பிரிக்கும் போது நண்பன் ஒருவன் கோழியை ஊசி போடுவதற்காக பிடித்து கொடுப்பான் பின் அவனுடைய கடவத்தை பிரிக்கும் போது நான் கோழியை பிடித்து கொடுப்பேன். இருந்தாலும் கோழியை வாங்கி, வைக்கும் இடைவேளையில் விரையமாகும் அந்த சில நொடிகளுக்காகவும் எங்களுக்கு வசவு கிடைக்கும்.

அலுவலகத்தில் புராஜெக்ட் டெட்லைன், இன்றே கடைசி என மேலாளரால் அறிவிக்கப்படும் இந்நாட்களில் அன்று கோழிக்கு ஊசி போடும் போது மாட்டு டாக்டர் முன் கொள்ளும் பதட்டத்தை, இன்று நான் கொள்வதில்லை......

Tuesday, January 31, 2012

பாலபாரதியின் 'சாமியாட்டம்'

சமூக ஆர்வலர், எழுத்தாளர், ஊடகவியலாளர் என பல முகங்கள் கொண்ட பாலபாரதியின் முதல் சிறுகதை தொகுப்பு 'சாமியாட்டம்'.


பன்னிரெண்டு சிறுகதைகளை கொண்ட இந்த தொகுப்பினூடே பயணிக்கும் போது சில கதைகள் புலம் பெயர் வாழ்வின் வெம்மையையும் சில மாலை நேரத்து மழை குளிர்ச்சியையும் தருகின்றது.

இச்சிறுகதைகளின் வழியாய் ஆசிரியரின் அகவுலகை எளிதாய் தரிசிக்க முடிகிறது.

'அம்மாவின் கை உணவிற்கு ஏங்கும் வாலிபனாய்'
'சாதிய படிநிலையை கண்டு சாடும் முற்போக்குவாதியாய்'
'ஊரின் நினைவை தன்னோடு சுமந்து திரியும் தேசாந்திரியாய்'
'பால்யத்தில் ஒளித்து வைத்த கதைகளை சொல்லத் துடிக்கும் கதைச்சொல்லியாய்'
'உலகமயமாக்கலுக்கு எதிராய் குமுறும் சோசலிசவாதியாய்'
'போலி நம்பிக்கைகளை வெறுக்கும் பகுத்தறிவாதியாய்'
'விளிம்பு மனிதர்களின் பிரதிநிதியாய்'
'குழந்தையாய் மாற துடிக்கும் வளர்ந்த குழந்தையாய்'
என தொகுப்பை முழுதும் வாசிக்கும் போது ஆசிரியருக்கு பின்னிருக்கும் பரிமாணம் பிரமாண்டமாய் நீள்கிறது.

இத்தொகுப்பில் என்னை மிகவும் பாதித்த மூன்று சிறுகதைகள் 'தண்ணீர் தேசம்' , 'சாமியாட்டம்' மற்றும் 'துரைபாண்டி'. மூன்று கதைகளுமே எந்த பிரச்சார நெடியும் இல்லாமல் சொல்ல வந்த கருத்தை பொட்டில் அறைந்து சொல்கிறது.


நாம் அறியாமலே உலகமயமாக்கலின் தாக்கம் நம் வீடு வரை எப்படி வந்து நிற்கிறது என்பதை கடல் முட்டி நிற்கும் தீவில் உள்ள ஒரு நண்பரது வீட்டின் உபசரிப்பின் மூலம் பதிவு செய்திருக்கிறார் 'தண்ணீர் தேசம்' கதையில்..

ஒரே கோயிலில் திருவிழா கொண்டாடி, ஒரே சாமியை கும்பிட்டு இருக்கும் சாமானிய மக்களிடையே சாதியம் என்ற அழுக்கு எவ்வளவு ஆழமாக பதிந்து இருக்கிறது என்பதை வலியுடன் பேசுகிறார் 'சாமியாட்டத்தில்'

ஒரு இளைஞனுக்கும், சிறுவனுக்குள்ளும் எழும் இயல்பான சிநேகத்தையும், வறுமையின் நிமித்தம் மொழி தெரியாத ஊரில் பரிதவிக்கும் ஏழை சிறுவனின் வாழ்க்கையை அருமையாய் சொல்லி இருக்கும் கதை 'துரைபாண்டி'. இறுதியில் துரைபாண்டிக்கு என்னவாகி இருக்குமோ என வாசிப்பவனை பதபதைப்புக்குள்ளாக்கும் ஒரு அட்டகாசமான சிறுகதை.

இத்தொகுப்பில் நெருடலான விஷயமாக எனக்கு தெரிவது 'கோட்டி முத்து' கதையில் கோட்டிமுத்துவுக்கும் அந்த சிறுவர்களுக்குமான உறவை இன்னும் நெருக்கமாக உருவாக்கி இருந்தால் அந்த முடிவு இன்னும் நம்மை இறுக்கமாகி இருக்கும் என்று தோன்றுகிறது..அதுபோல 'கடந்து போதல்' சிறுகதையின் தலைப்பு அக்கதை உருவாக்கும் வலிக்கு பொருத்தமானதாக இல்லை என்பதும் எனது அனுமானம். ஆனால், மற்ற சிறுகதைகளில் கிடைக்கும் நிறைவு இக்குறைகளை கடந்து போகவே செய்கிறது..

இச்சிறுகதை தொகுப்பின் சிறப்பே ஒரே பேசுபொருளை பேசாமல் வெவ்வேறு கருத்தியல்களோடு பயணிப்பது தான். ஒவ்வொரு சிறுகதையை வாசித்து முடிக்கும் போதும் அதன் கிளை கதைகள் நம் அனுபவங்களிலிருந்து பீறிட்டு கிளம்புவதை தவிர்க்க முடியவில்லை. அதுதான் இத்தொகுப்பின் வெற்றியாக நான் நினைக்கிறேன்..


எளிமையான மொழியினூடே வலிமையாய் பல முற்போக்கு கருத்துகளை வைத்திருக்கும் இப்புத்தகத்தை அனைவரும் வாங்கி படிக்க பரிந்துரைக்கிறேன்..

அதே நேரம்.. நாம் பார்க்காத, கேட்காத எண்ணற்ற மனிதர்களின் கதைகளை மனதில் சுமந்து திரியும் பாலபாரதி தனது சோம்பலை கைவிட்டு தொடர்ந்து எழுத பணிக்கின்றேன்.

புத்தகத்தை இணையம் மூலம் வாங்க...

http://discoverybookpalace.com/products.php?product=%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D