Friday, September 30, 2011

ரப்பர் - நூல் விமர்சனம்

இந்த நாவலில் சுய சாதிய ஆதிக்கத்தை நிறுவுவதில் பெரிதும் முயன்று, ஒரு தனிப்பட்ட மனிதரின் வளர்ச்சியையும், வீழ்ச்சியையும் ஒரு சமூகத்தின் வளர்ச்சியாகவும், வீழ்ச்சியாகவும் கட்டமைக்க முயல்கிறார் ஜெமோ.

நாவலுக்குள் செல்வதற்கு முன் ஆசிரியர் முன்னுரையின் ஒரு சில வரிகளை பார்ப்போம்.

"அந்தரங்க சுத்தியுடன் எனக்கு நானே சொல்லிக் கொள்ளும் வார்த்தைகளின் அளவுக்குத் தூய்மையுடன், சத்தியத்தின் ஒளியுடன் எழுத வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்".
துரதிஷ்டம் என்னவென்றால் தன்னுடைய முதல் நாவலிலேயே வார்த்தையின் தூய்மையையோ, சத்யத்தின் ஒளியையோ நிறுவ முடியாமல் தோற்றுப் போகிறார் ஆசிரியர். நாவல் முழுக்க ஒரு மதத்தையும், சமூகத்தையும் நோக்கி சாடல்களை வைத்து தன்னுடைய வரலாற்று வன்மத்தை தீர்த்துக் கொள்கிறார்.


சரி நாவலுக்குள் செல்வோம்...

கேரள மாநிலத்தை ஒட்டிய கன்னியாகுமரி மாவட்டத்தின் மலையோர கிராமம் ஒன்றில் கதை நடப்பதாக இந்த நாவல் உருவாக்கப்பட்டுள்ளது.

தாழ்ந்த சமூகத்தில் பிறந்த பொன்னுமணி என்ற விவசாயி, உயர்குடி மக்களான நாயர்களுக்குப் பணிவிடை செய்து, வேண்டியதைப் பெற்று அவர்களுடைய சொத்தை அபகரித்து, காடாக இருந்த பகுதிகளை மாற்றி ரப்பர் மரங்களை நட்டு, பெரும் பணக்காரர் ஆகி 'பெருவட்டர்' என்ற சமூக அந்தஸ்தைப் பெறுகிறார். அவருடைய மகன் செல்லையா- வும் ’பெருவட்டர்’ என்று அழைக்கப்படுகிறார்.செல்லையாவின் மனைவி திரேஸ் 'பெருவட்டத்தி' ஆகிறாள். அவள் ஆடம்பரத்தை விரும்புகிறாள்.

செல்லையா - திரேஸ் தம்பதியினருக்கு ஐந்து பிள்ளைகள். மூத்த மூன்று பெண்பிள்ளைகளும் திருமணம் ஆகி வெவ்வேறு ஊர்களில் செட்டில் ஆகிவிடுகின்றனர். பின் உள்ள இரண்டு மகன்களில் பிரான்சிஸ் குடிகாரன், வேசிகளை நாடிப் போய் ஊதாரியாகச் சுற்றுபவன். லிவி என்ற இளைய மகன் பொறியியல் படித்துக் கொண்டிருந்தாலும், கீழ்த்தரமான நடத்தை உள்ளவன்.

செல்லையாவினுடைய மோசமான தொழில் அணுகுமுறைகளால் தொழிலில் நஷ்டம் வந்து பெரிய பெருவட்டர் உயிரோடு இருக்கும் போதே அவருடைய சொத்துக்களை விற்க வேண்டிய நிலை வருகிறது. தன் சந்ததியினருடையவீழ்ச்சியை பார்த்து, ஏக்கத்தோடு பெரிய பெருவட்டரும் இறந்து போவதாக நாவல் முடிகிறது.

வெளிப்படையாக இந்நாவலில் 'ரப்பர்' மரங்களினால் காடுகள் அழிந்து விட்டன என்பது போன்ற கருத்தாக்கத்தை உருவாக்க முயன்றாலும், முழுக்க முழுக்க தன்னுடைய சாதி மேட்டிமைத் தனத்தையும், கிறிஸ்தவர்கள் மேல் உள்ள வன்மத்தையும் மட்டுமே நிறுவி உள்ளார் ஜெமோ.

வட்டார வழக்கியலை முன்னிறுத்தி நாவலை எழுதும் போது முழுக்க, முழுக்க அதன் சிதைவு கெடாமல் எழுதப்பட வேண்டும். ஜெமோவின் இந்நாவலில் ஒரே கதாபாத்திரம் பாதி நேரம் வட்டார மொழியையும், பாதி நேரம் தமிழ் சினிமா மொழியும் பேசுகிறது.... புரிந்து கொள்வதற்கு கடினமான வட்டார சொற்களுக்கான விளக்கங்கள் 31-ம் பக்கம் வரைக்கே தரப்பட்டுள்ளது. அதன் பிறகு வாசிப்பவர்கள் எதுவும் புரிந்து கொள்ள வேண்டாம் என்று ஆசிரியர் நினைத்து விட்டாரோ என்னவோ :)

அடுத்து.... ஒரு பாஸ்டருக்கும், பாதிரியாருக்கும் உள்ள அடிப்படை வித்தியாசம் கூட தெரியாமல் ஒரு நாவலை எழுதி, தைரியமாக வெளியிட்டு, பரிசும் பெற்றிருக்கிறார் (?!). என்னக் கொடுமை ஜெமோ இது!. கிறிஸ்தவ மதத்தை நோக்கிச் சாட வேண்டும்.. ஆனால்.... எப்படி ? எதை? என்பதில் எக்கச்சக்கத் தடுமாற்றம். அதனால் தான் பாஸ்டர்- பாதிரி விசயத்தில் கூட திணறுகிறார் மனிதர்!.

கதையின் ஓட்டத்தை வைத்து இவர் பாதிரியார் என்றே நாம் அனுமானிப்போம். சரி, எதற்காக இங்கே பாதிரியார்?. பெரிய பெருவட்டருக்கு 'அவஸ்த்தை கொடுப்பதற்காக (நோயில் பூசுதல்)' வருகிறார் என கதையில் சொல்ல வந்தாலும் , அவர் முன்னிறுத்த முயல்வது பாதிரியார் ஒரு பேராசைக்காரர், அடம்பர ஆபரணங்களை அணிபவர், கோபக்காரர். கடைசியில் அந்தக் கதாபாத்திரத்தை வைத்தே 'கிறிஸ்து நொட்டினாறு' என சொல்ல வைத்து சந்தோசப்பட்டு கொள்கிறார் ஜெமோ. ஐயா ஆராய்ச்சியாளரே ! சாதாரண வழக்காடலில் 'கிறிஸ்து' என்றழைப்பதை விட 'இயேசு/ஆண்டவர்' என்றே அழைப்பார்கள் நாஞ்சில் நாட்டு வேதக்காரர்கள். பின் நோயில்பூசுதல் கொடுப்பதற்கு பாதிரியார் தனியாக வருவது இல்லை, கூடவே உபதேசியாரும் வருவார். அதுசரி, பாதிரிக்கும், பாஸ்டருக்குமே வித்தியாசம் தெரியவில்லை... பின் எங்கிருந்து உபதேசியாரை கொண்டு சொருகுவது.

ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் ஜெமோ எப்படிச் சித்தரிக்கிறார் என பார்ப்போம்.....

பொன்னுமணி - அனாதையாக அந்த ஊருக்கு வந்து கூலி விவசாய வேலைகள் செய்து, சொத்துக்களைச் சேர்த்து பெருவட்டர் என்ற நிலைக்கு வருகிறார். பின், அங்கு ஆதிக்க சக்திகளாக இருக்கும் நாயர்களிடம் பணிந்து போய், விவசாயம் செய்ய லாயக்கற்றுக் கிடக்கும் அவர்களுடைய காடுகளைப் பாட்டத்திற்கு எடுத்து ரப்பர் பயிர் செய்து பெரும் பணக்காரர் ஆகிறார். ஒரு கட்டத்தில் அவர்கள் திருப்பி கேட்கும் போது தர மறுக்கிறார்.

இந்த நாவலில் 'தோட்டம்' குடும்பத்தில் உள்ளவர்களில் 'கடும் உழைப்பாளி' என நல்லபடியாக சித்தரிப்பது பொன்னுமணியை மட்டும் தான். ஆனாலும் அவர் ஆசிரியர் பார்வையில் தாழ்ந்த குலத்தை சார்ந்தவர் ஆயிற்றே அவருக்கு எப்படி புனித பிம்பத்தை தருவது ? அதனால் அவருடைய பால்ய கதை ஒன்றை மீட்டு எடுக்கிறார், அதாவது பசிக்காக ஒரு குழந்தையை மிதித்து கொலை செய்தவர் இவர் என்று.

பின், பாட்டம் வாங்கிய நிலத்தை தர மறுக்கிறார் என்பது. ஜெயமோகன் சித்தரிக்கும் காலகட்டம் மலையாளி ஆதிக்கத்துக்குள் தமிழர்கள் சிக்கி இருந்த காலகட்டம். அதிகார மட்டத்தில் இருந்துகொண்டும் பண பலமும் கொண்ட நாயர்கள் ஆதிக்கத்தில் இருந்த காலம். அக்கால கட்டத்தில் பாட்டம் வாங்கிய நிலத்தை ஒரு தாழ்த்தப்பட்ட விவசாயியால் எப்படி திருப்பித் தராமல் இருக்க முடியும் ? ஜெமோவுடைய நோக்கம் ஒன்றே - உங்கள் முன்னேற்றம், உங்கள் உழைப்பால் வந்தது அல்ல என்பதை நிறுவ வேண்டும்.

அடுத்தது - செல்லையா பெருவட்டர் (பொன்னுமணி பெருவட்டருடைய மகன்)

செல்லையா பெருவட்டர் ரப்பர் தொழில் ஏற்றுமதி செய்வதற்காக பெரும் பணத்தை முதலீடு செய்து அதில் நஷ்டப்பட்டு, தந்தையின் சொத்துக்களை விற்க வேண்டிய நிலைக்கு ஆளாகிறார். தமிழகத்தில் இருந்து கொண்டு கேரளா அரசின் சட்டமன்ற உறுப்பினர்களை அவர் விலைக்கு வாங்க முயல்வதாக சித்தரிக்கபடுகிறது. அது எப்படி சாத்தியம் என்பது ஜெமோவுக்கே வெளிச்சம்.

அடுத்தது - திரேஸ் - ( செல்லையா பெருவட்டருடைய மனைவி )

திரேஸ் ஒரு ஆடம்பரப் பிரியை, கணவரை பொருட்டாக மதிக்காதவள், இரக்கமற்றவள் என இக்கதாபாத்திரம் முழுக்க ஒரு வில்லி பாணியிலே சித்தரிக்கப்பட்டு உள்ளது... ஆனால் அறுபது வயதுக்கு மேலும் அவளை காமம் தேடி அலைகிறவளாக சித்தரிப்பது தற்செயலானதா ? இல்லை ஜெமோவின் வன்மமா?

பிரான்சிஸ் & லிவி - ( செல்லையா பெருவட்டருடைய மகன்கள் )

இதில் பிரான்சிஸ் ஊதாரியாக பெண்கள் பின் சுற்றித் திரிந்து, கடைசியில் ராம், லாரன்ஸ் ஆகிய டாக்டர்களின் அறிவுரைகளால் மனம் திருந்துபவன் போலவும்... லிவி - கல்லூரிக்கு ஒழுங்காக செல்லாமல் வீட்டில் உள்ள வேலைக்கார பெண்ணை தனது காமத்திற்காகப் பயன்படுத்தி, தந்தைக்கு பண நட்டத்தை ஏற்படுத்தி, தாயினுடைய தவறான நடவடிக்கைகளுக்கு உதவுவது போலவும் சித்தரிக்கப்பட்டு உள்ளது.

ஜெமோ இந்த மகன்கள் கதாபாத்திரத்தின் வழியாக சொல்ல வருவது - நீங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு, ஏமாற்றி சொத்து சம்பாதித்து வைத்தாலும், உங்கள் குல வாரிசுகள் அதை எப்படியும் அழித்து விடுவார்கள் என்பது. ம்ம்.....

தன்னுடைய மேட்டிமை தாங்கிய நாயர் குலத்தை பற்றி எப்படி சொல்கிறார்?.

ஐயோ...! கேட்கவா வேண்டும்!!!! முஸ்லிம் வீரர்களை நாயர்கள் துரத்திய பராக்கிரமம் ஆகட்டும், அறைக்கல் தரவாட்டின் மேட்டிமையை சொல்வதில் ஆகட்டும், நாயர் பெண்களின் அழகை சித்தரிப்பதில் ஆகட்டும் மனிதர் புகுந்து விளையாடுகிறார். நிற்க.... சுயசாதிய பெருமையை சொல்லி கொண்டு போனால் நாவலை முற்றிலும் நிராகரித்து விடுவார்களே அதற்காகவே மூன்று கதாபாத்திரங்களை உருவாக்குகிறார். 1.தங்கம், 2. சுகாசினி, 3. வேலாயுதன் நாயர்(குளம்கோரி)

தங்கம் - அப்பாவியான அறைக்கல் நாயர் குடும்பத்து பெண். வறுமையால் பெருவட்டர் வீட்டில் வேலை செய்யும் அவளை லிவி தனது காமத்தை தணிக்க பயன்படுத்தி கொள்கிறான்(கவனிக்க....... அவள் நல்லவள் லிவி தான் கெட்டவன்). கடைசியில் மர்மமான முறையில் மரணம் அடைகிறாள்.

சுகாசினி - இவளும் நாயர் தரவாட்டு பெண் தான். வறுமையான சூழலால் விபச்சாரம் செய்கிறாள் ( ஒரு காட்சியில் பிரான்சிசைப் பார்த்து சொல்கிறாள்: "இதுவெல்லாம் விபச்சாரம் செய்து சம்பாதித்த சொத்து. உன் தாத்தா மாதிரி சாதுக்களைக் கொன்று கூட்டி வைத்த சொத்து இல்லை".). அப்போ சரி நாயர் பெண் விபச்சாரம் செய்தால் தப்பே இல்லை.:)

வேலாயுதன் நாயர்(குளம்கோரி) - இவன் தங்கத்துடைய அண்ணன்.

நாயர்களில் இவன் ஒருவனை மட்டும் தான் அகோரி போல சித்தரித்து இருக்கிறார் ஜெமோ..... ஆனால் கடைசியில் அவனும் தன் தங்கை மரணத்துக்கு காரணமானவர்களிடம் இருந்து பெரும் பணத்தை கறந்து தன் தாயை வாழ வைக்கிறான் என்பது போல முடிகிறது.

லாரன்ஸ் என்ற ஆதிவாசி கதாபாத்திரம் ஒன்றையும் உருவாக்கி உள்ளார் ஜெமோ... எதற்கு?? தனக்கும் கிறிஸ்துவை பிடிக்கும் என்ற பிம்பத்தை உருவாக்க வேண்டுமே.. இதோ அந்த கதாபாத்திரத்தின் வழியாக ஜெமோ தனக்கான கோட்பாடை அடித்து தள்ளுகிறார்.
" கிறிஸ்து தேவாலயங்களில் இல்லை, ஆஸ்பத்திரிகளில் இல்லை, கான்வெண்டுகளில் இல்லை, கூட்டு பிரார்த்தனைகளில் இல்லை, கவிதை சொட்டும் ஜெபத்தில் இருக்கிறார். கிறிஸ்து மலைகளில், காடுகளில், இயற்கையில் இருக்கிறார்".

சரி... இந்த நாவலில் அவர் சொல்ல வருவது என்ன ? மேலோட்டமாக அவர் முன் வைக்கும் கருத்தைப் பார்ப்போம்.

ரப்பர் மரங்களால் சுற்றுச் சூழலுக்குக் கேடு. பணத்திற்காக ஏழை விவசாயிகள் அவ்வாறு செய்கின்றனர் என்கிறார். உண்மை தான் வாழும் சுற்றுப்புறத்திற்கு உகந்தது அல்ல ரப்பர். அதை முதலில் தமிழர் பகுதிகளுக்கு அறிமுகபடுத்தியது யார் ? மேட்டிமை பொருந்திய மலையாளிகளே...... பிரிவினைக்கு பின் இங்கே வாழ்வதற்கு உகந்தது அல்ல என பெருவாரியான பகுதிகளை உதறி தள்ளி கேரளத்திற்கே தஞ்சம் புகுந்தவர்கள் அவர்கள். இன்றும் தமிழர் வாழும் பகுதிகளில் கணிசமான சொத்துகள் அவர்களிடமே உள்ளது.

ஒரு ரப்பர் நட்டு, வளர்த்து, அதன் பலனை அனுபவிக்க குறைந்தது ஏழு வருட காலம் ஆகும். எனவே வாழை நடுதல், மரவள்ளி கிழங்கு நடுவது, நெல் உற்பத்தி செய்வது போன்ற பணிகளில் ஈடுபட்டு வந்த சாமானிய விவசாயிகளால் ரப்பர் தோட்டம் அமைப்பது சாத்தியம் இல்லாத ஒன்றாகவே இருந்தது. நாவல் வரையறுக்கும் கால கட்டங்களை எடுத்துக் கொள்ளும் போது ஒரு குடும்பத்தில் குறையாமல் பத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் இருந்தனர். அவர்கள் தங்களுக்கு கிடைத்த உபரி நேரத்தில் மலைகளையும், காடுகளையும் கொத்தி சீரமைத்து ரப்பர் மரங்களை நட்டு, கொஞ்சம் கொஞ்சமாக பணம் ஈட்டி கொண்டார்களே தவிர ஜெமோ சொல்வது போல் ஏமாற்றி அவர்கள் சொத்து சேர்க்கவில்லை.

ஒரு காட்சியில் தம்பிரானிடம் இருந்து பொன்னுமணி நிலத்தை பாட்டம் கேட்க வருகிறார். மிகவும் பணிந்து கூழைக்கும்பிடு போட்டு நிலபாட்டம் கேட்க வருவதாக அக்காட்சி சித்தரிக்கப்பட்டு உள்ளது. உயர்சாதி பிராமணர்களிடம் இருந்து 36 அடி தொலைவிலும், நாயர்களிடம் இருந்து 12 அடி தூரத்திலுமே தாழ்த்தப்பட்டவர்கள் நிற்க வேண்டும் என்ற கொடுமையான அடக்குமுறை அக்கால கட்டத்தில் இருந்ததை ஜெயமோகன் ஏன் சொல்லாமல் மறைக்கிறார்?

சரி.... இந்த நாவல் ஜெமோ வைக்கும் அடியாழமான செய்தி என்ன ? வரலாற்று ரீதியான வன்மம்.

சுமார் 150 ஆண்டுகளுக்கு முன், தனது மார்பகத்தைக் கூட மறைத்துக் கொள்ள உரிமை இல்லாத ஒரு சாதி... கல்வியாலும், பொருளாதாரத்தினாலும் முன்னேறி வந்ததை எப்படி ஜெயமோகன் நாயரால் பொறுத்து கொள்ள முடியும்?.

"யாமானே.... யாமானே...." என துண்டை இடுப்பில் கட்டி, கைகூப்பி நின்ற சாணன் பயல்கள், சட்டை போட்டு இறுமாப்பாய் வலம் வருவதை எப்படி தரவாட்டுகார யாமான் ஜெயமோகனால் பொறுத்து கொள்ள முடியும் ?

'உன் மேல் உள்ள தலைவரி, கூரை வரி, மர வரி, தலைப்பாய் வரி, குடை வரி, ஆடை & அணிகலன் வரி எல்லாவற்றிலும் இருந்து விடுதலை வாங்கி தருகிறேன் என் மதத்தை தழுவு' என்று இன்னொரு வாழ்வுக்கு வழி காட்டிய சீர்திருத்த கிறிஸ்தவ மதத்தை கண்டாலே ஆண்டான் ஜெயமோகனுக்கு கடுப்பு தானே வரும்.

இந்த வன்மத்தை ஒரு கதாபாத்திரத்தின் மேல் ஏற்றி வைத்து மட்டம் தட்டுகிறார் ஜெமோ.. அந்த கதாபாத்திரம் எபன் - தெரேசுடைய 'டீன் ஏஜ்' காதலன்.

எபன் - திரேசுடைய காதலுக்காக ஏங்கித் தவிப்பவன் என்றும், அதே வேளையில் மலையாளிகளுக்கு எதிராகக் கொந்தளிக்கும் மனநிலை கொண்ட கல்லூரி வாலிபனாகவும், சொந்தமாக முடிவெடுக்க முடியாமல் திணறுபவன் போலவும் சித்தரித்திருக்கிறார். எபன், மலையாளி ஆதிக்கத்தை எதிர்த்து தெரேசோடு விவாதிக்கும் போது தனது சொந்த அரிப்பை திரேஸ் கதாபத்திரத்தின் வழியாக தணித்துக் கொள்கிறார் ஜெமோ...... உச்சபட்சமாக குமரி தந்தை மார்சல் நேசமணி ஐயாவை "நேசமணி நொட்டினாறு... " என்று சொல்லும் அளவிற்கு. கடைசியில் எபன் கதாபாத்திரம் மலையாளி போலீசால் சாவடிக்க படுகிறது. அதற்கு காரணமான ஆதிக்க பின்புலத்தை எங்கேயும் பதிவு செய்யவே இல்லை நாவலாசிரியர். புரட்சிக்காரன் என்றாலே வலதுசாரி ஜெமோவுக்கு விக்கல் வந்துவிடுமே.... அது தான் இங்கேயும் நடந்தது.


நாயர்களுடைய வீழ்ச்சி அவர்களாலே உருவானது. காலுக்கு மேல் கால் போட்டுக் கொண்டு, உழைக்காமல் சொகுசாய் வாழ்ந்து கொண்டிருந்த நேரம், மார்தாண்டவர்மா மகாராஜா நிலப்பிரபுத்துவ முறையை ஒழிக்கிறார். பின் திருவிதாங்கூர் திவான் மன்றோ அதிகார அமைப்புகளை மாற்றுகிறார். சும்மா இருந்து காலம் காலமாய் உண்டு கொண்டிருந்த நாயர்களுக்கு வாழ வழி தெரியாமல் தறவாடுகளுக்குள்ளே பிரச்சனை வந்து, குடும்பங்கள் சிதறி வீழ்ச்சியை சந்திக்கின்றனர். அந்த வீழ்ச்சியின் கோபத்தை அதே காலகட்டத்தில் எழுச்சி பெற்ற இன்னொரு சமூகத்தின் மேல் காட்டுவதில் யாருக்கு என்ன லாபம்?

1822 வருடம் துவங்கி 1859 வரை ஏறக்குறைய மூன்று காலகட்டங்களாக நடந்த தோள்சீலை கலகத்தில் தான் முதல் சமூக அந்தஸ்தே அவர்களுக்கு வழங்கப்பட்டது. இது குறித்து 26-7-1859 அன்று அரசு வெளியிட்ட விளம்பரம்.

".. we hereby proclaim that there is no objection to shanar women either putting on a jacket, like the christian shanar women, or to shanar women of all creeds dressing in coarse cloth, and tying themselves round with it as the Mukkavattigal do, or to their covering their bosom in any manner whatsoever, but no like women of higher caste"

இத்தகைய சமூக விடுதலையால் கிடைத்த எழுச்சியை பாராட்டாவிட்டாலும் கொச்சைப் படுத்தாமலாவது இருக்கலாம் அல்லவா ஜெயமோகன் அவர்களே....

இந்நாவலை மறுவாசிப்புக்கு உட்படுத்தும் போது, வரலாற்று ரீதியான பகைமையை தன் நாவலில் முன்னிறுத்த முயன்று ஒரு படைப்பாளியாய் தோற்றுப் போன ஜெயமோகன் மேல் பரிதாபம் தான் வருகிறது.

அண்ணல் அம்பேத்கருடைய வாக்கை இங்கே நினைவு படுத்த விரும்புகிறேன்........
"எவர்கள் இந்நாட்டின் சரித்திரத்தால் மறைக்கப்பட்டார்களோ அவர்களே இந்நாட்டின் சரித்திரத்தைத் திரும்ப எழுதுவார்கள்"


நன்றி: பண்புடன்

புகைப்படங்கள் உதவி: கூகிள், ஜெயமோகன்.இன்

4 comments:

  1. ஜெயமோகனை பிரித்து மேய்ந்திருக்கிறீர்கள். தொடருங்கள். வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. ஜெய மோகன் என்ற "இந்துத்வா பாசிஸ்டு எழுதிய "சாதி வெறி சார்புள்ள ஆக்கத்தை அருமையாக விமர்சனம் செய்துள்ளீர்கள் - பாராட்டுகள் ஜெ

    ReplyDelete