Sunday, February 20, 2011

வாழ்த்துக்கள் நண்பா..."சிட்டிசன்" திரைப்படத்தில் ஒரு காட்சி வரும். தண்ணீருக்குள் மூழ்கி கிடக்கும் குட்டி அஜித்தை, ஒவ்வொருவரும் தங்கள் மூச்சை கொடுத்து காப்பாற்றுவார்கள்.

அதுபோல, ஒவ்வொரு இக்கட்டான வேளைகளிலும் எனக்கான சுவாசத்தை என் நண்பர்களே தந்திருக்கிறார்கள்.......

அன்னாசி பழமும், நொங்கும் எனக்கு பிடிக்கும் என்பதற்காகவே, எனக்காக திருடி பின் ஊராரிடம் இருந்து அடி பட்டவன்...
"டூரு போறல்ல செலவுக்கு இத வச்சிக்க" என தன் சேமிப்பை எனது பாக்கெட்டில் வைத்து போனவன்.....
வீம்பாய் திரிந்த விடலை பருவத்தில் 'மேலவிளைக்கு போவாத உன்ன அடிக்க ஆளு நிக்குது' என ஒற்று சொன்னவன்...
"ஸ்டாலினு தண்ணி அடிக்க மாட்டான்... அவனுக்கு இந்த ரூவாயில புரோட்டாவும், எறச்சியும் வாங்கி கொடுங்க டே" என எங்கோ இருந்த என்னை ஞாபகம் வைத்து நண்பர்களிடம் காசை கொடுத்து விட்டு வெளிநாடு சென்றவன்......
பேருந்து சில்லறை தகராறில் என்னை திட்டினார் என்பதற்காகவே பஸ்ஸை நிப்பாட்டி கண்டைக்டரின் கழுத்தை பிடித்து வெளியே தள்ளியவன்............
சென்னையில் நான் சபிக்கப்பட்ட வேளைகளில் "உனக்கு எப்படியும் வேல கிடைச்சிடும் மக்கா, கவலை படாத" என சொல்லி தினம் மதியம் சாப்பாடு வாங்கி தந்து, பஸ்சுக்கு காசும் தந்து விட்டவன்...
ஒண்ட இடமில்லாமல் வீதியில் நின்ற ஒரு நள்ளிரவில் வாடகையே கேட்காமல் வாரக்கணக்கில் அறையில் தங்க வைத்தவன்......
வாழ்க்கை ஒரு சூனியம் என நான் உணர்ந்த ஒரு இரவில், நான் தூங்குவேனோ இல்லை எதாவது செய்து விடுவேனோ என்ற பதட்டத்தோடு தூங்காமல் காவல் காத்தவன்....
.................................................
.................................................
..............................................

என என் நினைவு பக்கங்கள் பெரும்பாலும் அவர்களாலேயே எழுதப்பட்டு இருக்கிறது........

மேலே எழுதாமல் விட்ட சம்பவங்களிலும், சொல்லாமல் விட்ட நண்பர்களில் முக்கியமான ஒருவன் பிரதீப்.
சம்பளமில்லாமல் வேலை, 750-900, 3000, 4150, 5000 என படிப்படியாக கனவுகளை துரத்தி கொண்டிருந்த நேரம்...

அதிகப்படியாய் சம்பாதிப்பவன் இல்லை ஆயினும் கேட்டான் 'நான் ஏதாவது உதவி செய்யவா?' என
அவன் ஓடி சேர்த்த காசுகளில் CCNA, MCSE, Check point என நான் சான்றிதழ் சேர்த்துக்கொண்டு இருந்தேன்.

உனக்கு இவளவு தந்தேன் என ஒரு நாளும் அவன் கணக்கு சொன்னதில்லை. எப்போதாவது மிக அவசரம் என்றால் கொஞ்சம் கேட்பான், அவ்வளவே. கணக்குகளை தட்டி பார்த்தால் இன்றும் அவனுக்கு நான் கடன்காரன் தான்.

எனது வாழ்வின் சுவாரசியமான பொழுதுகளில் எப்போதும் அருகில் இருந்திருக்கிறான். அவனோடு சுற்றிய பயணங்கள் ஒவ்வொன்றும் அலுக்காத இலக்கியம்..... பாலக்காட்டில் இருந்து தமிழகத்துக்கு ஆட்டோவிலும், பின் லாரியிலும் வந்த ஓர் இரவை இன்று பேசினாலும் எங்கள் சிரிப்பொலி நிற்க வெகு நேரம் ஆகும்.

இப்போது அவனது நேரம்....

பிரதீப் தன் வாழ்வில் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்கிறான். இருபத்தி மூன்றாம் தேதி திருமணம்.

அவனது வாழ்வின் கடைசி பேச்சிலர் தினத்தை கொண்டாட நானும் கிளம்புகிறேன்....அவன் இல்லறம் சிறக்க நீங்களும் பிரார்த்தியுங்கள்...

வாழ்த்துக்கள் நண்பா......