Tuesday, October 29, 2013

நினைவுகளிலிருந்து அழியாத ஒரு வரலாற்று துயரம் : வெள்ளியோடு பேருந்து எரிப்பு சம்பவம்


மதம் மற்றும் சாதியின் பின்னால் ஒளிந்து நின்று அரசியல் பேசும் இன்றைய குமரிமாவட்ட காங்கிரஸ் தலைமுறைக்கு ஞாபகப்படுத்த இதை பதிவு செய்யவேண்டியது கட்டாயமாகிறது....
சுதந்திரத்திற்கு பின், காங்கிரஸ் கட்சி முதன் முதலாக மொராஜி தேசாய் தலைமையிலான ஜனதா கட்சியின் கூட்டணியினரிடம் வீழ்கின்றனர். ஆட்சிக்கு வந்த ஜனதா அரசு பல்வேறு குற்றச்சாட்டுகளில் பேரில் இந்திராகாந்தியை கைது செய்கின்றார். முதன்முதலாக காங்கிரசின் வீழ்ச்சியையும், இந்திராவின் கைதையும் சகித்துக் கொள்ள இயலாத இந்திரா காங்கிரஸ் தொ(கு)ண்டர்கள் நாடு முழுவதும் கலவரத்தில் ஈடுபடுகின்றனர்.
டிசம்பர் 20, 1978 இரவு, நாகர்கோவிலில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி சென்றுக் கொண்டிருந்த 'கட்டபொம்மன் போக்குவரத்து கழக பேருந்து' ஒன்று வெள்ளியோடு அருகே இரவு வழிமறிக்கப்பட்டு பெட்ரோல் ஊற்றப்படுகிறது. மூன்று பெண்கள்(ஒரு கர்ப்பிணி பெண்) உட்பட ஒன்பது ஏழை உயிர்களை பலி கொண்ட இந்த சம்பவத்தில், ஏழு பேர் அதே பேருந்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழகின்றனர். இதில் மூன்று உடல்களை(எலும்புகளை) யார் என்றே உறவினர்களால் அடையாளம் காட்டமுடியாத நிலையில், போலீசாராலேயே பின்னர் அடக்கம் செய்யப்பட்டனர்.
சம்பவத்தில் சூத்திரவாதியாக கருதப்பட்ட, இன்றளவும் 'தீக்கொழுத்தி' என்று மக்களால் வன்மத்தோடு விளிக்கப்படும் மருத்துவர் ஒருவர் கைது செய்யப்படுகிறார். வழக்கு நடைபெற்று வந்த வேளையில் மொராஜி தேசாய் அரசு கவிழ்ந்து மீண்டும் இந்திரா ஆட்சியை பிடிக்கிறார் மத்திய, மாநில அரசின் உறவுநிலை பின் நெருக்கமாக இந்த தீக்கொழுத்தியோ வெளியே வருகிறார். கட்சி இவருக்கான 'சேவை'யை பாராட்டி 1989-ஆம் வருட சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராக்குகிறது. நல்லவேளையாக அந்த கரும்புள்ளியை தனது முதுகில் வாங்கிக்கொள்ள விரும்பாத பத்மனாபுரம் தொகுதி மக்கள் இவரை தோற்கடிக்கின்றனர்.
........
........
இச்சம்பவம் நடந்து சுமார் முப்பத்தி ஐந்து வருடம் ஆகிறது.கட்சியின் ஏகோபித்த ஆசி மற்றும் சட்டத்தின் ஓட்டையை பயன்படுத்தி  'தீக்கொழுத்தி' போல பெரும்பாலானோர் தப்பித்து விட்டாலும், அன்று காங்கிரஸ் தொண்டர்கள் என்ற பெயரில் இவர்கள் நடத்திய வெறியாட்டம் இன்றும் ஊர் மூப்பர்களால் நினைவுகூரப்பட்டு தான் வருகிறது.


இன்று தங்கள் அரசியல் லாபத்துக்காக மதம் மற்றும் சாதியின் வாலை பிடித்துக் கொண்டு, வெளிஅலங்காரத்துக்காக மட்டும் வெள்ளை உடை தரித்து, அகிம்சையை மேடையில் மட்டுமே பேசிக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளுக்கும் அவர்கள் அடிபொடிகளுக்கும் ஒன்றே ஒன்றை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்..


"எழுதப்படவில்லை என்பதற்காக அராஜவாதிகளின் வரலாறு புனிதமாகி விடாது.. அந்த அராஜகங்களினால் பாதிக்கப்பட்டவர்களால், தலைமுறை தலைமுறையாக அவ்வலி கடத்தப்பட்டுக் கொண்டு தான் இருக்கும்"