Thursday, December 6, 2018

திருவாங்கூரின் கடைசி பிரஜை

எங்கள் ஊரின் கடைசி திருவாங்கூர் பிரஜையான 'கிராப்பு தாத்தா' என்ற தாசையன் தாத்தா மறைந்தார்.
ஏன், திருவாங்கூர் ஆட்சியில் பிறந்து, வளர்ந்த வேறு யாரும் ஊரில் இல்லையா? இருக்கிறார்கள். ஆனால், 100 ஆண்டுகள் கடந்த ஒரே முதியவர் இவரே. மட்டுமல்லாது, மன்னர் ஆட்சியை கடந்து ஏறக்குறைய 70 ஆண்டுகள் ஆன பின்னும் அவரது நினைவிலும், வாழ்வியலிலும் சுதந்திர இந்தியாவின் ஜனநாயக அரசை, 'மன்னர் ஆட்சி'யின் நீட்சியாகவே நினைத்தே வாழ்ந்தார்.
ரூபாய் க்கு நாம் எப்போதோ மாறி இருந்தாலும், அவரோ ரூபாயை திருவாங்கூரின் 'சக்கறம்' என்பார். அரசும், கவர்மெண்டும் அவருக்கு எப்போதும் 'சர்க்காரே'.. போலீஸ் மீதான அதீத பயம் அவருக்கு இருந்தது. அதே வேளையில், போலீஸ் ஸ்டேசன் வாசலை ஒருநாள் கூட மிதித்ததில்லை என்ற பெருமிதமும் அவருக்கு இருந்தது. அரசு-சாமானியன், இதற்கு இடையே இருக்கும் ஒருவிதமான மிரட்சியான அரசியலை அவரது வாழ்க்கையை அவதானித்து நிறைய உள்வாங்கிக் கொண்டேன்.
ஊரின் மிகச்சிறந்த 'பனையேறி'. அவர் பனை ஏற கற்றுக்கொண்டவை எல்லாம் மூன்றாம் தலைமுறையிலும் பேசப்பட்டு வருகிறது. பள்ளிக்கூட ஆசிரியரின் அடிக்கு பயந்து அவரும் இன்னொரு பெரியப்பாவும் ஊர் சுற்றுவார்களாம். அந்த நேரத்தில் பொழுதுபோக, 'யார் அதிக உயரத்தில் பனை ஏறுகிறார்கள்?' என்பது தான் அவர்களுக்குள் நடக்கும் போட்டி. ஒருவர் ஏறிய தூரத்தை விட இன்னொருவர் அதிகம் ஏறி, எச்சில் துப்பி வைப்பார்களாம். அதை இன்னொருவர் தாண்டி விட்டால் அன்று அவர்கள் தான் "வின்னர்". இப்படி பள்ளி 'கட்டடித்து' ஏற துவங்கிய அவர்கள் பனையேற்றம், வெகு சிறுவயதிலேயே தொழிலில் இறக்கி விட, ஊரின் மிகச்சிறந்த பனையேறிகளாக இருந்திருக்கிறார்கள். பெரும்பாலான மரம் ஏறிகளின் வாழ்க்கையை போல மரத்தில் இருந்து கீழே விழுந்து அடிபட்டதும், பின் மலைகளை சார்ந்து வாழும் வாழ்க்கைக்கு மாறி இருக்கிறார்.
தாசையன் என்ற அவரது இயற்பெயரில் எப்படி 'கிராப்பு' என்ற பட்டப்பெயர் தொத்திக்கொண்டது என்று தெரியவில்லை. ஆனாலும் ஊரில் இன்றும் எல்லோருக்கும் அவர் 'கிராப்பு' தாத்தா தான்.
ஆம், கிராப்பு தாத்தா எனக்கு யார்? எனது தந்தை வழி உறவினர். குமரி பாஷையில் 'அருவக்காரங்க'. நான் பிறந்துவளர்ந்த வீட்டின் முன்வீடு தான் அவர்கள் வீடும். எனது தந்தையின் சிறு வயதிலேயே அவருடைய அப்பா தவறி விட்டதால், எனக்கு 'முதல் தாத்தா' வாக அறிமுகமானது கிராப்பு தாத்தா தான்.
மரவள்ளி கிழங்கு இலையை தின்று சாவக்கிடக்கும் ஆட்டின் காதை அறுத்து அதை உயிர்ப்பிக்கும் வித்தையை அவர் மூலம் தான் கற்றுக்கொண்டேன். அவர் வீட்டில் வளர்ந்த 'டைகர்' என்ற நாட்டு நாய் தான் என் முதல் செல்லப்பிராணி.
நான் 10 வயதுக்குள் இருக்கும் போது அவர் 70 களில் இருந்தார். இருள் குறித்தும், பேய்கள் குறித்தும் அதீத நம்பிக்கை வைத்திருந்தார். அவரது வீட்டு திண்ணையில் தான் அவரது ஊணும், உறக்கமும். ஊரில் அவரோடு வெற்றிலை சாப்பிடும் நண்பர்கள் இறந்து போனால், இரண்டொரு நாட்களில் அவர்கள் மீண்டும் இரவு வந்து திண்ணையில் உறங்கிக்கொண்டிருக்கும் இவரிடம் வெற்றிலையும், சுண்ணாம்பும் கேட்டதாக சொல்வார். பெரும் மிரட்சியோடு அவர் சொல்லும் விசயங்களை பயத்தோடு கேட்டுக்கொண்டிருப்போம். இரவு அவருக்கு பிடிக்காது, இரவில் வெளியே சுற்றுவதும் அவருக்கு பிடிக்காது. இரவில் எத்தனை மணிக்கு அவர் வீட்டு முன் நடக்கும் சத்தம் கேட்டாலும், திண்ணையில் இருந்து விழித்து, "இது யாரு?" என கேட்பார். "தாத்தா, நான்தான்" என்றால். "இந்த செம்பாதிக்கு எங்கல கறங்கீட்டு நடக்குதியா?...." என கோபப்படுவார்.
"ஏன் முன்ன மாதிரி இப்ப பேய் இல்ல..." என கேட்டால், "விளக்கு(மின்சாரம்) இருக்கியனால பேய் வரல" என்பார். அமானுஷங்கள் மீதான பயத்தின் சாரம் அவரது பேச்சின் தொடர்ச்சியாக தான் எங்களுக்கு வந்திருக்க வேண்டும்.
கிராப்பு தாத்தாவின் மனைவி நான் பிறப்பதற்கு முன்பே இறந்து விட்டார்கள். மரணத்தின் வாசனை புரியாத வயதில் "ஏன் கிராப்பு தாத்தாவுக்கு, பாட்டி இல்லை?" என அம்மா,பெரியம்மாவிடம் கேட்டிருக்கிறேன். "அவங்க ஏரோபிளேன்ல வெளிநாடு போயிருக்காங்க" என்பார்கள். "தாத்தா அப்போ ஏன் வெளிநாடு போவேல?" என்ற கேள்விக்கு இன்று வரை பதில் கிடைத்ததில்லை. ஆனால், இன்று கிடைத்து விட்டது. இனி திரும்பி வரவே முடியாத வெளிஉலகுக்கு அவர் சென்று விட்டார்.
நூறு வயதை கடந்து வாழ்த்து மறைந்த ஒரு பாட்டனின் மறைவில் வருத்தமா என்றால்.. வருத்தம் தான். 5 தலைமுறைகளை கண்ட ஒரு நீண்ட மரபின் தொடர்ச்சியை அருகே இருந்து வழி அனுப்ப முடியவில்லையே என்ற வருத்தம். இன்னும் 17 நாட்களில் 'கிறிஸ்மஸ் விடுமுறை' வருகிறது. 'அதுவரை கொஞ்சம் பொறுத்திருக்கலாமே தாத்தா' என்ற வருத்தம் வருகிறது.
எனது தந்தை வழி பூட்டனின் பெயர் 'சாமுவேல்'. அதற்க்கு முன்பே எங்கள் குடும்பம் மதம்மாறி இருந்தது. "நமது குடும்பம், எந்த காலத்தில் நாட்டார் தெய்வ வழிபாட்டில் இருந்து வெளியே வந்து கிறிஸ்தவத்தை தழுவிக்கொண்டது?" என்ற கேள்வியை கிராப்பு தாத்தாவிடம் சில வருடங்களுக்கு முன் கேட்டேன். ஆனால், அந்த கேள்விகளை உள்வாங்கிக்கொள்ளும் கொள்ளும் நிலையில் அவர் இல்லை. எங்கள் குடும்பத்தின் மதம் மாற்றம் சார்ந்த எனது தேடலுக்கான கடைசிக் கண்ணியும் தவறி விட்டதாகவே இந்நேரம் உணர்கிறேன்.
ஊர் பெரியவர்களில் மூப்பர் இவர் தான். அதனால் தான் இவரை இன்றுவரை 'மூப்பிலு' என்று பெரியவர்கள் அழைத்தார்கள்.
மூரியங்கோணத்தின் மகத்தான மரபொன்று விடைபெற்று இருக்கிறது. அவரை பார்த்து, வியந்து, பயந்து வளர்ந்த பெரும்பாலான இளந்தாரிகள் அவரை வழியனுப்ப இன்று அருகில் இல்லை.
என்ன சொல்ல?.... 'போய் வாருங்கள் தாத்தா!'

https://www.facebook.com/stalin.felix.5/posts/10157159835947780