Sunday, July 31, 2011

சமணமும் தமிழும் - நூல் விமர்சனம்


தமிழ்மொழி தன் வழி நெடுக பிரமாண்டமான மனிதர்கள் நமக்கு தந்திருக்கிறது. அதில் சிலர் கடவுளாகவும், சிலர் அரசர்களாகவும், சிலர் அறிஞர்களாகவும், சிலர் புலவர்களாகவும் போற்றப்படுகின்றனர். அதில், நம்மொழி நமக்கு தந்த முக்கியமான அறிஞர்களில் ஒருவர் மயிலை.சீனி.வேங்கடசாமி.

மயிலை.சீனி.வேங்கடசாமி ஒரு தமிழறிஞர் மட்டுமல்ல மிகச்சிறந்த இலக்கிய ஆய்வாளரும் கூட. தவறான கருத்துக்களை மறுத்து உண்மையை நிலைநாட்டுவதும், அதிகம் அறியாத இருண்ட பகுதிகளுக்கு வெளிச்சமூட்டுவதுமே இவருடைய ஆய்வு நெறிகள். இவர் நமக்கு தந்த முக்கியமான நூல்களில் ஒன்று 'சமணமும் தமிழும்'.

சமண சமயத்தவர் செய்துள்ள தொண்டு போல அவ்வளவு அதிகமான தொண்டுகளை வேறு சமயத்தவர் தமிழ் மொழிக்கு செய்யாத காரணத்தினாலே தான் இந்நூலை தாம் எழுதியதாக குறிப்பிடுகிறார்.


சமண சமயம் தோன்றிய வரலாற்றிலிருந்து இந்நூல் துவங்கிறது. சமண சமயம் ஜைன மதம், ஆருகத மதம், நிகண்ட மதம், அநோகாந்தவாத மதம், சித்தியவாத மதம் என பல பெயர்களில் விளங்கப்படுகிறது. சமண சமயக் கொள்கைகளை பரப்பும் பொருட்டு விருஷப தேவர்(ஆதி பகவன்) முதல் வர்த்தமான மகாவீரர் வரை மொத்தம் இருபத்தி நான்கு தீர்த்தங்கரர்கள் இப்பூமியில் தோன்றியுள்ளார்கள். ராமாயணம் மற்றும் பாரதம் இந்து மதத்தில் உள்ளது போல சில,சில மாறுதல்களுடன் சமண சமயத்திலும் காணப்படுகிறது என்பதையும் சமண சமயத்தின் இருபத்தி நான்காவது தீர்த்தங்கரராகிய மகாவீரர் காலத்தில் வாழ்ந்தவர் தான் பவுத்த மதத்தை உண்டாக்கிய மற்காலி என்றும் அதனால் பவுத்த, ஆசீவக மதத்திற்கும் முற்பட்ட மதம் சமண மதம் என ஆதாரங்களுடன் நிறுவுகிறார்.

நவபதார்த்தம் எனப்படும் உயிர், உயிரல்லாது, புண்ணியம், பாவம், ஊற்று, செரிப்பு, உதிர்ப்பு, கட்டு, வீடு போன்ற சமண தத்துவத்தின் ஒன்பது பொருட்களை சமண சமய நூல்களான மணிமேகலை, சீவகசிந்தாமணி, நீலகேசி ஆகியவற்றின் துணை கொண்டு விளக்கியுள்ளார்.

சமணர்கள் ஒழுக்கத்தை சாவக தர்மம், யதி தர்மம் என இருவகையாக பிரிக்கின்றனர். அதில் சாவக(சிராவக) தர்மம், மனைவி மக்கள் சுற்றத்தாருடன் இருந்து ஒழுகும் ஒழுக்கம் என்றும், யதிதர்மம் உலகத்தைத் துறந்து வீடு பேற்றினைக் கருதித் தவஞ் செய்யும் முனிவரது ஒழுக்கம் என்றும் குறிப்பிடுகின்றார். சமண முனிவர்கள் துறந்து வாழ்ந்த சிற்றின்பத்தில் ஐம்பொறிகள் எவை என்பதை நாலடி நானூறு என்னும் சமண நூல் பாடல் மூலம் விளக்கியுள்ளார்.
'மெய்வாய்கண் மூக்குச் செவிஎனப் பேர்பெற்ற
ஐவாய வேட்கை அவாவினை - கைவாய்
கலங்காமல் காத்துய்க்கும் ஆற்றல் உடையான்
விலங்காது வீடு பெறும்'

சமண சமயத்தில் இல்லறம்-துறவறம் பற்றி கொள்கைகளுக்கு திருத்தக்க தேவர் அருளிய நரிவிருத்தத்தில் வரும் இப்பாடலை முன்வைக்கிறார்.
'பாங்கமை செல்வராகிப் பகுத்துண்டு வாழ்தல் ஒன்றே
தாங்கிய தவத்தின் மிக்க தவநிலை நிற்றல் ஒன்றே'

சமணர்கள் என்றாலே ஆடை துறந்து அம்மணமாக அலைப்பவர்கள் அல்ல என்றும், சமண சமயத்தில் உயர்நிலையடைந்த துறவிகள் மட்டுமே அது போன்று இருப்பார்கள், மற்றபடி இல்லற அறத்தை மேற்கொள்ளும் சமணர்கள் நம்மை போல் ஆடை உடுத்தி பத்து வகை ஒழுக்கத்தை கடைப்பிடித்து வாழ்ந்தனர் என்பதை திருக்கலம்பகம் என்னும் சமண நூல் வழியாக விளக்குகிறார்.

கி.மு மூன்றாம் நூற்றாண்டில் பாத்திரபாகு முனிவரின் சீடராகிய விசாக முனிவரால் தமிழ்நாட்டில் சமண சமயம் பரவியதை மதுரையில் காணப்படுகின்ற பிராமி கல்வெட்டெழுத்துக்கள் சான்று பகர்கின்றன என்பதையும் பாண்டிய நாட்டிலிருந்தே இலங்கைக்கு சமண மதம் பரவியிருக்க வேண்டும் என்பதை 'மகா வம்சம்' நூல் மூலம் உறுதிப்படுத்துகிறார்.

மணிமேகலை, சிலப்பதிகாரம் முதலிய சங்ககாலத்து நூல்களும் தேவாரம், நாலாயிர பிரபந்தம், பெரிய புராணம், திருவிளையாடல் புராணம் ஆகிய பிற்காலத்து நூல்களும் சமண சமயம் தமிழ் நாட்டில் எவ்வாறு வேரூன்றி தழைத்து, தளிர்த்து இருந்தது என்பதை சான்று பகர்கின்றன. சமணர்கள் தமது மத கொள்கைகளை மறைத்து வைப்பது மன்னிக்க முடியாத பெருங்குற்றமாக கருதியதால் மக்கள் பேசிய தாய்மொழியிலேயே தமது சமண நூல்களை எழுதினர். அதனால் தான் சமண சமயம் தமிழ்நாட்டில் முதலில் ஆழமாக கால்பதித்தது என்கிறார் நூலாசிரியர். தமிழ்நாட்டில் சமணம் ஆழமாக பரவியிருந்ததை பிற சமய நூல்கள் கூட தெளிவுபடுத்தி இருக்கின்றன என்பதை சைவ நூலான பெரிய புராணத்தின் ஒன்றின் மூலம் விளக்குகிறார்.அப்பாடல்.

'மேதினிமேல் சமண்கையர் சாக்கியர்தம் பொய்மிகுந்தே
ஆதிஅரு மறைவழக்கம் அருகிஅரன் அடியார்பால் பூதிசா தளவிளக்கம் போற்றல்பெறா தொழியக்கண் டேதமில்சீர் சிவபாத விருதயர்தாம் இடருழந்தார்."
(பெரிய புராணம் திருஞான சம்பந்தர் - 18)

சமண மதம், வைதீக மதம், பவுத்த மதம், ஆருகதம் போன்றவை தமிழகத்தில் மிகபெரிய சமய போர்களை நடத்தியுள்ளன. பவுத்தமும், ஆருகதமும் தமிழகத்தில் குன்றி போக வைதீக மதம் திராவிட மதக்கடவுளான முருகன், கொற்றவை, சிவன் போன்றவைகளை உள்வாங்கியபின் சமணர்களுக்கும், இந்து மதத்திற்குமான சமய போர்கள் உக்கிரமடைந்தன என்பதை பல பாடல்கள் நமக்கு தெளிவுபடுத்துகின். திராவிட-வைதீக மதங்கள் இரண்டினையும் இணைத்து சேக்கிழார் முன்வைக்கும் பாடல்கள் சிலவற்றை நமக்கு சுட்டிக்காட்டுகிறார் ஆசிரியர். அவை...

'வேதநெறி தழைத் தோங்க மிகுசைவத் துறை விளங்க'
'தாரணி மேற் சைவமுடன் அருமறையின் துறை விளங்க'
'சைவ முதல் வைதீகமும் தழைத் தோங்க
'அருமறை சைவத் தழைப்ப'
'சைவ நெறி வைதீகத்தின் தருமா நெறியொடுந் தழைப்ப'

சைவ-வைணவ சமயங்கள் ஒன்றுபட்டிருந்த கி.பி. 7,8,9 ஆம் நூற்றாண்டுகளில் சமயபோர் உச்சமடைந்து சமண மதம் வீழ்ச்சியை சந்தித்தது. அதற்கு முக்கியமான காரணமாக ஆசிரியர் கொள்வது சமண மதம் 'வீடு பேற்றை' துறவறம் எய்தினால் மட்டுமே அளித்து ஆனால் இந்து மதமோ ஒருவர் இறைவனிடம் பக்தி கொண்டாலே அவர் 'வீடு பேறு' அடையலாம் என்றது. இதனை தேவாரம், நாலாயிரம் முதலிய சைவ நூல்களில் காணலாம் என்கிறார்.

கழுவேற்றுதல் கலகம் செய்தல், நிலபுலன்களை கவர்தல் என பலவிதத்தில் சமண சமயம் தாக்கப்பட்டது. பல சைவ-வைணவ நூல்கள் இதை உறுதிபடுத்துகின்றன. உதாரணத்திற்க்கு தொண்டரடி பொடி ஆழ்வாரின் திருப்பாடல் மூலம் அக்காலத்துச் சமய போர் எவ்வளவு முதிர்ந்து, காழ்ப்பு கொண்டிருந்தது என்பதை காணலாம்.

'வெறுப்போடு சமணர் முண்டர் வீதியில் சாக்கியர்கள் நின்பால்
பொறுப்பரியன்கள் பேசில் போவதே நோயதாகிக்
குறிப்பெனக் கடையுமாகில் கூடு மேல் தரையை ஆங்கே
அறுப்பதே கருமங்கண்டாய் அரங்கமா நகருளானே'

சமணம் தோய்ந்து போன போது அம்மதத்தின் பல கொள்கைகளையும், பண்டிகைகளையும் இந்துமதம் உள்வாங்கியது என எடுத்துக்காட்டுகளோடு விவரிக்கிறார். உதாரணத்திற்கு கடைசி தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர் பாவாபுரி நகரத்தில் தங்கியிருந்து வீடுபேறு அடைந்ததை தீபாவலியாக சமணர்கள் கொண்டாடினர். பிற்காலத்தில் சமணர்கள் இந்துமதத்தில் சேர்ந்த போது அவ்விழாவை தொடர்ந்து கொண்டாடினர். இந்து பண்டிதர்களும் பின்னர் அவ் விழாவிற்கு ஒரு புராண கதையை கற்பித்துக் கொண்டு இன்று அப்பண்டிகையை 'தீபாவளி'யாக இந்து சமயத்தவரால் கொண்டாடப்படுகிறது.சமணம் தமிழகம் முழுவதும் பரவி இருந்திருக்கிறது. பக்தி இயக்கத்தின் துணையினால் உயிர் பெற்ற இந்துமதம், சமண சமயத்தின் கொள்கைகள், பண்டிகைகளை மட்டுமல்லாது அதன் கோயில்களையும் கவர்ந்து கொண்டது என்பதை தொல்லியல் துறையினாரின் ஆய்வுகளுடன் ஒப்பிட்டு நமக்கு தந்திருக்கிறார்.

சமணமும், தமிழும் என்ற இந் நூலை வாசித்து முடித்த பின் அது தந்த பிரமிப்பில் இருந்து வெளிவரவே சில நாட்கள் ஆகின. மேம்போக்கான செய்திகளை சொல்லாமல் பெரும்பாலும் கல்வெட்டுகள், சங்கப்பாடல்கள், சமய நூல்களின் துணை கொண்டே நமக்கு இந்நூலை தந்திருக்கிறார் ஆசிரியர்.

தமிழரின் தொன்மையையும், அவர்களின் ஆதிமதம் எது என்ற நமது பார்வையையும் இந்நூல் விசாலப்படுத்தும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.வரலாற்றை நேசிக்கிற,தமிழ் தேசியத்தை நம்புகிற அன்பர்கள் தவறவிட கூடாத நூல் இது. அரசுடமையாக்கப்பட்ட இந்நூலை பின்னிணைப்புகளுடன் முதல் பதிப்பாக செண்பகா பதிப்பகம் வெளியிட்டு இருக்கிறது. விலை ரூ75.

இந்நூலை தபால் மூலம் வாங்க தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி.

ஸ்ரீ செண்பகா பதிப்பகம்,
தபால் பெட்டி எண்: 8836
பாண்டி பஜார், சென்னை-17
தொலைப்பேசி : 044-24331510

4 comments:

  1. பயனுள்ள தகவல். நல்ல விமர்சனம். நிச்சயம், சமணம் மட்டும் இல்லைன்னா, தமிழ் இந்த அளவுக்கு வளர்ந்திருக்காது. மொழி, கலை மேம்பாட்டுக்கு சமணர்களின் பங்களிப்பு போற்றப்படவேண்டியது.

    ReplyDelete
  2. மிகவும் அருமையான தகவல்...புத்தகம் கிடைத்தால் நன்றாக இருந்திருக்கும் ...தசாவதாரத்தில் (திரைப்படம் ) ஒரு வசனம் வரும் ... வேற்று மதம் தோன்றாத காலத்தில் .. சைவ , வைணவ மதத்தினர் அடித்துக் கொண்டர்கள் என்று ..இதில் சமண மதமும் அடங்கும் போலிருக்கு ...

    ReplyDelete
  3. மிகவும் அருமையான தகவல்...புத்தகம் கிடைத்தால் நன்றாக இருந்திருக்கும் ...தசாவதாரத்தில் (திரைப்படம் ) ஒரு வசனம் வரும் ... வேற்று மதம் தோன்றாத காலத்தில் .. சைவ , வைணவ மதத்தினர் அடித்துக் கொண்டர்கள் என்று ..இதில் சமண மதமும் அடங்கும் போலிருக்கு ...

    ReplyDelete
  4. வருகைக்கும் விமர்சனத்திற்கும் நன்றி ஜானகிராமன்,நெல்லை. ப.பழனி ராஜ்

    ReplyDelete