Saturday, October 28, 2017

தோள்சீலை கலகம் - திருவாங்கூர் - நாடார்கள் - திராவிட அரசியல் - சில வரலாற்று கற்பிதங்கள்

கற்பிதம் 1: இந்த புகைப்படத்தில் இருக்கும் பெண்கள் நாடார்கள்.
பதில்: தவறு. இந்த புகைப்படம் மட்டுமில்லை, இணையத்தில் "நாடார் பெண்கள்" என பகிரப்படும் மார்பு கச்சை அணியாமல் இருக்கும் பெருவாரியான பெண்களின் புகைப்படங்கள், இலங்கையின் ரோடியா சமூக மக்களின் புகைப்படங்கள்.
கற்பிதம் 2: நாடார்களுக்கு மார்பு துணி அணிய உரிமை வாங்கி கொடுத்தது திராவிட அரசியல்.
பதில்: தவறு. ஐயா வைகுண்டரின் தொடர்ச்சியான சுயமரியாதை பரப்புதல்களும், கிறிஸ்தவ மிசனரிகளின் பணிகளும், மக்களின் தொடர் போராட்டங்களுமே மார்பு துணி அணியும் உரிமையை பெற்றுக் கொடுத்தது..




...................
முந்தைய கற்பிதத்தை தொடரும் கேள்விகள்.
கேள்வி 1: நாடார் பெண்கள் மார்பை மறைக்க அனுமதிக்கபட்டார்களா?
அனுமதிக்கப்படவில்லை.
மார்பை மறைக்காமல் இருப்பது ஒரு காலகட்டத்தில் சமூக இயல்பாகவே இருந்துள்ளது. சமூகத்தில் மேன்மக்களாக கருதப்பட்ட உயர்சாதியின பெண்கள், தங்கள் மார்புகளை மறைத்து உடுத்த, அது 'மேன்மக்கள் ஆகி வரும்' அடுத்த நிலை சாதிகளுக்கும் அந்த பழக்கம் பரவுகிறது. ஆக, தன் சமூக பெண்களை போல எப்படி ஒரு தாழ்ந்த பெண்களும் மார்பை மறைக்கலாம் என்ற ஆண்டகைகளின் கோபம், கீழே உள்ள சமூகத்தை நோக்கி திரும்ப.. இயல்பாக இருந்த ஒரு சமூக பழக்கம் கட்டாயமாக்கப்பட தொடங்குகிறது. இந்த புள்ளியில் தான் ஐயா வைகுண்டரும், கிறிஸ்தவ மிசனாரிகளும் வருகிறார்கள். அதை தொடர்ந்து நிகழ்ந்தது அனைத்தும் மெய்கூச்சரியும் வரலாறு.
குமரி கோயிலுக்கு வந்த விவேகானந்தர், அங்கு இருந்த பெண்களை பார்த்து சொன்ன வாக்கியம் "பைத்தியக்காரர்களின் நாடு".. அங்கே மார்பு மறைக்காமல் இருந்த பெண்கள் நாடார்கள் அல்ல, நாயர்கள். ஆக, திருவாங்கூரின் பெருவாரியான இன பெண்களுக்கு நிகழ்ந்த வரலாற்று துயரம் இது.
                                                                 (நாயர் சமூக பெண்)

கவனிக்க, இங்கே நாயர் பெண்கள் நம்பூதிரிகளுக்கு முன்பும், கோயில்களிலும் தான் மார்பை மறைக்க அனுமதிக்கப்படவில்லை, பொதுவில் கச்சை அணிய அவர்களுக்கு உரிமை இருந்தது.


                                                               (நாயர் சமூக பெண்கள்)


கேள்வி 2: நாடார்களுக்கு திராவிட அரசியலின் பங்களிப்பு என்ன?
இந்தியாவுக்கு மதம் பரப்ப வந்த மிசனரிகள் எங்கெல்லாம் பலமாக இருந்தார்களோ, அங்கெல்லாம் பள்ளிக்கூடங்கள் கட்ட துவங்கினார்கள். தமிழகத்தில் குமரியும், இந்தியாவில் கேரளாவும் கல்வியில் ஏன் இவளவு முன்னணியில் இருக்கிறார்கள் என்பதன் பின்னணி இது தான்.
ஆக, மிசனரிகளின் நேரடி பழக்கத்தாலும், கல்வியாலும் முன்னேறி சென்ற ஒரு நாடார்தலைமுறை பெரும்செல்வம் சேர்த்து 'உயர்சமூகம்' ஆகி விட, மிசனரிகளின் நேரடி பழக்கமில்லாமல், அவர்கள் கொடுத்த கல்வி மட்டுமே கிடைத்த ஒரு தலைமுறை உருவானது. அவர்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது திராவிட இயக்கமும், இட ஒதுக்கீடும்.
குமரி-தமிழ்நாடு இணைப்பின் போது காமராசர், "தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளை விட குமரி வளர்ச்சி அடைந்த பகுதியாக இருக்கிறது. எனவே உங்கள் பகுதிக்கு எங்களால் அதிகமாக உதவ முடியாது. விருப்பம் இல்லாவிட்டால் நீங்கள் கேரளாவுடன் இணைந்துக்கொள்ளுங்கள்" என்றார்.
ஒரு தேர்ந்த சமூக அரசியலை புரிந்து கொண்ட ஒருவரால் மட்டுமே இப்படி உரையாற்றியிருக்க முடியும். இதையும் "காமராசர் கேரளாவோடு போக சொல்லி விட்டார், குமரி கிறிஸ்தவர்களை அவருக்கு பிடிக்கவில்லை...... " என இன்றும் அவருக்கு எதிராக சடைபின்னிக் கொண்டிருக்கிறார்கள் சில கிறிஸ்தவ அறிவிலிகள்.
....................
சமூக நீதியை விரும்பும் குமரியை சார்ந்த புதிய தலைமுறைக்கும் நான் இப்போதைக்கு சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்று தான்... "சான்றோர் தான் சாணான் ஆயிற்று..... மூவேந்தர்களின் நேரடி வாரிசுகள் நாங்கள்..... " என்பது போன்ற கற்பிதங்களை உதறித் தள்ளுங்கள். இது போன்ற வீண் பிம்பங்கள் மருந்துக்கு கூட உங்கள் முன்னேற்றத்திற்கு உதவ போவது இல்லை.
#Travancore
#திருவாங்கூர்
16/09/2017
https://www.facebook.com/stalin.felix.5/posts/10155947188602780

No comments:

Post a Comment