'கற்றது தமிழ்' திரைப்படம் வெளியான போதும் ஐ.டி துறையில் தான் இருந்தேன். உதயம் திரையரங்கில், பத்துமணி காட்சியை பார்த்து விட்டு, அந்த நடுநிசி பனியில், கண்ணீரோடு அறைக்கு சென்றது இன்றும் நினைவில் உறைந்து போய் இருக்கிறது.
ஐ.டி துறையினரை படம் கடுமையாக சாடுகிறது என பரவலான விமர்சனங்கள் வந்த போதும், ஒருதடவை, இரண்டு தடவை, மூன்று தடவை.. என கணக்கே இல்லாமல் அந்த படத்தை மீண்டும் மீண்டும் பார்த்தேன், பார்க்கிறேன். இன்றளவும் 'கற்றது தமிழ்' எனது All time favourite.
சரி, 'கற்றது தமிழ்' எதைப் பேசுகிறது?
காதலையா? ஆம்.
உலகமயமாக்கலையா? ஆம்
தாய் மொழி கல்வி, சொந்த மண்ணில் அகதி ஆக்கப்பட்டதையா? ஆம்
கார்பரேட் உலகம் உருவாக்கிய தனி மனித சிக்கலையா? ஆம்.
ஆம், அமெரிக்காவில் ஒரு வங்கி வீழ்ந்தால், அம்பத்தூரில் கல்யாணம் நின்று போய் விடும் இன்றைய வாழ்க்கை சூழலை பத்து வருடங்களுக்கு முன்பே அந்த படம் பேசியது.
ஜீவா, அஞ்சலி என எத்தனையோபேருக்கு வாழ்வளித்த இந்தப் படம் முன்வைத்த அரசியலை, தமிழ் சினிமா இதற்க்கு முன்னரும் பேசியதே இல்லை, இதற்க்கு பிறகும் பேசவில்லை. இனிமேலும் யாராவது பேசுவார்களா என்பதும் சந்தேகமே..
எங்கையோ இருந்து ஒருவன் நமது வாழ்க்கையை, மொழியை, பண்டிகையை, கலாச்சாரத்தை தீர்மானிக்கும் வரை 'கற்றது தமிழ்' தமிழ் சமூகத்தில் பேசப்பட்டுக் கொண்டே இருக்கும்..பேசப்படும்.
இன்றோடு 'கற்றது தமிழ்' திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவுறுகிறது. இத்திரைப்பட உருவாக்கத்தில் பங்கேற்ற அனைத்து படைப்பாளிகளுக்கும் எமது அன்பும், வாழ்த்துகளும்.
No comments:
Post a Comment