Wednesday, August 31, 2011

கதைச் சொல்லிகள்......

ஆனி, ஆடி மாதம் என்றாலே எங்கள் ஊரில் மழை கொட்டோ, கொட்டென கொட்டும். கிணறு முதல் குளம் வரை நிரம்பிவழியும் அந்நாட்களில், விளையாடுவதற்கு போக்கற்று ஏதேனும் ஒரு வீட்டு திண்ணையில் முடங்கி கிடப்போம். பொழுதே போகாத அந்த பால்ய நாட்கள் முழுவதும் எங்களை கட்டிப்போட்டது எங்கள் ஊர் கதைச்சொல்லிகளே...
கதைகள் கேட்க பெரும்பாலும் நாங்கள் கூடுவது கோவில் பிள்ளை தாத்தாவின் வீட்டுத் திண்ணையிலோ , 'கிராப்' தாத்தாவின் வீட்டுத்திண்ணையிலோ தான். மணி சித்தப்பா, ஜெயக்குமார் அண்ணன், ஜாண் அண்ணன், சுந்தரம் அண்ணன், ஸ்டான்லி அண்ணன் என எங்கள் ஊரில் கதைச்சொல்லிகளுக்கு பஞ்சமே இல்லை..அவர்கள் கதை சொல்லி முடிக்கும் போது ஒரு புராணப் படத்தை பார்த்த திருப்தி உருவாகும். பின் அக்கதை, எங்கள் வழியாக பள்ளி நண்பர்களிடையே ஊடுருவும்...

பெரும்பாலும் இவர்களுடைய கதைகள் அச்சம் ஊட்டுபவையாக இருக்கும். இவர்கள் சாகச மனிதர்களை பற்றி சொல்லும் போது அந்த மனிதர்களை தேடி போய் விடலாமா என்று கூட யோசனை போகும். இரவு வழிமறிக்கும் யாக்கிகள், பழிவாங்க காத்திருக்கும் சர்ப்பங்கள்(பாம்புகள்) போன்ற கதாப்பாத்திரங்களுடைய கதைகளை ஏறக்குறைய எல்லா கதைச்சொல்லிகளுமே சொல்லி இருப்பார்கள் ஆனால் வெவ்வேறு சம்பவங்களுடன் கோர்த்து....

சென்னை என்ற கான்கிரீட் காட்டில் தற்போது வசிக்கும் சுந்தரம் அண்ணன் பெரும்பாலும் காட்டில் நடக்கும் கதைகளை சொல்வார்.
அதில் ஒன்று...
காட்டில் ஒருவகை பறவை உண்டு , அந்த பறவை அந்த காட்டிலேயே உயரமான மரத்தில் தான் வசிக்கும் . அபூர்வமாக முட்டை இட்டு குஞ்சு பொரிக்கும் அப்பறவை முட்டை இடும்போது அதற்காக காட்டில் அபூர்வமாக கிடைக்கும் ஒரு வேரை வைத்து ஒரு கூடு தயாரிக்கும். அந்த வேரை எடுத்து, பறந்து செல்லும் போது எந்த மிருகத்தையோ, மனிதனையோ கடந்து போனால் அந்த உயிர்களின் முதுகெலும்பு முறிந்து போகும். அந்த மரத்தில் இருந்து அந்த வேரின் நிழல் நம் மேல் படாமல் எடுத்து வந்து இரும்பின் மேல் தடவினால் தங்கமாகுமாம். தான் ஒருமுறை பேச்சிப்பாறை காட்டுக்கு சென்ற போது அந்த பறவையை பார்த்திருப்பதாக சொல்வார்....

அடுத்த ரெண்டு நாட்கள் கேட்கவே வேண்டாம்.. அந்த பறவையையும், வேரையும் கண்டுபிடிக்க மாட்டோமா... நிறைய மிட்டாய் வாங்கி சாப்பிடலாமே என ஏக்கத்தோடு அலைவோம்.

திகில் அடிக்கும் கதைகளை சொல்வதில் முதலிடம் மணி சித்தப்பாவுக்கு தான்....


நடு இரவில் எங்கேனும் போய் குளம் வழியாக வீடு திரும்பும் போது யாக்கி வழி மறிக்கலாம். யாக்கி நடு இரவிலும் பூவும், பொட்டும் வைத்திருப்பாள். நம்மிடம் வெற்றிலை கேட்பாள். சுண்ணாம்பு கொடுக்கும் போது கத்தியில் எடுத்து தான் கொடுக்க வேண்டும். பின் நாம் நடக்க ஆரம்பிக்கும் போது நமது பெயரை சொல்லி கூப்பிடுவாள் அப்போது நாம் திரும்பி பார்க்காமல் நடக்க வேண்டும். கையில் கத்தியோ, வெட்டோத்தியோ வைத்திருந்தால் யாக்கி நம்மை மறிக்க மாட்டாள் என அறிவுரை சொல்லுவார்.

ஊரில் நமக்கு தெரியாத ஒரு பெயரை சொல்லி அந்த நபர் பேய் அடித்து தான் இறந்தார் எனவும்.... பேய் அடித்து முதுகில் ஐந்து விரல்களில் தடம் இருந்ததாகவும் சொல்லுவார். குளத்தங்கரையில் ஒரு சில நேரம் தீ பந்தத்தை கொளுத்தி கொண்டு பேய் போனதை தான் பார்த்திருப்பதாக சொல்வார்.

ஜாண் அண்ணனும் இதே மாதிரி கதை சொல்லுவார்.....இரவு பன்னிரண்டு மணிக்கு பின் தான் பேய்கள் கல்லறையில் இருந்து எழுந்து உலாவும் என்றும் பேய்களை நமது வெறும் கண்ணால் பார்க்க முடியாது என்றும், வீட்டு வளர்ப்பு பிராணிகளான ஆடு, மாடு, நாய் போன்றவற்றால் அவைகளை பார்க்க முடியும் என்றும், நாய்கள் ஓலமிடுவது பேய்கள் நடமாட்டத்தை பார்த்து தான் என்றும் சொல்வார்.
இக்கதைகளை கேட்ட சில நாட்கள் இரவு தூக்கமே வராது. நாய்கள் குரைத்தாலே பேய்கள் தான் நடமாடுகிறது என்று நான் உட்பட ஊரில் இருந்த அத்தனை வாண்டுகளும் நம்பினோம்.


சர்ப்பத்தின் கதைகளை ஏறக்குறைய எல்லோருமே சொல்வார்கள்....
ஜோடி பாம்புகளை அடிக்க கூடாது. ஒத்தையாய் பாம்பை அடித்து கொன்றால் அதன் ஜோடி காத்திருந்து பழி வாங்கும் என்றும். பாம்பை அடிக்கும் போது உடனே அடித்து கொன்று விட வேண்டும் அதை சாபமிட வைக்க கூடாது என்றும்... பாம்புக்கு கொஞ்சம் உயிர் விட்டு புதைத்தாலும் அது மண்ணின் வழியாக ஊடுருவி வந்து பழிவாங்கும் என்றும் சொல்வார்கள்.

பக்கத்து ஊரில் பாம்பின் தலையில் மண்வெட்டி வைத்து வெட்டியதில் தலை பறந்து நன்றாக வளர்ந்திருந்த ஒரு பனை மரத்தில் தட்டி விழுந்ததாகவும்.. ஒரு வாரத்திலேயே அந்த பனை மரம் பட்டு போனதாகவும் சொல்வார்கள்.

சர்ப்பங்கள், நாகரத்தின கற்களை கக்கும் கதைகள் சுவாரசியமானவை.....

நெடுநாள் விஷத்தை தேக்கி வைத்திருக்கும் நாகத்தின் வயிற்றில் நாகரத்தின கற்கள் உருவாகும். அதை அமாவாசை இரவன்று ஏதேனும் ஒரு இடத்தில் வைத்து விட்டு அந்த நாகரத்தினத்தின் வெளிச்சத்தில் இரை தேடும். நாம் அந்த நாகரத்தினத்தை எடுக்க முயற்சித்தால் அதன் வெளிச்சம் குறையும் போது பாம்பானது நம்மை கொத்தி விடும். நாகரத்தினத்தை நாம் நடு இரவில் பார்த்தால், மாட்டு சாணத்தால் அந்த நாகரத்தினத்தை மூடி விட்டு, பக்கத்தில் உள்ள உயரமான மரத்தில் ஏறி அமர்ந்து விட வேண்டும். நாகரத்தினத்தின் வெளிச்சம் குறைந்து அதை தேடி வரும் சர்ப்பத்தால் அதனை கண்டுபிடிக்க முடியாமல், தன்னை தானே தற்கொலை செய்து கொள்ளும். அடுத்தநாள் விடியற்காலையில் நாகரத்தினத்தை எடுத்துக்கொள்ளலாம்.

இன்னொரு கதை.......மழை நேரத்தில் ஆற்றில் புரண்டு வரும் தங்க அண்டாக்கள் பற்றியது. இது போல வரும் அண்டாக்களை பிடிப்பது எப்படி என்றும் சொல்வார்கள்.. தவறாக பிடித்தால் அது கவிழ்ந்து நம்மை கொன்று விடும் என்றும் சொல்வார்கள். கண்டிப்பாக ஊரில் தங்க கருப்பட்டியோ, அண்டாவோ கிடைத்த ஒருவர் இவர்களது பார்வையில் இருப்பார்கள்.

இன்று நினைத்து பார்த்தாலும் என்னால் இதே அளவு லாவகத்துடன், நம்பும்படி அக்கதைகளை சொல்ல முடியுமா என்பது சந்தேகமே.. ஆனால், அந்நாட்களின் சுவாரசியமே கேள்விகள் ஏதும் எழுப்பாமலே அக்கதைகளை நாங்கள் ஏற்றுகொண்டது தான் என்று தோன்றுகிறது. அந்த பால்ய கதை நாட்களை நிரப்பிய அண்ணன்கள் பிழைப்புக்காக பல ஊர்களில் புலம் பெயர்ந்து விட்டனர். ஊருக்கு செல்லும் போது அபூர்வமாய் தென்படும் அவர்கள் என்னை கண்டு சிநேகத்தோடு சிரித்து "நல்லா இருக்கியா, குடும்பம் எல்லாம் நல்லா இருக்கா, வேலை நல்லா போகுதா" என்று ஒரு சில கேள்விகளுக்குளாகவே நலம் விசாரித்து,நகர்ந்து போய் விடுகிறார்கள்.

அவர்கள் கடந்து போகும் போதெல்லாம் என்னுள் எழும் விடையில்லா கேள்வி.....
"எங்கே தொலைத்திருப்பார்கள் அவர்களுக்குள் இருந்த கதைச் சொல்லிகளை??"

14 comments:

 1. S, I am also looking for such personality. Though basically i had born and brought in metro city like chennai, looking such person to hear such storie tellers. My friends who comes from other cityside, they use to tell all the things that happens in their smallage time they use hear such stories and use play in farm area and much more. Since i born and brough in chennai i am missing that and all. now for future generation. they will come to such things if anyone tells like this. but they cant hear. That the pity.
  Any way thanks sharing and making rememberance of my old friends.

  ReplyDelete
 2. S, I am also looking for such personality. Though basically i had born and brought in metro city like chennai, looking such person to hear such storie tellers. My friends who comes from other cityside, they use to tell all the things that happens in their smallage time they use hear such stories and use play in farm area and much more. Since i born and brough in chennai i am missing that and all. now for future generation. they will come to such things if anyone tells like this. but they cant hear. That the pity.
  Any way thanks sharing and making rememberance of my old friends.

  ReplyDelete
 3. அவர்களிடம் கதை கேட்ட நாம் தான் இப்பொழுது கதை சொல்லிகளாக மாற வேண்டும். நமக்கு முந்தய தலைமுறை கதை சொல்லிகள் அவர்களின் பணிகளை செய்து விட்டார்கள். இப்பொழுது நாம் அதை அடுத்த தலைமுறைக்கு சொல்லிதர வேண்டும். இதை படித்த பிறகு எவ்வாறு நம் நேரத்தை தொலைகாட்சியிலும், கணினியிலும் வீணடிக்கிறோம் என்று தெரிகிறது.

  ReplyDelete
 4. நாகரத்தின கற்களை கக்கும் கதைகள் சுவாரசியமானவை.....

  ReplyDelete
 5. வலைச்சரத்தில் ‘ சிறுகதை முத்துக்கள்’ என்ற பிரிவில் உங்களை இன்று அறிமுகப்படுத்தியிருக்கிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

  http://blogintamil.blogspot.com/

  ReplyDelete
 6. உங்களின் இடுகையை தற்செயலாக பார்க்க நேர்ந்தது நாகரத்தினம் பற்றிய கதைகள் எங்களின் ஊரிலும் உண்டு உங்களின் இந்த பகிர்வு தொடர்க . ம் மற்றது மூகமையனது இந்த நாசமா போன தினமலர் பற்றிய உங்களின் சிறந்த எண்ணம் பாராட்டுகளுக்கு உரியது இந்த பாழாய் போன தமிழர் களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய செய்தி நன்றி .

  ReplyDelete
 7. இது போன்ற பதிவுகளை நான் விரும்பி படிப்பதுண்டு. நன்றி.

  ReplyDelete
 8. romba nalla iruku boss...........intha kadaikala pakum pothu enakum nan chinna vasula ketta kathaikal gnabakam varuthu..........

  ReplyDelete
 9. மிக்க நன்றி நண்பா. எனக்குள் புதைத்து கிடந்த என்னுள் தொலைத்து போன என் இளமைகாலங்களை மீண்டும் திருப்பிகொடுத்தர்க்கு. எனக்கு கதை சொன்ன பாட்டி தாத்தா யாரும் இப்போது உயிரோடு இல்லை... ஏன் தலைமுறைக்கு கதைகள் சொல்ல எனக்கு நேரமில்லை. பொருளாதார தேடலும், எனக்கான சமுக அங்கிகாரத்தை பெறுவதற்கும் ஓடிகொண்டே இருப்பதால் அத்தனையும் இழந்து ஓடிகொன்டிருக்கிருக்கிறேன் . மீண்டும் நன்றி நண்பா. எனக்குள் புதைத்து கிடந்த என்னுள் தொலைத்து போன என் இளமைகாலங்களை திருப்பிகொடுத்தர்க்கு.

  விடையில்லா கேள்வி.....
  "எங்கே தொலைத்திருப்பார்கள் அவர்களுக்குள் இருந்த கதைச் சொல்லிகளை??" ஆமையடி அமகேஷ்

  ReplyDelete
 10. Nalla muyarchi!!! paraatukal.....
  padathin ennikai kuraithirukalam

  ReplyDelete
 11. சூப்பர் பதிவு. ஆனால், என்னைப் போன்ற சென்னைவாசிகளுக்கு இது போன்ற கதைகள் கேட்பது மிகவும் அரிது. இனி வரும் காலங்களில் நம் பிள்ளைகளிடம் கதை சொல்லி தூங்க வைக்க முடியாது. காரணம், அவர்கள் 'நவீன, நாகரீக, அதிபுத்திசாலிகள்'.

  ReplyDelete
 12. stalin , nee en thambi ena meendum meendum padhivu seigiraai,.. nandriyudan unakku moothavan. madurai elayapari.

  ReplyDelete