Wednesday, June 29, 2011

கடவுள் சிரித்தார்

மெட்ராஸ் அப்போது சென்னை ஆகவில்லை. பட்டய படிப்பு முடித்து விட்டு மெட்ராசின் மூலை முடுக்கெல்லாம் வேலைக்காக சுற்றி திரிந்த காலம். அன்று சென்னை எக்மோர் பகுதியில் அலைந்து விட்டு, பட்டினப்பாக்கம் செல்லும் பேருந்துக்காக காத்துக்கொண்டிருந்தேன்.

'சார்' என்ற குரல் கேட்டு திரும்பி பார்த்தால் மாநிறத்தில் கந்தலான உடை, பரட்டை தலையென சுமார் பதினாறு வயது மதிக்கத்தக்க ஒரு பையன் அருகில் நின்றிருந்தான்.

'என்னப்பா'? என கேட்டேன்.

'என் பேரு சரவணன். சொந்த ஊரு திருச்சி . ஊர்ல நானும் அம்மாவும் இட்லி சுட்டு பொழச்சிக்கிட்டு இருந்தோம். மெட்ராஸ்ல பெரிய ஹோட்டலுல வேல வாங்கி தரேன்னு சொல்லி கூப்பிட்டாரு. இந்த அட்ரஸ்ல போய் பார்த்தா அவரு ஒரு வாரமா வேலைக்கே வரலன்னு சொன்னங்க. நானும் ரெண்டு நாளா வேற எங்கையாவது வேல கிடைக்குமான்னு தேடி பாத்தேன். கிடைக்கல.. ஊருக்கு போக காசில்ல, நீங்க தர முடியுமா ?'

அனுபவம் தந்த பாடங்களால் அவனையே வெறித்து பார்த்துக்கொண்டு இருந்தேன். அவன் கையில் வைத்திருந்த துண்டு சீட்டை வாங்கி பார்த்தேன். எக்மோரில் ஏதோ ஒரு உணவகத்தின் பெயரும், முகவரியும் எழுதப்பட்டு இருந்தது.என் மவுனத்தை புரிந்து கொண்ட அவன் 'சார் இந்த வாட்சை வச்சுக்கோங்க சார், டிக்கெட் மட்டும் எடுத்து குடுங்க பணம் வேண்டாம்'.டிக்கெட் விலைக்கு பெறுமானம் கூட வராத வாட்ச் ஆனாலும் அவன் டிக்கெட் மட்டும் எடுத்து கொடுங்கள் என்று சொன்னது அவன் மேல் இன்னும் நம்பிக்கையை ஊட்டியது.
'வாட்ச் எல்லாம் வேண்டாம் பா.. டிக்கெட் எவளவு ரூபாய் தெரியுமா' என்று கேட்டேன். 'தெரியாது சார்' என்றான் வாயை சுளித்து.
'வா கேட்கலாம்' என்று டிக்கெட் கவுண்டருக்கு போய் பயண சீட்டு கேட்ட போது என்னிடம் இருந்த பணத்தை காட்டிலும் அதிகமான தொகையாக இருந்தது.

'சார்' என பின்னால் இருந்து ஒரு குரல் அழைத்தது. திரும்பி பார்த்தால் கையில் இரண்டு கால்களும் ஊனமான ஒரு வாலிபர் நின்று கொண்டிருந்தார். 'நீங்க திருச்சிக்கு டிக்கெட் கேட்டதை பார்த்தேன், ஊனமுற்றோர் சலுகையில என்கூட ஒருத்தர் ஒன் தேர்ட் டிக்கெட் எடுத்து கூட வரலாம், நீங்க விருப்பப்பட்டா என் கூட வரலாம்'

பின்னால் பயண சீட்டு எடுக்க வந்தவருக்கு வழியை விட்டு வெறித்து பார்த்துக்கொண்டு இருந்தேன். ' கடவுளே... ஒருவருக்கு மானசீகமாகவே உதவி செய்ய விரும்புகிறேன். என்னிடம் இந்த சிறுவனுக்கு உதவி செய்யும் அளவுக்கு பணம் இல்லை. நீ உண்மையிலேயே இருக்கிறாய் என்றால் உதவு பார்ப்போம்' என அறியாத பரம்பொருளிடம் சவால் விட்டேன்.

ஒரு நிமிடம் உறைந்து விட்டேன். என்ன திருவிளையாடல் இது. இப்படி கூடவா ஒருத்தருக்கு உதவி கிடைக்கும். நாக்கு தளுதளுத்தது. மேற்படி பேச முடியாமல் திருச்சிக்கு டிக்கெட் எடுத்தோம்.

உடனடியாக அவர்களை விட்டு பிரிய மனமில்லாமல் இருவருடன் நானும் சென்று சற்று நேரம் ரயிலில் உட்கார்த்து பேசினேன். ரயில் கிளம்ப போகும் நேரம் எதோச்சையாய் ஞாபகம் வந்து 'சாப்பிட்டியப்பா' என சரவணனை கேட்டேன். 'இல்லை அண்ணா' என சன்னமான குரலில் சொன்னான். கையில் இருந்த பத்து ரூபாயை அவனிடம் கொடுத்து விட்டு அவர்களிடம் இருந்து விடை பெற்றேன்.

எக்மோரில் இருந்து வீட்டுக்கு செல்ல வேண்டுமே. பாக்கெட்டில் துழாவி பார்த்ததில் வீடு போய் சேர்வதற்க்கான காசு தேறாது என்று தோன்றியது. சரி பரவாயில்லை,கடவுள் விட்ட வழி.. காசு இருக்கிற தூரம் வரைக்கும் டிக்கெட் எடுத்து விட்டு பின் நடத்து போய் விடலாம் என கணக்கிட்டு பட்டினப்பாக்கம் செல்லும் பேருந்தில் ஏறினேன். இன்னொரு ஆச்சரியம் காத்திருந்தது..

பள்ளி நண்பன் ஒருவன் பேருந்தில் டிக்கெட் கேட்டு நின்றுக்கொண்டு இருந்தான். என்னை பார்த்ததும் 'உனக்கு எங்க போகணும்' என கேட்டு எனக்கான பயணச்சீட்டையும் அவனே எடுத்துக்கொண்டான். அவனது முகத்தை எதிர்கொள்ள முடியாமல் திரும்பி பார்த்தேன். மேகத்தினூடே கடவுள் சிரிப்பது போல் இருந்தது.

-

பண்புடன் சித்திரைத் திருநாள் சிறப்பு போட்டியில் பரிசு பெற்ற கதை

8 comments:

 1. migavum arumai

  kadavul irukkara illaiya sollunga

  ReplyDelete
 2. கடவுள் வானத்தில் இல்லை, உதவ வேண்டும் என்று எண்ணிய உங்கள் உள்ளம் ஒரு கடவுள், உங்களுக்கு உதவி செய்த நண்பன் ஒரு கடவுள், யார் என்றே தெரியாமல் உதவ வந்த ஊனமுற்றவர் ஒரு கடவுள்...
  கண்ணுக்கு தெரியாத கடவுளை நம்புவதை விட, உங்கள் கண் முன்னே திரியும் பல கோடி கடவுள்களை நம்புங்கள்...

  ReplyDelete
 3. அருமையான சிறு கதை.

  ReplyDelete
 4. அருமையான பதிவு.. கடவுள் என்பவரை வேறிடத்தில் தேடாமல் நம்முள்ளே இருக்கிறார் என்பதை சொல்லாமல் சொல்கிறது.. வாழ்த்துகள் தோழரே

  ReplyDelete
 5. அருமையான பதிவு.. கடவுள் என்பவரை வேறிடத்தில் தேடாமல் நம்முள்ளே இருக்கிறார் என்பதை சொல்லாமல் சொல்கிறது.. வாழ்த்துகள் தோழரே

  ReplyDelete
 6. வருகைக்கும் விமர்சனத்திற்கும் நன்றி mahehs,suryajeeva,Kotticode, venkatesh dayanidhi

  ReplyDelete
 7. எழுத்துக்களை சற்று பெரிதாக்க முடியுமா என்று பாருங்க.

  ReplyDelete
 8. கடவுளே... ஒருவருக்கு மானசீகமாகவே உதவி செய்ய விரும்புகிறேன். என்னிடம் இந்த சிறுவனுக்கு உதவி செய்யும் அளவுக்கு பணம் இல்லை. நீ உண்மையிலேயே இருக்கிறாய் என்றால் உதவு பார்ப்போம்'
  மனமிருந்தால் மார்க்கமுண்டு.
  நல்ல பதிவு. வாழ்த்துக்கள்.
  http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_29.html

  ReplyDelete