Friday, July 31, 2009

M.R.ராதாயணம்


கேலியும் கிண்டலுமாய் பகுத்தறிவு கருத்துக்களை அள்ளித்தெளித்து அனாயாசமாய் வாழ்ந்து போயிருக்கிறான் ஒரு மாபெரும் கலைஞன். எம்.ஆர்.ராதா என்ற இந்த கலையுலக போராளியை பற்றிய ஒரு சிறந்த டிரைலரே M.R.ராதாயணம். எம்.ஆர்.ராதாவின் வாழ்வில் சில முக்கியமான கணங்களை முகில் நமக்கு அருமையாய் தொகுத்தளிக்க கிழக்கு பதிப்பகம் அதனை வெளியிட்டு உள்ளது. 200 பக்கங்களை கொண்டு ஒரே இரவில் படித்து விட கூடிய புத்தகம்.

"கண்ணீரும் ரத்தமும்" என துவங்கும் முதல் தலைப்பிலேயே நம் எதிர்பார்ப்புகளை எகிற வைத்து, "ரத்தமும் கண்ணீரும்" என்ற பதினோறாவது தலைப்பு முடியும் போது ஏதோ நெருங்கிய உறவுக்காரனை இழந்த வெறுமையை தந்து விடுகிறது முகிலின் எழுத்துகள். அதோடு இணைந்து வரும் பின்னிணைப்புகளும் எம்.ஆர்.ராதாவின் ஆளுமையை நமக்கு பறைசாற்றி நிற்கின்றன.

போலித்தனமான மத கோட்பாடுகளை தனது நாடக மேடைகளில் மட்டும் அல்ல வாழ்வில் மொத்த பயணத்திலும் தன் நகைச்சுவை உணர்வோடு சாடி தீர்த்தவர் எம்.ஆர்.ராதா. இதோ ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

ஏற்கனவே ஒரு சிலர் காலைக்கடனுக்காக ஒதுங்கியிருந்தார்கள். ஒரு புதருக்குப் பின் கொஞ்சம் வயதானவர் ஒருவர் இருந்தார். முக்கல் சத்தம் 'ஷ்ஷ்.... அப்பா முருகா...' அந்த வார்த்தைகளை கேட்டதும் நின்று விட்டார் ராதா. சிரித்தபடியே தன் பாணி கமெண்ட் ஒன்றை உதிர்த்தார்.

'எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம் இருந்துச்சு. முருகன் கையில் வேல் எதுக்கு இருக்குதுன்னு? இப்பத்தான் புரியுது தன்னோட ஆளுகளுக்கு நோண்டி விடுறதுக்குன்னு'

சிறு வயதிலேயே தந்தையை இழந்து படிப்பும் ஏறாமல் அம்மாவிடம் கோபித்து ஊரை விட்டு ஓடி நாடக கம்பெனியில் கால் பதித்து "பால கிருஷ்ணன்" வேடம் ஏற்ற போது இந்த எம்.ஆர்.ராதா என்ற மெட்ராஸ் ராஜகோபால நாயுடுவின் மகன் ராதா கிருஷ்ணனின் வயது 7.

எப்போதும் ஒரு கலகக்காரனாகவே எம்.ஆர்.ராதா இருந்தார். மனிதர்களிடம் மட்டும் அல்ல கடவுளிடம் கூட. என்ன ஆச்சரியமாக இருக்கிறதா?

கடவுள் நம்பிக்கை இருந்த காலத்தில் திருப்பதி ஏழுமலையானை சந்திக்க அதிகாலையிலேயே கிளம்பி இருக்கிறார். கல்லும் முள்ளும் குத்தி களைப்போடு கோயில் வந்து சேர "தரிசனம் காலையில் இல்லை மாலையில் தான்" என தகவல் சொல்லியிருக்கிறார்கள். தான் இவ்வளவு கஷ்டப்பட்டு தரிசனம் பார்க்க வந்தால் தன்னை மீண்டும் மீண்டும் கடவுள் காக்க வைக்கிறானே என ஏழுமலையானிடம் கோபித்து கோயிலையே வெடிகுண்டு வைத்து தகர்க்க திட்டமிட்டார். திட்டமிட்டதும் அல்லாது தானே அந்த வெடிகுண்டை தயாரிக்கவும் செய்தார். கோயிலை தகர்க்க தயாரித்த குண்டு எதேச்சையாய் அதற்கு முன் வெடித்தது தனி கதை.

சவால்... என்று வந்துவிட்டால் எம்.ஆர்.ராதாவுக்கு ஐஸ்கிரீம் சாப்பிடுவது மாதிரி. ஒரு நாடக காண்டிராக்டர் பிடியில் இருந்த யதார்த்தம் பொன்னுசாமி பிள்ளையின் நாடக குழுவினரை பரமகுடி சென்று தனி ஆளாக மீட்டிருக்கிறார். இவரால் மீட்கப்பட்ட நாடக குழுவில் இருந்த பின்னாளைய பிரபலம் கணேசன் என்ற சிவாஜி கணேஷ்.

திராவிட இயக்கத்திற்காக பின்னாளில் எத்தனையோ மேடைகளில் முழங்கிய எம்.ஆர்.ராதாவின் ஆரம்ப கால நாடகத்தை பெரியார், அண்ணா, ஈ.வி.கே.சம்பத் ஆகியோர் தரையில் உட்கார்ந்து பார்த்தனர் என்பது ஆச்சரியமான தகவல். "நாம் நடத்தும் நூறு திராவிட மாநாடுகளும் சரி, எம்.ஆர்.ராதா நடத்தும் ஒரு நாடகமும் சரி" என அதே நாடக மேடையில் புகழ்ந்தார் அறிஞர் அண்ணா.

நாடகங்களில் நடிபபதை ஒரு தொழிலாக செய்யாமல் அதையே காதலித்தார். தன் நாடக குழுவில் இருந்தோரையும் அவ்வாறே நடத்தினார். தூங்கும் போது 'நாடக நடிகர்கள் எல்லாம் தூங்கவே கூடாது. தூங்குறப்ப கூட காலாட்டிட்டே தூங்கணும். இல்லேண்ணா செத்துப் போயிட்டான்னு வேற யாரையாவது போட்டிருவாங்க' என்று தன் நாடக குழுவில் இருந்தோரிடம் அடிக்கடி சொல்வார்.

ராதாவுக்கு சமையலில் ஆர்வம் அதிகம். நேரம் கிடைக்கும் போதெல்லாம் குழுவினருக்கு மட்டன் சமைத்து தானே பரிமாறுவார்.

நாடகமாகவும் பின் சினிமாவாகவும் உருவாகிய "இரத்தக்கண்ணீர்" மக்களிடையே எம்.ஆர்.ராதாவுக்கு பெரும் புகழை உருவாக்கியது. பெண்களுடன் தவறான உறவு வைத்திருந்தால் குஷ்டம் வரும் என்று மக்கள் நம்பும் அளவுக்கு எம்.ஆர்.ராதாவின் நடிப்பின் பாதிப்பு அமைந்தது.

சினிமாவில் நடித்தாலும் அதனை அவர் விரும்பி ஏற்கவில்லை என்பதே உண்மை. தன்னை ஒப்பந்தம் செய்ய வந்த தயாரிப்பாளரிடம் "நான் நாடக நடிகன். கேமாரவின் இஷ்டத்துக்குத் திரும்பித் திரும்பி நடிக்க மாட்டேன். என் இஷ்டத்துக்குத் தான் கேமரா திரும்பித் திரும்பி என்னை படம் பிடிக்கணும்..... என்ன சொல்றீங்க?" என்று கேட்டு அசர வைத்தார். தயாரிப்பாளரும் சம்மதம் சொல்லி ஒப்பந்தம் செய்தார்.... வேறு வழி!

கொள்கை ரீதியான வேறுபாடுகள் இருந்தாலும் காமராசர், ஜீவா, அண்ணா போன்ற தலைவர்களுடன் பெரும் நட்போடு இருந்தார். திராவிட கழக மாநாடுகளில் நாடகம் நடத்தி பகுத்தறிவு கொள்கைகளை பரப்பி வந்தாலும் கடைசி வரை திராவிட கட்சியில் உறுப்பினராக இருக்கவில்லை.

புது இம்பாலா கார் வாங்கி அது நிறைய வைக்கோல் கட்டுகளை நிரப்பி நகரத்தை வலம் வந்து தனக்கு கார் தர மறுத்த சிவாஜி கணேஷையே கடுப்படித்தார். காசை அவர் எப்போதுமே ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் இது.

எந்த ஒரு சூழ்நிலையிலும் வாழ்க்கையை துச்சமாக நினைத்தவர் எம்.ஆர்.ராதா. M.G.R-ஐ சுட்டு தானும் தற்கொலை செய்ய முயற்சித்து தோற்று மருத்துவமனையில் இருந்த எம்.ஆர்.ராதா எதிர்பாராத விதமாக அங்கே வந்த டைரக்டர் நீலகண்டனிடம் அசால்டாக கேட்டது,

"வாய்யா நீலகண்டா! ராமச்சந்திரனை சுட்டேன். அவனும் சாவலை. என்னை சுட்டுக்கிட்டேன். நானும் சாவலை. என்னையா துப்பாக்கி கண்டுபிடிக்கிறானுங்க? இந்த துப்பாக்கியை வச்சிக்கிட்டு தான் சைனாக்காரனை ஓட்டப்போறாங்களா?"

சிறைக்கு போய் வந்த வாழ்க்கையை கூட சிறிய ஓய்வாகவே எண்ணினார் எம்.ஆர்.ராதா.

தன் வலக்கையால் கொடுப்பதை இடக்கைக்கு தெரிய கூடாது என்பதை கடைசி வரை கடைப்பிடித்தவர் எம்.ஆர்.ராதா.ஏழை பங்காளனாக, கதாநாயகனாக வெள்ளித்ததிரையில் நடிக்கும் வேஷதாரிகளின் மத்தியில் வில்லனாக திரைப்படங்களில் தோன்றினாலும் நிஜ வாழ்வில் ஏழைகளின் தோழனாகவே வாழ்ந்து மறைந்தான் இந்த பெரும் கலைஞன்.

எம்.ஆர்.ராதா பற்றி திரைப்படங்கள், கட்டுரைகள் வழியாக நான் தெரிந்து வைத்திருந்தது வெகு சிலதே. ஆனால் M.R.ராதாயணம் படித்து முடித்த இந்த இரவை என்னால் மறக்க முடியாது. ஒரு பகுத்தறிவு ராட்சஷன் என்னில் குடிகொண்ட உணர்வு. தமிழ் நாடக உலகில், சினிமாவில், தமிழக அரசியலில் எம்.ஆர்.ராதா ஓர் தவிர்க்க முடியாத வரலாறு. ஒப்பற்ற ஒரு ஆளுமை திறமை உள்ள கலகக்காரனை பின்பற்றி வரும் பகுத்தறிவு சமுதாயம் அனைத்தும் இப்புததகத்தை படிக்க வேண்டும்.

இந்த புத்தகத்தை வாங்க கீழே சொடுக்கவும்.

16 comments:

 1. மிக அருமையான விமர்சனம்..
  புத்தகத்தை..உடனே வாங்கி படிக்கத் தூண்டும் விதமாக..எழுதி இருக்கீங்க..
  ஸ்டாலின்..

  ReplyDelete
 2. பகிர்விற்கு நன்றி. நல்ல விறுவிறுப்பான விமர்சனம்!

  ReplyDelete
 3. அருமையான விமர்சனம்.


  பகிர்விற்கும் பதிவிற்கும் நன்றி.

  முகில் எனது இனிய நண்பர்.

  ReplyDelete
 4. கோலிவுட்டின் இடி அமீன்!

  இந்த பதிவையும் பார்க்கவும்.

  http://mynandavanam.blogspot.com/2009/06/blog-post_29.html

  ReplyDelete
 5. வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி இளங்கோ,சென்ஷி,வண்ணத்துப்பூச்சியார்....

  ReplyDelete
 6. மிக மிக அருமையான விமர்சனம்

  ReplyDelete
 7. வருகைக்கும், விமர்சனத்திற்க்கும் நன்றி
  Willi

  ReplyDelete
 8. அழகானப் பகிர்வு. நடிகவேளின் திறமைக்கும், தைரியத்துக்கும் தகுந்த மரியாதை செய்துள்ளனர். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 9. வருகைக்கும், வாழ்த்துகளுக்கும் நன்றி M.S.E.R.K.

  ReplyDelete
 10. விமர்சனத்துக்கு நன்றி நண்பரே.

  ஒரே இரவில் புத்தகத்தைப் படித்து முடித்ததாக எழுதியுள்ளீர்கள். மகிழ்ச்சி. பலரும் என்னிடம் இதேபோல ஒரே மூச்சில் புத்தகத்தைப் படித்துவிட்டதாகக் கூறியுள்ளார்கள். நன்றி.

  எம்.ஆர். ராதாவை முழுக்க உள்வாங்கிக் கொண்ட பிறகு, இந்தப் புத்தகத்தை எழுத எனக்கு சுமார் ஒரே வாரமே பிடித்தது.

  எம்.ஆர். ராதாவும் சந்திரபாபுவும் நான் அதிகம் நேசிக்கும் சினிமா கலைஞர்கள். போலித்தனம் இல்லாத மனிதர்கள். இருவர் குறித்தும் புத்தகம் எழுதியதில் நிறைவு.

  ReplyDelete
 11. M.R.ராதாயணம் நூலின் ஆசிரியர் முகில் அவர்களின் வருகைக்கும், விமர்சனத்திற்கும் நன்றி.

  உண்மையில் இப்படி ஒரு எதார்த்தமான மனிதர் வாழ்ந்து போனாரா என்று வியப்பாய் உள்ளது. எந்த அதிகார வர்க்கத்திற்கும் பயப்படாத இந்த கலகக்காரனை படித்த ஒரு வாரத்திற்கு என் நினைவு முழுவதுமே M.R.ராதவையே சுற்றி சுற்றி வந்தது. அருமையான ஒரு புத்தகத்தை அளித்த உங்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

  ReplyDelete
 12. This comment has been removed by the author.

  ReplyDelete
 13. பகுத்தறிவுடன் கூடிய கடவுள் நம்பிக்கை வேண்டும்

  ReplyDelete
 14. மிக அருமையான விமர்சனம்..
  புத்தகத்தை..உடனே வாங்கி படிக்கத் தூண்டும் விதமாக..எழுதி இருக்கீங்க..

  ReplyDelete
 15. வாழ்த்துகள் தோழர்

  ReplyDelete
 16. வருகைக்கும், விமர்சனத்திற்கும் நன்றி பழனி, பிரபு,மகிழ்நன்

  ReplyDelete