Saturday, August 22, 2009

பெரியார்


நான் பிறந்து, தவழ்ந்து, நடந்து, வளர்ந்த எம் முதல் வீட்டின் சிறிய வரவேற்பறை முழுவதும் காந்தி, காமராஜ், நேரு, நேதாஜி என தலைவர்களின் படங்களாய் அலங்கரிக்கப்பட்டிருக்கும். ஏனோ நீண்ட முகமும், மெல்லிய கண்ணாடியும், வெண் தாடியுமாய் வீற்றிருந்த அந்த தாத்தாவை எனக்கு பெரிதும் பிடித்திருந்தது. எனக்கும் அவருக்குமான முதல் உறவின் விதை அங்கே தான் விழுந்தது. எப்போது பள்ளி போய் வந்தாலும் என் மறு புன்னகையை எதிர்பார்த்து காத்திருக்கும் கிராமத்து கிழவன் போல் புன்னகைத்து கொண்டே இருப்பார் சுவர் ஓரமாய்.

சட்டம் போடப்பட்ட இந்த புகைப்படங்கள் கால ஓட்டத்தில் சிதைந்து போய் விட, வீட்டில் வர்ணம் பூச கழட்டப்பட்ட பின் என்றுமே ஏற்றப்படவில்லை. ஆரம்ப கால பள்ளிக்கூட பாடங்கள் அத்தனையும் மனப்பாடம் செய்தே ஒப்பித்து விடுவதால் பாட திட்டங்களில் வந்த இந்த பெரியவரும் பத்தோடு பதினொன்றாகவே எமக்கு தோன்றியதில் ஆச்சரியம் இல்லை. ஆனாலும் புத்தக அட்டையில் வரும் இந்த முரட்டு தாடிக்காரர் கொஞ்சம் கவரவே செய்தார்.

காலம் கைப்பிடித்து வீதிக்கு அழைத்து வந்து முகம் எங்கும் அறைந்து ஒவ்வொரு கணத்தையும் வகுப்பெடுக்க, வாழ்க்கை பரமப்பதத்தில் முரண்டு பிடித்து எழுந்த போது தான் தெரிந்தது நூறு ஆண்டுகளுக்கு முன்பே ஒருவர் பிறந்து இப்போது நான் வேகமாய் எழுந்து ஓட காரணமாய் இருந்திருக்கிறார் என்று........ அவர் பகுத்தறிவு பகலவன் என்று உலக தமிழரால் கொண்டாடப்படும் இளைய தமிழ் சமூகத்தின் பாட்டனார் ராமசாமி என்ற "பெரியார்".

தமிழக வரலாற்றின் தன்னிகரற்ற ஆளுமை பெரியார் என்பதை யாரும் சந்தேகிக்க முடியாது, கூடாது. அந்த ஆளுமையை பற்றி சமீபத்தில் படித்த புத்தகம், ஆர்.முத்துக்குமார் எழுதி கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட "பெரியார்".

பெரியாருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதுவது என்பது கத்தி மேல் நடப்பது போன்றது. தனக்கே உரித்தான அருமையான மொழியில் லாவகமாக அதை செய்திருக்கிறார் நூலின் ஆசிரியர். தனது முன்னுரையிலேயே "தமிழ் நாட்டில் புரட்சி" என்ற சொல்லுக்கு சொந்தக்காரர் பெரியார் என்பதையும் இப்புத்தகத்தை படித்து முடிக்கும் போது பெரியார் என்ற ஆளுமையின் உயரம் ஒரு அங்குலம் நம் மனதில் உயர்ந்திருக்கும் என்பதை ஆணித்தரமாக சொல்கிறார். அதை நிறைவாக செய்தும் இருக்கிறார். ஒரு மாமனிதரை பற்றி எழுதுகிறோம் என்று ஒரு பக்கமாக சாயாமல் ராமசாமியின் மைனர் வாழ்க்கையையும் பதிவு செய்திருக்கிறார் நூலின் ஆசிரியர்.

160 பக்கங்களில் பெரியார் வரலாறா என ஒரு நிமிடம் திகைக்க வைத்தாலும், இந்த "வைக்கம் வீரரின்" எந்த முக்கியமான கணங்களையும் ஆசிரியர் தொலைத்து விடவில்லை என்பதற்கு பெரியாரின் தந்தை வெங்கட்ட நாயக்கரின் பன்னிரெண்டாவது வயதில் இருந்து இந்நூல் துவங்குவதே ஒரு முக்கிய சாட்சி.

செப்டம்பர் 17,1879 அன்று வெங்கட்டருக்கும், சின்ன தாய்க்கும் இரண்டாவது மகனாக பிறந்தான் ராமு என்ற ராமசாமி. இந்த ராமசாமி தான் பிற்காலத்தில் நாடு முழுவதும் ராமன் படத்தை எரிக்க உத்தரவு இட போகிறான் என்று பாவம் அந்த தந்தைக்கு அப்போது தெரிய வாய்ப்பில்லை.

ராமசாமி நல்ல வசதியான சூழ்நிலையில் பிறந்திருந்தாலும் சின்ன வயதிலேயே தத்து கொடுத்து விட்டதால் வறுமையில் ஒரு முரட்டு சாமியாக வளர்ந்தான்.சிறு வயதிலேயே தான் பிறந்த குலத்தை விட தாழ்ந்த குல வீடுகளில் இருந்து பலகாரங்கள் வாங்கி சாப்பிடுவது உண்டு. இவை எல்லாம் வெங்கட்டரின் காதுகளில் ஈயத்தை காய்ச்சி ஊற்றியது போல் ஆனது. விளைவு.... நான்காம் பாரத்தொடு திண்ணை படிப்பும் நின்றது.

பள்ளி படிப்பை இடையில் நிறுத்திய பின்பு தன் தந்தையோடு சேர்ந்து வியாபாரம் செய்ய ஆரம்பித்து, பணம் கையில் புரள துவங்கிய போது அதை லாவகமாக கையாளவும் தெரிந்திருந்தது. இந்த சேமிக்கும் பழக்கம் அவரோடு இறுதி வரை தொடர்ந்தது.

சாமி பக்தர்களுக்கு ராமசாமியை கண்டாலே ஆட்டம் துவங்கி விடும். பக்தன் என்று தெரிந்தால் அத்தனை கேள்வி கேட்பார். பிடிவாதம் பிடித்து தன் மனதுக்கு இனியவளான நாகம்மாளை திருமணம் செய்தார். இரண்டு ஆண்டுகள் திருமண வாழ்க்கையில் பிறந்த பெண் குழந்தை இறந்து விட மனம் வெறுத்து ஆந்திரா, காசி, கேரளா என்று தேசாந்திரியாய் திரிந்தார். இந்த பயணத்தில் தான் ஆதிக்க சக்திகளும், மதம் என்ற மூட நம்பிக்கையும் பாமர மனிதனை எத்தனை பாடாய் படுத்துகிறது என்பதை உணர்ந்தார். ஊர் திரும்பிய போது முற்றிலும் மாறியிருந்தார்.

தன் நேர்மையாலும் நிர்வாக திறனாலும் ஈரோடு நகராட்சி பதவிகள் தேடி வந்தன.மக்களுக்காக மறுக்காமல் ஏற்றுக்கொண்டார். ராஜாஜியின் விருப்பப்படி காங்கிரஸில் இணைந்தார்.

ஈ.வெ.ரா. புரட்சியை தனது வீட்டில் இருந்தே துவக்கினார். ஆணாதிக்கத்தின் மறு உருவாக அவருக்கு தென்பட்ட தாலியை மனைவியிடம் கழட்ட சொன்னார். கள்ளுக்கடை மறியலின் போது தனக்கு சொந்தமான 500 தென்னை மரங்களையும் வெட்டி சாய்த்தார். தன்னை தொடர்ந்து நாகம்மையையும், வள்ளியம்மையையும் போராட்ட களத்தில் இறக்கினார்.

ஆதிக்க சக்தியினரின் தலையீடு காரணமாக தாழ்த்தப்பட்டவர்கள் நுழைய முடியாமல் இருந்த கேரளாவின் வைக்கம் தெருவில் யாவரும் நடமாட போராடியதால் 'வைக்கம் வீரர்' ஆனார்.

" பிராமணருக்கு மட்டுமே வக்காலத்து வாங்கும் கட்சி காங்கிரஸ், அந்த கட்சியை ஒழித்து கட்டுவதே முதல் வேலை " என்று கூறி காங்கிரசில் இருந்து விலகினார். எந்த மதத்தையும் அவர் கடிந்து கொள்ள தவறவில்லை, ஆனால் உட்பிரிவுகளால் பிளவுபட்டு கிடக்கும் இந்து மதத்தையும், கிறிஸ்தவ மதத்தையும் கடுமையாக சாடினார்.

தனது இயக்கத்தின் தொண்டர்கள் 'தோழர்' என்று அழைத்து கொள்ள அறிவுறுத்தினார். 1933-ம் வருடம் தன் காதல் மனைவி இறந்த போது உடலை பெட்டியில் வைத்து, வண்டியில் ஏற்றி சென்று சுடுகாட்டில் வைத்து எரிக்க செய்தார்-அது தான் ராமசாமி. 1938-ம் வருடம் நடந்த மகளிர் மாநாட்டில் பெண்கள் ராமசாமிக்கு 'பெரியார்' என்ற அடைமொழியை சூட்டினர்.

நீதி கட்சி திராவிடர் கழகம் ஆகி அதன் நிரந்தர தலைவர் ஆனார் பெரியார். இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைப்பதை கடுமையாக எதிர்த்தார். இது வெறும் எஜமானன் மாற்றமே என்று எழுதினார்.

பெரியாருடைய வாழ்கையின் ஒரு முக்கியமான காலகட்டம் திராவிடர் கழகம் பிளவானது. மணியம்மையுடனான திருமணத்தையே காரணம் காட்டி கழகத்திலிருந்து, அண்ணாதுரை, அன்பழகன், கருணாநிதி போன்றோர் விலகினாலும் கழகம் ஏற்கனவே நீறு பூத்த நெருப்பாக இருந்தது என்பதற்கான பழைய நிகழ்வுகளை நூலின் ஆசிரியர் கோர்வை படுத்திய விதம் மிக அருமை.

பிராமணர் அல்லாத முதல்வர் என்ற தனிப்பட்ட ஈர்ப்பு காரணமாக காமராஜருடன் நெருங்கி பழகினார் பெரியார், பல தேர்தல்களில் ஆதரிக்கவும் செய்தார். ராஜாஜியோடு கொள்கை ரீதியாக பெரும் மோதலை தொடர்ந்தவர் அவரோடு கொண்ட நட்புக்கு பெரும் மரியாதை செலுத்தினார்.

பெரியாரால் கண்ணீர் துளிகள் என்று விமர்சிக்கப்பட்ட தி.மு.க, பின் ஆட்சிக்கு வர முதல்வராக பொறுப்பேற்ற அண்ணா பெரியாரின் ஆசியை பெற தவறவில்லை. யார் ஆட்சிக்கு வந்தாலும் குறைகளை கடுமையாக விமர்சித்தார் பெரியார். தள்ளாத வயதிலும் உடல் உபாதைகளோடு தமிழகமெங்கும் சென்று சுயமரியாதை கருத்துக்களை விதைத்து ஒரு இனத்தின் விடிவெள்ளியாய் திகழ்ந்த பெரியார் டிசம்பர் 24, 1973 அன்று நம்மை விட்டு மறைந்தார்.

இப்புத்தகத்தை படித்து முடித்த தினம் வந்த ஒரு குறுஞ்செய்தி என்னை திகைக்க வைத்தது. அது " 'Swamiye saranam aiyappa' Send it to 18 ppl, except me. u will get gud news tomorow. If U neglect, bad luck start 2day for 9 years.... this sms came from shabari malai temple....."

கடவுள் இருக்கிறார் என்று நம்பப்பட்ட மேல்வானில் இன்று செயற்கை கோள்கள் சுற்றி கொண்டு இருக்கின்றன. இருப்பினும் அந்த அறிவியல் முன்னேற்றங்களை பயன்படுத்தி இன்னும் மனிதர்களை முட்டாளாக்கி கொண்டிருக்கிறது ஒரு அறிவிலி சமூகம். பெரியார் இன்று நம்மோடு இல்லாவிட்டாலும் பெரியாரின் கருத்துக்களை பரப்பும் இது போன்ற நல்ல படைப்புகள் சமுதாயத்திற்கு இன்றும் தேவை என்பதையே காலம் நமக்கு உணர்த்துகிறது.


இந்த புத்தகத்தை வாங்க கீழே சொடுக்கவும்.

http://nhm.in/shop/978-81-8493-033-7.html

18 comments:

 1. நூல் பற்றிய விமர்சனம் மிகச் சிறப்பு.

  சிறு சிறு பிழைகள் அதைத் திருத்தினால் நூல் விமர்சனம் இன்னும் சிறப்பாக இருக்கும்

  ஈ.வே.ரா --தவறு
  ஈ.வெ.ரா.--சரி

  திராவிட கழகம்--தவறு
  திராவிடர் கழகம் --சரி

  ReplyDelete
 2. வருகைக்கும், விமர்சனத்திற்க்கும் நன்றி தமிழ் ஓவியா.பிழைகள் ஏற்பட்டமைக்கு வருந்துகிறேன்,சரி செய்து விட்டேன்.

  ReplyDelete
 3. ஈ.வெ.ரா பெரியார் பற்றிய அறிமுகத் தகவல்கள் மிகவும் அருமை.

  ReplyDelete
 4. வருகைக்கும், விமர்சனத்திற்க்கும் நன்றி ஆன்ட்ரியா

  ReplyDelete
 5. //வருகைக்கும், விமர்சனத்திற்க்கும் நன்றி தமிழ் ஓவியா.பிழைகள் ஏற்பட்டமைக்கு வருந்துகிறேன்,சரி செய்து விட்டேன்.//

  மிக்க நன்றி தோழர்

  ReplyDelete
 6. வருகைக்கும், விமர்சனத்திற்க்கும் நன்றி ராஜேந்திரன்

  ReplyDelete
 7. Very necessary message for the society, lots of thanks to Stalin for the post.


  // " 'Swamiye saranam aiyappa' Send it to 18 ppl, except me. u will get gud news tomorow. If U neglect, bad luck start 2day for 9 years.... this sms came from shabari malai temple....."

  பெரியார் (சிந்தனை) என்றும் காலத்தின் தேவை

  ReplyDelete
 8. வருகைக்கும், விமர்சனத்திற்க்கும் நன்றி மதிவாணன்

  ReplyDelete
 9. நல்ல பகிர்வு ஸ்டாலின்....

  நீங்க சொன்ன அந்த ஃபார்வார்டு மெயில் அல்லது குறுஞ்செய்தி மாதிரி நிறைய வந்திருக்கு...

  சமயத்துல நண்பர்களே அனுப்புவாங்க.. நான் பதிலுக்கு ஒரு பெரியார் இல்லைடா 1000 பெரியார் வந்தாலும் உங்களை திருத்துறது கஷ்டம்டான்னு சொல்லுவேன்...அந்த மடலை நான் shift+Del பண்ணிட்டேன்...நீ என்னத்தை பெருசா வாழ்ந்துட்ட, நான் என்னத்தை வீணாப்போறேன்னு பாக்கலாமான்னு கேப்பேன்???? அப்புடியும் இல்லாட்டி , இந்த மடலை அழிக்கறதுனால இல்லடா, உன் கூட எப்ப நட்பு வெச்சனோ அப்பவே எனக்கு அது ஆரம்பமாயிடுச்சி, அது இதை அழிக்கறதுனாலதான் வரணுமா என்னன்னு கேப்பேன்????

  ReplyDelete
 10. உண்மை நரேஷ், படித்த இளைஞர்கள் இப்படி இருக்கின்றனரே என்று நினைத்து தான் வருத்தமாக இருக்கிறது. பெரியார் இன்றும் நமக்கு தேவைப்படுகிறார்.

  ReplyDelete
 11. 21aam nootandin paditha padittha hi-tech muttaalkalukku oru nalla saataiadi..

  ReplyDelete
 12. வருகைக்கும், விமர்சனத்திற்க்கும் நன்றி விர்ஜின்

  ReplyDelete
 13. nalla seithi sonnadhukku nanri! periyar patri oru konathil mattum sindhipavarkalukku nalla vilakkam aaga irukkum!

  It will be a good idea if the cell phone companies hike the rate for forwarded messages!

  ReplyDelete
 14. வருகைக்கும், விமர்சனத்திற்க்கும் நன்றி வெங்கட்

  ReplyDelete
 15. i read the book already...
  the contents were compressed very minimum..
  it would be good book, if it has periyars stage speeches too...

  ReplyDelete
 16. நூல் பற்றிய விமர்சனம் மிகச் சிறப்பு.

  ReplyDelete
 17. பெரியார்!!! என் பெருந்தலைவன்!!! எத்தனை முறை படித்தாலும் அலுக்காது அவர் வரலாறு!! நீங்கள் அருமையாகவே பகிர்ந்திருக்கிறீர்கள்!! அதிலும்**
  காலம் கைப்பிடித்து வீதிக்கு அழைத்து வந்து முகம் எங்கும் அறைந்து ஒவ்வொரு கணத்தையும் வகுப்பெடுக்க, வாழ்க்கை பரமப்பதத்தில் முரண்டு பிடித்து எழுந்த போது தான் தெரிந்தது நூறு ஆண்டுகளுக்கு முன்பே ஒருவர் பிறந்து இப்போது நான் வேகமாய் எழுந்து ஓட காரணமாய் இருந்திருக்கிறார் என்று........ அவர் பகுத்தறிவு பகலவன் என்று உலக தமிழரால் கொண்டாடப்படும் இளைய தமிழ் சமூகத்தின் பாட்டனார் ராமசாமி என்ற "பெரியார்"** அத்தனை வார்த்தையும் பொன்பெறும் !!! அழகான, தெளிவான, இலகுவான நடை சகா!! பகிர்விற்கு நன்றி!

  ReplyDelete