"நிஜமாவா சொல்ற?" ஆச்சரியத்தோடு மனைவியை நோக்கி கேட்டேன். லாட்டரியில் பரிசு விழுந்தது என சொல்லியிருந்தால் கூட இத்தனை ஆவேசமாக கேட்டிருப்பேனா என சந்தேகம்...... 'அப்படி என்ன' என்று யோசிக்கிறீர்களா?...... நாங்கள் வசிக்கும் இந்த அடுக்குமாடி குடியிருப்பில் எங்கள் வீட்டிற்கு நேர் எதிர் வீட்டில் இருக்கும் எதிர் வீட்டுக்காரம்மா என் மனைவியிடம் பேசியிருக்கிறார்கள்.
பேச்சுலராய் சுமார் 10 ஆண்டுகளாக சேவல் பண்ணையில் காலத்தை ஓட்டி விட்டு, திருமணமான புதிதில் மனைவியோடு இந்த அடுக்குமாடி குடியிருப்பில் குடி வந்தேன்...... இங்கே குடி புகுவதற்கு இரண்டு வாரத்திற்கு முன் வீட்டை சுத்தம் செய்ய வந்திருந்தேன். பக்கத்துக்கு வீட்டுக்காரர்கள் ஆயிற்றே நாமாகவே அறிமுகப்படுத்தி கொள்வோம் என்று ஆர்வமிகுதியால் காலிங் பெல்லை அழுத்த, நடுத்தர வயதை தாண்டிய ஒருவர் கதவை திறந்தார்.
நான் தான் பேசிக்கொண்டிருந்தேனே ஒழிய அவரிடம் இருந்து ம்.... ஹும்..... என் கேள்விகளுக்கு ஒரே வார்த்தையில் பதில் சொன்னார்...... அவருடன் பேசிக்கொண்டிருந்த அந்த இரண்டு நிமிடங்களிலும் வீட்டை கண்களால் ஒரு நிமிடம் அலசி விட்டேன்.
மத நம்பிக்கை மிகுந்த குடும்பம் என்று சுவரில் இருந்த புகைப்படங்கள் காட்டியது, தொலைக்காட்சியில் 1:30 மணிக்கு வரும் தொடரின் நாயகியின் சோகத்தை பங்கெடுத்து கொண்டிருந்தார் அவருடைய மனைவி(எதிர் வீட்டுக்காரம்மா). அவர்கள் இருவரை தவிர வேறு யாரும் இருப்பதற்கான முகாந்திரமே இல்லை.
நான் பேசி திரும்பிய போது சம்பிரதாயமாக என் பெயரை கேட்டார், நானும் சொல்ல, மேலும் அவருடைய முகம் இருண்டு போனது தான் மிச்சம்........ அவருக்கான "நான்" அல்ல என்பது மட்டும் புரிந்தது.
மனைவியோடு குடி வந்த முதல் மாதத்தில் நேருக்கு நேராக சந்தித்த போதும் கூட எங்கள் புன்னகைக்கு பதிலாக சம்பிரதாய புன்னகையை மட்டும் உதிர்த்து போனார்கள்......
பெரும்பாலான நேரங்களில் வீடு பூட்டியே இருந்தது..... நானும் அவர்களிடம் பேச வேண்டும் என்று ஓரிரு முயற்சிகளுக்கு பின் முயற்சிக்காமலே விட்டு விட்டேன்.
சரி விஷயத்துக்கு வருவோம்....'சோழியன் குடுமி சும்மா ஆடாது' என்று சொல்வார்கள். அது போல தான் இன்றும் நடந்திருக்கிறது...... அது தான் என் ஆச்சரியத்துக்கு காரணம். வட இந்தியாவில் கணவரோடு வாழ்ந்து கொண்டிருந்த அவருடைய ஒரே மகள் கர்ப்பமுற்று அம்மா வீட்டிற்கு வந்திருக்கிறார். என் மனைவி ஏழு மாத கர்ப்பிணி ஆனதால் "எந்த மருத்துவமனைக்கு செல்கிறீர்கள், எங்கே பரிசோதனை செய்துக்கொண்டிருகிறீர்கள்" என்று கேட்பதற்கே இத்தனை நாள் வனவாசத்தை உடைத்து இன்று பேசியிருக்கிறார்......
"உனக்கு பிரசவம் அந்த ஆஸ்பத்திரியிலையாம்மா பாப்பாங்க?"
"இல்லங்க..... நாங்க ஊருக்கு போயிருவோம்"
"ஐயோ... ஊருக்கா? எப்போ, எப்படி போவீங்க?"
"அடுத்த வாரம், ரயில்ல"
"ரயில்லையா..... கர்ப்பிணி பொண்ணுங்க கடலு, ஆறு தாண்டி போக கூடாதுண்ணு சம்பிரதாயம் இருக்கு தெரியுமா?"
என் மனைவி என்ன பதில் சொல்லியிருப்பாள் என நான் கேட்கவே இல்லை.ஏனோ நீண்ட நாட்களுக்கு பின் பெரியாரை படிக்க தோன்றியது...... .
பேசவில்லையே என்று வருந்த வேன்டாம் கவிஞரே.அந்த பெண்மணி இப்படி பேசுவதற்கு பேசாமலேயே இருந்திருக்கலாம்.
ReplyDeleteஉங்க வலைப்பதிவுக்கு அதிக ஹிட்ஸ் வேண்டுமா அப்போ உங்க பதிவுகளை tamil10.com தளத்தில் இணையுங்கள் .பதிவுகளை இணைக்க இங்கே சொடுக்கி தளத்திற்குச் செல்லுங்கள்
ReplyDeleteகிராமத்தில் - வீட்டு தோட்டம், கிணத்தடி, அறிமுகமான அண்டை வீட்டார் என வளர்ந்த பெண்களுக்கு, Software Engineer-ன் மனைவி என்பதும், கணவனின் சம்பாத்தியமும் பெருமைக்குரிய விஷயம் தான் என்றாலும், அடுக்கு மாடி குடியிருப்பில் வாழ்வது என்பது என்னமோ அவர்களுக்கு நரகம் தான்.. என் வீட்டிலும் இதே நிலை தான். :(
ReplyDeleteசின்ன கதை நல்ல கதை
ReplyDeleteவருகைக்கும், விமர்சனத்திற்கும் நன்றி ஆன்ட்ரியா,தமிழினி,காட்சன்,இளைய அப்துல்லாஹ்
ReplyDelete