Monday, March 28, 2011

நினைவுகள் தொடர்கதை.......... கிரிக்கெட்




உலகக் கோப்பை கிரிக்கெட் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இந்தியா கோப்பையை வெல்லுமா?, வெல்லாதா? என ஊர் நண்பர்களிடையே காரசாரமாக பேசிக்கொண்டாலும், எங்களுடைய பால்யகாலத்து கிரிக்கெட் விளையாட்டை அசை போடாமல் நகர்ந்து விடவே முடியாது.

கபடி, கச்சி(கோலி), செவன்டீஸ், கிளியான் தட்டு, கண்டு விளையாட்டு, கைபந்து( ஓ பந்து), தள்ளும் பில்லும் என விளையாடிக்கொண்டிருந்த எம் கிராமத்து வாண்டுகளை கிரிகெட் நோக்கி நகர்த்திய (துரதிஷ்டமான) பெருமை எனக்கும் உண்டு. இன்றோ... இதை பற்றி உள்ளூர நிறைய வருத்தங்களும் உண்டு.

வருடம் சரிவர ஞாபகம் இல்லை. ஆனால், எண்பதுகளின் பிற்பாதியில் ஜெயக்குமார் அண்ணன் வீட்டு தொலைகாட்சி வழியாக கொஞ்சம் கொஞ்சமாய் எங்களுக்கு அறிமுகமானது கிரிக்கெட். அதிகாரபூர்வமான கேப்டனாக இல்லாவிட்டாலும் கிரிக்கெட்டின் சில சட்டதிட்டங்கள் தெரிந்ததாலும், எங்களை விட நன்றாக விளையாடுவதாலும் அணித்தலைவராக சுனில் அண்ணன் செயல்பட்டான்.


எங்களுக்கு கிரிக்கெட் குறித்து ஏதேனும் சந்தேகம் வந்தால் அதை நிவர்த்தி செய்வதும் சுனிலண்ணன் தான். பவுலிங் போடும் போது வெஸ்ட் இண்டீஸ் அணியினர் எதற்காக தங்கள் பேண்டில் ஒரு வெள்ளை துணியை சொருகி வைத்திருக்கிறார்கள் என்ற எங்கள் கேள்விக்கு அவன் சொல்லும் பதில் A+ ரகம்.

தொண்ணூறுகளின் இடையில் தான் ReeBok, MRF, BDM போன்ற நிறுவனங்களின் பேட்டுகள் எங்கள் ஊரை வந்தடைந்தன. அதற்கு முன்பாக நல்ல முற்றின பச்சை தென்னை மட்டையையும், பிலா மரத்தில் செதுக்கிய பலகையும் வைத்தே நெடுநாள் விளையாடினோம். பேட்டின் கைப்பிடியை அழகுபடுத்துவதற்க்காக வில்லஸ் அண்ணனின் சைக்கிள் கடையிலிருந்து சல்லீசான சைக்கிள் டியூபுகளை வெட்டி வாங்கி கைப்பிடியில் இட்டுக் கொள்வதும் உண்டு.

சிங் அண்ணனிடம் ஈட்டி மரப்பலகையில் செதுக்கிய பேட் ஓன்று இருந்தது. அந்த பேட்டில் பட்டாலே பந்து பறக்கும். அதை யாரும் திருடிவிடாமலிருக்க 'பேட்டை கோவிலில் மந்திரிச்சு வச்சிருக்கேன்' என பயம் காட்டி வைத்திருந்தான். படிக்காமல் எப்போதும் விளையாடி கொண்டிருக்கிறான் என பின்னொரு நாளில் புளியமுத்து அவிக்கும் போது விறகாக பயன்படுத்திக் கொண்டார் அவனுடைய அப்பா.



பெரும்பாலும் கடைகளிலிருந்து பந்து வாங்குவதே இல்லை. பொருளாதாரம் ஒரு காரணம் என்றாலும் ஐம்பது பைசா, ஒரு ரூபாய் என பங்கிட்டு வாங்கப்படும் பந்துகள் வெகு சீக்கிரம் உடைந்து போய் விடும். இன்னொன்று தென்னைமரம், புளியமரம், பிறுத்தி(அன்னாசி) செடிகளுக்கு நடுவே நாங்கள் விளையாடுவதால் வெகுசீக்கிரம் தொலைந்தும் போய் விடும்.

நாங்கள் உபயோகிக்கும் பந்துகளுக்கு ஒரு வித்தியாசமான வடிவமே இருந்தது. பால் வெட்டப்பட்ட ரப்பர் மரத்தின் வெட்டு ஓரமாக ரப்பர்பால் உறைந்து இருக்கும். அதை 'ஒட்டு கறை' என்போம். சுமார் பத்து, பதினைந்து மரங்களின் ஒட்டு கறையை எடுத்து உருண்டை வடிவில் சுற்றிக்கொள்வோம். ஏறக்குறைய உள்ளங்கையடக்கமான ஒரு அளவு வந்தவுடன் ரப்பர் பாலில் தோய்த்து, அதை இரண்டு நாட்கள் காய வைத்து எடுப்போம். பின் வீட்டில் நொய்ந்து போய் கிடக்கும் பழைய வேட்டிகளை கிழித்து இறுக்கமாக சுற்றி, நெசவு நூலில் பந்தை சாக்கூசி வைத்து தைத்து விடுவோம்.

இப்போது பந்து இறுக்கமான உருண்டை வடிவத்துக்கு வந்து விடும். அதன் நூல் ஓரமாக லேசாக ரப்பர் பாலை ஊற்றி, மிதமான வெயிலில் காய வைத்து எடுத்தால் பந்து ரெடி. சரியாக சுற்றப்படும் இது போன்ற ரப்பர் துணி பந்துகள் சுமாராக மூன்று முதல் நான்கு மாதம் வரை ஓடும்.

மரங்கள் நெருக்கி சேர்த்த கிராமமாக இருந்ததால் எப்போதும் ஸ்டம்புகளுக்கு பஞ்சம் இருந்ததே இல்லை. என்ன !!!.... ரப்பர் பந்தை விட துணிபந்து சற்றே கனமாக இருப்பதால் பல நேரம் ஸ்டாம்புகளை மாற்ற வேண்டியதாயிற்று. சில நேரம் பேட்டுகளையும்.....

கிரிக்கெட்டின் பெரும்பாலான விதிமுறைகள் எங்களுக்கு பரிச்சையமே கிடையாது. எங்களுக்குகென சில 'சிறப்பு விதிகளை' உருவக்கிகொண்டோம். எங்கள் ஊரிலேயே நாங்கள் விளையாடிக்கொண்டிருந்ததால் அச்சிறப்பு விதிகள் எங்களுக்கு பெரும் பாதிப்புகள் எதையும் தரவில்லை. இன்றும் அபத்தமான அவ்விதிகள் சிரிபூட்டுபவை.

ஒருநாள் விளையாடி கொண்டிருக்கிறோம். வெற்றிபெற எங்களில் ஓரணிக்கு 12 ரன் தேவை. ஜோஸ் அண்ணன் அடித்து விட்ட பந்து நல்லாம்பி பெரியப்பாவின் மாட்டு தொழுவம் அருகே இருந்த சாணம் குண்டில் விழ பந்தை எடுக்கும் முன் 12 ரன்களையும் ஓடியே எடுத்து விட்டார்கள்.

இன்னொருநாள்.....
கடைசி விக்கெட் வெற்றிபெற 20 ரன் எடுக்க வேண்டும். ஜாண் அண்ணன் அடித்த பந்து பக்கத்தில் இருந்த குட்டி தென்னை மரத்தின் மட்டையில் சிக்கிகொண்டது. ஜோன்ஸ் உடனடியாக மரத்திலேறி பந்தை தட்டி விட்டு கீழே நின்றிருந்த லாரன்சை கேட்ச் பிடிக்க செய்தான். துரதிஸ்டவசமாக ஜாண் அண்ணன் & கோ - வால் 15 ரன்னே எடுக்க முடிந்தது. இது கேட்ச் கிடையாது என ஒரு சாரார் வாதிட, கேட்ச் என மற்றொரு சாரார் மல்லுகட்ட தகராறு முற்றி அடுத்த ஆட்டத்திலிருந்து அந்த சிறப்பு விதிமுறை மாற்றப்பட்டது.

வாரநாட்களை காட்டிலும் வார விடுமுறை நாட்களே நாங்கள் ஒன்று சேர்வதற்கு வாய்ப்பாக அமைந்தது. வாரவிடுமுறைகளில் பெரும்பாலான வாண்டுகள் தங்கள் தகப்பனார்களின் விளைகளில்(தோப்பு) ஏதாவது ஒரு வேலையை செய்ய நிர்பந்திக்கப்பட்டு இருந்தனர். அவ்வாறு, விளைக்கு போகும் நேரத்தில் டிமிக்கி கொடுத்துவிட்டு விளையாட வந்துவிடுபவர்கள் உண்டு. இதனாலையே, எங்கள் ஊர் பெரிசுகளுக்கு ஆரம்பகாலத்தில் கிரிக்கெட் என்றாலே வேப்பங்காயாக இருந்தது.

ஒருநாள் விளையாடிக் கொண்டிருக்கிறோம். ஒரு அணிக்கு கடைசி ஓவரில் வெற்றி பெற 32ரன் தேவை. மூன்றாம் பந்தை வீசிகொண்டிருந்த ராஜா, ஆவேசமாக கையில் கம்புடன்(குச்சி) ஓடி வந்த அவன் தகப்பனாரை கண்டதும் பந்தை போட்டுவிட்டு ஓடியே போய் விட்டான். எங்களூர் சிறப்பு விதிமுறையின்படி வேறு யாரும் மிச்சம் பந்துகளை வீச கூடாது. ரன் எடுக்க வேண்டிய அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

- நினைவுகள் தொடரும்...........


6 comments:

  1. nice anna i wish to write the comment in tamil but i couldint since i am not used to it any how nice writing looking forward for the next memories

    ReplyDelete
  2. Very nice, It seem you from some where in Vilavancode or Thiruvattar Taluk in Kanyakumari

    ReplyDelete
  3. போன வருடம் ஊருக்கு சென்ற பொழுது நண்பனிடம் கேட்டேன் "மக்கா cricket விளையாட போலாமா என்றேன் " அதற்கு அவன் "வெளயாட எடமே இல்ல மக்கா ". என்றான் ..................ஆமாம் அதுதான் உண்மை!!!!!!!!!!!!!!! நீங்கள் சொல்வது போல் ஒரு காலத்தில், தடுக்கி விழுந்தால் மைதானம் இருந்ததது ............இப்போது எல்லாம், வீட்டு முற்றம் என்பது கூட காணாமல் போகும் நிலைமையில் நாம் இருக்கிறோம் ...........எல்லா இடத்திலும் ரப்பர் மரம் ஆக்கிரமித்து விட்டது ..............சமீபத்தில் ஊருக்கு சென்ற பொழுது, நான் இழந்தவைகள் பல,.... அவற்றில் முக்கியமாக மரிச்சினி, தென்னை , பனை, நெல் வயல்!!!!!!!!!!!!!! ............." ஏன்ப்பா????" என்று கேட்டால் ...........வருமானம் ரப்பரில் தான் வருகிறது என்கிறார்கள் .....................என்ன சொல்வது?? நானும் சராசரி மனிதனாக ரப்பர் மரத்தில் பால் எடுக்க சென்று விட்டேன் ..........முன்பு எல்லாம் நம் பெற்றோர்கள் அடிக்கடி கூறும் வசை மொழிகள் "நாலணும் சேந்தா போதும், ஒடன மட்டையும் பந்தையும் தூக்கிட்டு பெய்யாவும்"............ஆனால் இன்று "நாலணும் சேந்தா போதும், ஒடன பிராண்டி குடிச்சக்கு பெய்யாவும்" என்கிற நிலைமையில் நாம் இருக்கிறோம் ..........

    ReplyDelete
  4. Dear Stalin,
    really It is Interesting. Those days comes in front for a second. MMMMM. It wont come back. todays generation missed a lot... Still i am being proud of introducing cricket in my native place... lovely one.. Any how we can think about it only..

    By
    Senthil saravanan
    Kappiyarai

    ReplyDelete
  5. Hey guys, I am not able to post the comment in Tamil, can any one help me ?.

    ReplyDelete