Saturday, December 28, 2013

டி.ஆரும் இன்றைய தலைப்பு செய்தியும்

சந்தேகமே இல்லாமல் தமிழர்களுக்கு சினிமாத் துறை வழியாக கிடைத்த ஆளுமைகளில் ஒருவர் டி.ராஜேந்தர்.. மொழு மொழு கன்னங்களோடு ஹீரோக்கள் வலம்வந்த காலகட்டத்தில் அரை தாடியோடும், தனக்கான பிரத்யேக உடல்மொழி மற்றும் வசனங்களோடு சாமானிய தமிழர்களுக்குள் டி.ஆர் ஊடுருவி ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு மேல்  ஆயிற்று...கொஞ்சம் யோசித்து பாருங்கள், தமிழ்நாட்டில் அடுக்குமொழி என்றால் உங்களுக்கு யார் நினைவுக்கு வருவார்கள் என்பதை?!!?

'இளமையில் வறுமை கொடிது' என்பார்கள்; சிறுவயதில் இருந்தே வறுமையில் உழன்று, தன் முயற்சியால் பட்டம் படித்து, உச்சத்தை தொட்டதாலோ என்னவோ டி.ஆருக்கு எப்பவுமே 'தான்' என்ற அகங்காரம் கூடவே இருந்துவந்துள்ளது.. ஒருவகையில் அவரது பலமும், பலவீனமும் அவரது வாய் தான்...

உலகமயமாக்கலின் தாக்கத்தில் காணாமல் போனதில் டி.ஆரும் ஒருவர். உலகின் போக்கை, மக்களின் ரசிப்புத் தன்மையைப் பற்றி உணராது, தன்னை பற்றிய மிகை பிம்பத்தை தானே கட்டமைத்துக் கொண்டதின் விளைவு தான் இன்று சமூக வலைத்தளங்களிலும், அச்சு மற்றும் காட்சி ஊடங்களிலும் அவர் சராமாரியாக கிண்டலடிக்கப்படுவது.ஆனால், கண்டிப்பாக அவர் தமிழ்சூழலில் நிராகரிக்கப்பட வேண்டியவர்அல்ல.. நான் இங்கே அவரை ஆதரிக்க\விரும்ப அவர் ஒரு 'தமிழுணர்வுள்ள தமிழன் ' என்பதே எனக்கு போதுமானதாக இருக்கிறது...

ஸ்டாலின் இளைஞரணி தலைவரான போது 'அப்போ நாங்க என்ன கிழவன் அணியா?' என்று கேட்ட துணிச்சல் இன்றும் மறக்க இயலாதது. 1996 தேர்தலில் ரஜினி தொலைகாட்சி வழியாக ஆதரவு தெரிவித்து ஒதுங்க, டி.ஆர். தமிழகத்தின் ஓவ்வொரு கிராமத்தின் மூலைமுடுக்கிலும் சென்று ஜெயாவுக்கு எதிராக பிரச்சாரம் செய்தார்; 1998,2001 என்று அது தொடரவே செய்தது.

ஆனாலும், தன்னை பற்றிய அவரே உருவாக்கி கொண்ட மிகைபிம்பம் திமுகவில் கலைஞரை தவிர வேறு யாரையும் முழு மனதோடு ஏற்றுக் கொள்ளும் சூழ்நிலைக்கு அவரை கொண்டுச் செல்லவில்லை; ஏறக்குறைய வைகோ அவர்களுக்கு ஏற்பட்ட நிலைமை போல்..இதில் தான் திமுகவில் இருந்து வெளியேறுவதும், உள்ளே நுழைவதுமாக அவர் அரசியலை பகையாக்கும் நிலைக்கு கொண்டு சென்றிருக்கிறது..

ஓட்டரசியலில் ஏறக்குறைய கையறு நிலையில் இருக்கும் திமுகவுக்கு இந்த நாடாளுமன்ற தேர்தல் ஒரு முக்கியமான தேர்தல்; ஏறக்குறைய கலைஞர் தனது ஒட்டு மொத்த வீரியத்துடன் போராடும் இறுதி நாடளுமன்ற தேர்தல். இந்தியாவின் நவீன போக்கும், தமிழகத்தின் மாற்று அரசியலும் வேறு திசையில் செல்வதை அவதானித்த திமுக தனது தொண்டர்களை, பேச்சாளர்களை, முன்னாள்களை தக்கவைக்கவேண்டிய நெருக்கடியில் இருக்கிறது.  திமுக அவருக்கு எம்.பி சீட் தரும் என்று உள்ளும், வெளியிலும் பேசிக்கொண்டாலும், டி.ஆர் எம்.பி ஆனாலும் 'தான்' என்ற ஆளுமை குணம் திமுகவில் கலைஞரை தவிர வேறு யாரையும் தலைமையாக ஏற்றுக்கொள்ள போவதில்லை.. ஏறக்குறைய கலைஞருக்கு பிறகான ஜமீன்தாரி திமுகவும் இவருக்கு ஈடு கொடுக்கப்போவதில்லை..

2014 க்கு பிறகு நாடாளுமன்ற உறுப்பினராகாத நிலையில்,  டி.ஆரின் நிலைமை என்பது உண்மையில் சங்கடகரமானது; ஆனாலும், டி.ஆரை அரசியலில் நெடுநாட்களாக அவதானித்தவன் என்ற நிலையில் ஒன்றே ஒன்றை சொல்லிக் கொள்ள தோன்றுகிறது "அன்பு டி.ஆர். சார், அரசியலில் உங்கள் கடைசி ஓட்டப்பந்தயத்தில் கலந்துக் கொள்ள தயாராகிக்கொண்டிருக்கிறீர்கள்.. வாழ்த்துக்கள்.. "

No comments:

Post a Comment