Sunday, August 3, 2014

1983 - ஒரு கிராமத்து கிரிக்கெட் காதலனின் கதை

1983 - திரைப்படத்தின் கதையை முதலில் கேட்ட போது,  இது ஒரு தோற்றுப் போனவனின் கதை என்று தான் நினைத்திருந்தேன். இந்திய கிராமங்களில் கிரிக்கெட் விளையாடும் லட்சோப லட்சம் சாமானியர்களில் ஒருவனின் கதை இது என்று படத்தைப் பார்த்து முடித்த போது தான் தோன்றுகிறது.  

சச்சின் தனது 200-ஆவது டெஸ்ட் போட்டியை நிறைவு செய்து உரையாற்றும் காட்சியிலிருந்து படம் துவங்குகிறது. 'இனி தெய்வம் கிரீசுக்குள் இல்லை; அதை நம்பவும் முடியவில்லை, சங்கடத்தை தாங்கவும் முடியவில்லை...' என்று தனக்குத்தானே விசனப்படும் நாற்பது வயது ரமேஷின் பால்யத்தை நோக்கி திரைக்கதை நகர்கிறது.


1983-ஆம் ஆண்டு லார்ட்ஸில்  வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான உலககோப்பையை இறுதிப்பொட்டியை தூர்தர்சன் வழி, விழி அகலாமல் பார்த்துக்கொண்டிருக்கும் பத்து வயது ரமேசும் அவனுடைய நண்பர்களும்,  இந்திய அணி கோப்பையை வென்றதும் பட்டாசு வெடித்து கொண்டாடித் தீர்க்கிறார்கள். மோட்டார் மெக்கானிக்கான கோபி ஆசான், தனது மகன் ரமேஷை எப்படியாகிலும் மெக்கானிகல் எஞ்சினியர் ஆக்கி விட வேண்டுமென ஆசைப்படுகிறார். படிப்பில் ரமேஷ் சுட்டி என்றாலும் கிரிக்கெட் விளையாடுவதையே பெரும் பொழுதுபோக்காக கொண்டிருக்கிறான். படிப்பின் வாசனை கொஞ்சம் கொஞ்சமாக வடிந்து, பத்தாம் வகுப்பை தட்டி தடுமாறி கடக்கும் ரமேஷ், ப்ரீ டிகிரியில் தோற்றுப்போகிறான். மகனை குறித்து கனவுகளில் இருந்த கோபி ஆசான் உடைந்து போகிறார், ரமேஷின் பேட்டை வெட்டி எறிகிறார். ஆனாலும், அன்றும்  வீட்டாரின் கண் தப்பித்து  நண்பர்களோடு டோர்னமென்ட் விளையாடப் போகிறான் ரமேஷ்.


வேலைக்கு ஏதும் செல்லாமல் கிரிக்கெட் விளையாடுவதையே சுவாசமாக கொண்டு நடக்கும் ரமேஷின் மீதான நம்பிக்கை போக அவனது காதலி மஞ்சுளாவும் ஒருகட்டத்தில் அவனை பிரிகிறாள். தந்தை வழி கற்ற மெக்கானிக்கல் பணியை தொடரும் ரமேஷ், நண்பர்களின் வற்புறுத்தலின் பெயரில் திருமணம் செய்துக்கொள்கிறான். முதலிரவு அன்று, சுவரில் ஒட்டி இருக்கும் சச்சினின் புகைப்படத்தை பார்த்து 'யார் இது?' என கேட்டு ரமேஷை அதிர்ச்சிக்குள்ளக்குகிறாள் அவனது மனைவி.   

காலம் உருண்டோடுகிறது; ரமேசின் தனது மகனுக்குள் இருக்கும் கிரிக்கெட் ஆர்வத்தை பார்த்து பேட் ஒன்றை வாங்கிக்கொடுக்கிறான். இந்தியா மீண்டும் உலகக்கோப்பையை கைப்பற்றுகிறது. ரமேஷ் அப்போதும் கிரிக்கெட் விளையாடிக்கொண்டு இருக்கிறான். ரமேசின் ஆட்டத்தை பார்த்து பிரமித்துப் போன முன்னாள் கேரளா கிரிக்கெட் கேப்டன் விஜய் மேனன் வழியாக, அவருடைய அக்காடமியில் மகனை கிரிக்கெட் பயிற்சிக்கு அனுப்புகிறான். ரமேஷின் மகன் 'Under-14' மாவட்ட அணிக்காக தேர்வு செய்யப்படுவதோடு படம் நிறைவு பெறுகிறது.


ரமேஷாக நிவின் பவுலி, விஜய் மேனனாக அனூப் மேனன், கோபி ஆசானாக ஜோய் மத்யூ என ஒவ்வொருவரும் அவரவரது கதாப்பாத்திரத்தை நிறைவாகவே  செய்திருக்கிறார்கள். கதை, திரைக்கதை, இயக்கம் அப்ரிட் ஷைன். ரமேஷ் கதாப்பாத்திரத்தை மிக அழகாக செதுக்கிஇருக்கிறார்;  இந்திய அணிக்காக விளையாட வேண்டுமென்ற கனவோடு விளையாடி தோற்று போனதாக சித்தரித்திருக்க முடியும்..  ப்ரி டிக்ரி தோற்று போனதோ, காதல் கைகூடாமல் போனதோ, சரியான வேலையில்லாமல் இருப்பது குறித்தோ, கிரிக்கெட்டில் பெரிய இடத்தை பிடிக்க முடியாது போனது குறித்தோ ரமேஷ் எப்போதும் கவலைப்படவே இல்லை. கிரிக்கெட் விளையாடுவது ஒரு வெறியாக மாறி, அதையே பொழுதுக்கும் செய்து கல்வியிலும், வாழ்க்கையிலும் சில கணங்களை ரமேஷ் தவற விடுகிறான்..பின்னர், மகனுடைய கிரிக்கெட் ஆசைக்கு உடன்பட்டு, அவனை வழிநடத்துகிறான் என்பதையே படம் பேசுகிறது.

1983 துவங்கி, இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமான சில கணங்களை படம் நெடுக்க பதிவு செய்திருக்கிறார்கள். அன்றைய வளைகுடாவின் அரசியல் சூழ்நிலையையும், வெவ்வேறு கால இடைவெளிகளில் நண்பர்கள் பொருள் தேடி ஓடினாலும், கிரிக்கெட்டும்- சச்சினும் அவர்களுடைய வாழ்க்கையில் ஒரு கண்ணியாக தொடர்வதை அற்புதமாக திரைக்கதையாக்கி இருக்கிறார்கள்.ஏறக்குறைய கிராமங்களில் கிரிக்கெட் விளையாடிய ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு ரமேஷ் ஒளித்து இருக்கிறான். யோசித்துப் பாருங்கள், கிரிக்கெட் விளையாடுவதை தவிர, கிரிக்கெட் குறித்து வேறு என்ன ஆசைகள் அன்று நமக்குள் இருந்திருக்க முடியும்? ரமேஷை போல சச்சினை எப்பிடி நேசிக்க துவங்கினோம்? சச்சினுடைய குழந்தைகளை தொலைக்காட்சிகளில் காணும் போது, நமக்கு நம் வீட்டு குழந்தைகள்  போல ஏன் மனம் குதூகலிக்கிறது? சச்சினுடைய இருநூறாவது டெஸ்டின் இறுதிநாள் உரையை கேட்கும் போது ஏன் நம்மை அறியாமல் கண்கள் பனிக்கிறது?
ஆம், நாம் சச்சினோடு வளர்ந்தோம்.. ஆகவே, சச்சினை அளவு கடந்து நேசிக்கிறோம்.

நீங்கள், எண்பதுகளில் கிரிக்கெட் விளையாட துவங்கியவராக இருந்தால், இப்படத்தின் மூலம் சில நல்ல நினைவுகளை கண்டிப்பாக அசை போட்டு வரலாம். Don't miss it. 

No comments:

Post a Comment