Thursday, February 9, 2017

சசிகலா மீது ஏன் இந்த வெறுப்பு? - அந்த 8 காரணங்கள்

ஒப்பீட்டளவில் இன்றைய அதிமுக என்பது கருணாநிதி எதிர்ப்பின் ஒரு திரட்சியான வடிவமே. அம்மையாரின் மறைவுக்கு பிறகு தமிழகத்தில் நிகழ்ந்த அசாதாரண சூழ்நிலையில், தமிழக மக்களோ 'எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்லக்கொள்ளி' என தேர்ந்தெடுக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். அம்மையார் இடத்தில் யாரையுமே நினைத்துப்பார்க்க முடியாத அதிமுக தொண்டர்கள், ஓபிஎஸ் க்காக கொஞ்சம் இறங்கி வந்திருக்கிறார்கள். அம்மையாரின் ஒவ்வொரு அரசியல் அசைவிலும் முப்பத்தி மூன்று ஆண்டுகளாக உடனிருந்த சசிகலா மீது மக்களுக்கு ஏன் இந்த வெறுப்பு?

1) சாவை தொடரும் மர்மம்

 செப்டம்பர் 22 ம் தேதி மருத்துவமனையில்,'நீர் சத்து குறைவு' என அம்மையார் அனுமதிக்கப்பட்ட பிறகு நடந்த எல்லா விடயங்களுமே சாமானியனுக்கு மர்ம்மமாகவே இருக்கிறது. இடையிடையே இந்த சந்தேகங்களை சமூகவலைத்தளங்கள் வழி கேட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அவர் இறந்ததாக அறிவிக்கப்பட்ட டிசம்பர் 5 ம் தேதி வரை, அவர் நன்றாக இருக்கிறார், உணவருத்துகிறார் என்றே மக்களுக்கு நம்பவைக்கப்பட்டது. அம்மையாரின் ஒரு புகைப்படம் கூட வெளியே வராமல் பார்த்துக்கொண்ட சசிகலாவை மக்கள் சந்தேக கண்ணோடு நோக்குவது இயல்பானதே.

2) சசிகலாவின் ஒப்பனை
தமிழர்களுக்கு ஒரு பொதுவான குணம் உண்டு. தனக்கு அபிமானமான நடிகரையோ, தலைவரையோ பிரதி எடுப்பவர்களை அவர்களுக்கு பிடிக்கவே பிடிக்காது. எம்ஜியாராக முயற்சி செய்து தோற்றுப்போன மு.க முத்து, இதற்கு சமகால உதாரணம். அம்மையார் மரணமடைந்த ஒரேவாரத்தில், புடவை-ஜாக்கெட்-கொண்டை- மேக்கப் என சசிகலா மாற்றிக் கொண்டதை யாரும் ரசிக்கவில்லை. கூடவே அம்மையார் போல பேச முயலும் மேனரிசமும் மக்களுக்கு எரிச்சலையே தந்தது.

3) ஊழல் குற்றச்சாட்டுகள்

சசியின் மீது இருக்கும் வழக்குகளுக்கு சம பங்கு அம்மையாருக்கு உண்டு என்றாலும் சாமர்த்தியமாக அது சசிக்காக மட்டுமே நடந்தது போன்ற உளவியல் தாக்குதலுக்கு மக்கள் ஆளாக்கப்பட்டார்கள். போதாததற்கு, 'எனக்கு யாருமே இல்லை, மக்களுக்காக நான்.. ' போன்ற வசனங்கள், ஜெயாவை 'யாருமற்றவர்' என்ற பிம்ப உருவாக்கத்துக்கு கொண்டு சென்றது. திமுக எதிர்ப்பு என்ற ஒரே காரணத்திற்க்காக, அம்மையாரை 'ஊழல் குற்றச்சாட்டில்' இருந்து மறைத்தவர்களின் கனிவு சசிகலாவுக்கு கிடைக்கவில்லை. ஊழல் குற்றச்சாட்டில் இருந்து வெளிய வந்துவிட்டு ஆட்சியில் அமர்ந்துக்கொள்ளலாம் என்ற பொறுமை சசிகலாவுக்கு இல்லாததால், அவர்மீதான வெறுப்பு, மக்களுக்கு இன்னும் அதிகமானது.4) ஒன்று கூடிய மன்னார்குடி மாபியா

மன்னார்குடி கும்பலில், தினகரன் துவங்கி யாரையெல்லாம் அம்மையார் துரத்தி அடித்தாரோ, அவர்களை எல்லாம் அம்மையார் மரணம் அறிவிக்கப்பட்ட ஒரே இராப்பொழுதில் ஒன்று கூடினார்கள். அதுவும் ஜெயாவின் உடல்வைக்கபட்டிருந்த மேடை முழுவதையும் ஆக்கிரமித்ததை பார்த்த மக்கள் கோபத்தின் உச்சிக்கே போனார்கள்.

5) சசி VS ஜெயலலிதா - ஆளுமை

பொதுசெயலாளராக அறிவிக்கப்பட்ட பின், இந்தியா டுடே நிகழ்வில் கலந்துக்கொண்ட சசி அங்கேயே அம்பலப்பட்டுப்போனார். 'தமிழில் இந்தியா டுடே வருவது மகிழ்ச்சியான விஷயம்' என அவர் அளித்த முதல் பேட்டி, மக்களுக்கு ஷாக் அடித்தால்போல் ஆயிற்று. வேட்பாளர்கள் தேர்வில் சசிகலா கும்பலில் தலையீடு இருந்தது என்பது முதலமைச்சர் பதவில் உட்காரும் தகுதி ஆகாது என்பதில் மக்கள் தெளிவாகவே இருக்கிறார்கள். கலைஞர் ஆட்சியில், அதிமுக உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட போது, தனிநபராக சட்டமன்றத்துக்கு வந்தது எல்லாம், அம்மையார் கிரவுண்டுக்கு வெளியே அடித்த சிக்சர்கள். அதையெல்லாம் பார்த்து வளர்ந்த தலைமுறைக்கு சசிகலா வேப்பங்காயாக தெரிவது வியப்பல்ல.

6) தேர்தலை சந்திக்காத முகம்

குறைந்தபட்சம் ஒரு கவுன்சிலராக கூட மக்களால் தெரிந்தெடுக்கப்படாத ஒருவர், எப்படி முதலமைச்சர் ஆகலாம் என்ற மக்களின் ஆதங்கம் வெகு இயல்பான ஒன்றே. தமிழக அரசியலில் சாதித்தவர்கள் அனைவருமே மக்கள் பணி செய்து வந்தவர்களே. ஏன், கடந்த சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த விஜயகாந்த் கூட, பல உதவிகள் செய்து கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மனதில் இடம்பிடித்து அரசியலுக்கு வந்தவர் தான். அரசியலுக்கு சம்மந்தமே இல்லாத புதிய முகங்களை ஏற்றுகொள்ள தயங்கும் மக்கள் உளவியலை இதன் மூலம் நாம் புரிந்துக்கொள்ளலாம்.


7) விசிறி அடிக்கப்பட்ட ஓபிஎஸ்

ஏற்கனவே இரண்டு முறை முதலமைச்சராக இருந்த அனுபவம், சாந்தமான முகம், அடக்கமான பேச்சு, பத்திரிக்கையாளர்களுடன் அவரது இணக்கமான போக்கு எல்லாம், அவரது மைனசை(ஜல்லிக்கட்டு விவகாரம்,ரெட்டியுடனான நட்பு)தாண்டி மக்கள் மனதில் ஸ்கோர் செய்ய வைத்தது. அம்மையாரால் இரண்டுமுறை சுட்டிக்காட்டப்பட்ட ஓபிஎஸ் ஐ, இரண்டே மாதத்தில் தூக்கி அடித்ததை மக்கள் கொஞ்சமும் ரசிக்கவில்லை. 8) ஜெயலலிதா

ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம், அதுவும் உண்மை. தொண்ணூறுகளுக்கு பிறகு, கலைஞரையும், அம்மையாரையும் வேறு வழியே இல்லாமல் தான் மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். இருவருக்குமே நொறுங்கிய தோல்விகளையும் பரிசாக தந்தார்கள். இருவரும் புனிதர்கள் அல்ல என்பது மக்கள் மனதில் தொடர்ந்து ஓடிக் கொண்டிருந்தது. இவரை விட்டால் அவர், அவரை விட்டால் இவர் என வேறு வழியில்லாமல் சகித்துக்கொண்டிருந்த மக்கள், அம்மையாரின் மறைவுக்கு பிறகு,சசிகலா அதிகாரத்துக்கு வந்தால், இன்னொரு ஜெயலலிதாவாகி இன்னும் இருபது வருடம் நம்மை படுத்தி எடுத்து விடுவார் என்ற இயல்பான அச்சம் கூட இந்த எதிர்ப்புக்கு ஒரு காரணமே..

பிறகு: இது என்னுடைய பார்வை மட்டுமே, உங்களுடைய பார்வையை பின்னூட்டத்தில் எழுதுங்கள். 

5 comments:

 1. மன்னார்குடி மாபியா என்ற சொல்லாடல் ஏற்கனவே உருவாகி விட்டது. 90 களில் மன்னார்குடி நடத்திய அட்டூழியங்கள் இந்த கும்பல் மீது மக்கள் வெறுப்பு கொள்ள காரணமாகி விட்டது....

  ReplyDelete
 2. கவுண்டமணி வில்லனாக நடித்த காலத்தில் வந்த படங்களில் வரும் பண்ணையாரை கொன்றுவிட்டு வேலைக்கார வில்லன் புது பண்ணையாராக மாறும் காட்சிகளை பார்த்து வளர்ந்த மக்கள் என்னும் மந்தையாடுகள் சசிகலாவை ஏற்பதற்கு தயக்கம் காட்டுகிறார்கள்! சசிகலா இன்னும் கொஞ்சம் பணம் செலவு செய்து தனது இருப்பை உறுதிபடுத்தும் பட்சத்தில் மறுபடியும் சின்னம்மா கோசம் கேட்கும்!!!

  #எனது கணிப்பு#

  ReplyDelete
 3. உங்கள் பார்வையின் 6வது ற்றும் 8வது காரணங்கள் தற்போதைய சூழலில் முதலாவதாக நான் பார்க்கிறேன், மேலும் 33 வருட கறைப் படிந்த பொது மற்றும் அரசியல் வாழ்கை வாழ்ந்த ஒருவரிடம் எந்தவித மனிதாபிமானத்தை எதிர்பார்க்க முடியும்.

  ReplyDelete
 4. உங்கள் பார்வையின் 6வது ற்றும் 8வது காரணங்கள் தற்போதைய சூழலில் முதலாவதாக நான் பார்க்கிறேன், மேலும் 33 வருட கறைப் படிந்த பொது மற்றும் அரசியல் வாழ்கை வாழ்ந்த ஒருவரிடம் எந்தவித மனிதாபிமானத்தை எதிர்பார்க்க முடியும்.

  ReplyDelete
 5. தற்போதைய சூழலில் உங்களது 6 & 8 வது காரணங்கள் முதன்மையானதாக உணருகிறேன், மேலும் 33 வருட கறைப்படிந்த பொது மற்றும் அரசியல் வாழ்வை வாழ்ந்த ஒருவளிடமிருந்து மனிதாபிமானம், தியாகம் இவைற்றை எவ்வாறு எதிர்பாக்க முடியும் என்பதும் மக்கள் கேள்வி.

  ReplyDelete