Tuesday, September 1, 2009

ஓணமும் ஊஞ்சலும்.........



அழகான புகைப்படங்களுடன், ஓண வாழ்த்துகளை சுமந்து பத்துக்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள் எனக்கு வந்து சேர்ந்தது.... அலுவலகத்தில் இருந்த பெரும்பாலான மலையாள நண்பர்கள் நீண்ட விடுப்பு எடுத்து விட்டு சொந்த ஊர்களுக்கு போய் இருந்தார்கள். சென்னையில் நிரந்தரமாக தங்கி இருந்த ஒன்றிரண்டு நண்பர்கள் மட்டுமே அலுவலகம் வந்திருந்தார்கள், அவர்களுடைய இருப்பிடம் சென்று கை குலுக்கி விட்டு மீண்டும் எனது இருக்கைக்கு வந்து பணியை தொடர்ந்தேன்..... ஆற்றில் விழுந்த இலையை போல் நினைவுகள் என்னை என் பால்ய வயதின் ஓண நாட்களுக்கு இழுத்து சென்றது.....

எங்களுடைய கிராமம் கேரள மாநிலத்தின் வெகு அருகில் இருந்ததால், அம்மாநிலத்தின் மொழி, கலாச்சாரம், உணவு என பல வாழ்வியல் அம்சங்களை எங்களையும் அறியாமல் சுமந்து வந்தோம் ... ஓணம் எதற்காக கொண்டாடப்படுகிறது என அறியாத வயதிலும், அதை என்னை போன்ற பால்ய வயது சிறுசுகள் கொண்டாட எண்ணற்ற காரணங்கள் கண் முன்னே கிடந்தன....

முதலாவது காரணம், காலாண்டு பரீட்சை லீவு என்ற 'ஓண பரீட்ச லீவு'. பொதுவாக காலாண்டு தேர்வுகள் அனைத்தும் ஓண பண்டிகைக்கு முன் முடிந்து விடுவதாலும், அதை ஒட்டி கிடைக்கும் 10 நாள் விடுமுறையே என் போன்ற 'ஆசிரியரால் உதைபடும்' பள்ளி மாணவனுக்கு பெரும் இளைப்பாறல்.

இரண்டாவது காரணம் 'தின்பண்டங்கள்'.... பெரும்பாலான உறவினர்களும், நண்பர்களும் கேரளாவிலே வேலை செய்து, இப் பண்டிகையை ஒட்டி ஊர் திரும்புவார்கள். இப்படி வருபவர்கள் வாங்கி வரும் தின்பண்டங்களால் வீடு முழுக்க சில நாட்கள் கம கமக்கும்...

மூன்றாவது முக்கிய காரணம் 'ஊஞ்சல்'.... அந்த விடுமுறை நாட்கள் முழுவதும் எங்களை உயிர்ப்பித்து வைத்திருக்கும் ஒரே விளையாட்டு.... ஓண பரீட்சையின் இறுதி நாளில் தான் பெரியவர்கள் ஊஞ்சல் கட்டி தருவார்கள்.... ஓண ஊஞ்சல் பெரும்பாலும், வீட்டை சுற்றி உள்ள பெரிய மரங்களிலே தான் இடுவார்கள்.. எல்லோருக்கும் வீட்டை ஒட்டி மரங்கள் இருப்பதிலை, ஆனால் எனக்கு வாய்த்தது. அழகான ஒரு மாமரம், எங்கள் வீட்டில் மேல் சாய்த்து வளர்ந்து நின்றது... நல்ல வலுவான தேங்காய் நாரினால் செய்யப்பட்ட கயிறையே ஊஞ்சல் கட்ட உபயோகப்படுத்துவார்கள், நைலான் கயிறுகள் இங்கே நிராகரிக்கப்படும், வலுவாக இருந்தாலும் எப்போது வேண்டுமானாலும் அறுந்து விடும் அபாயம் உள்ளதால்.....

முதலில் கயிறு கட்ட போகும் கொம்பில், ஒரு கோணிப்பையை(சாக்கு) வைத்து விட்டு அதன் மேல் கயிற்றின் நடு பகுதியை மரத்தின் கொம்போடு கட்டுவார்கள். கோணிப்பை வைப்பதற்கு காரணம் கயிறு வெகு விரைவில் தேய்ந்து விடாமல் இருப்பதற்கே... கயிற்றின் முனைகளில் நல்ல ஒரு மரத்தின் வலுவான கம்பை வைத்து கட்டுவார்கள்... பெரும்பாலும் முனை தேய்ந்து இருக்கும் உலக்கையே இதற்கு பயன்படும். அப்புறம் என்ன... ஆட்டமோ ஆட்டம் தான்...

ஊஞ்சலில் ஒருவர் ஆட்டி விட மற்றொருவர் ஆடி வருவார். நான் ஒரு நண்பனை 25 தடவை ஆட்டி விட்டால் அவனும் என்னை 25 தடவை ஆட்டி விட வேண்டும். எழுதப்படாத ஒப்பந்தம் இது... சிலர் தான் மட்டும் ஆடி விட்டு ஓடி விடுவதால் விளையாட்டு ரோதனை ஆகி விடுவதும் உண்டு..

ஆடுபவரை ஆட்டி விட்டு, அந்த ஊஞ்சலின் அடியில் வேகமாக ஓடுவதற்கு பெயர் தண்ணி குடம் எடுப்பு... நல்ல தைரியமானவர்களால் மட்டுமே இது போன்ற ஒரு சில வித்தியாசமான வித்தைகளை காட்ட இயலும். இன்னொன்றும் உண்டு ஒருவரை உலக்கையின் மேல் உட்கார வைத்து விட்டு, மற்றொருவர் உலக்கையின் மேல் நின்று கொண்டும் ஆடுவது, மிகவும் அபாயம் ஆனதும் கூட....... தவறி விழுந்து விட்டால் அடுத்த விடுமுறை நாட்கள் அனைத்தும், கைகளில் கட்டுகளோடு மற்றவர்கள் ஆடுவதை பார்த்து கொண்டு இருக்க வேண்டியது தான்.

எவ்வளவோ ஆடி களைத்தாலும், பரீட்சை விடுமுறை முடியும் போது நைந்த கயிரோடும் , பிய்ந்த கோணிப்பையோடும் ஊஞ்சல் கழற்றப்படுவதை பார்த்து மனம் விசும்பாமல் இருப்பதில்லை..

சென்ற விடுமுறை நாளில் நாங்கள் வசித்த முதல் வீட்டிற்கு சென்றிருந்தேன்...... பால்யத்தில் ஊஞ்சல் விளையாடிய மாமரம் அதன் வனப்பு குறைந்து வயதாகி நின்றது.. ஆசையோடு தடவி பார்த்தேன். நீண்ட நாட்கள் கழித்து என்னை பார்த்த மகிழ்ச்சி அதற்கு இருந்திருக்க வேண்டும் பலமாய் அசைந்து எனக்கு மறு மொழி சொன்னது.. நாங்கள் ஓண ஊஞ்சல் கட்டிய கொம்பு சற்று பருத்து இன்னொரு ஊஞ்சலுக்காய் காத்து கொண்டு இருந்தது ,ஆனால் விளையாட தான் யாருமே இல்லை. அக்கம் பக்கத்தில் இருந்த குழந்தைகள் வீட்டில் கணிப்பொறியோடு கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தார்கள்..

9 comments:

  1. //அக்கம் பக்கத்தில் இருந்த குழந்தைகள் வீட்டில் கணிப்பொறியோடு கிரிக்கெட் விளையாடி கொண்டிருந்தார்கள்..//

    Yes - the next generation is missing too much because of the technology.

    Now a days - no 'ஓண பரீட்ச' or 'ஓண பரீட்ச லீவு'.. Only Quaterly Exams and Exam vacations. That too filled with Tuitions, Computer classes, etc, etc..

    Good Blog da.. I too rewind my thought to my childhood..

    ReplyDelete
  2. வருகைக்கும், விமர்சனத்திற்கும் நன்றி காட்சன்

    ReplyDelete
  3. வருகைக்கும், விமர்சனத்திற்கும் நன்றி முருகன்

    ReplyDelete
  4. adipoli .. belated oonaa aashamshagal...

    ReplyDelete
  5. ஓணம் வாழ்த்துக்கள் விர்ஜின்

    ReplyDelete
  6. உங்கள் எழுத்துக்கள் குமரி மாவட்டத்தில் பிறந்தவர்களுக்கு அரிய பொக்கிஷம். குறிப்பாக கூந்த வண்டி, ஓணமும் ஊஞ்சலும், பட்ட பெயர் மனதை வருடும் ரீங்காரங்கள். உங்களை எங்க ஊர்க்காரர் என்று சொல்லி கொள்வதில் ஒரு விதமான ஆணவம், பெருமை எனக்கு. உங்கள் எழுத்துக்களை படிக்கும் பொழுது திரு. s. ராமகிருஷ்ணன் அவர்களுடைய கட்டுரைகளை படிப்பது போன்று ஒரு உணர்வு, சேரனின் திரைப்படங்களை பார்ப்பது போன்ற ஒரு ஈர்ப்பு. மனதிற்கு இதமாக இருக்கிறது ............தொடரட்டும் உங்கள் பயணங்கள்...........

    ReplyDelete
  7. வருகைக்கும் விமர்சனத்திற்கும் நன்றி பிரபு

    ReplyDelete