Sunday, February 10, 2019

முகிலனின் கதை

முகிலன்---> முகிலன்விளை
குமரி மாவட்டத்தில் உள்ள சில ஊர்களில் பெயர்களை ஆழ்ந்து கவனித்ததுண்டு. ஒவ்வொரு ஊரின் பெயர் காரணங்களை சொல்லித்தர வேண்டிய மூதாதைய கண்ணிகள் எப்போதோ அது தொடர்பான நினைவுகளை தவற விட்டிருக்கிறார்கள். தம்பி பால் பெக்கர், வெகு சமீபத்தில் முகிலன் தொடர்பான பதிவு ஒன்றை பதிவு செய்திருந்தார். அதன் தொடர்ச்சியாகவே இந்த பதிவை எழுகிறேன்.
................................
காலம் : 1680, தில்லியில் சுல்தானாக அவுரங்கசீப் இருக்கிறார். இந்தியா முழுவதையும் ஒரே குடைக்குள் கொண்ட வர, அவுரங்கசீப் தொடர்ந்து போர்கள் செய்து வருகிறார். தெற்க்கே இருக்கும் சில நிலப்பகுதிகள் அவருக்குள் கீழ் வராமல் இருப்பதை அறிந்த அவர், வேணாடு (திருவான்கூருக்கு முந்தைய பகுதி) நோக்கி செல்ல தனது நம்பிக்கையான தளபதியை கட்டளையிடுகிறார். அந்த தளபதி தான் முகிலன் (அவர் பிறப்பால், மதுரையை சார்ந்த தமிழர் என்றும், பிறகாலத்தில் இஸ்லாமிய சமயத்தை தழுவி அவர்கள் போர் படையிலேயே இணைத்தார் என்பது செவிவழி வரலாறு).
வேணாடோ, 'தடி எடுத்தவன் தண்டல்காரன்' போல, உள்ளூர் ஆட்சியாளர்களில் கைகளில் இருக்கிறது. ஆற்றிங்கல் ராணியாக உமையம்மை ராணி இருக்கிறார்.
வழியில் இருக்கும் சிறுகுறு அரசுகளை எல்லாம் வீழ்த்தி வரும் முகிலன், வேணாட்டு அரசை எளிதாக கைப்பற்றுகிறார். இங்கே கைப்பற்றப்பட்ட பொருட்களில் சிலவற்றை அவுரங்கசீப்புக்கு பரிசாக அளித்து விட்டு, 'வேணாட்டு ராஜா'வாக தன்னை பிரகடனப்படுத்திக் கொள்கிறார்.
முகிலனை வெல்லவே முடியாது என்று எண்ணும், உமையம்மா ராணி, கோட்டயம் பகுதியில் ராஜாவாக இருக்கும் கேரளவர்மனிடம் உதவிகள் கேட்கிறார். முகிலனின் படைபலத்தை கண்டு திகைக்கும், கேரளவர்மன் திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயிலில் நேர்ச்சை வைத்து வழிபடுகிறார்.
திருவட்டாறு அருகே உள்ள மலை பகுதியில் போர் நடக்கிறது, போர் உச்சத்தை தொடும்போது குழவிகள் முகிலனின் படைகளை தாக்குகிறது. முகிலனின் படைகள் பின்வாங்கி காட்டில் போய் மறைகிறது. குளவிகளின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட முகிலன் காட்டிலேயே இறந்து போகிறார். முகிலனை அந்த பகுதியிலே அடக்கம் செய்து விட்டு படைகள் திரும்ப போகிறது. (திருவட்டாறு அருகே அவரது கல்லறை இருப்பதாக தகவல்- நான் பார்த்ததில்லை)
..........................
இப்படி ஒரு குறுகியகாலத்தில் வேணாட்டை கைப்பற்றி தன்னை ராஜாவாக பிரகடனம் செய்துக்கொண்ட முகிலனை பற்றிய தகவல்கள் அரிதாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், சுவாரசியமாக 'முகிலன்' ஆண்டதற்கும், இருந்ததற்கும் சாட்சியாக குமரி முழுக்க முகிலன் என்ற பெயரோடு தொடங்கும் ஊர்கள் உள்ளன.
சில உதாரணங்கள்,
முகிலன் விளை - மிடாலக்காடு
முகிலங்கரை - மணலிக்கரை
முகிலன்விளை - இருளப்பபுரம்
முகிலன்குடியிருப்பு - கன்னியாகுமரி - மணக்குடி சாலை
*விளை என்பது விளைநிலங்கள் உள்ள பூமி என்று குறிப்பதாகும்.
...............
முகிலன் ஒரு தமிழர் என்பதால், அவர் தொடர்பான வரலாறு மறைக்கப்பட்டதா? என்ற சந்தேகம் எழாமல் இல்லை.
முகிலன், முகிலன்விளை தொடர்பான செய்திகள் நீங்கள் அறிந்திருந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

https://www.facebook.com/stalin.felix.5/posts/10157334098687780

No comments:

Post a Comment