Sunday, February 10, 2019

சாமிக்கு படைத்ததை உணவை ஏன் மறுக்கிறார்கள் கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும்?

சாமிக்கு படைத்த பொங்கலையும், பலகாரத்தையும் கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்கள் வாங்க மறுப்பது ஏன்?
----------------------------
மதம் தொடர்பான விவாதம் கொஞ்சம் இணையத்தில் வந்தால் போதும், "கிறித்தவனும், இஸ்லாமியனும் தர்ற பொருட்களை நாம தின்னனும். ஆனா, நாம கொடுத்தா தின்னமாட்டனுங்க... " என பலரும் சமூகவலை தளங்களில் பெருமுவதை பார்க்க முடியும்.
இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மதங்கள் SEMITIC RELIGIONS, அதாவது ஒற்றை கடவுளை மையமாக கொண்டு இயங்குபவை. அங்கே, கடவுளுக்கு என்று ஏதும் படைக்கபடுவதும் இல்லை, பூஜிக்கபாடுவதும் இல்லை, அவை ஆராதிக்கப்படுவதும் இல்லை. அப்படி செய்யப்படுபவைகளை பாவமாக, பிசாசுக்கு படைக்கப்பட்டதாக அவர்களுக்கு போதிக்கப்படுகிறது. ஒற்றை கடவுள் நம்பிக்கைகளில் வளரும் ஒருவர் அந்த நம்பிக்கையிலே வளர்கிறார். இஸ்லாமியர்க்கு குரானும், கிறிஸ்தவர்களுக்கு பைபிளும் மதநூல்களாக இருக்கிறது.
சரி, இனி இந்து மதத்திற்கு வருவோம். இங்கே யார் இந்து? கிறிஸ்தவ, இஸ்லாமியர் அல்லாத எவரும் இங்கே இந்து தான். முன்னோர் வழிப்பாட்டில் நம்பிக்கை கொண்டிருப்பவரும் இந்து தான். கல்லை கும்பிடாதே என்று சொன்ன ஐயா வைக்குண்டரும் இந்து தான். நாங்கள் மட்டுமே தலைமுறை தலைமுறையாக லட்டு உருட்டுவோம் என்று மிரட்டும் திருப்பதி கோயில் பிராமணரும் இந்து தான்.
இங்கு இருக்கும் பழங்குடி தொன்மமும், பெருதெய்வ வழிபாட்டில் இருந்து சிறு தெய்வ வழிபாடு வரை தொடரும் சில வழிப்பாட்டு கண்ணிகள் தான் இங்கே இந்துக்கள் என்று கோடிக்கணக்கானோரை இணைக்கிறது. இவை எல்லாவற்றிக்கும் மேலாக 'இந்தியா' என்ற ஐடியாலஜியின் மீது நின்று அரசியல் செய்கிறது பிராமணீயம். அது இந்துக்களை பிரியவோ, திரியவோ விடாது. இவற்றை எல்லாம் மீறி தான் குமரியில் அய்யாவழியினர், தங்களை தனி மதமாக அறிவிக்க கோருகிறார்கள். கர்நாடகா லிங்கத்தார் பெரும் போராட்டமே 'தனி மதத்திற்காக' நடத்தி வருகிறார்கள்.
கொஞ்சம் ஈழத்தை பாருங்கள். இதே வழிபாட்டு முறைகளை கொண்டுள்ள மக்கள் தங்களை 'சைவம்' என்று சொல்லிக்கொள்கிறார்கள், 'இந்து' என்றல்ல.
.............
ஆக, இங்கே ஒருவர் தன்னை 'இந்து' என்று அடையாளப்படுத்திக் கொள்பவர், தனக்கென்று எந்த தனித்த அடையாளத்தையும், வழிபாட்டு முறைகளையும் வைத்துக்கொள்ளலாம். அதனால் தான், இந்துக்கள் என தங்களை அறிவித்துக்கொள்பவர்களால் எளிதாக தர்க்காவில் போய் மந்திரித்து கட்டிக் கொள்ள முடிகிறது, மாதா கோயிலுக்கு நேர்ச்சை போட்டு மொட்டை போட்டுக்கொள்ள முடிகிறது. Yes, They don't have any rules.
இவர்களை தான் ஹச். ராஜாவும், எஸ்.வி.சேகரும் ஒரே குடைக்குள் கொண்டுவர முயல்கிறார்கள்.
"அவர்கள் கோயிலுக்கு போய் நீ சாப்பிடுகிறாய், உன் கோயிலுக்கு அவர்கள் வருவார்களா? அவர்கள் சாமியை நீ கும்பிடுகிறாய், உன் சாமியை அவர்கள் கும்பிடுவார்களா?" என கேள்வி எழுப்புகிறார்கள். தொன்ம அடையாளத்தின் தொடர்ச்சியை 'இந்து' என்று கட்டமைத்திருக்கும் அரசியல் ஹச்.ராசாவுக்கு நன்றாகவே தெரியும்.
ஒற்றை தெய்வ வழிபாட்டில் இருக்கும் கிறிஸ்தவ, இஸ்லாமிய வழிமுறைகளை கேள்விக்கு உட்படுத்துவதின் மூலம் தான் இங்கிருக்கும் சாமானியர்களை அவர்களுக்கு எதிராக திரட்ட முடியும் என்பதும் அவர்களுக்கு தெரியும்.
இந்த சாமானிய இந்துக்கள் மறந்து போகும் ஒரு சங்கதி ஒன்று இருக்கிறது. அது, இஸ்லாமிய சமூகத்திக்கு உள்ளேயே, 'தர்காக்களை இடிப்போம்' என்பவர்களும் உண்டு, "ரோமன் கத்தோலிக்கர்கள் பிசாசுகளை கும்பிடுகிறார்கள்" என சொல்லும் சீர்திருத்த, பெந்தெகொஸ்தே கிறிஸ்தவர்களும் உண்டு. இவர்களுக்கு ஒன்றும் செவிசாய்க்காமல் வருடாவருடம் சர்சுகளில் பொங்கல் இடுபவர்களும் இதே கத்தோலிக்கர்கள் தான்.
தர்க்காவுக்கு செல்லும் இஸ்லாமியரும், சர்ச்சில் பொங்கல் வைத்து கொண்டாடும் கிறிஸ்தவரும், குலசாமி வழிபாட்டில் தனது பண்பாட்டை தக்கவைத்திருக்கும் இந்துவும் ஒற்றுமையாக இங்கே இருப்பதால் தான் இந்த மண் இன்னும் கலவரபூமியாக மாறாமல் இருக்கிறது.
ஆக, இங்கே ஒற்றை கடவுளை மட்டுமே கொண்டாடும் செமிடிக் மதத்தவர் சிறுபான்மையிலும் சிறுப்பான்மை. அவர்கள் தவறுகளை சுட்டிக்காட்டுவதில், கண்டிப்பதில் தவறே இல்லை. ஆனால், அவன் என் கோயிலில் சமைத்ததை ஏன் சாப்பிடவில்லை எனக் கோருவது, 'ஒரு சாமானியர் சமைத்த மாட்டுக்கறியை இந்த அக்ரகாரத்து ஆள் ஏன் சாப்பிட மாட்டேங்குறார்?' என்று கதறுவது போன்றது.
முரண்பாடுகளை பேசிக் களைந்து, இது போல என்று இணைத்து செயல்படுவோம்.

https://www.facebook.com/stalin.felix.5/posts/10157327944337780

No comments:

Post a Comment