Sunday, February 10, 2019

பால்ய கால (ஊர்) சினிமாக்கள்

'படம் போடுன்மாம்', இந்த வார்த்தைகளை கேட்டால் காதில் தேன் வடிந்தது போல இருக்கும். 80 களில் ஊரில் எங்காவது ஒரு வீட்டில் டிவி இருந்தாலே ஆச்சரியம். அதுவும், தமிழ் சினிமா எல்லாம் இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வரும் 'மாநில மொழி திரைப்படம்' வகையில் வந்தால் தான் உண்டு. அன்று பார்த்து மின்சாரம் போய் விட்டால், மீண்டும் இரண்டு மாதம் காத்திருக்க வேண்டும். 'மலையாளம்' எல்லாம் அன்று தொலைக்காட்சி வழியாக கற்றது தான்.
இந்த காலக்கட்டத்தில் தான் அரபு நாடுகளுக்கு வேலைக்கு சென்ற ஊர் அண்ணன்கள் வீடுகளுக்கு டி.வியோடு திரும்பி வர துவங்கினார்கள் சிலர் 'டெக்' கோடு.
கொண்டுவந்த டிவியை ஊருக்கு காட்ட போடுகிறார்களா? சுயபெருமிதத்திற்காக போடுகிறார்களா என்று எங்களுக்கு தெரியாது. ஆனால், எங்களை போல வாண்டுகளுக்கு அது தான் "ஜாக்பாட்". பெரும்பாலும் வெள்ளிக்கிழமை இரவோ, சனிக்கிழமையோ படம் போடுவார்கள். இரண்டு பேருக்கு தெரிந்தால் போதும், ஒரு 100 பேராவது கூடி விடுவார்கள். போடப்படும் படங்களின் பெயர்களும் எப்படியாவது கசிந்துவிடும். குறைந்தது 4,5 கேசட்டுகள் என்று விடிய விடியப் படம் போடுவார்கள். அதும் திரைக்கு வந்து சில வருடங்களே ஆன திரைப்படங்கள். ரஜினியின் 'மாப்பிள்ளை, பணக்காரன்' எல்லாம் இப்படி தொலைக்காட்சியில் போடப்பட்டு பார்த்த திரைப்படங்கள் தான்.
இரண்டு படங்கள் ஓடி முடியும் முன்பே கண்கள் சொக்கும், அடுத்தநாள் படம்பார்க்க வராத நண்பர்களிடம் தம்பட்டம் அடிப்பதற்காகவே கண் சிவக்க சிவக்க படம் பார்ப்போம். நாம் விரும்பிய படத்தை நான்காவதாக போடுகிறார்கள் என்றால், கூடவே இருக்கும் நண்பர்களிடம் அந்த படத்தை போடும் போது எழுப்ப சொல்லி அப்படியே தரையில் கிடந்து உறங்கிய நாட்களும் உண்டு.
இப்படியெல்லாம் படம்பார்க்க அனுமதியெல்லாம் வீட்டில் எளிதாக கிடைத்து விடாது. ஊரின் நம்பிக்கையான ஒரு அண்ணன் யாராவது அந்த இரவுநம்மை 'கார்டியனாக' ஏற்றுக்கொள்கிறேன் என சொல்லி ஜாமீன் அளித்து, அந்த வார இறுதியின் வீட்டுப்பாடங்கள் எல்லாம் செய்து முடித்து ஒப்பித்தால் தான் அனுமதி கிடைக்கும். சினிமா போடும் நாட்களுக்கு ஒருவாரத்திற்கு முன் 'Progress Report' கிடைத்திருந்தால், உள்ளதும் போச்சு; போய் கேட்கவே முடியாது. 'எப்படா மீசை முளைக்கும்! தனியாக போய் படம் பார்க்கலாம்' என்று நினைத்து அழுதுக்கொண்டே தூங்கி விடுவோம்.
வெளிநாட்டுக்கு போய் வந்தவர்கள் கொண்டு வந்த டி.வி தவிர்த்து, வாடகைக்கு டி.வி எடுத்து போடுவார்கள் இளந்தாரிகள். முந்தையதை போல இந்தவகை சினிமா பார்பதற்கும் அதே மவுஸ் என்றாலும் சில நேரம் 'காசு கேட்கும்' அபாயங்களை சந்திக்க வேண்டியிருக்கும்.
இன்னொன்று, ஊரில் யாருடைய திருமணத்திற்க்காவது வீடியோ எடுத்திருந்தால், அவர்களுடைய 'கல்யாண கேசட்' கிடைக்கும் நாள் எங்களுக்கு திருநாள். என்ன ஒரே சிரமம் என்றால், அவர்கள் கல்யாண வீடியோவை முழுமையாக போட்டு விட்டு தான் வேறு சினிமாக்கள் போடுவார்கள். அதுவும், புது பொண்ணோ, மாப்பிளையோ படம்பார்க்க வர தாமதமானால், Black TV ஐ நாங்களும் தேமே என பார்த்துக்கொண்டிருக்க வேண்டும்.
இன்னொன்று, ஊரில் யாரையாவது வெறிநாய் கடித்தால், சம்மந்தப்பட்ட நபர் 90 ஆவது நாள் தூங்கக்கூடாது என்ற நம்பிக்கை ஊரில் இருந்தது. அன்று அந்த வீட்டில் விடிய விடிய படம் ஓடும். மற்ற இடங்களை விட, இந்த கேட்டகிரியில் படம்பார்க்க ஆட்கள் குறைவாக இருக்கும் என்று நான் எழுதி தான் தெரிய வேண்டுமா என்ன? 
இரண்டு வீடுகளுக்கு இடையே இருக்கும் ஈ.கோ வும் இந்த நாட்களில் ஊருக்கு தெரியவரும். அதாவது வெளிநாட்டுக்கு போய் வந்த ஒருவர் 4 படம் போட்டால், அடுத்த வீட்டுக்காரர்கள் சில மாதத்தில் 8 படம் போட்ட வரலாற்றை எல்லாம் கண்டு கடந்து வந்திருக்கிறோம்.
இதை தவிர கோயில் திருவிழாக்களில் பெரும்பாலும் பெரிய திரை தான். பெரும்பாலும் மதநம்பிக்கை சார்ந்த திரைப்படங்களே அங்கு போடப்படும். என்ன ஒன்று, ஆண்கள் எண்ணிக்கையை விட பெண்கள் எண்ணிக்கை அங்கே கூடுதலாக இருக்கும்.
90 களில், ஒவ்வொரு வீடுகளிலும் தொலைகாட்சி எண்ணிக்கை அதிகரிக்க இதுபோன்ற 'விடிய விடிய படம்' கூத்துக்கள் குறைய துவங்கியது. ஊரின் ஒவ்வொரு பஸ்ஸ்டாப்புக்கும் ஒரு கிரிக்கெட் டீமும், ஒரு இயக்கமும் ஆரம்பமானது. ஆம், எங்களுக்கும் அந்நேரம் மீசை முளைக்க துவங்கி விட்டது. எங்கள் பங்குக்கு நாங்களும் ஒரு டீம் துவங்கி, ஆண்டுவிழாக்கள் நடத்தி பெரிய திரையில் சினிமாக்கள் போட துவங்கினோம்.
................
80 களில் அவ்வளவு பரபரப்பாக இருந்த 'சினிமா போடுதல்' 2Kவில் கொஞ்சம் கொஞ்சமாக வழக்கொழிந்து போய் விட்டது. சினிமாவின் இடத்தை, பாட்டுக்கச்சேரியும், நடன நிகழ்சிகளும் பிடிக்க ஆரம்பித்தது.
சென்ற வாரம் மக்களோடு, ஒரு தமிழ்ப்படம் பார்த்துக்கொண்டிருந்தேன். பாதிபடம் முடிவதற்குள் தூக்கம் வந்து, தூங்கப்போகிறேன் என்று சொல்லிப்படுத்து விட்டேன். ஒருகாலத்தில் நான்கைந்து படங்களை எப்படி இப்படி சுவாரசியம் குறையாமல் பார்த்தோம் என்பதை நினைக்கும் போதே அயர்ச்சியாக இருந்தது.
ஆனால், அந்த படம்பார்த்த நாட்களின் நினைவுகள் மட்டும் எந்த அயர்ச்சியும் இல்லாமல் அப்படியே மனசுக்குள் கிடக்கிறது.

https://www.facebook.com/stalin.felix.5/posts/10157167983817780

No comments:

Post a Comment