Tuesday, February 17, 2009

நட்பும்... கற்பும்...

என்றோ அலமாரியில் அடுக்கி வைத்த
புத்தகங்களை தூசி தட்டி, துடைத்த போது
ஒற்றையாய் விழுந்தது மயிலிறகு........
கூடவே நம் நினைவுகளும்... சில்லரையாய்......

ஞாபகம் இருக்கிறதா நண்பியே
என் இருபதாம் பிறந்த நாளும்
நீ கொடுத்த மயிலிறகும்
குட்டி போடாது என தெரிந்தும்
பத்திர படுத்தினேன் நம் நட்புக்காய்........

பேருந்து நிறுத்தத்தில் - நாங்கள்
செய்யும் மாலை கலாட்டாவில்
கலக்கவே இல்லை நான் - ஓர் நாள்
உன் ஒற்றை முறைப்புக்கு பின்..........

என் கல்லூரி கட்டணம் கட்ட
தடுமாறிய நாட்களில்
ஓசை இல்லாமல் உடைபட்டது
உனது உண்டியல்.......

பூதம் வருகிறது என பயம் காட்டி
மழலைக்கு சோறு ஊட்டும் தாயை போல்
மத்தியான பொழுதுகளில் என்
திருட்டு புகை பழக்கத்தை நிறுத்த - ஒருநாள்
பயந்தே சொன்னாய் நுரை ஈரல் புற்று நோயால்
செத்து போன உன் சித்தப்பாவின் கதையை !!!
உள்ளுக்குள் உதறி புகைப்பதை நிறுத்திய பின் தான் தெரிந்தது
எனக்காகவே ஓர் சித்தப்பாவை உருவாக்கி கொன்றதை......

காதல் எனும் கரும் குழியில்
நம்மை தள்ளி " கிசு கிசு" க்கள் வர
சுவாசமாய் வாழ்ந்த நட்புக்காய்
மனதுக்குள் கதறி நாம்
பேசி கொள்ளவே இல்லை பின் என்றுமே....

கல்லூரியின் கடைசி நாளிலும்
நம்மில் மெலிதாய் வெடித்த கண்ணீர் துளிகள்
பிரியா விடை தந்தது இருவருக்கும்
கனமான மவுனங்களுடன்......

உனக்கு திருமணம் ஆனதும் - பின்
இரண்டு ஆண் மக்கள் பெற்றாய் என்று
காது வழி வந்த செய்திகளாலே
சந்தோசமாய் வாழ்கிறேன்
நீ சந்தோசமாய் வாழ்கிறாய் என்று !!!

அன்று பாடங்களை சுருக்கி நீ
எனக்கு கொடுத்த குறிப்புகளில்
இன்று குறிப்பு எடுத்து கொள்கிறான்
என் மகன் - பாவம்
கிடைத்திருக்க வாய்ப்பு இல்லை அவனுக்கு
உன் போல் ஓர் தோழி....

தோழியே !!!
கண்ணியம் தவறாத வரை
நட்பும் கற்பும் ஒன்று தான்!!
காலங்களால் களவாடப்பட்ட
நொடிப்பொழுதுகள் வாழ
மீண்டும் மீண்டும் பிறப்போம்
நம் நட்புக்காய்...............

No comments:

Post a Comment