
'அன்பே ஆருயிரே'
எனத்துவங்கும் நகைப்புக்குரிய
காதல் கடிதங்கள் யாவும்
பக்கத்து வீட்டு அக்காவை
ஞாபகப்படுத்தி விடுகிறது......
அவள் ஓடிப்போன ஒரு
அர்த்தமில்லாத பண்டிகை நாளை
இன்றும் சபித்துக் கொண்டிருக்கிறேன்.......
இரகசியமாய் எனக்கு அவள்
எழுதிய ஐந்தாவது கடிதத்திலேயே
அடையாளப்படுத்த முடிந்தது
ஒரு தோல்வியின் சரிதையை.......
'காதலும் வாழ்க்கையும்' என
புத்தகம் எழுதியிருந்தால்
பெரும் பணக்காரியாகியிருப்பாய் என்ற
என் மனதின் மறுமொழியை
அனுப்பியிருந்தால் நிச்சயம்
மறுதலித்திருக்க மாட்டாள்......
பின் இடைவெளி விட்டு
தொடர்ந்த கடிதங்களில்
அவளின் நடுக்கமுற்ற
வரிகளின் உள்ளிருந்த
நிஜத்தை உணரும் முன்
உலர துவங்கியிருந்தது
அவளின் நாட்பொழுதுகள்......
பிரேத வண்டியில் இருந்து
போலீஸார் புடை சூழ
உயிரற்ற அவளுடல் இறங்க
காதல் புனிதமானதென்று
ஏதோவொரு பைத்தியக்காரன்
சொன்னது ஞாபகம் வந்தது......