Showing posts with label நகைச்சுவை. Show all posts
Showing posts with label நகைச்சுவை. Show all posts

Wednesday, September 30, 2009

டமிலக அரசு விருதுகள்- எதற்காக ???


டமிலக அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட, விருது பெற்றவர்களோ தனக்கு எதற்காக விருது வழங்கப்பட்டது என முழித்து கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் செய்த "சாதனை" அவரவர் வீட்டிலே தொலைபேசி வழியாய் ஒலிக்கிறது. சிலரது வீட்டில் நாமும் ஒட்டு கேட்டதில்...

கஜினி காந்த்: அன்பு கஜினியே, இளைஞர்களின் இதய துடிப்பே.....அரசியலுக்கு இப்போது வருவேன், அப்போது வருவேன் என அலம்பு காட்டி அலுவா கொடுத்தவனே, தேர்தலில் எனக்காய் "வாய்ஸ்" தந்தவனே, சின்ன பையன் 'சாகுல் காந்தி' அரசியலுக்கு அழைத்த போது கூட என் கண் அசைவுக்கு காத்திருந்தவனே... இதோ பிடி உனக்கான விருதை..

ஜமல ஹாசன்: தம்பியே என் தங்க கம்பியே... ஒவ்வரு மேடையிலும் என் புகழ் படுபவனே... எனக்கு கேமராவில் மட்டும் நடிக்க வராது என புரிந்து 'துசவதரத்தில்' என்னை போன்ற ஒரு டூப்பை நடிக்க வைத்தவனே, 'தன்னை போல் ஒருவனில்' என் குரலையும், என் வீட்டையும் பதினெட்டு திக்கும் பரப்பியவனே... இதோ பிடி உனக்கான விருதை

கிரிஷா: அழகிய கிரிஷவே உன் அழகை கண்டேனம்மா "லூசா லூசா "- வில் இருந்தே. 'சுருவி'-யில் நீ ஆடிய ஆட்டதுக்க்காகவே பாதி கோடம்பாக்கத்தை உனக்கு எழுதி வைக்க எண்ணி இருந்தேன். இடையில் ஈழ தமிழர் சோகம் என்னை கவ்வியத்தால் ஒத்தி வைத்தேன். 'வலைமாமணி' கிரிஷவே இதோ உனக்கான விருது.

சுடிவேலு

மதுரை காந்துடன் ஒன் டூ ஒன் ஆடியவனே. ஐயா ஐயா என விளித்து, ஆயிரம் தடவை காலில் விழுந்த உன் அலப்பறை தாங்காமல் தருகிறேன் உனக்கும் ஒரு விருது.

பைரமுத்து: இனிய பைரமுத்துவே ...மாதத்திற்கு ஒருமுறையாவது மேடையில் 'ஐஸ்' மழையை பொழிந்து என்னை ஜலதோஷம் கொள்ள செய்பவனே... அடுத்து நீ எழுத போகும் கோபாலபுரத்து காவியத்திற்காகவே இப்போதே தருகிறேன் ஓர் விருது.

சிறந்த வரைநடை ஆசிரியர்: ................................................(வெக்கம், மானம், சூடு, சொரணை உள்ள தமிழனாக எம்மை கருதுவதால் இதோடு நிறுத்தி கொள்கிறோம்.)

பின் குறிப்பு: இந்த பதிவு யாரையும் புண் படுத்த அல்ல. எங்கையாவது புண் ஆகி இருந்தால் சொந்த செலவில் மருந்து வாங்கி போட்டு கொள்ளவும்.

Friday, May 29, 2009

இரண்டு டீயும், ஒரு பாலும்.....

நேற்று மாலை தேனீர் சாப்பிடுவதற்காக அலுவலகத்துக்கு கீழ் உள்ள கேண்டீனுக்கு என் நண்பருடன் வந்திருந்தேன்....செல்ப் சர்வீஸ் ஆனதால் டோக்கன் எடுத்து விட்டு, டீ வினியோகம் செய்யும் வரிசையில் நின்று கொண்டிருந்தோம்...

சற்றே உடல் பருத்த 25 வயது இளைஞி ஒருத்தி, வேகமாக பலகாரங்கள் வினியோகம் செய்யும் இடத்துக்கு வந்தாள். வந்த வேகத்தில் பலகாரம் வினியோகம் செய்யும் சிப்பந்தியை பார்த்து கத்த துவங்கினாள்..

"என்ன சார் சமோசா போடுறீங்க இங்க பாருங்க சமோசால பூச்சி இருக்கு". சிப்பந்தியோடு சேர்ந்து நாங்களும் எட்டி பார்த்தோம். தட்டில் இரண்டு கறிவேப்பிலையும் ஒரு சிறு 8 கால் பூச்சியும் கிடந்தது... "இந்த பூச்சிக்கு பதில் வேற ஏதும் கிடந்தா என்ன பண்ணுவீங்க" என அந்த பெண் கேட்டது சற்று எதார்த்தமாகவும், சற்று பரிதாபமாகவும் இருந்தது.

சிப்பந்தி அந்த பெண்மணியை சமாதானம் செய்வதில் முழு மூச்சாய் இருந்தார் " ஸாரி மேடம் இனி இந்த மாதிரி தப்பு எல்லாம் நடக்காது மேடம் " என்றதுக்கும் அந்த பெண் சமாதானம் ஆகவில்லை. "ப்ளீஸ் மேடம் இந்த சமோசாவுக்கு பதில் வேணுமின்னா இன்னும் 2 சமோசா தரேன் மேடம்" என்றதுக்கும் "அது எல்லாம் வேண்டாம், இனியாவது சமைக்கும் போது ஒழுங்கா சமையுங்க என்று சொல்லி அந்த பெண் திரும்பி நடந்தது சற்று கம்பீரமாகவே இருந்தது.....

ஐந்து அடி தூரம் அந்த பெண் நடந்திருப்பாள் சடாரென திரும்பி சிப்பந்தி அருகில் வந்து "சரி சரி இந்த சமோசாவிற்கு பதில், இரண்டு டீயும் ஒரு பாலும் கொடுங்க" என்று சொன்னதும் அந்த சிப்பந்தி உட்பட எங்கள் முகங்களில் புன்னகை வழிந்து ஓடியதை எங்களால் தவிர்க்க இயலவில்லை.... அந்த பெண் சமோசா சாப்பிட்டு வைத்து போன தட்டில் இருந்த இரண்டு கருவேப்பிலையும் காற்றில் அசைந்து ஆடி தங்களுக்குள் சிரித்து கொண்டிருந்தது போல் இருந்தது எனக்கு....