Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Saturday, October 28, 2017

டகிலா கவிதைகள் 1

நண்பன் கண்ணாடி அணிய துவங்கும் போது..
நண்பனின் தாய் மரணிக்கும் போது..
நண்பனின் மகள் பூப்பெய்தும் போது...
நண்பனின் மனைவி படிதாண்டும் போது...
ஒரு பிரம்மச்சாரி வயதாவதை உணர்கிறான்.

https://www.facebook.com/stalin.felix.5/posts/10156045751237780

Monday, May 3, 2010

சொன்ன கதை


"ஒரு ஊர்ல ஒரு

காக்கா இருந்திச்சாம்" - என
பாட்டி அம்மாவுக்கு
சொன்னக் கதையை
சொல்லத் துவங்கினேன்
என் மகனிடம்...
இடைமறித்து கேட்டான்
"டாடி காக்கான்னா...
என்ன டாடி.?"

http://youthful.vikatan.com/youth/Nyouth/stalinpoem190410.asp


Sunday, April 18, 2010

விருப்பமில்லா தற்கொலைக்கான ஒத்திகை...


அதிகாலை நாளிதழ்களை
பார்க்கும் போது
உணர்ச்சிவசப்பட கூடாது
என்பதே என்
நெடுநாளைய பிரார்த்தனையாக
உள்ளது...

ஒவ்வெரு நாள்
காலையிலும் என்
பிரார்த்தனை அரசனால்
மீறப்படுகிறது ...

எமக்கான உரிமை
எல்லா திசைகளிலும்
மறுக்கப்படுகிறது...

எமக்கான கருணை
எல்லா வடிவங்களிலும்
நிராகரிக்கப்படுகிறது...

குடியாட்சியின் பதுமைகள்
எமது இருப்பை
கேலி செய்கிறது...

பின் பொழுதுகளில்
பேயாட்சியால்
நாங்கள் உயிரோடு
உண்ணப்படுகிறோம்...

மீண்டு வருமினும்
விருப்பமில்லா தற்கொலைக்கான
ஒத்திகையிலேயே
அந்நாள் முடிவடைகிறது.......



Thursday, January 14, 2010

ஒரு கோப்பைத் தேனீரும் சில நட்பும்..... - உரையாடல் போட்டிக்கவிதை

கற்பாறையின் மேல்
அடிக்கப்படும் துணி
போல் அலசி எடுக்கப்படுகிறது
எனது உணர்வுகள்
அவரவர் விருப்பப்படி

மூங்கிலைப் போல்
பலம் கொண்ட
என் சொற்கள்
முழுமை பெரும் முன்னே
வெட்டி வீழ்த்தப்படுகிறது

யார் என்னோடு
பேச வேண்டும் என்பதை
அரசின் காகிதங்களே
தீர்மானிக்கின்றன..

அதிகார நாற்காலிகளை
தற்காத்துக் கொள்ள
எனது இருப்புத் தொடர்ந்து
நிர்மூலமாக்கப்படுகிறது

இருப்பினும்
வாழ்க்கையைக் கொண்டாட
எப்போதும் மிச்சமிருக்கிறது
ஒரு கோப்பைத் தேனீரும்
சில நட்பும்.....

( உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு நடத்தும்
உரையாடல் கவிதைப் போட்டிக்காக' எழுதியது. )

Friday, October 9, 2009

அழகிய முரண்


இருபத்தி ஐந்து பைசா
தொலைத்ததற்காக
விளக்குமாறால் என்னை
துவைத்த அம்மா
இரண்டாயிரம் மதிப்புள்ள
பூஜாடியை உடைத்தும்
கொஞ்சி கொண்டிருக்கிறாள்
என் மகனை.......

Monday, September 28, 2009

புரிதல்


வருடங்களுக்கு பிறகு
நகரத்தின் ஓர் முனையில்
எதோச்சையாய் சந்தித்த
கல்லூரி தோழியின்
முதல் கேள்வி
"குடிச்சிருக்கியா ?"

Wednesday, August 19, 2009

உலர துவங்கிய நாட்கள்


'அன்பே ஆருயிரே'
எனத்துவங்கும் நகைப்புக்குரிய
காதல் கடிதங்கள் யாவும்
பக்கத்து வீட்டு அக்காவை
ஞாபகப்படுத்தி விடுகிறது......

அவள் ஓடிப்போன ஒரு
அர்த்தமில்லாத பண்டிகை நாளை
இன்றும் சபித்துக் கொண்டிருக்கிறேன்.......

இரகசியமாய் எனக்கு அவள்
எழுதிய ஐந்தாவது கடிதத்திலேயே
அடையாளப்படுத்த முடிந்தது
ஒரு தோல்வியின் சரிதையை.......

'காதலும் வாழ்க்கையும்' என
புத்தகம் எழுதியிருந்தால்
பெரும் பணக்காரியாகியிருப்பாய் என்ற
என் மனதின் மறுமொழியை
அனுப்பியிருந்தால் நிச்சயம்
மறுதலித்திருக்க மாட்டாள்......

பின் இடைவெளி விட்டு
தொடர்ந்த கடிதங்களில்
அவளின் நடுக்கமுற்ற
வரிகளின் உள்ளிருந்த
நிஜத்தை உணரும் முன்
உலர துவங்கியிருந்தது
அவளின் நாட்பொழுதுகள்......

பிரேத வண்டியில் இருந்து
போலீஸார் புடை சூழ
உயிரற்ற அவளுடல் இறங்க
காதல் புனிதமானதென்று
ஏதோவொரு பைத்தியக்காரன்
சொன்னது ஞாபகம் வந்தது......

Sunday, August 9, 2009

ஒரு நட்பின் தேடல்......



http://youthful.vikatan.com/youth/stalinpoem10082009.asp

என்னால் அனுப்பப்படும்
எல்லா குறுஞ்செய்திகளும்
இடம் அறியாமல்
மரணித்து விடுவதை
உன் அலைப்பேசியின்
மவுனம் உணர்த்துகிறது.............

உன் பிரத்யேக தொலைபேசியின்
விடையில்லா மணியோசைக்கு
பின்வரும் பதிவு செய்யப்பட்ட
பெண்ணின் குரலும்
பரவசத்தை தவிர்த்து
பயத்தையே தருகிறது............

அடுக்கப்பட்ட நாட்குறிப்பேடுகளில்
தேடி எடுத்து அனுப்பிய
உனக்கான மின்னஞ்சலும்
பாதி வழியிலேயே
குற்றுயிராகி திரும்பி விடுகிறது.........

நம் இருவருக்குமான பிரழாத
நினைவுகள் முட்டி சாய்க்க
விழி மீதிருந்து
பிரிந்தோடிய கண்ணீர்
மார்‌பெங்கும் படர்ந்தேகி
அணை கட்டி நிற்கிறது
மொழியற்ற வலியின் கவிதையாய்......

Monday, August 3, 2009

தேவதையே வா.....

மின் மினி பூச்சிகள்
தீண்டிச் செல்லும்
தனிமையின் மை
படர்ந்த இரவில்
முழு நிலவொளியால்
வெடித்த வானை நோக்கி
விழி மூடாது
காத்திருக்கிறேன்....
கதைகள் சொல்லும்
எனக்கான தேவதையின்
வருகைக்காய்.......
.

Monday, July 13, 2009

மரணத்தின் நெடி சூழ்ந்த கலந்துரையாடல்...


காலம் கணித்த ஒரு
பொன் நாளில்
புற நகரின் கடற்கரை
ஓரம் குழுமி
கலந்துரையாட
தீர்மானித்தோம்
கல்லூரி கால நண்பர்கள்
அனைவரும்......

அச்சுப தினத்தின்
முற்பகலிலேயே தொற்றி கொண்டது
பரபரப்பு ஒவ்வொரு
அலைப்பேசி அழைப்புகளால்.......

முன் வரிசையில்
அமர்ந்திருக்கும் தோழி
முதலில் அழைத்து
சொன்னாள்
'அலுவலக பணி
ஆயிரம் இருப்பதாய்'
அடுத்து அழைத்த
அருமை தோழன் சொன்னான்
'தலை வலி' என்று......

பின் வரப்போகும் எல்லா
பிணிகளுக்கும், பணிகளுக்கும்
பயந்து அலைபேசியை
அணைத்து வைத்தேன்
சில மணி நேரம்......

சரி வருபவர் வரட்டும்
என்று எண்ணி
பேருந்தின் படி தொங்கி
கடற்கரையோர பேருந்து நிலையத்தில்
இறங்கிய போது
என்னோடு சேர்த்து
ஆண் பாலினம் நான்கு பேர்......

பரஸ்பர நலம் விசாரிப்புகளுக்கு பின்னால்
ஒருமித்த குரலாய் ஒதுங்கினோம்
மரணத்தின் நெடி சூழ்ந்த
அச் சாராய கூடத்தில்......

கலந்துரையாடல்
கல்லூரி கால
கிசு கிசுக்களாய் மாறி
முட்டி திரும்பின
வியர்வையும், வாந்தியும்
வழிந்தோடிய
அவ்வறை முழுதும்....

வாயும் வயிறும் கூசி
தள்ளாடி எழுந்த போது
வாய் பிளந்து கிடந்தன
கடைசியாய் உடைக்கப்பட்ட
பீர் பாட்டிலும் அதன் மூடியும்
எங்களை பார்த்து....

Thursday, June 25, 2009

முரண்



ஏசுவை
நம்பும் அளவிற்கு
அவரை பற்றி
பதினாறு ஆண்டுகள்
கற்பித்த பாதிரியாரை
பாதி அளவும்
நம்புவதில்லை மனம்.....

Thursday, June 18, 2009

ஏழு கழுத வயசு.....



இரண்டொரு நாளுக்கு
ஒரு முறை
முக சவரம்
செய்த போதோ....
அரசல் புரசலாய்
எல்லோரும் எனக்காய்
பெண் பார்க்கும்
படலத்தில் இறங்கிய போதோ
உணராததை.....
எதிர் வீட்டில்
புதிதாய் குடிவந்த
பள்ளி மாணவி
"அங்கிள்" என அழைத்து
உணர்த்தி போனாள்...............

Saturday, June 13, 2009

வளையத்தில் சிக்கும் பருவங்கள்...........


பெரும் மழைக்கு
பின் வந்த ஒரு
கல்லூரி விடுமுறை நாளில்
என் அபிமான நாயகனை போல்
மாட்டி கொண்டேன்
சிறு வளையம் ஒன்றை
இடது காதோரமாய்...

நான்காம் பருவத்தின்
முதல் நாளில்
அதை பார்த்த
கல்லூரி தோழன் ஒருவன்
'கலாசார சீரழிவு' என்றும்
'கலிகாலம்' என்றும்
தன் போதை தீரும் அளவு
திட்டி தீர்த்தான்....

நேற்றைக்கு முந்தினம்
என் ரயில் பயணத்தில்
சற்றே வெள்ளை ஆப்பிள்
நிறத்தில் இருந்த
பெண் ஒருத்தியின் தொப்பிளின்
வல பக்கமாகவும்
இட பக்கமாகவும்
தொங்க விடப்பட்டிருந்த
வளையத்தை பார்த்து
அநியாயத்துக்கு ஞாபகத்தில்
வந்து போனான்
என் அருமை சிநேகிதன்....

Friday, June 5, 2009

அழகு...



அலுவலக படிக்கட்டுகளில்
மேல் நாட்டு வாசனை திரவியத்தின்
மணம் கமிழ
எனை கடந்து போன
யுவனியை விட
அழகாகவே இருக்கிறாள்
அதே அலுவலக
சமையல் அறையில்
வியர்வை வழிய
பாத்திரம் கழுவி கொண்டிருந்த
என் வயதை ஒத்த
அக்கா ஒருத்தி........

Thursday, May 28, 2009

யாரிடம் சொல்ல........

பகிர்தல் அற்ற 
வெறுமையின் இரவில்
தனிமையாய்
அழுது கொள்கிறேன்...

யாரிடம் சொல்வேன்
நீ என்னை
களவாடி போன பொழுதை.....

Tuesday, May 26, 2009

எப்போது தொலைத்தோம் ???

நீ இல்லாத
பரிச்சயம் அற்ற பொழுதுகள்
போக மறுக்கிறது என்னை விட்டு...

பத்திர படுத்தாமலே
தீர்ந்து போய் கொண்டு இருக்கின்றன
உனக்கான வார்த்தைகள்

செல்லும் வழி யாவும்
பிரிந்தே விடுகிறது
ஏதோ ஒரு கணத்தில்...

வாட்டும் கொடும் குளிரிலும்
வெப்ப பிசுபுசுப்பையே
தருகிறது ஒவ்வரு
தனிமையின் இரவும்....

நமக்கான ஆசைகள் அனைத்தையும்
குத்தகைக்கு எடுத்து,
நிராசையாக்கி தவணை முறையில்
துப்புகிறது கடக்கும்
அத்தனை மணி துளியும்...

ஞாபகம் இருக்கிறதா
எப்போது தொலைத்தோம்
உனக்கான என்னையும்
எனக்கான உன்னையும்..........

Tuesday, April 28, 2009

பிரிவின் கணங்கள்.....

காற்றில் அறுந்த மேக
துண்டுகளை போல்
உனக்கும் எனக்குமான
உறவை உடைத்து 
செல்கிறது காலம்.....

கோடை வெயிலில் தெறித்து
கிடக்கும் நெல் மணியை
கடத்தி செல்லும் ஊர் குருவியாய்
நம் நினைவை
கொத்தி செல்கிறது மனது..

பசி கொண்ட யானையாய்
கொன்று தின்கிறது
மௌனம்
நமக்கான மணி துளிகளை.....

இல்லாமல் இருக்கும்
கடவுளை போல்
நாம் வாழ்ந்த பக்கங்களை
மற்றும் ஓர் முறை
வாசித்து காட்டுகிறது காதல்.....

ஒற்றை கொம்பில் தொங்கி
நிற்கும் தேன் கூடாய்
பெருகும் கண்ணீரோடு
பரிதவித்து நிற்கிறேன் நான்.....

Wednesday, March 25, 2009

அகதி கூடு

வரலாற்றின் இன்றைய
கனவு பக்கங்களின் கூட்டில்
மட்டுமே அகதியாய் நீ....

வீண் கண்ணீர் துளிர்க்க விடாதே
ஒவ்வொன்றிற்குமாய் உண்டு
விலை ஓராயிரம்...

சோம்பல் முறித்து
அச்சம் உடைத்து
ஆணவம் தகர்த்து
தந்திரம் எரித்து
தோல்வியை தாவி
பணபலம் புண் ஆக்கு

அக்கூடு உடைபடும் நாளில்
இன்றைய போட்டியாளன்
உன் விழா மேடையின்
கடைசி பார்வையாளனாவன்......

Sunday, March 15, 2009

கவிதை எழுத துவங்கிய நாளில்.....

உடைந்து கிடக்கிறது வானம்
உன் வீட்டு ஒற்றை
முற்றத்தை பார்த்து

கதவடைத்து காத்து
கிடக்கிறது காற்று
பரவி கிடக்கும் உன் வாசம்
பரந்து விடாமல் இருக்க

மற்றோர் மிதித்திட கூடாது
என்று எண்ணி
மிரண்டு கிடக்கிறது - உன்
பாதம் பட்ட இரு நிலம்

தனக்குள்ளே கண்ணீர் சொரிந்து
தன்னை இரட்டிப்பாக்கி
வழிந்து நிற்கிறது
உனக்கான கடைசி தண்ணீர்

தன்னுள் வந்து அடைய
போகிறாய் என்று அறிந்து
தன்னை அணைக்க போராடி
தோற்று நிற்கிறது நெருப்பு

அசைவுகளற்ற உன்னை
காரணம் ஏதும் சொல்லாமல்
பின் தொடர்கிறது
என் முதல் கவிதை..........

Monday, March 2, 2009

அந்நாட்கள்...........

தேவதைகளால் சபிக்கப்பட்ட
காலத்தை எப்போதுமே
துல்லியமாய் பதிவு
செய்ய முடிவதில்லை
அந்நாட்களில்..........

கொல்லைப்புறம் ஓடும் மனக் குரங்கால்
வேட்கையான அந்த பகல்களும்
தூக்கமற்ற அந்த இரவுகளும்
எப்போதுமே நீண்ட மலைப்பாம்பை
போல் நீண்டு செல்கிறது
அந்நாட்களில்..........

மின்னல் போல்
கண் சிமிட்டி செல்லும்
புன்னகையை விட
தலையணை உறைகளில்
பதிந்து கிடக்கும்
கண்ணீரின் கறைகள் சொல்லும்
கதைகள் ஏராளம்
அந்நாட்களில்..........

கடிவாளம் இல்லா
குருட்டு குதிரையின்
நீள் பாய்ச்சலைப் போல்
இலக்குகள் அற்று
நடை போடுகிறது பாதங்கள்
அந்நாட்களில்..........

வாழ்க்கையில் விடியல் வெள்ளி
முளைக்கும் என
யோசிக்கும் போதே பிடிவாத
குழந்தையை போல்
அழுது விடுகிறது
அரை சாண் வயிறு
அந்நாட்களில்.........