Showing posts with label இணையதளங்கள். Show all posts
Showing posts with label இணையதளங்கள். Show all posts

Wednesday, December 22, 2010

அம்பேத்கரை கண்டேன்




சென்னை மினி உதயம் திரைரங்கில் அம்பேத்கர் திரைப்படம் 11 மணி காட்சிக்காக நுழைவு சீட்டு வாங்கி கொண்டு 11:02 - க்கு உள்ளே நுழைந்தால் பேரதிர்ச்சி. என்னை தவிர வேறு யாருமே இல்லை. வெளியே வந்து நுழைவு காவலரிடம் கேட்ட போது "எல்லாரும் 11:30 மணி ஷோ-ன்னு நினச்சிட்டு வருவாங்க சார். எப்படியும் முன்னூறு பேர் வருவாங்க" என்றார். லேசாக பெருமூச்சு விட்டு விட்டு, உள்ளே நுழைந்து எனது இருக்கையில் அமர்ந்தேன். பத்து நிமிடத்துக்குள் சுமார் இருநூறு பேர் வந்து அமர, மனம் ஆறுதல் அடைந்தது.

இந்திய சுதந்திரத்தை முன்வைத்து லஜபதி ராயோடு அம்பேத்கர் கொண்டமுரண் அரசியலோடு கதை துவங்குகிறது. காட்சிகள் விரிய, விரிய அம்பேத்கர் என்ற பிரமாண்டம் எனது உடல் முழுவதும் வியாபிக்க துவங்கினார். வறுமையினாலும், தீராத வியாதியினாலும் தனது மனைவி,நான்கு குழந்தைகள் என எல்லாவற்றையும் பறி கொடுத்தும், வாழ்க்கையின் கடைசி காலகட்டம் வரை புறக்கணிக்கப்பட்ட மக்களுக்காக போராடிய இந்த மனிதனின் வாழ்க்கை கதையை திரையில் கண்ட போது, ஒரு மகானின் வாழ்க்கையை கண்டதாவே உணர்ந்தேன். 1956-ம் வருடம் அம்பேத்கர் இறந்தார் என்ற வரிகளோடு திரைப்படம் முடியும் போது மனம் கொஞ்சம் உணர்ச்சிவசப்படவே செய்தது.

திரையில் அம்பேத்கராக வாழ்ந்து காட்டிய மம்மூட்டியை எத்தனை பாராட்டினாலும் தகும். இந்தியாவின் மிக முக்கியமான தலைவர் வேடத்தில் ஒருவர் நடித்து, அனைத்து தரப்பு மக்களையும் கவர்வது லேசான காரியம் அல்ல, மம்மூக்கா அருமையாய் வாழ்ந்து காட்டி இருக்கிறார். அம்பேத்கர் பேரை கேட்டாலே ஓட்டம் பிடிக்கும் நமது நடிகர்கள் மத்தியில், ஒரு சவாலான கதாப்பத்திரத்தை ஏற்று, அதை கனக் கச்சிதமாய் செய்து முடித்திருக்கும் மம்மூக்காவின் மேல் மரியாதை இன்னும் கூடுகிறது.

திரையில் என்னை கவர்ந்த இன்னொரு மனிதர் காந்தியாக நடித்தவர். அதுவும் அவருடைய உடல்மொழி இருக்கிறதே அப்பப்பா.... அட்டகாசம்... காந்தி பேசும் பல காட்சிகளிலும், 'அம்பேத்கர் ஒழிக' என முழக்கம் கேட்கும் பல காட்சிகளிலும் திரைரங்கு முழுவதும் சன்னமான சிரிப்பொலி எழும்புகிறது.

படம் பார்த்து வெளியே வந்த போது ஏதாவது நண்பர்களை சந்தித்து விட மாட்டேனா, அவர்களிடம் ஒரு இருபது நிமிடம் அம்பேத்கர் பற்றியும், இந்த திரைப்படம் பற்றியும் பேச வேண்டும் போல் இருந்தது.

'சினிமா' பற்றி ஒவ்வருவருக்கும் மாறுபட்ட கருத்து இருக்கும். என்னை பொறுத்தவரையில் 'சினிமா' பொழுதுபோக்குக்கான ஊடகம் மட்டும் அல்ல.அது ஒரு நவீன கலையின் வடிவம். அந்த நவீன கலை ஊடகத்தின் வழியாக இது போன்ற நல்ல திரைப்படங்கள் வருவதே சமூகத்தை செம்மைபடுத்த உதவும்.

'அம்பேத்கர்' திரைப்படம் இன்னும் விளம்பரப்படுத்தப்பட்டிருந்தால் இந்த வரலாற்று நாயகனுடைய குரல் இன்னும் பல மக்களுக்கு போய் சேர்ந்திருக்குமே என்ற ஆதங்கம் எழாமல் இல்லை. அரிவாளுடனும், பரட்டை தலையுடனும் திரியும் கதாநாயகர்களையும், அதன் இயக்குனர்களையும் கட்டி பிடித்து பாராட்டி மகிழும் நமது சூப்பர் ஆக்டர்களுக்கோ, ஸ்டார்களுக்கோ அது பற்றிய அக்கறையே இல்லை. ஒருவேளை அப்படி செய்தால் தானும் தீண்டத்தகாதவன் ஆகி விடுவோம் என்ற பயம் காரணமாய் இருக்கும் !.

அம்பேத்கரை தலித்துகளின் குறியீடாக இன்று காண்பது துரதிஷ்டவசமானது, அது ஒரு சமூக மன நோயும் கூட... உண்மையில் அம்பேத்கர் நவீன இந்தியாவில் புறக்கணிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கான குறியீடு.
வரலாற்றை நமக்கு சொல்லி தர மறந்த முந்தைய தலைமுறையும், வரலாற்றை கற்று கொள்ள போகும் நாளைய தலைமுறையையும் அம்பேத்கர் திரைப்படம் வெளியிடப்பட்டுள்ள திரைரங்குக்கு கூட்டி செல்லுங்கள். உண்மையான ஒரு சமூக போராளியின் வரலாறு அனைவருக்கும் சென்றடைய உதவுங்கள்.

அம்பேத்கர் திரைப்படம் குறித்து சக பதிவர்களின் பதிவுகள்


நன்றி : கீற்று

Friday, November 19, 2010

முத்துக்குமார்: நெருப்பாய் வாழ்ந்தவன் ---- புத்தக விமர்சனம்


ஜனவரி 29 - 2009 - "இலங்கையில் போர் நிறுத்தம் கோரி சென்னை வாலிபர் தீக்குளித்து மரணம்" என்ற செய்தியை தாங்கிய ஒரு தமிழ் மாலை நாளிதழை தேனீர் கடைகளின் முன் முகப்பில் பார்த்த போது 'என்ன முட்டாள்தனம் இது இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட இங்கே இறந்தால் போர் நின்று விடுமா?' என்ற பொதுபுத்தியால் உருவான கருத்தே எம்மிடம் மேலோங்கி இருந்தது.

அடுத்த நாள் "விதியே விதியே என்செய நினைத்திட்டாய் என் தமிழ் சாதியை.........." என துவங்கும் முத்துக்குமரனின் மரண சாசனத்தை படித்த போது முட்டாள்கள் நாங்கள் தான் என்பதை உணர வெகுநேரம் ஆகவில்லை.தன் உடலை புதைக்காமல் உயிராயுதம் ஏந்துங்கள் என்று சொல்லி மரித்து போன முத்துக்குமரனை பற்றி பின் வந்த செய்திகள் எல்லாமே எம்மை வெட்கப்பட வைக்கும் ஆச்சரியங்கள். தமிழ் மொழியை, தமிழ் இனத்தை நேசிக்கும் ஒவ்வொரு தமிழனின் உணர்விலும் அதன்பின் கலந்து சகோதரன் ஆகிப்போனான் எங்கள் முத்துக்குமரன்.

வறுமையை வாழ்க்கையாக உடுத்தி தூங்கி கிடந்த தமிழ் சமூகத்தை தன் மரணத்தின் மூலம் தட்டி எழுப்பிய சகோதரன் முத்துக்குமரனின் வாழ்க்கையை பால்யம் முதல் படம் பிடிக்கும் புத்தம் தான் "முத்துக்குமார்: நெருப்பாய் வாழ்ந்தவன்".

முத்துக்குமரனுக்கு தமிழ் உணர்வு ஊட்டிய புலவர் தமிழ்மாறனுக்கு படையல் இட்டு துவங்குகிறது இந்த புத்தகம்.

திருச்செந்தூரில் குமரேசன்- சண்முகத்தாய் ஆகியோருக்கு மூத்த மகனாக பிறந்த முத்துக்குமார், சென்னை கொளத்தூரில் நடைபயின்று, தேனியில் தன் ஆரம்ப கல்வியை துவங்கி, தன் உயர்நிலை கல்வியை சொந்த ஊரிலேயே படித்தார். பள்ளி பருவத்திலேயே தமிழ் மீது அதிக ஆர்வம் கொண்டிருந்த முத்துகுமரன், கலந்து கொள்ளும் பேச்சுப்போட்டிகளில் தனது பள்ளிக்கு பெருமை சேர்க்க தவறவில்லை. முத்துக்குமரனை பேசுவதற்காக அழைத்து சென்றாலே பள்ளிக்கு ஒரு பரிசு நிச்சயம் என்ற நிலையை உருவாக்கி இருந்தார்.

புத்தர் முதல் காந்தி வரை ஒரு சிறு நிகழ்வு தான் அவர்களின் அடுத்தகட்ட வாழ்க்கையை தீர்மானித்து இருகின்றது. முத்துகுமரனின் வாழ்க்கையிலும் அவ்வாறு நடந்த ஒரு நிகழ்வே அவரை பின்னாளில் ஒரு தியாகி ஆக்கி இருக்கிறது என குறிப்பிடுகிறார் நூலாசிரியர். அது.... ஒரு கிறிஸ்துமஸ் தினம். முத்துகுமரனின் வறுமை வாழ்கையை அறிந்திருந்த அவருடைய வகுப்பாசிரியை சசிலதா, அந்த பண்டிகை நாளில் மதிய விருந்துக்காக அழைத்திருந்தார். அப்போது முத்துகுமரன் இயேசுவை பற்றி கேட்க, ஆசிரியையும் சொல்லி விட்டு " மக்களின் நன்மைக்காக மகத்தான காரியங்களைச் செய்ய வேண்டும், அதற்கு நீ அனைவரையும் நேசிக்க வேண்டும், அன்பும் கருணையும் கடைசிவரை பற்றி இருக்க வேண்டும், நீ எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்க வேண்டும்" என்று அவர் சொன்ன வார்த்தைகள் அவருள் ஆழப்பதிந்தன.

முத்துக்குமரன் எட்டாம் வகுப்பு படித்து கொண்டிருந்த போது பள்ளியில் நடந்த இலக்கிய கூட்டத்திற்கு வந்த புலவர் தமிழ் மாறனின் பேச்சால் கவரப்பெற்று அவரோடு தொடர்பை ஏற்படுத்திக்கொண்டது அவரது வாழ்கையில் அடுத்த அத்தியாயம் பிறக்க காரணம் ஆனது என குறிப்பிடுகிறார் நூலாசிரியர்.

பத்தாம் வகுப்பில் 466 மதிப்பெண் எடுத்து பள்ளியில் இரண்டாவதாக மாணவனாக வந்தாலும், வறுமையின் கொடிய பிடியில் சிக்கி தவித்ததால் அவரால் படிப்பை தொடர முடியாமலே போயிற்று . படிக்கும் போதே தமிழ் தேசிய இயக்கங்களோடு தொடர்பை ஏற்படுத்திக்கொண்ட முத்துக்குமரன்"ஸ்டெர்லைட் எதிர்ப்பியக்கம்" ஆரம்பிக்கப்பட்ட போது அதில் கலந்து கொண்டு சுவரொட்டி ஒட்டி இருக்கிறார். பதின்ம வயதை கடந்த போது, புரட்சிகர இயக்கங்களோடு தன்னை இணைத்து கொண்டு களப்பணி ஆற்றினார்.



இளமையில் வறுமை கொடிது என்பார்கள் ஆனால் முத்துக்குமரனின் பிறப்பு முதல் இறப்பு வரை வறுமை எப்படி அவரை தொடர்ந்து துரத்தி வந்திருக்கிறது என்பதையும் துல்லியமாக பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர் . ஒரு சீட்டு கம்பனியில் வேலைக்கு சேர்ந்து பின் தாயின் காசநோய் காரணமாக சென்னை வந்தும், தாயை மீட்க முடியாமல் போய் இருக்கிறது. மளிகை கடையில் உதவியாளனாக, குயின்ஸ்லாந்து கேளிக்கை பூங்காவில் பாதுகாவ
ராக என பல இடங்களில் வேலை பார்த்து தங்கை திருமணத்தை சிறப்பாக நடத்தி முடித்த சில காலத்திலேயே விபத்து ஒன்றில் தனது சகோதரர் வசந்தகுமாரை பறி கொடுத்து இருக்கிறார்.

வறுமை இன்னொரு உடன்பிறத்தவனை போல் கூடவே இருந்தாலும் புத்தங்கள் படிக்கவோ, வாங்கவோ மட்டும் அவர் தவறவே இல்லை. அவர் இறந்த போது அவருடைய சேமிப்பாக மட்டும் சுமார் 800 புத்தகங்கள் அவரிடம் இருந்திருக்கின்றன. வாசிப்பு அவர் வாழ்வின் அங்கமாகி, அதுவே அவருக்குள்ளான சமூகக் கோபத்தை அணையாது வளர்த்தெடுத்து போர் குணத்தின் உச்சத்திற்கே கொண்டு சென்றதாக கூறுகிறார் நூலாசிரியர்.

"இன்றைய கல்வி முறைகள் அறியாமையை போக்குவதற்கு பதிலாக வேலைக்காரர்களை உருவாக்குவதாக அமைகிறது" என முத்துகுமரன் மனம் வெதும்பி தன்னிடம் குறிப்பிட்டதாக கூறும் நூலாசிரியர் "படித்து அறிவில் சிறந்து இச்சமூக வளர்ச்சிக்கும் மாந்தர் குல முழுமைக்குமான அர்ப்பணிப்புமிக்க வாழ்வை அவர்கள் பெற்று கொள்ள வேண்டும் என்று விரும்புவதில்லை. கல்வி அமைப்பு முழுக்க முழுக்கச் சுயநலப் போக்கு கொண்டதாகவே இருக்கிறது" என வருத்தப்பட்டதையும் பதிவு செய்ய தவறவில்லை. தமிழ்நாட்டில், தமிழ் வழி கல்வியின் அவசியம் குறித்துஏக்கத்துடனே தன் குறிப்பேட்டில் எழுதியுள்ளார் முத்துக்குமரன்.

எழுத்து சீர்திருத்தம் தேவைற்றது என்பது குறித்து அவர் எழுதி, தீராநதியில் வெளிவந்த விமர்சனத்தையும் இந்த நூலில் குறிப்பிட்டு உள்ளார் நூல் ஆசிரியர்.


திரைப்படம் மக்களுடன் உரையாடுவதற்கான சிறந்த ஊடகம் என கருதி திரைப்பட
துறையில் தன்னை இணைத்துக்கொண்டார். குறும்படங்கள், ஆவணப்படங்கள் உருவாக்கப்பட வேண்டும். மாற்று சினிமா நோக்கி மக்கள் அணிதிரட்டப்பட வேண்டும் என்பதிலே ஆர்வமாகஇருந்திருக்கிறார். திருநங்கைகள் குறித்து ஒரு ஆவண படம் எடுப்பதிலும் பங்காற்றி இருக்கிறார்.

ஈழப்போராட்டம் முத்துகுமரனுடைய உதிரத்திலே கலந்து ஓடியது என கூறும் ஆசிரியர், பேச்சு வார்த்தைகள், ராணுவ தாக்குதல்கள், மாவீரர் தின உரைகள் என கடந்த பத்தாண்டு கால ஈழ போராட்ட செய்திகளை சேகரித்து வைத்திருந்ததாகவும் "வாழ்வில் ஒரு முறையாவது அந்த வீரம் விளைந்த ஈழம் மண்ணில் கால்பதிக்க வேண்டும், அங்குள்ள பனைமரங்களை கட்டிப்பிடிக்க வேண்டும், என் ஆசைகள் நிறைவேறுமா?" எனமுத்துக்குமரன் கேட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

முத்துகுமரன் வீரச்சாவை தழுவிய அந்த நாள் காலையிலே தன்னை தொடர்பு கொள்ள முயன்றதாகவும் ஆனால் தன்னால் பேச முடியவில்லை என்பதை வேதனையோடு குறிப்பிடும் நூலாசிரியர், அல்ஜீரிய பாடகர் மத்தூர் பின் - இன் பாடலோடு இந்நூலை முடிக்கிறார்.
அது...

நீ இறந்து விட்டாலும்
வாழ்ந்து கொண்டுதானிருக்கிறாய்
ஒரு வரலாறாக
ஒரு போராட்டமாக
ஒரு நம்பிக்கையாக......

ஆம்..... உண்மையில் இந்த புத்தகத்தை ஒரே வீச்சில் படித்து முடித்த போது என் அழுகையை அடக்கவே முடியவில்லை..... முத்துக்குமரனை இந்த தமிழ் சமூகம் கொலை செய்து விட்டதாகவே கருதுகிறேன்.. ஆம் இது ஒரு அப்பட்டமான கொலை தான் . இதன் முதல் குற்றவாளிகள் ஆளும் வர்க்கம் என்றால் ஈழபோரில் மவுனியாக இருந்த இந்த தமிழ் சமூகமும் குற்றவாளிப்பட்டியலில் சேர்க்கப்பட வேண்டியவர்களே.......

மூச்சு விடும் கடைசி தருவாயில் என்ன சாதி என செவிலி குறிப்பெடுக்க கேட்க, தமிழ் சாதி என்று கூறி இறந்த 'கரும்புலி' முத்துகுமாரின் வாழ்க்கை வரலாற்றையும் , அவருடைய கவிதைகள் தாங்கி வந்துள்ள இந்த புத்தகத்தை அருமையாக தொகுத்துள்ளார் நூலாசிரியர் ஆ.கலைச்செல்வன்.

தமிழ் மொழியை நேசிக்கும் ஒவ்வொருவரும் இந்த தமிழ் தேசியவாதியின் வரலாற்றை கண்டிப்பாக வாசிக்க பரிந்துரைக்கிறேன்.

தமிழ் தேசம் வெளியீடாக வந்திருக்கும் இந்த புத்தகத்தின் விலை ரூபாய் 60.இணையம் மூலம் வாங்க இங்கே சொடுக்கவும்.

தபால் மூலம் பெற்று கொள்ள....................
தமிழ் தேசம்,
87/31, காமராஜர் நகர்,
3 வது தெரு, சூளை மேடு,
சென்னை - 94


Monday, May 3, 2010

சொன்ன கதை


"ஒரு ஊர்ல ஒரு

காக்கா இருந்திச்சாம்" - என
பாட்டி அம்மாவுக்கு
சொன்னக் கதையை
சொல்லத் துவங்கினேன்
என் மகனிடம்...
இடைமறித்து கேட்டான்
"டாடி காக்கான்னா...
என்ன டாடி.?"

http://youthful.vikatan.com/youth/Nyouth/stalinpoem190410.asp


Thursday, September 17, 2009

எஸ். எம். எஸ். ராசாக்களுக்கு.....


இன்றைய நாள் புலரும் முன்னரே எனக்கு ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது. நண்பர் ஒருவர் எனக்கு பார்வர்ட் செய்திருந்தார். அது "AB + blood Required for a heart surgery in chennai. Please contact arun 98414XXXXX" . நான் தொடர்ந்து "ரத்த தானம்" செய்து வருவதாலும், AB + ரத்த பிரிவை உடைய, தெரிந்த நண்பர் ஒருவர் சென்னையில் இருப்பதாலும் இது முக்கியமான குறுஞ்செய்தியாக எனக்கு பட்டது. எங்கே வர வேண்டும், என்றைக்கு தேவை படுகிறது, எவளவு தேவைபடுகிறது என்பதை அறிய குறுஞ்செய்தி அனுப்பிய நண்பரை தொடர்பு கொண்டேன். அவரோ தனக்கு தெரியாது எனவும், தனக்கு வந்த செய்தியை தான் எனக்கு பார்வர்ட் செய்ததாகவும் கூறினார். உடனே அந்த குறுஞ்செய்தியில் கொடுக்கப் பட்டிருந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டேன்.

சற்று தாமதமாகவே எதிர் முனையில் இருந்தவர் "ஹலோ" என விளிக்கும் குரல் கேட்டது, தூக்கம் இன்னும் கலையவில்லை என்பது மட்டும் புரிந்தது . நான் மெதுவாக "சார் பிளட் வேணுமுன்னு மெசேஜ் வந்தது....." நான் முடிக்கவே இல்லை.... அதற்குள் அவர் "அது ஏதோ பரதேசி பய என்னோட நம்பர கொடுத்திருக்கான்............" திட்டி கொண்டே இருந்தார் . "ரொம்ப சாரி சார் டிஸ்டர்ப் பண்ணினதுக்கு" என்று கூறி இணைப்பை துண்டித்தேன்...

ஒரே நேரத்தில் அழுகையும் கோபமும் என்னையும் மீறி பீறிட்டு வந்தது.... எனக்கு இந்த குறுஞ்செய்தியை அனுப்பிய நண்பரிடம் கத்தி தீர்க்க அலைபேசியை எடுத்து விட்டு பின் மனம் மறுதலித்ததால் "நீ அனுப்பிய குறுஞ்செய்தி பொய்" என்பதை மட்டும் செய்தியாகவே அனுப்பி வைத்தேன்.

இது போல் எண்ணற்ற குறும் செய்திகள் எனக்கு வருவது உண்டு, ஆனால் பெரும் பாலும் அவர்கள் குறிப்பிட்டு இருக்கும் எண்களை தொடர்பு கொள்ளவே முடியாது. தொடர்பு கொள்ள முடியும் பட்சத்தில் என் மூலமாகவோ, நண்பர்கள் மூலமாகவோ உதவியும் செய்து இருக்கிறோம்.

அறிவியலின் அசுர வளர்ச்சியில் குறும் செய்தி ஒரு அற்புதம் என்பேன். அதே வளர்ச்சியை தன் சொந்த காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்த உபயோகிப்பவர்களை மனிதன் என்பதா?மிருகம் என்பதா ?

தயவு செய்து இது போன்று குறும் செய்திகள் வரும் பட்சத்தில் கூடிய மட்டும் நாமே அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்டு செய்தியின் உண்மையை அறிந்து கொள்வோம், அதன் பின் நம்மால் நேரடியாக உதவ முடியா விட்டால் அதை பார்வர்ட் செய்வோம். இப்படி செய்யும் பட்சத்தில் நல்லதை நாம் செய்ய இயலா விட்டாலும் கெட்டதற்கு துணை போக வில்லை என்ற நிம்மதியாவது நம்மோடு இருக்கும்.

குறும் செய்திகள் வழியாக பரப்பப்படும் மோசடிகள் ஒருசிலவற்றை கீழே கொடுத்து உள்ளேன். இப்படி வரும் குறும் செய்திகள் 100% பொய் ஆனவை.

"pls forward and help... +9190477XXXXX. I am kavitha studiying 1st B.Sc ............. college, chennai. I lost my left eye in an accident. The operation cost 1 lakes. I dont know u but, if u send this sms i'll get 1 rs. If u have free sms plz fwd atleast 10 members. You dont neglect htis s tru. May God bless U 4 ever."

"Pls who love your mother ples help 2 dis mother. I am anitha 98947XXXXX? My son heart operation. I u forward dis mgs i will get 10 ps? I beg u 2 save my child plz"

எனவே இப்படி வரும் குறும் செய்திகளையும் அதை அனுப்பும் எஸ். எம். எஸ். ராசாக்களையும் முற்றிலும் புறக்கணிப்போம். நன்றி.

Saturday, August 22, 2009

பெரியார்


நான் பிறந்து, தவழ்ந்து, நடந்து, வளர்ந்த எம் முதல் வீட்டின் சிறிய வரவேற்பறை முழுவதும் காந்தி, காமராஜ், நேரு, நேதாஜி என தலைவர்களின் படங்களாய் அலங்கரிக்கப்பட்டிருக்கும். ஏனோ நீண்ட முகமும், மெல்லிய கண்ணாடியும், வெண் தாடியுமாய் வீற்றிருந்த அந்த தாத்தாவை எனக்கு பெரிதும் பிடித்திருந்தது. எனக்கும் அவருக்குமான முதல் உறவின் விதை அங்கே தான் விழுந்தது. எப்போது பள்ளி போய் வந்தாலும் என் மறு புன்னகையை எதிர்பார்த்து காத்திருக்கும் கிராமத்து கிழவன் போல் புன்னகைத்து கொண்டே இருப்பார் சுவர் ஓரமாய்.

சட்டம் போடப்பட்ட இந்த புகைப்படங்கள் கால ஓட்டத்தில் சிதைந்து போய் விட, வீட்டில் வர்ணம் பூச கழட்டப்பட்ட பின் என்றுமே ஏற்றப்படவில்லை. ஆரம்ப கால பள்ளிக்கூட பாடங்கள் அத்தனையும் மனப்பாடம் செய்தே ஒப்பித்து விடுவதால் பாட திட்டங்களில் வந்த இந்த பெரியவரும் பத்தோடு பதினொன்றாகவே எமக்கு தோன்றியதில் ஆச்சரியம் இல்லை. ஆனாலும் புத்தக அட்டையில் வரும் இந்த முரட்டு தாடிக்காரர் கொஞ்சம் கவரவே செய்தார்.

காலம் கைப்பிடித்து வீதிக்கு அழைத்து வந்து முகம் எங்கும் அறைந்து ஒவ்வொரு கணத்தையும் வகுப்பெடுக்க, வாழ்க்கை பரமப்பதத்தில் முரண்டு பிடித்து எழுந்த போது தான் தெரிந்தது நூறு ஆண்டுகளுக்கு முன்பே ஒருவர் பிறந்து இப்போது நான் வேகமாய் எழுந்து ஓட காரணமாய் இருந்திருக்கிறார் என்று........ அவர் பகுத்தறிவு பகலவன் என்று உலக தமிழரால் கொண்டாடப்படும் இளைய தமிழ் சமூகத்தின் பாட்டனார் ராமசாமி என்ற "பெரியார்".

தமிழக வரலாற்றின் தன்னிகரற்ற ஆளுமை பெரியார் என்பதை யாரும் சந்தேகிக்க முடியாது, கூடாது. அந்த ஆளுமையை பற்றி சமீபத்தில் படித்த புத்தகம், ஆர்.முத்துக்குமார் எழுதி கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட "பெரியார்".

பெரியாருடைய வாழ்க்கை வரலாற்றை எழுதுவது என்பது கத்தி மேல் நடப்பது போன்றது. தனக்கே உரித்தான அருமையான மொழியில் லாவகமாக அதை செய்திருக்கிறார் நூலின் ஆசிரியர். தனது முன்னுரையிலேயே "தமிழ் நாட்டில் புரட்சி" என்ற சொல்லுக்கு சொந்தக்காரர் பெரியார் என்பதையும் இப்புத்தகத்தை படித்து முடிக்கும் போது பெரியார் என்ற ஆளுமையின் உயரம் ஒரு அங்குலம் நம் மனதில் உயர்ந்திருக்கும் என்பதை ஆணித்தரமாக சொல்கிறார். அதை நிறைவாக செய்தும் இருக்கிறார். ஒரு மாமனிதரை பற்றி எழுதுகிறோம் என்று ஒரு பக்கமாக சாயாமல் ராமசாமியின் மைனர் வாழ்க்கையையும் பதிவு செய்திருக்கிறார் நூலின் ஆசிரியர்.

160 பக்கங்களில் பெரியார் வரலாறா என ஒரு நிமிடம் திகைக்க வைத்தாலும், இந்த "வைக்கம் வீரரின்" எந்த முக்கியமான கணங்களையும் ஆசிரியர் தொலைத்து விடவில்லை என்பதற்கு பெரியாரின் தந்தை வெங்கட்ட நாயக்கரின் பன்னிரெண்டாவது வயதில் இருந்து இந்நூல் துவங்குவதே ஒரு முக்கிய சாட்சி.

செப்டம்பர் 17,1879 அன்று வெங்கட்டருக்கும், சின்ன தாய்க்கும் இரண்டாவது மகனாக பிறந்தான் ராமு என்ற ராமசாமி. இந்த ராமசாமி தான் பிற்காலத்தில் நாடு முழுவதும் ராமன் படத்தை எரிக்க உத்தரவு இட போகிறான் என்று பாவம் அந்த தந்தைக்கு அப்போது தெரிய வாய்ப்பில்லை.

ராமசாமி நல்ல வசதியான சூழ்நிலையில் பிறந்திருந்தாலும் சின்ன வயதிலேயே தத்து கொடுத்து விட்டதால் வறுமையில் ஒரு முரட்டு சாமியாக வளர்ந்தான்.சிறு வயதிலேயே தான் பிறந்த குலத்தை விட தாழ்ந்த குல வீடுகளில் இருந்து பலகாரங்கள் வாங்கி சாப்பிடுவது உண்டு. இவை எல்லாம் வெங்கட்டரின் காதுகளில் ஈயத்தை காய்ச்சி ஊற்றியது போல் ஆனது. விளைவு.... நான்காம் பாரத்தொடு திண்ணை படிப்பும் நின்றது.

பள்ளி படிப்பை இடையில் நிறுத்திய பின்பு தன் தந்தையோடு சேர்ந்து வியாபாரம் செய்ய ஆரம்பித்து, பணம் கையில் புரள துவங்கிய போது அதை லாவகமாக கையாளவும் தெரிந்திருந்தது. இந்த சேமிக்கும் பழக்கம் அவரோடு இறுதி வரை தொடர்ந்தது.

சாமி பக்தர்களுக்கு ராமசாமியை கண்டாலே ஆட்டம் துவங்கி விடும். பக்தன் என்று தெரிந்தால் அத்தனை கேள்வி கேட்பார். பிடிவாதம் பிடித்து தன் மனதுக்கு இனியவளான நாகம்மாளை திருமணம் செய்தார். இரண்டு ஆண்டுகள் திருமண வாழ்க்கையில் பிறந்த பெண் குழந்தை இறந்து விட மனம் வெறுத்து ஆந்திரா, காசி, கேரளா என்று தேசாந்திரியாய் திரிந்தார். இந்த பயணத்தில் தான் ஆதிக்க சக்திகளும், மதம் என்ற மூட நம்பிக்கையும் பாமர மனிதனை எத்தனை பாடாய் படுத்துகிறது என்பதை உணர்ந்தார். ஊர் திரும்பிய போது முற்றிலும் மாறியிருந்தார்.

தன் நேர்மையாலும் நிர்வாக திறனாலும் ஈரோடு நகராட்சி பதவிகள் தேடி வந்தன.மக்களுக்காக மறுக்காமல் ஏற்றுக்கொண்டார். ராஜாஜியின் விருப்பப்படி காங்கிரஸில் இணைந்தார்.

ஈ.வெ.ரா. புரட்சியை தனது வீட்டில் இருந்தே துவக்கினார். ஆணாதிக்கத்தின் மறு உருவாக அவருக்கு தென்பட்ட தாலியை மனைவியிடம் கழட்ட சொன்னார். கள்ளுக்கடை மறியலின் போது தனக்கு சொந்தமான 500 தென்னை மரங்களையும் வெட்டி சாய்த்தார். தன்னை தொடர்ந்து நாகம்மையையும், வள்ளியம்மையையும் போராட்ட களத்தில் இறக்கினார்.

ஆதிக்க சக்தியினரின் தலையீடு காரணமாக தாழ்த்தப்பட்டவர்கள் நுழைய முடியாமல் இருந்த கேரளாவின் வைக்கம் தெருவில் யாவரும் நடமாட போராடியதால் 'வைக்கம் வீரர்' ஆனார்.

" பிராமணருக்கு மட்டுமே வக்காலத்து வாங்கும் கட்சி காங்கிரஸ், அந்த கட்சியை ஒழித்து கட்டுவதே முதல் வேலை " என்று கூறி காங்கிரசில் இருந்து விலகினார். எந்த மதத்தையும் அவர் கடிந்து கொள்ள தவறவில்லை, ஆனால் உட்பிரிவுகளால் பிளவுபட்டு கிடக்கும் இந்து மதத்தையும், கிறிஸ்தவ மதத்தையும் கடுமையாக சாடினார்.

தனது இயக்கத்தின் தொண்டர்கள் 'தோழர்' என்று அழைத்து கொள்ள அறிவுறுத்தினார். 1933-ம் வருடம் தன் காதல் மனைவி இறந்த போது உடலை பெட்டியில் வைத்து, வண்டியில் ஏற்றி சென்று சுடுகாட்டில் வைத்து எரிக்க செய்தார்-அது தான் ராமசாமி. 1938-ம் வருடம் நடந்த மகளிர் மாநாட்டில் பெண்கள் ராமசாமிக்கு 'பெரியார்' என்ற அடைமொழியை சூட்டினர்.

நீதி கட்சி திராவிடர் கழகம் ஆகி அதன் நிரந்தர தலைவர் ஆனார் பெரியார். இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைப்பதை கடுமையாக எதிர்த்தார். இது வெறும் எஜமானன் மாற்றமே என்று எழுதினார்.

பெரியாருடைய வாழ்கையின் ஒரு முக்கியமான காலகட்டம் திராவிடர் கழகம் பிளவானது. மணியம்மையுடனான திருமணத்தையே காரணம் காட்டி கழகத்திலிருந்து, அண்ணாதுரை, அன்பழகன், கருணாநிதி போன்றோர் விலகினாலும் கழகம் ஏற்கனவே நீறு பூத்த நெருப்பாக இருந்தது என்பதற்கான பழைய நிகழ்வுகளை நூலின் ஆசிரியர் கோர்வை படுத்திய விதம் மிக அருமை.

பிராமணர் அல்லாத முதல்வர் என்ற தனிப்பட்ட ஈர்ப்பு காரணமாக காமராஜருடன் நெருங்கி பழகினார் பெரியார், பல தேர்தல்களில் ஆதரிக்கவும் செய்தார். ராஜாஜியோடு கொள்கை ரீதியாக பெரும் மோதலை தொடர்ந்தவர் அவரோடு கொண்ட நட்புக்கு பெரும் மரியாதை செலுத்தினார்.

பெரியாரால் கண்ணீர் துளிகள் என்று விமர்சிக்கப்பட்ட தி.மு.க, பின் ஆட்சிக்கு வர முதல்வராக பொறுப்பேற்ற அண்ணா பெரியாரின் ஆசியை பெற தவறவில்லை. யார் ஆட்சிக்கு வந்தாலும் குறைகளை கடுமையாக விமர்சித்தார் பெரியார். தள்ளாத வயதிலும் உடல் உபாதைகளோடு தமிழகமெங்கும் சென்று சுயமரியாதை கருத்துக்களை விதைத்து ஒரு இனத்தின் விடிவெள்ளியாய் திகழ்ந்த பெரியார் டிசம்பர் 24, 1973 அன்று நம்மை விட்டு மறைந்தார்.

இப்புத்தகத்தை படித்து முடித்த தினம் வந்த ஒரு குறுஞ்செய்தி என்னை திகைக்க வைத்தது. அது " 'Swamiye saranam aiyappa' Send it to 18 ppl, except me. u will get gud news tomorow. If U neglect, bad luck start 2day for 9 years.... this sms came from shabari malai temple....."

கடவுள் இருக்கிறார் என்று நம்பப்பட்ட மேல்வானில் இன்று செயற்கை கோள்கள் சுற்றி கொண்டு இருக்கின்றன. இருப்பினும் அந்த அறிவியல் முன்னேற்றங்களை பயன்படுத்தி இன்னும் மனிதர்களை முட்டாளாக்கி கொண்டிருக்கிறது ஒரு அறிவிலி சமூகம். பெரியார் இன்று நம்மோடு இல்லாவிட்டாலும் பெரியாரின் கருத்துக்களை பரப்பும் இது போன்ற நல்ல படைப்புகள் சமுதாயத்திற்கு இன்றும் தேவை என்பதையே காலம் நமக்கு உணர்த்துகிறது.


இந்த புத்தகத்தை வாங்க கீழே சொடுக்கவும்.

http://nhm.in/shop/978-81-8493-033-7.html