Showing posts with label வரலாறு. Show all posts
Showing posts with label வரலாறு. Show all posts

Monday, February 11, 2019

ராவண விழா

19 ஆம் நூற்றாண்டில் திருவாங்கூர் ராஜா ரவி வர்மா வரைந்த ஓவியம் (SITA Under the Ashoka Tree). பிராமணிய தொகுப்பின் நீட்சியான ரவி வர்மா, தென்இந்தியர்களை குரங்காகவும், கருப்பாகவும் வரைந்ததில் ஆச்சரியமில்லை. (நாம் கருப்பர்கள் தான் என்பது வேறு விசயம்). ...........

இங்கிருக்கும் எல்லா மதநம்பிக்கைகளையும் ஆராய்ந்து பதிவு செய்கிறார். இயற்கை வழிபாடு, நாட்டாரியல் வழிபாடு என எல்லாவற்றையும் பதிவு செய்யும், 'ராவண விழா' ஒன்று ஆண்டுதோறும் மதுரைக்கும் கீழே கொண்டாடப்பட்டதை பதிவு செய்கிறார்.

 அதாவது, ராவணன் சீதையை கடத்திவந்த நாளை வருடம் தோறும் 'ஆடி அம்மாவாசைக்கு அடுத்தநாள் ' கொண்டாடியதாக குறிப்பிடுகிறார். மற்றொரு குறிப்பில், ராமனை demon யாக மக்கள் முன்வைத்து வழிபட்டதாகவும் பதிவு செய்கிறார். ............

 'ராவணன் ஜலதோஷம் வந்தா எந்த கை எடுத்து சீந்துவான்?' என்ற கடி ஜோக்குகளை கேட்டு வளர்ந்த எங்களுக்கு, 300 வருடங்களுக்கு முன் அவன் ஒரு வழிபாட்டு மரபினனாக இருந்திருக்கிறான் என்பது ஒரு ஆச்சரியமான செய்தியே. காலம் இப்படி தான், வரலாற்றை தொலைந்தவர்களின் நீட்சிகள், அது தொலைந்த இடத்தில் இருந்தே புதுப்பிப்பார்கள்.

 #திருவாங்கூர்_குறிப்புகள்
 # Edited

Sunday, February 10, 2019

பால்ய கால (ஊர்) சினிமாக்கள்

'படம் போடுன்மாம்', இந்த வார்த்தைகளை கேட்டால் காதில் தேன் வடிந்தது போல இருக்கும். 80 களில் ஊரில் எங்காவது ஒரு வீட்டில் டிவி இருந்தாலே ஆச்சரியம். அதுவும், தமிழ் சினிமா எல்லாம் இரண்டு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வரும் 'மாநில மொழி திரைப்படம்' வகையில் வந்தால் தான் உண்டு. அன்று பார்த்து மின்சாரம் போய் விட்டால், மீண்டும் இரண்டு மாதம் காத்திருக்க வேண்டும். 'மலையாளம்' எல்லாம் அன்று தொலைக்காட்சி வழியாக கற்றது தான்.
இந்த காலக்கட்டத்தில் தான் அரபு நாடுகளுக்கு வேலைக்கு சென்ற ஊர் அண்ணன்கள் வீடுகளுக்கு டி.வியோடு திரும்பி வர துவங்கினார்கள் சிலர் 'டெக்' கோடு.
கொண்டுவந்த டிவியை ஊருக்கு காட்ட போடுகிறார்களா? சுயபெருமிதத்திற்காக போடுகிறார்களா என்று எங்களுக்கு தெரியாது. ஆனால், எங்களை போல வாண்டுகளுக்கு அது தான் "ஜாக்பாட்". பெரும்பாலும் வெள்ளிக்கிழமை இரவோ, சனிக்கிழமையோ படம் போடுவார்கள். இரண்டு பேருக்கு தெரிந்தால் போதும், ஒரு 100 பேராவது கூடி விடுவார்கள். போடப்படும் படங்களின் பெயர்களும் எப்படியாவது கசிந்துவிடும். குறைந்தது 4,5 கேசட்டுகள் என்று விடிய விடியப் படம் போடுவார்கள். அதும் திரைக்கு வந்து சில வருடங்களே ஆன திரைப்படங்கள். ரஜினியின் 'மாப்பிள்ளை, பணக்காரன்' எல்லாம் இப்படி தொலைக்காட்சியில் போடப்பட்டு பார்த்த திரைப்படங்கள் தான்.
இரண்டு படங்கள் ஓடி முடியும் முன்பே கண்கள் சொக்கும், அடுத்தநாள் படம்பார்க்க வராத நண்பர்களிடம் தம்பட்டம் அடிப்பதற்காகவே கண் சிவக்க சிவக்க படம் பார்ப்போம். நாம் விரும்பிய படத்தை நான்காவதாக போடுகிறார்கள் என்றால், கூடவே இருக்கும் நண்பர்களிடம் அந்த படத்தை போடும் போது எழுப்ப சொல்லி அப்படியே தரையில் கிடந்து உறங்கிய நாட்களும் உண்டு.
இப்படியெல்லாம் படம்பார்க்க அனுமதியெல்லாம் வீட்டில் எளிதாக கிடைத்து விடாது. ஊரின் நம்பிக்கையான ஒரு அண்ணன் யாராவது அந்த இரவுநம்மை 'கார்டியனாக' ஏற்றுக்கொள்கிறேன் என சொல்லி ஜாமீன் அளித்து, அந்த வார இறுதியின் வீட்டுப்பாடங்கள் எல்லாம் செய்து முடித்து ஒப்பித்தால் தான் அனுமதி கிடைக்கும். சினிமா போடும் நாட்களுக்கு ஒருவாரத்திற்கு முன் 'Progress Report' கிடைத்திருந்தால், உள்ளதும் போச்சு; போய் கேட்கவே முடியாது. 'எப்படா மீசை முளைக்கும்! தனியாக போய் படம் பார்க்கலாம்' என்று நினைத்து அழுதுக்கொண்டே தூங்கி விடுவோம்.
வெளிநாட்டுக்கு போய் வந்தவர்கள் கொண்டு வந்த டி.வி தவிர்த்து, வாடகைக்கு டி.வி எடுத்து போடுவார்கள் இளந்தாரிகள். முந்தையதை போல இந்தவகை சினிமா பார்பதற்கும் அதே மவுஸ் என்றாலும் சில நேரம் 'காசு கேட்கும்' அபாயங்களை சந்திக்க வேண்டியிருக்கும்.
இன்னொன்று, ஊரில் யாருடைய திருமணத்திற்க்காவது வீடியோ எடுத்திருந்தால், அவர்களுடைய 'கல்யாண கேசட்' கிடைக்கும் நாள் எங்களுக்கு திருநாள். என்ன ஒரே சிரமம் என்றால், அவர்கள் கல்யாண வீடியோவை முழுமையாக போட்டு விட்டு தான் வேறு சினிமாக்கள் போடுவார்கள். அதுவும், புது பொண்ணோ, மாப்பிளையோ படம்பார்க்க வர தாமதமானால், Black TV ஐ நாங்களும் தேமே என பார்த்துக்கொண்டிருக்க வேண்டும்.
இன்னொன்று, ஊரில் யாரையாவது வெறிநாய் கடித்தால், சம்மந்தப்பட்ட நபர் 90 ஆவது நாள் தூங்கக்கூடாது என்ற நம்பிக்கை ஊரில் இருந்தது. அன்று அந்த வீட்டில் விடிய விடிய படம் ஓடும். மற்ற இடங்களை விட, இந்த கேட்டகிரியில் படம்பார்க்க ஆட்கள் குறைவாக இருக்கும் என்று நான் எழுதி தான் தெரிய வேண்டுமா என்ன? 
இரண்டு வீடுகளுக்கு இடையே இருக்கும் ஈ.கோ வும் இந்த நாட்களில் ஊருக்கு தெரியவரும். அதாவது வெளிநாட்டுக்கு போய் வந்த ஒருவர் 4 படம் போட்டால், அடுத்த வீட்டுக்காரர்கள் சில மாதத்தில் 8 படம் போட்ட வரலாற்றை எல்லாம் கண்டு கடந்து வந்திருக்கிறோம்.
இதை தவிர கோயில் திருவிழாக்களில் பெரும்பாலும் பெரிய திரை தான். பெரும்பாலும் மதநம்பிக்கை சார்ந்த திரைப்படங்களே அங்கு போடப்படும். என்ன ஒன்று, ஆண்கள் எண்ணிக்கையை விட பெண்கள் எண்ணிக்கை அங்கே கூடுதலாக இருக்கும்.
90 களில், ஒவ்வொரு வீடுகளிலும் தொலைகாட்சி எண்ணிக்கை அதிகரிக்க இதுபோன்ற 'விடிய விடிய படம்' கூத்துக்கள் குறைய துவங்கியது. ஊரின் ஒவ்வொரு பஸ்ஸ்டாப்புக்கும் ஒரு கிரிக்கெட் டீமும், ஒரு இயக்கமும் ஆரம்பமானது. ஆம், எங்களுக்கும் அந்நேரம் மீசை முளைக்க துவங்கி விட்டது. எங்கள் பங்குக்கு நாங்களும் ஒரு டீம் துவங்கி, ஆண்டுவிழாக்கள் நடத்தி பெரிய திரையில் சினிமாக்கள் போட துவங்கினோம்.
................
80 களில் அவ்வளவு பரபரப்பாக இருந்த 'சினிமா போடுதல்' 2Kவில் கொஞ்சம் கொஞ்சமாக வழக்கொழிந்து போய் விட்டது. சினிமாவின் இடத்தை, பாட்டுக்கச்சேரியும், நடன நிகழ்சிகளும் பிடிக்க ஆரம்பித்தது.
சென்ற வாரம் மக்களோடு, ஒரு தமிழ்ப்படம் பார்த்துக்கொண்டிருந்தேன். பாதிபடம் முடிவதற்குள் தூக்கம் வந்து, தூங்கப்போகிறேன் என்று சொல்லிப்படுத்து விட்டேன். ஒருகாலத்தில் நான்கைந்து படங்களை எப்படி இப்படி சுவாரசியம் குறையாமல் பார்த்தோம் என்பதை நினைக்கும் போதே அயர்ச்சியாக இருந்தது.
ஆனால், அந்த படம்பார்த்த நாட்களின் நினைவுகள் மட்டும் எந்த அயர்ச்சியும் இல்லாமல் அப்படியே மனசுக்குள் கிடக்கிறது.

https://www.facebook.com/stalin.felix.5/posts/10157167983817780

குமரி சிஎஸ்ஐ நிர்வாகத்தால் கைவிடப்பட்ட ஒரு பெருங்கனவு

குமரி மாவட்ட CSI கிறிஸ்தவர்களை 'அரை பார்ப்பனர்கள்' என சுட்டி ஒரு பதிவு எழுதி இருந்தேன். சிலருக்கு அதில் வருத்தமிருந்தது. ஆனால், சில முற்போக்கு CSI நண்பர்கள் அந்த பதிவை Like செய்திருந்தார்கள், உண்மை என்று வாதிட்டார்கள்.
சாதாரண, அடித்தள CSI கிறித்தவ மக்களின் மீது பிராமணிய சாயல் பூசவே இல்லை என்பது எனது பதிவை தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு புரியும்.
............
கொஞ்சம் யோசித்து பாருங்கள்,
இந்தியாவின் முதல் மிஷன் மருத்துவமனை 180 ஆண்டுகளுக்கு முன் பழைய திருவாங்கூரில் ஆரம்பிக்கப்பட்டது. லட்சக்கணக்கான மக்கள் அந்த மருத்துவமனையால் பயன்பெற்றார்கள், பயன் பெறுகிறார்கள். அந்த மருத்துவமனையின் முன்னோடி தலைமை மருத்துவராக இருந்த, மிசனரி Theodore Howard Somervell ன் புத்தகங்களில் இருந்தும், கடிதங்களில் இருந்தும் மருத்துவமனையில் இருந்த அபரிதமான வசதிகள் குறித்து நிறைய தகவல்களை வாசிக்க முடிகிறது.
அப்படி ஆரம்பிக்கப்பட்ட ஒரு மருத்துவமனை, இந்த நேரத்தில் ஒரு பிரமாண்ட மருத்துவக்கல்லூரியாக மாறி இருக்க வேண்டும். ஆனால், பிற்காலத்தில் அந்த மருத்துவமனையில் பணியாற்றிய உள்ளூர் கிறிஸ்தவ மருத்தவர்கள், அதற்க்கான முட்டுக்கட்டைகளை போட்டார்கள். நிறைய அனுபவங்கள் பெற்றபின் தங்களுக்காக தனித்தனி மருத்துவமனைகளை குமரி மாவட்டம் முழுக்க துவங்கினார்கள்.
நெய்யூர் மருத்துவமனை, மருத்துவக்கல்லூரி ஆகி விட்டால் இவர்களுடைய மருத்துவவியாபாரம் படுத்துவிடும் என்ற முன்யோசனை தான் அதற்க்கு காரணம்.
இதையெல்லாம் தட்டிக்கேட்க வேண்டிய பிற்கால நிர்வாகிகள் கூட, மேற்படி மருத்துவவியாபாரிகளின் அழுத்தத்தால் அமுங்கி போனார்கள்.
............
80 களில், டி.ஜி.எஸ் தினகரன் தனது காந்தக்குரலால் மக்களை கட்டிப்போட, அவரை தூக்கி சுமந்தது குமரி சிஎஸ்ஐ கிறித்தவர்களே. தினகரன் பிரபலமாகி, ஒரு கன்வேன்சனுக்கு ஒருலட்சம் என்று கேட்க ஆரமபித்த பின் அந்த உறவு முறிந்தது. இடைப்பட்ட காலகட்டத்தில் தான், 'ஏழைகளுக்கு கல்லூரி' என்று அடித்தள மக்களிடம் காசு வசூல் செய்து காட்டுக்குள் காருண்யாவை உருவாக்கினார்கள்.
....
இதுபோன்ற ஆட்கள் மீது தீர்க்கமான விமர்சனங்களை வைத்திருக்க வேண்டிய நிர்வாகத்தில் இருந்த சி.எஸ்.ஐ கிறிஸ்தவர்கள் கண்ணையும், வாயையும் பொத்திக் கொண்டார்கள். ஏன்?
வளர்ந்து விட்ட இந்த பெருந்தனவார்களின் கருணையால், தங்கள் பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளுக்கு கிடைத்த கல்வி & வேலைவாய்ப்பினால், அவர்களுக்கு எதிராக எங்கேயும் குரல் எழுப்பாமலேயே போனார்கள். இதன் மூலம் சாமானிய CSI கிறித்தவர்களுக்கு இவர்கள் பெரும் துரோகத்தை இழைத்தார்கள்.
இப்போது சொல்லுங்கள் இவர்கள் அரை பார்ப்பனர்கள் தானே.
....................
ஒரு ஆயிரம் பக்கம் நாவல் எழுதும் அளவுக்கு இவர்களுடைய அரசியல் கதைகள் குமரியில் இருக்கிறது. என்றாவது ஒருநாள், ஏதோ ஒரு இளையதலைமுறை இதை தீர்க்கமாய் பதிவு செய்து கேள்வி கேட்கும்.

https://www.facebook.com/stalin.felix.5/posts/10157319607012780

முகிலனின் கதை

முகிலன்---> முகிலன்விளை
குமரி மாவட்டத்தில் உள்ள சில ஊர்களில் பெயர்களை ஆழ்ந்து கவனித்ததுண்டு. ஒவ்வொரு ஊரின் பெயர் காரணங்களை சொல்லித்தர வேண்டிய மூதாதைய கண்ணிகள் எப்போதோ அது தொடர்பான நினைவுகளை தவற விட்டிருக்கிறார்கள். தம்பி பால் பெக்கர், வெகு சமீபத்தில் முகிலன் தொடர்பான பதிவு ஒன்றை பதிவு செய்திருந்தார். அதன் தொடர்ச்சியாகவே இந்த பதிவை எழுகிறேன்.
................................
காலம் : 1680, தில்லியில் சுல்தானாக அவுரங்கசீப் இருக்கிறார். இந்தியா முழுவதையும் ஒரே குடைக்குள் கொண்ட வர, அவுரங்கசீப் தொடர்ந்து போர்கள் செய்து வருகிறார். தெற்க்கே இருக்கும் சில நிலப்பகுதிகள் அவருக்குள் கீழ் வராமல் இருப்பதை அறிந்த அவர், வேணாடு (திருவான்கூருக்கு முந்தைய பகுதி) நோக்கி செல்ல தனது நம்பிக்கையான தளபதியை கட்டளையிடுகிறார். அந்த தளபதி தான் முகிலன் (அவர் பிறப்பால், மதுரையை சார்ந்த தமிழர் என்றும், பிறகாலத்தில் இஸ்லாமிய சமயத்தை தழுவி அவர்கள் போர் படையிலேயே இணைத்தார் என்பது செவிவழி வரலாறு).
வேணாடோ, 'தடி எடுத்தவன் தண்டல்காரன்' போல, உள்ளூர் ஆட்சியாளர்களில் கைகளில் இருக்கிறது. ஆற்றிங்கல் ராணியாக உமையம்மை ராணி இருக்கிறார்.
வழியில் இருக்கும் சிறுகுறு அரசுகளை எல்லாம் வீழ்த்தி வரும் முகிலன், வேணாட்டு அரசை எளிதாக கைப்பற்றுகிறார். இங்கே கைப்பற்றப்பட்ட பொருட்களில் சிலவற்றை அவுரங்கசீப்புக்கு பரிசாக அளித்து விட்டு, 'வேணாட்டு ராஜா'வாக தன்னை பிரகடனப்படுத்திக் கொள்கிறார்.
முகிலனை வெல்லவே முடியாது என்று எண்ணும், உமையம்மா ராணி, கோட்டயம் பகுதியில் ராஜாவாக இருக்கும் கேரளவர்மனிடம் உதவிகள் கேட்கிறார். முகிலனின் படைபலத்தை கண்டு திகைக்கும், கேரளவர்மன் திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோயிலில் நேர்ச்சை வைத்து வழிபடுகிறார்.
திருவட்டாறு அருகே உள்ள மலை பகுதியில் போர் நடக்கிறது, போர் உச்சத்தை தொடும்போது குழவிகள் முகிலனின் படைகளை தாக்குகிறது. முகிலனின் படைகள் பின்வாங்கி காட்டில் போய் மறைகிறது. குளவிகளின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட முகிலன் காட்டிலேயே இறந்து போகிறார். முகிலனை அந்த பகுதியிலே அடக்கம் செய்து விட்டு படைகள் திரும்ப போகிறது. (திருவட்டாறு அருகே அவரது கல்லறை இருப்பதாக தகவல்- நான் பார்த்ததில்லை)
..........................
இப்படி ஒரு குறுகியகாலத்தில் வேணாட்டை கைப்பற்றி தன்னை ராஜாவாக பிரகடனம் செய்துக்கொண்ட முகிலனை பற்றிய தகவல்கள் அரிதாகவே பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், சுவாரசியமாக 'முகிலன்' ஆண்டதற்கும், இருந்ததற்கும் சாட்சியாக குமரி முழுக்க முகிலன் என்ற பெயரோடு தொடங்கும் ஊர்கள் உள்ளன.
சில உதாரணங்கள்,
முகிலன் விளை - மிடாலக்காடு
முகிலங்கரை - மணலிக்கரை
முகிலன்விளை - இருளப்பபுரம்
முகிலன்குடியிருப்பு - கன்னியாகுமரி - மணக்குடி சாலை
*விளை என்பது விளைநிலங்கள் உள்ள பூமி என்று குறிப்பதாகும்.
...............
முகிலன் ஒரு தமிழர் என்பதால், அவர் தொடர்பான வரலாறு மறைக்கப்பட்டதா? என்ற சந்தேகம் எழாமல் இல்லை.
முகிலன், முகிலன்விளை தொடர்பான செய்திகள் நீங்கள் அறிந்திருந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

https://www.facebook.com/stalin.felix.5/posts/10157334098687780

Tuesday, November 6, 2018

போலீஸை தெறிக்க விட்ட ஜெர்மன் பாட்டி

வடிவேலு ஒரு படத்தில் பேருந்து நடத்துனராக இருப்பார். பேருந்து நிறுத்தத்தில் நிற்கும் போது வெளியே நிற்கும் பாம்பாட்டி, கைப்பையில் இருக்கும் பாம்பை வெளியே எடுத்து சீட் பிடிப்பதற்காக ஜன்னல் வழியே உள்ளே போடுவார். பேருந்தில் ஏறிய மக்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடுவார்கள். இந்த நகைச்சுவைக்கும் சற்றும் குறைவில்லாமல் மேற்கு ஜெர்மனியில் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.
லிவர்குசேன் நகரில் வசித்து வந்த அந்த 90 வயது மூதாட்டி திடீரென ஒரு முடிவை எடுத்தார். இரண்டாம் உலகப்போர் நடந்துக்கொண்டிருந்த போது அந்த மூதாட்டியின் கணவர் அந்த பொருளை எங்கிருந்தோ எடுத்துக்கொண்டு வந்திருக்கிறார். கணவர் இறந்தபின் அந்த பொருள் எதற்கு இருக்கிறது என யோசித்த அந்த மூதாட்டி, 70 ஆண்டுகளாக வீட்டு அலமாரியில் வைக்கப்பட்டிருந்த அந்த பொருளை காவல்துறையிடம் ஒப்படைப்பதற்கு முடிவு செய்தார்.
தனது காரில் அந்தப் பொருளை எடுத்துப்போட்டு, அருகில் இருந்த போலீஸ் ஸ்டேஷனில் அவர் கொண்டு சேர்த்திருக்கிறார். அந்த பொருளை பார்த்ததும் தெறித்து அலறிய போலீசார், போலீஸ் ஸ்டேசனையும், அந்த சாலையையும் உடனே காலி செய்திருக்கிறார்கள்.
சுமார் இரண்டு மணி நேர போராட்டத்திற்கும் பின் அந்த பொருள் செயலிழக்க செய்யப்பட்டது. ஆம், அந்த மூதாட்டி கொண்டு கொடுத்த பொருள், இரண்டாம் உலகப்போரில் ரஷ்யாவால் வீசப்பட்ட கிரனைட் குண்டு. வெடிக்காமல் சுமார் எழுபது வருடங்கள் அந்த மூதாட்டியின் வீட்டிலேயே அந்த கிரானைட் இருந்திருக்கிறது.
இந்த சம்பவத்திக்கு பிறகு.லிவர்குசேன் காவல்துறை அவசர அவசரமாக ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டு இருக்கிறது. அதாவது, இது போன்ற பொருள் ஏதேனும் வீட்டில் இருந்தால் உடனே காவல்துறையை அழைக்குமாறும், தன்னிச்சையாக யாரும் குண்டுகளை நேரடியாக போலீஸ் ஸ்டேசனுக்கு கொண்டு வர வேண்டாம் என்றும் அறிவுறுத்தி இருக்கிறது..  😀😀😀

https://www.facebook.com/stalin.felix.5/posts/10156945232347780

Saturday, October 28, 2017

தமிழ் பெண்கள் அழகா Vs கேரளா பெண்கள் அழகா - நீயா நானா

எப்படியும் மெர்சலை ஓரம் கட்டிவிட்டு, இன்றைய நீயாநானா வில் சரணடையப்போகிறார்கள் நெட்டிசன்கள்...அதுக்கு முந்தி 'கேரளா அழகு' பத்தி என்னோட 2 சென்ட்ஸ்.. தனது டி.ஆர்.பி ரேட்டிங்கை தக்க வைக்க இப்பிடி ஒரு சர்ச்சையான தலைப்பை 'நீயா நானா' குழு வைத்திருக்கிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. 'அழகு' என அவர்கள் சுட்டுவது கூட நிறத்தை முன்வைத்தே என்று நினைக்கிறேன்.
...

கேரளாவில் யூதர்கள் குடியேறி சுமார் இரண்டாயிரம் வருடங்கள் ஆகிறது, யூதா மாப்பிளாக்கள் என அவர்கள் அழைக்கப்படுகிறார்கள். ஐரோப்பியாவின் கிழக்கு பகுதியில் இருந்து கிளம்பிய கிறிஸ்தவர்கள், இங்கிருந்தே பூர்வகுடிகளோடு கலந்து இன்று தோமா கிறிஸ்தவர்கள் என அழைக்கப்படுகிறார்கள். மாப்பிளாக்கள், வணிகம் செய்யவந்த தங்கள் 'அரேபிய' வேர்கள் தொடர்பான கதையாடல்களை மறுப்பதில்லை.

பத்தாம் நூற்றாண்டில் கேரளாவில் காலடிவைத்த ஆரிய நம்பூதிரிகளின் இனக்கலப்பு இன்னொரு புதிய ஒரு சமூகத்தை உருவாக்கி விட்டது. நம்பூதிரிகளுக்கு படுத்து சேவை செய்வது கடவுளுக்கே செய்வது என வரிகளை உருவாக்கி, அது மருமக்கதாயம், தறவாடு என இன்னொரு மோசமான கலாச்சார சூழ்நிலைக்கு அங்கிருந்த பெண்களை கொண்டு சென்றது (இது பற்றி விரிவாக பிறகு எழுதுகிறேன்).

பிறகு கேரளாவுக்கு வந்த, போர்சுகீசியர், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர், பிரெஞ்சு காரார்கள்.... என்ன மூச்சு முட்டுதா? ;-)

ஆக மலைநாட்டு வெத்திலையோடு, சுண்ணாம்பு பாக்கு புகையிலை எல்லாம் போட்டு இடித்து சிவப்பாக்கி விட்டு, தமிழகத்தில் இருக்கும் கம்மாறு வெற்றிலை அழகில்லை என சொன்னால் நியாயமா நியாயம்மாரே..


https://www.facebook.com/stalin.felix.5/posts/10156053821267780

கியூபாவை உலுக்கிய டெங்கு காய்ச்சல்


1980 ஆம் வருடம், அமெரிக்க ப்ளோரிடா மாகாணத்தில் இருந்து ஒரு கப்பல் கியூபா நோக்கி செல்கிறது. கியூபாவில் இருந்த சோவியத் ரஷ்ய படைகளுக்கு எதிராக உபயோகிக்க, 'கிருமி'களை அந்த கப்பலில் எடுத்துச் செல்கிறார் ஒமேகா 7 என்ற தீவிரவாத அமைப்பின் தலைவர் எட்வர்டு அரோசினா.
எட்வர்டு அரோசினா-வுக்கு இந்த கிருமிகளை கொடுத்தனுப்பிய சி.ஐ.எ வின் கணக்கோ வேறுமாதிரி இருந்தது. விளைவு, சுமார் மூன்று லட்சம் கியூபன் மக்களை இந்த டெங்கு காய்ச்சல் பாதிக்கிறது. கியூபா மருத்துவதுறையில் வெகு முன்னேறிய நிலையில் இருந்ததால், 154 மட்டுமே இந்த 'பயோ வார்' ஆல் கொல்லப்படுகின்றனர், இதில் 101 பேர் குழந்தைகள் என்பது கியூப வரலாற்றில் ஒரு பெருந்துயரம்.
.............................
இன்னும், இன்னும் எழுதி பீதியை உருவாக்க விரும்பவில்லை.. ஆனால், 'எல்லாவற்றையும் சந்தேகி' என்ற பேராசான் மார்க்ஸின் வார்த்தைகள் என்னை துரத்துகிறது.


https://www.facebook.com/stalin.felix.5/posts/10156024746812780

https://www.facebook.com/stalin.felix.5/posts/10156024746812780🙄


மதமாற்றம் - பார்ப்பானியம்

'பிஸ்கட்டுக்கும், மாவுக்கும் தானல மதம் மாறினீங்க!' என கல்லூரில் நாட்களில் ஹிந்து(த்துவா) நண்பர்கள் கிண்டல் அடிப்பதுண்டு. நண்பர்களையே எதற்கு மதசர்ச்சை என பலரும் அதை பகடியாக கருதி கடந்து விடுவோம்.. 
Dick Kooiman என்ற ஆய்வாளரின் புத்தகத்தை வைத்து ஒரு ஆய்வுக்கட்டுரை வாசிக்க முடிந்தது. அதில் இருந்த சுவாரசியமான 'மதமாற்ற' வரலாறுகள்...
கார்த்திகை, மார்கழி மாதங்களில் திருவாங்கூர் ஹிந்து கோயில் விழாக்களுக்கு, தாழ்த்தப்பட்ட மக்கள் கூலி இல்லாமல் வேலை செய்யவேண்டியது கட்டாயமானதான இருந்திருக்கிறது. ஆனால், 'கிறிஸ்தவத்தை தழுவிய தாழ்த்தப்பட்ட சமூக மக்கள்' அந்த பணிகளை செய்யவேண்டியது இல்லை என்ற நடைமுறையும் இருந்துள்ளது. ஆக, இந்த கோயில் விழா காலங்களில், கிறிஸ்தவத்தில் இணைபவர்கள் எண்ணிக்கை அதிகமாகவும், விழா முடிந்ததும் அந்த எண்ணிக்கை குறைந்ததாகவும் அந்த ஆய்வு சொல்கிறது.
இன்னொன்று, 1914 ல் கிறிஸ்தவர்கள் மீது இருந்த Poll Tax விலக்கிக்கொள்ளப்பட்டதும், சுமார் ஆயிரம் குடும்பங்கள் கிறிஸ்தவத்தை நோக்கி வந்திருக்கிறார்கள். பின், தாழ்த்தப்பட்ட ஹிந்துக்களுக்கும் அதே வரி விலக்கிக்கொள்ளப் பட்டபோது, அந்த சர்ச்ல் இருந்த குடும்பங்களில் எண்ணிக்கை 20.
............
குமரியின் கிறித்தவ மதமாற்றம் என்பது நீண்டதொரு வரலாற்று பின்புலத்தை கொண்டது. படையெடுப்புகளிலிருந்து காத்துக்கொள்ள, வர்ணாசிரமகட்டுகளில் இருந்து விலக, வரி விலக்குக்காக, கல்விக்காக என ஒவ்வொரு காலத்திலும் மக்கள் மதம் மாறினாலும், 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் அந்த மண்ணின் மரபார்ந்த(சிலவகை மூட பழக்கம் என்றாலும்) விசயங்களை கடைபிடிக்கிறார்கள் என்பது திண்ணம்.
பேசுவோம்..
#Travancore
#திருவாங்கூர்
https://www.facebook.com/stalin.felix.5/posts/10155997266592780

...................................................
இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன், தென் திருவாங்கூரில் தாழ்த்தப்பட்ட பெண்கள், உயர்சாதியின பெண்களை போல சேலை உடுத்த முற்பட்டபோது, பிரச்சனை திருவாங்கூர் அரசவைக்கு சென்று, பின் இங்கிலாந்து வரைக்கும் அந்த பஞ்சயாத்து சென்றது. அரசு மற்றும் உயர்சாதி தரப்பில் இருந்து அதை மறுத்து, 'தாழ்த்தப்பட்டவர்கள் மேலாடை அணியாமல் இருப்பது தங்கள் நாட்டு கலாச்சாரம்' என்றார்கள்.
இன்று, மனிதன் நவீனமாக விட்டான். செயற்கை இதயத்தையே கண்டுபிடித்து விட்டான், செவ்வாய்க்கும் ராக்கெட் அனுப்பி விட்டான்
இவனுங்க என்னன்னா... வே புன்னைகைங்க..

https://www.facebook.com/stalin.felix.5/posts/10155991922732780

வரலாறு என்னும் வளர்ப்புப் பிராணி

வரலாறு என்னும் வளர்ப்புப் பிராணி
.................................................................
திருவாங்கூர் ஆர்க்கியாலஜிக்கல் சீரிஸ்-ல், ஒரு குறிப்பை தேடி துளாவிக்கொண்டிருந்தேன், திடிரென ஒரு வரி என்னை கொஞ்சம் தூக்கி போட்டது.
12 ஆம் நூற்றாண்டு, சரியாக மார்ச் 1173 ஸ்ரீ வீர் உதய மார்த்தாண்ட வர்மன் என்ற அரசன் வேணாட்டை (பிற்கால திருவாங்கூர், இன்றைய கன்னியாகுமரி) ஐ ஆண்டு வருகிறார். அந்த வேணாட்டின் அப்போதைய தலைநகராக இருந்த இடம் 'குழிக்கோடு'.
Some Early Sovereigns Of Travancore எழுதிய சுந்தரம் பிள்ளையும் 'குழிடைகூறு' என முன்வைக்கிறார். திருவாங்கூர் குறித்து இன்று எழுதும் பெரும்பாலான எழுத்தாளர்கள், தரவுகளாக கையாளும், 'திருவாங்கூர் ஸ்டேட் மானுவேல்' எழுதிய நாகம் ஐயா குழிடைகூறு தான் பிற்காலத்தில் குழிகோடாக திரிந்ததாக எழுதுகிறார்.
சரி அதற்க்கு இப்போ என்ன என்கிறீர்களா? குழிக்கோடு' என்னுடைய சொந்த மண்; என் தந்தைவழி பாட்டன், பூட்டன், ஓட்டன் வசித்த மண். சிரிக்கவா, அழவா, பெருமிதப்படவா, சலிப்படையவா என்ற உணர்வு.
என் அனுபவத்திலும், முன்னோர்களிடம் இருந்து கேட்ட செவிவழி கதைகளிலும் எங்கள் மண்ணில் ஆட்சியாளர்கள் இருந்ததாக நான் கேள்விப்பட்டதே இல்லை. ஒரு அம்மன் கோயில் தவிர, வேறு எந்த கட்டுமானங்களுமே இல்லாத விவசாய மண் அது.
வரலாறு இப்படி தான், யார் யாருக்கு எது எது தேவையோ, அப்போது அதை கையில் தூக்கி எடுத்து அரவணைத்துக்கொள்கிறார்கள் தங்கள் வீட்டு செல்லப்பிராணிகளை போல. அது பக்கத்து வீட்டுக்காரனை பார்த்து முறைக்கும் போது தான், நமக்கு வேடிக்கை காத்திருக்கிறது.

https://www.facebook.com/stalin.felix.5/posts/10155986799712780

இரணியல் பாண்டியர் கோட்டை

1956, மலையாளி ஆதிக்கத்தை உடைத்து தாய் தமிழகத்துடன் தென் திருவாங்கூர்(கன்னியாக்குமரி) இணைவதற்கு சரியாக மூன்று மாதங்களுக்கு முன்பு, பாராளுமன்றத்தில் குமரி இணைப்பு தொடர்பாக ஒரு அனல் பறக்கும் விவாதம் நடந்துக்கொண்டிருந்தது. விவாதத்தில் குறுக்கிட்ட, ஸ்ரீ அச்சுதன் என்ற மலையாள எம்பி "குமரி தமிழகத்துடன் இணையும் போது அங்கிருக்கும் மலையாளிகளின் நிலை என்ன?" என ஐயா மார்ஷல் நேசமணியை நோக்கி கேட்கிறார்..
ஐயா நேசமணி, "நாங்கள் எதுவெல்லாம் எங்களுக்கு வேண்டும் என்கிறோமோ, அது எல்லாம் இங்கிருக்கும் மலையாளிகளுக்கும் பகிரப்படும். எங்கள் தாய்மொழி தமிழ் மொழியாக இருந்த போதும், சுமார் நான்கு வருடங்களுக்கு முன்பு வரை, நாங்கள் மலையாளத்தில் படிக்க நிர்பந்திக்கப்பட்டோம். ஆனால், குமரி-தமிழகம் இணைப்புக்கு பின் இங்கிருக்கும் மலையாளிகள் அவர்கள் தாய் மொழிகளில் படிப்பதை உறுதி செய்யும் விதத்தில் சட்டம் ஒன்று இயற்றப்பட வேண்டும்" என்றார். அவ்வளவு நூற்றாண்டு கால துயரத்துக்கு பின்னரும், மொழி சிறுபான்மையினரை நோக்கி யோசித்த உன்னதமான மனது , எங்கள் குமரி தந்தையின் மனது. இன்றளவும், குமரியில் மொழி சிறுபான்மையினருக்காக 'மலையாளம்' தனியாக கற்பிக்கப்படுகிறது.
............
இனி விசயத்துக்கு வருகிறேன்,
குமரி வீரத்தமிழர் முன்னணியை' சேர்ந்த நண்பர்கள் சிலர், சிதைந்த நிலையில் இருக்கும் இரணியல் அரண்மனைக்கும், பாண்டியருக்கும் உள்ள தொடர்பை கண்டறிகிறார்கள். அதற்கான ஆதாரத்தை திரட்டியதும், குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று கோட்டையை விரைவாக செப்பனிட கோரிக்கை வைக்கின்றனர். அவ்வளவு தான், இத்தனை நாள் 'இரணியல் கோட்டைக்கும், மலையாளிகளுக்கும்' முடிச்சுப்போட்டுக் கொண்டிருந்த 'குமரி' மலையாளிகளுக்கு கோபம் வர, அவர்கள் ஆற்றிய எதிர்வினை தான் கீழே உள்ள புகைப்படம்.
'இரணியல் பாண்டியர் கோட்டை' என நம்மவர்கள் முன்வைத்ததை 'இரணியல் "பாண்டி" பேலஸ்' எனவும், 'கண்டன் வீர நாராயண பாண்டிய' அரசன் என நம்மவர்கள் முன்வைத்ததை 'வீர நாராயண பாண்டிய' "கொத்தனார்" என நக்கல் அடித்து அவர்களது 'கன்னியாகுமரி மலையாளிகள்' முகநூல் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்கள்.
.............
அன்பு மலையாளிகளே,
ஈழ போர் உச்சத்தில் இருந்தபோது, .போரை நிறுத்தக்கோரி கு முத்துக்குமார் என்ற தமிழ் சகோதரன், கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு,தன் உடலையே தீக்கு இரையாக்கினான். அந்த கடிதத்தில் வரும் சில வரிகளை கீழே கொடுத்துள்ளோம்.
//
தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே…
உங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும்,பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும் //
ஆம், நீங்கள், உங்கள் குழந்தைகள், உங்கள் பெண்கள் என அனைவரும் கேரளத்தில் வாழ்வதை விட குமரியில் அதிக பாதுகாப்புடனே வாழ்கிறீர்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.பாண்டியர் கோட்டை பற்றி உங்களுக்கு முரணான பார்வை இருந்திருந்தால், ஒரு நீண்ட உரையாடலுக்கு நண்பர்கள் தயாராகவே இருந்தார்கள், இருக்கிறார்கள். ஆனால், நீங்கள் வழக்கம் போல உங்கள் மேட்டிமையை காட்ட "பாண்டி" "கொத்தனார்" என கிண்டலடித்து, வன்மத்தோடு சிரித்துக் கொண்டு இருக்கின்றீர்கள்.
பாண்டியர்களை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?
நெடுஞ்சடையன் வேணாட்டை அதகளம் செய்து, நூற்றுகணக்கான யானைகளையும், குதிரைகளையும் பறித்து விழிஞத்தை நொறுக்கி எடுத்த கதை உங்களுக்கு தெரியுமா?
பரந்தக பாண்டியன் படையெடுத்து வந்து துவம்சம் செய்து, பின் அன்றைய அனந்தபுரம்(இன்றைய திருவனந்தபுரம்)தில் இருந்த கோயிலுக்கு தங்க விளக்கு வாங்கிக்கொடுத்த கதை தெரியுமா?
இன்னும் பல வரலாற்று கதைகள் உண்டு. நூற்றுக்கணக்கான கல்வெட்டுகளும், பட்டையங்களும் கேரளாவில் பாண்டியர் அடையாளங்களை சொல்கிறது. உங்கள் திருவனந்தபுரம் அருங்காட்சியகத்திலும் கொஞ்சம் உள்ளது, தேடி வரலாற்றை படியுங்கள்.
இறுதியாக,
நம்பூதிரிகளை, "குனிந்தும், படுத்தும்" கவனித்து, அரசவை மற்றும் அதிகார செல்வாக்கை உருவாக்கி, அந்த பலத்தில் தனக்கு கீழ் இருந்தவனை சவுட்டி 'யாமானே' என கதற வைத்த ஜென்மிகள் காலமில்லை இது. நீண்ட போராட்டங்களுக்கு பின், கடும் உழைப்பாலும், கல்வியாலும் முன்னேறி பொருளாதார தன்னிறைவை எட்டிய தமிழ் சமூகங்கள் தன் முன்னோர் வரலாறை மீள்வாசிப்பு செய்யும் காலம். அந்த சமூகங்கள் வசிக்கும் மண்ணில் இருந்து தான் இப்படி நக்கல் அடித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று உணருங்கள்

கடந்தகால வரலாறுகள் தொடர்பாக உரையாட நாங்கள் எப்போதும் தயாராகவே உள்ளோம். இதை இப்படி வன்மத்தை தான் தொடர்வீர்கள் என்றால், இப்போது எழுதிக்கொண்டிருப்பது போல எப்போதும் எங்கள் பேனா முனை மட்டும் உங்களுக்கு பதில் சொல்லிக்கொண்டு இருக்காது.
இப்படிக்கு,
இலட்சக்கணக்கான குமரி தமிழர்களின் ஒருவன்
ஸ்டாலின் பெலிக்ஸ் ம

https://www.facebook.com/stalin.felix.5/posts/10155978231352780

.....................
இருபதாம் நூற்றாண்டு துவக்கத்தில் Rev. சாமுவேல் மீட்டீர் எழுதிய The Gospel of south india என்ற புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் இது.
திருவனந்தபுரம் கோட்டையில் இருந்த 'ஐந்து பாண்டியர்' சிலையில் ஒன்று என அந்த குறிப்பு சொல்கிறது. அப்படியென்றால், அந்த சிலை இப்போது எங்கே உள்ளது?
பாண்டியர் படம் திருவனந்தபுரம் கோட்டையில் இருக்கிறது என்றால், முந்தைய பாண்டியர் செல்வாக்கு எந்த அளவுக்கு இன்றைய கேரளாவில் இருந்தது என்பதெல்லாம் ஆய்வுக்கு உட்படுத்தப் பட வேண்டிய ஒன்று..
கண்டன் வீரநாராயண பாண்டிய கோட்டையை புதுப்பிக்க நண்பர்கள் கோரிக்கை வைத்ததும், அதை நக்கல் அடித்து 'இரணியல் பாண்டி அரண்மனை' என ஏழுதும் கன்னியாகுமரி மலையாளிகளுக்கு, திருவனந்தபுரத்தில் இருப்பதும் எங்கள் அடையாளமே என திருப்பி அடித்தால் தான் அடங்குவார்கள் போல..
https://www.facebook.com/shares/view?id=1979806868952694

ஜெர்மனி தேர்தல்2017

ஹிட்லரின் வீழ்ச்சிக்கு பின், சுமார் அறுபது ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக தீவிர வலதுசாரி கட்சி(AFD) ஒன்று ஜெர்மன் பாராளுமன்றத்தில் 'எதிர்க்கட்சி'யாக நுழைய இருக்கிறது.
தஞ்சம் புகுந்திருக்கும் இலட்சக்கணக்கான அகதிகளுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இது நல்ல செய்தி அல்ல..
#ஜெர்மனி_தேர்தல்2017
#Bundestagswahl17
#btw17

https://www.facebook.com/stalin.felix.5/posts/10155971856007780

.............................
ஜெர்மனியின் இரண்டாவது பெரிய கட்சியான SPD, மெர்கலின் CDU வோடு கூட்டணி ஆட்சி அமைக்கப்போவதில்லை என அறிவித்து இருக்கிறது.
இனி, CDU வோடு அணி சேர மிஞ்சி இருப்பது FDP (10%) யும், Green பார்ட்டியும்(9%) தான். இரண்டு கட்சிகளுமே கொள்கை அளவில் முரண்பாடுகளை கொண்ட கட்சிகள். இரண்டுமே, கூட்டணி ஆட்சிக்காக தங்கள் கொள்கைகளை தளர்த்திக் கொள்ளப்போவதில்லை என அறிவித்து இருக்கின்றன.
இடியப்ப சிக்கல் காத்திருக்கிறது முன்னாள் இயல்பியலாளரான மெர்க்கலுக்கு.. 
#ஜெர்மனி_தேர்தல்2017
#Bundestagswahl17
#btw17
#Jamaica_Coalition

https://www.facebook.com/stalin.felix.5/posts/10155972554402780
........................
ஜெர்மன் சுவர் வீழ்ந்து சுமார் இருபத்தி ஐந்து ஆண்டுகள் ஆகி விட்ட பிறகும், கிழக்கு ஜெர்மானியர்களுக்கும் மேற்கு ஜெர்மானியர்களுக்கும் இருக்கும் 'மன' இடைவெளி இந்த தேர்தலிலும் வெளிப்பட்டு இருக்கிறது.
நாஜிக்களின் வீழ்ச்சிக்கு பிறகு, கிழக்கு ஜெர்மனி சோவியத்தின் பக்கம் போய்விட, மேற்கை அமெரிக்காவும், பிரான்சும் பங்கிட்டுக் கொண்டன. சோவியத்தின் நிழல், ஸ்டேசி, ஸ்டாலினிசம் என இறுக்கமான ஒரு சூழல் கிழக்கில் இருக்க, மேற்கில் தாராளமயமும் வேலைவாய்ப்புகளும் நிரம்பி வழிகிறது. கியூபா, வியட்நாம் என ஒருசில அயலாரை கம்யூனிச கிழக்கு ஜெர்மனி 'guest'களாக கொண்டு வர, மேற்கிலோ துருக்கியில் இருந்தும், பிற ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் குவிய துவங்குகிறார்கள்.
கிழக்கும் மேற்கும் இணைத்த பிறகு, கிழக்கு ஜெர்மனியில் இருந்து ஆயிரக்கணக்கான ஜெர்மானியர்கள் மேற்கு நோக்கி இடம்பெயர்கிறார்கள். ஆயினும் ஜெர்மானியர்கள் தவிர, புதிய மனிதர்களை அவர்கள் மனம் ஏற்றுக்கொள்ள அவர்கள் வளர்ந்த சூழல் பெரும் தடையாக இருக்கிறது.
2015 ல் ஜெர்மனி நோக்கி அகதிகள் வருகை அதிகரிக்க, "முணுமுணுப்புகள்" அதிகம் கேட்டது கிழக்கு ஜெர்மனியர்களிடமிருந்தே. இந்த தேர்தலிலும் கிழக்கு ஜெர்மனியர்களின் எண்ணவோட்டம் ஓட்டுக்களில் பிரதிபலித்து இருக்கிறது. 2013 ல் துவங்கப்பட்ட தீவிர வலதுசாரி கட்சியான AFD க்கு மேற்கு ஜெர்மனியில் இருந்து 10 ஓட்டுகள் கிடைத்தால், 20 ஓட்டுக்கள் கிழக்கு ஜெர்மனியில் இருந்து கிடைத்திருக்கிறது. அதாவது 1:2 என்ற விகிதத்தில். நான்கே ஆண்டுகளில் ஜெர்மனியின் மூன்றாவது பெரிய கட்சியாகி, பாராளுமன்றத்தில் முதன்முதலாக நுழையப்போகிறார்கள் AFD யினர்.
அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு, ஜெர்மனிக்கும் ஐரோப்பாவுக்கும் நிறைய திருப்பங்களை தரக்கூடிய அரசியல் காத்திருக்கிறது என்பது மட்டும் திண்ணம்.

தென் திருவாங்கூர் -குறிப்புகள்

பழைய திருவாங்கூரில் மிசனரிகளுக்கும், திருவாங்கூர் அரசுக்கு ஆதரவளித்த திருவாங்கூர் பிரிட்டிஷ் ரெசிடண்டுகளுக்குமான உறவு சுவாரசியமானது. தீவிரமாக தமது மதத்தை பரவ செய்யும் முனைவில் மிசனரிகள் ஒரு பக்கம் இருக்க, அந்த மதம் மாறியவர்களை எப்படி தங்கள் அரசியல் லாபிக்காக உபயோகிக்கலாம் என பிரிட்டிஷார் முயன்றது இன்னொரு பக்க அரசியல்.
ஆர்எஸ்எஸ் அன்பர்கள் தான் இந்த கருத்தில், 'ஆங்கிலேயர்களையும், மிசனரிகளையும்' ஒரே முடிச்சு இட்டு தான் விவாதிப்பார்கள் என்றால், தீவிர கிறிஸ்தவ நம்பிக்கையாளர்கள் பெரும்பாலும் அதே கருத்தையே நம்பி வருகிறார்கள்.
சரி, இனி வரலாறு..
திருவாங்கூருக்கான முதல் மிசனரி றிங்கல்தோபே வந்த போது, அவருக்கான பல உதவிகளை செய்தது அன்றைய திருவாங்கூரின் பிரிட்டிஷ் ரெசிடண்டுகளான மேஜர் மெக்கலேவும், கர்னல் மன்றோவும் தான். 1858/1859 ல் கிறிஸ்தவ சாணார்(நாடார்)களுக்கும், நாயர்களுக்குமான சமூக அந்தஸ்து போட்டி தீவிரமாக வெடிக்கிறது. நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கவே அனுமதிக்கபடாத கிறிஸ்தவ சாணார்களுக்கு உதவ மிசனரிகள் முன்வருகின்றனர். சாணார் முதலானோர் தோள்சீலை(litrally, its wearing blouse) அணிவது பண்பாட்டு சீரழிவு என்று உயர்சாதியினர் குமுறி பஞ்சாயத்து திருவாங்கூர் அரசவைக்கு போகிறது, பிறகு இங்கிலாந்து வரைக்கும்.
திருவாங்கூர் மிசனரிகள் இங்கிருந்த பிரிட்டிஷ் ரெசிடென்டான ஜெனரல் குல்லனின் உதவியை கேட்கின்றனர். அவரோ மறுக்கிறார்.. எந்த நாட்டின் உள்கலாச்சாரத்திலும் நாங்கள் தலையிட மாட்டோமென இங்கிலாத்தில் இருந்து அறிக்கை வர கிறிஸ்தவ சாணார்கள் அந்த முயற்சியில் தோற்கிறார்கள்.
பிரிட்டிஷார் அதிகமாக மதநம்பிக்கை கொண்ட கிறிஸ்தவர்கள் மீது ஆதிக்கம் செலுத்த முனைப்பு காட்டுகிறார்கள் என்று அவதானித்த மிசனரி ஜேம்ஸ் டாவ்சன் திருவாங்கூரில் பணிபுரியும் வாய்ப்பை மறுத்தது இன்னொரு பக்க வரலாறு..
.......................
வரலாற்றை ப்ளாக் & வைட்டா பார்க்காம ஆரோக்கியமா விவாதிச்சா தொடர்ந்து பேசலாம் மக்கா...

குளச்சல் போர்

பதினெட்டாம் நூற்றாண்டின் மத்தியில் திருவாங்கூரை படையெடுக்கும் எண்ணத்துடன் டச்சு கப்பல் ஒன்று குளச்சல் நோக்கி வந்து கொண்டு இருந்தது. ஒற்றர்கள் வழி தகவலை அறிந்த திருவாங்கூர் மன்னர் மார்த்தாண்டவர்மா, தனது தளபதியை அழைத்து படை திரட்ட சொல்கிறார்.
திருவாங்கூர் படையில் இருந்த மீனவ வீரர்களும், உள்நாட்டின் களரி ஆசான்களும் குளச்சலில் அணி வகுக்கிறார்கள். உள்ளூரில் வளர்ந்த நீண்ட பனை மரங்கள் வெட்டப்பட்டு குளச்சல் கடல் பகுதிக்கு கொண்டுவரப்படுகிறது. பனம் தடிகள், பீரங்கிகள் போல நிறுத்தப்பட்டுகின்றன.
குளச்சலை நெருங்கும் டச்சுப்படை, கடற்கரையில் இருப்பது பனை தடிகள் என அறியாமல் திகைத்து போய் கப்பலை நிறுத்தி நங்கூரம் இடுகிறார்கள். சூழ்நிலையை புரிந்துக்கொண்ட மீனவ அணி, கடலில் முங்கி போய், கப்பலில் ஓட்டை இடுகிறார்கள். கப்பலில் தண்ணீர் ஏறி கப்பல் சரிய, உள்ளூர் ஆசான்கள் படகில் வந்து டச்சு வீரர்களுடன் சண்டையிட்டு, வீழ்த்தி தளபதி டெலனாயை சிறை பிடிக்கிறார்கள்.. இந்த சண்டைக்கு தலைமை தாங்கிய XXXXXXX அரசரின் கைகளால் பட்டையம் பெறுகிறார்....
.......................
கேட்க்கும் போதே சிலிர்ப்பாக இருக்கிறது இல்லையா? சுயசாதி பெருமையை நிலைநிறுத்த, பொய்யும் புரட்டும் சேர்த்து இன்றைய வரலாறுகள் இப்பிடி தான் எழுதப்பட்டுக்கொண்டு இருக்கிறன.
உண்மையில் "குளச்சல் போர்" என்று ஒன்று கடலில் நடக்கவே இல்லை. டச்சு வீரர்கள் சாவகாசமாக இறங்கி அரண் அமைத்து போர் தொடுத்தார்கள். இன்று "முதல் சுதந்திர போர்" என #சிலர்# வருணிக்கும் இந்த போரில், ஐரோப்பிய வீரர்களும் திருவாங்கூர் படையில் இருந்தார்கள் என்பது ஒரு வேடிக்கையான வரலாறு.
.......
நான் சிறுவனாக இருந்த போது, இந்த கதையில் இன்னொரு கிளை கதையும் சொல்லப்பட்டு வந்தது. 'மார்த்தாண்டவர்மா மந்திரவாதிகளை வைத்து மந்திரம் செய்து, வண்டுகளை பறக்க செய்து, அது டச்சு படைகளை தாக்கி அவர்களை நிலை குலைய வைத்தது' என அந்த கதை நீளும்.. 
இந்த நவீன காலத்தில் மந்திரவாதிகளின் எண்ணிக்கை குறைந்து விட்டதால், அந்த கதை பகுதியை தறித்து விட்டு இன்று "ஆனந்தமாய்" குளச்சல் போர் குறித்து இன்னொரு கதையை பரப்பி வருகிறார்கள்.. பாவமாய் இருக்கிறது. 😁
2

https://www.facebook.com/stalin.felix.5/posts/10155953682537780
...............
குளச்சல் போர் - தொடரும் விவாதம்..
ஒன்றை மீண்டும் தெளிவுபடுத்த விரும்புகிறேன். எந்த சமூக, வரலாற்று பின்புலத்தில் நீங்கள் நின்று விவாதிக்கிறீர்களோ, அதே வரலாற்று சங்கிலியில் நானும் ஒரு கண்ணியே..
"திருவாங்கூர் கோயில் பொக்கிஷங்கள் அனைத்தும் அரசாண்ட எங்கள் முன்னோர்களிடமிருந்து திருடப்பட்டது" என்பது உங்கள் பார்வை என்றால், "திருவாங்கூர் கோயில் பொக்கிஷங்கள் எங்கள் முன்னோர்களின் மீது திணிக்கப்பட்ட கடும் வரிகள் மூலம் உருவானது" என்பது எனது பார்வை. இரண்டிற்குமான வித்தியாசத்தை புரிந்துக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
அடுத்து, குளச்சல் போர் நடந்ததாக கூறப்படும் காலட்டத்தில் திருவாங்கூர் அரசு ஆங்கிலேயே நாட்காட்டி முறைகளை பின்பற்றவே இல்லை. 'குளச்சல் போர் ஜூலை 31 1741 அன்று முடிந்தது' என இன்று நீங்கள் வைக்கும் தரவுகள் கூட, ஆங்கிலேய அரசு கடிதங்கள் வழி கிடைப்பவை ( கவனிக்க டச்சு அரசு கடிதங்கள் அல்ல.).
மீண்டும்......... இந்த வரலாற்றில் உங்களை போல நானும் ஒரு பகுதியே. 'பனம் தடி அடுக்கி, பீரங்கி பாவனை காட்டிய' வரலாறுகள் அடுத்த தலைமுறைக்கு கடத்தப்பட்டு, அவர்கள் நம்மை எள்ளி நகையாடிட கூடாது என்பதில் மிக கவனமாக இருக்கிறேன்..
கலங்கி தான் தெளிய வேண்டுமென்றால், வாருங்கள் கலங்கி தெளிவோம். யாரையும் காயப்படுத்தாமல் உரையாடுவோம்.
3

https://www.facebook.com/stalin.felix.5/posts/10155959899032780

தோள்சீலை கலகம் - திருவாங்கூர் - நாடார்கள் - திராவிட அரசியல் - சில வரலாற்று கற்பிதங்கள்

கற்பிதம் 1: இந்த புகைப்படத்தில் இருக்கும் பெண்கள் நாடார்கள்.
பதில்: தவறு. இந்த புகைப்படம் மட்டுமில்லை, இணையத்தில் "நாடார் பெண்கள்" என பகிரப்படும் மார்பு கச்சை அணியாமல் இருக்கும் பெருவாரியான பெண்களின் புகைப்படங்கள், இலங்கையின் ரோடியா சமூக மக்களின் புகைப்படங்கள்.
கற்பிதம் 2: நாடார்களுக்கு மார்பு துணி அணிய உரிமை வாங்கி கொடுத்தது திராவிட அரசியல்.
பதில்: தவறு. ஐயா வைகுண்டரின் தொடர்ச்சியான சுயமரியாதை பரப்புதல்களும், கிறிஸ்தவ மிசனரிகளின் பணிகளும், மக்களின் தொடர் போராட்டங்களுமே மார்பு துணி அணியும் உரிமையை பெற்றுக் கொடுத்தது..




...................
முந்தைய கற்பிதத்தை தொடரும் கேள்விகள்.
கேள்வி 1: நாடார் பெண்கள் மார்பை மறைக்க அனுமதிக்கபட்டார்களா?
அனுமதிக்கப்படவில்லை.
மார்பை மறைக்காமல் இருப்பது ஒரு காலகட்டத்தில் சமூக இயல்பாகவே இருந்துள்ளது. சமூகத்தில் மேன்மக்களாக கருதப்பட்ட உயர்சாதியின பெண்கள், தங்கள் மார்புகளை மறைத்து உடுத்த, அது 'மேன்மக்கள் ஆகி வரும்' அடுத்த நிலை சாதிகளுக்கும் அந்த பழக்கம் பரவுகிறது. ஆக, தன் சமூக பெண்களை போல எப்படி ஒரு தாழ்ந்த பெண்களும் மார்பை மறைக்கலாம் என்ற ஆண்டகைகளின் கோபம், கீழே உள்ள சமூகத்தை நோக்கி திரும்ப.. இயல்பாக இருந்த ஒரு சமூக பழக்கம் கட்டாயமாக்கப்பட தொடங்குகிறது. இந்த புள்ளியில் தான் ஐயா வைகுண்டரும், கிறிஸ்தவ மிசனாரிகளும் வருகிறார்கள். அதை தொடர்ந்து நிகழ்ந்தது அனைத்தும் மெய்கூச்சரியும் வரலாறு.
குமரி கோயிலுக்கு வந்த விவேகானந்தர், அங்கு இருந்த பெண்களை பார்த்து சொன்ன வாக்கியம் "பைத்தியக்காரர்களின் நாடு".. அங்கே மார்பு மறைக்காமல் இருந்த பெண்கள் நாடார்கள் அல்ல, நாயர்கள். ஆக, திருவாங்கூரின் பெருவாரியான இன பெண்களுக்கு நிகழ்ந்த வரலாற்று துயரம் இது.
                                                                 (நாயர் சமூக பெண்)

கவனிக்க, இங்கே நாயர் பெண்கள் நம்பூதிரிகளுக்கு முன்பும், கோயில்களிலும் தான் மார்பை மறைக்க அனுமதிக்கப்படவில்லை, பொதுவில் கச்சை அணிய அவர்களுக்கு உரிமை இருந்தது.


                                                               (நாயர் சமூக பெண்கள்)


கேள்வி 2: நாடார்களுக்கு திராவிட அரசியலின் பங்களிப்பு என்ன?
இந்தியாவுக்கு மதம் பரப்ப வந்த மிசனரிகள் எங்கெல்லாம் பலமாக இருந்தார்களோ, அங்கெல்லாம் பள்ளிக்கூடங்கள் கட்ட துவங்கினார்கள். தமிழகத்தில் குமரியும், இந்தியாவில் கேரளாவும் கல்வியில் ஏன் இவளவு முன்னணியில் இருக்கிறார்கள் என்பதன் பின்னணி இது தான்.
ஆக, மிசனரிகளின் நேரடி பழக்கத்தாலும், கல்வியாலும் முன்னேறி சென்ற ஒரு நாடார்தலைமுறை பெரும்செல்வம் சேர்த்து 'உயர்சமூகம்' ஆகி விட, மிசனரிகளின் நேரடி பழக்கமில்லாமல், அவர்கள் கொடுத்த கல்வி மட்டுமே கிடைத்த ஒரு தலைமுறை உருவானது. அவர்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது திராவிட இயக்கமும், இட ஒதுக்கீடும்.
குமரி-தமிழ்நாடு இணைப்பின் போது காமராசர், "தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளை விட குமரி வளர்ச்சி அடைந்த பகுதியாக இருக்கிறது. எனவே உங்கள் பகுதிக்கு எங்களால் அதிகமாக உதவ முடியாது. விருப்பம் இல்லாவிட்டால் நீங்கள் கேரளாவுடன் இணைந்துக்கொள்ளுங்கள்" என்றார்.
ஒரு தேர்ந்த சமூக அரசியலை புரிந்து கொண்ட ஒருவரால் மட்டுமே இப்படி உரையாற்றியிருக்க முடியும். இதையும் "காமராசர் கேரளாவோடு போக சொல்லி விட்டார், குமரி கிறிஸ்தவர்களை அவருக்கு பிடிக்கவில்லை...... " என இன்றும் அவருக்கு எதிராக சடைபின்னிக் கொண்டிருக்கிறார்கள் சில கிறிஸ்தவ அறிவிலிகள்.
....................
சமூக நீதியை விரும்பும் குமரியை சார்ந்த புதிய தலைமுறைக்கும் நான் இப்போதைக்கு சொல்ல விரும்புவது ஒன்றே ஒன்று தான்... "சான்றோர் தான் சாணான் ஆயிற்று..... மூவேந்தர்களின் நேரடி வாரிசுகள் நாங்கள்..... " என்பது போன்ற கற்பிதங்களை உதறித் தள்ளுங்கள். இது போன்ற வீண் பிம்பங்கள் மருந்துக்கு கூட உங்கள் முன்னேற்றத்திற்கு உதவ போவது இல்லை.
#Travancore
#திருவாங்கூர்
16/09/2017
https://www.facebook.com/stalin.felix.5/posts/10155947188602780

Saturday, November 26, 2016

ட்ரம்ப் என்ற 'வந்தேறி' !?

1885, தனது பதினாறாவது வயதில் ப்ரேடரிக் ட்ரம்ப் ஜெர்மனியில் இருந்து நியூயார்க் வந்து ஒரு முடி திருத்துனராக பணி புரிகிறார். சில வருடங்களில், தான் சேமித்த பணத்தை வைத்து, சியாட்டில் நகரில் ஒரு சிற்றுண்டி உணவகம் ஆரம்பிக்கிறார். சரியாக ஏழு ஆண்டுகள் கழித்து, 1892 ஆம் வருடம் அவருக்கு அமெரிக்க குடியுரிமை கிடைக்கிறது. உணவகத்தோடு மட்டுமல்லாது பெண்களை வைத்தும் தொழில் செய்ய, கைகளில் பணம் புரள்கிறது. மேலும் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு, தனது 32 ஆவது வயதில் பெரும்செல்வந்தராக ஜெர்மனி திரும்புகிறார்.
ஜெர்மனியில் எலிசபத் என்ற பெண்மணியை திருமணம் செய்து மீண்டும் அமெரிக்கா திரும்புகிறார். எலிசபத்துக்கோ நியூயார்க் பிடிக்கவில்லை; போதாததுக்கு அவருடைய வீட்டு நினைவுகள் வாட்டி எடுக்க, 1904ல் தம்பதியாக மீண்டும் ஜெர்மனி திரும்புகிறார்கள். சில மாதங்களில், ட்ரம்ப் ஜெர்மன் குடியுரிமைக்காக விண்ணப்பிக்கிறார். அவர் தங்கிருந்த நகரின் குடியுரிமை அதிகாரிகள் அவரது விண்ணப்பத்தை நிராகரித்து, "மூன்று மாத காலத்துக்குள் ஜெர்மனியை விட்டு வெளியேறிட வேண்டும்" என்று எச்சரிக்கை கடிதம் அளிக்கின்றனர்.
ட்ரம்ப், பவேரியா மாகாணத்தின் அரச குடும்பத்திடம் கோரிக்கை வைக்கிறார், அங்கேயும் அவரது கோரிக்கை நிராகரிக்கபடுகிறது. தோன்றுபோன மனநிலையோடு, ஜூலை 1, 1905 ஹாம்பர்க் துறைமுகத்திலிருந்து எலிசபத்தும்-ட்ரம்பும் நியூயார்க்குக்கு கப்பல் ஏறுகின்றனர். சரியாக மூன்று மாதம் கழித்து, ப்ரேடரிக் ட்ரம்ப் ஜூனியர் பிறக்கிறார். அட, அதாங்க நம்ம டொனால்ட் ட்ரம்போட அப்பா..
டெயில்பீஸ் : டொனால்ட் ட்ரம்போட தாத்தா, ஏன் ஜெர்மனியில் இருந்து வெளியேற வேண்டிய சூழ்நிலை வந்தது, என நான் சொல்லவே இல்லியே?. அந்த காலத்தில் பவேரியா மாகாணத்தில், கட்டாய ராணுவ பணி இருந்தது. அதிலிருந்து தப்பிக்கவே, தாத்தா ட்ரம்ப் நியூயார்க் ஓடி செல்கிறார்.
நாட்டுக்கு செய்யவேண்டிய கடமையை சரிவர செய்யவில்லை என்று, ஜெர்மனியிலிருந்து துரத்தப்பட்ட ஒரு மனிதரின் பேரன், இன்று தனது நாட்டில் இருந்து சிறுபான்மையினரை துரத்துவேன் என சொல்லி ஆட்சியை கைப்பற்றி இருப்பது தான் வரலாற்று சுவாரசியம்.