Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts

Sunday, February 10, 2019

சாமிக்கு படைத்ததை உணவை ஏன் மறுக்கிறார்கள் கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும்?

சாமிக்கு படைத்த பொங்கலையும், பலகாரத்தையும் கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்கள் வாங்க மறுப்பது ஏன்?
----------------------------
மதம் தொடர்பான விவாதம் கொஞ்சம் இணையத்தில் வந்தால் போதும், "கிறித்தவனும், இஸ்லாமியனும் தர்ற பொருட்களை நாம தின்னனும். ஆனா, நாம கொடுத்தா தின்னமாட்டனுங்க... " என பலரும் சமூகவலை தளங்களில் பெருமுவதை பார்க்க முடியும்.
இஸ்லாமிய மற்றும் கிறிஸ்தவ மதங்கள் SEMITIC RELIGIONS, அதாவது ஒற்றை கடவுளை மையமாக கொண்டு இயங்குபவை. அங்கே, கடவுளுக்கு என்று ஏதும் படைக்கபடுவதும் இல்லை, பூஜிக்கபாடுவதும் இல்லை, அவை ஆராதிக்கப்படுவதும் இல்லை. அப்படி செய்யப்படுபவைகளை பாவமாக, பிசாசுக்கு படைக்கப்பட்டதாக அவர்களுக்கு போதிக்கப்படுகிறது. ஒற்றை கடவுள் நம்பிக்கைகளில் வளரும் ஒருவர் அந்த நம்பிக்கையிலே வளர்கிறார். இஸ்லாமியர்க்கு குரானும், கிறிஸ்தவர்களுக்கு பைபிளும் மதநூல்களாக இருக்கிறது.
சரி, இனி இந்து மதத்திற்கு வருவோம். இங்கே யார் இந்து? கிறிஸ்தவ, இஸ்லாமியர் அல்லாத எவரும் இங்கே இந்து தான். முன்னோர் வழிப்பாட்டில் நம்பிக்கை கொண்டிருப்பவரும் இந்து தான். கல்லை கும்பிடாதே என்று சொன்ன ஐயா வைக்குண்டரும் இந்து தான். நாங்கள் மட்டுமே தலைமுறை தலைமுறையாக லட்டு உருட்டுவோம் என்று மிரட்டும் திருப்பதி கோயில் பிராமணரும் இந்து தான்.
இங்கு இருக்கும் பழங்குடி தொன்மமும், பெருதெய்வ வழிபாட்டில் இருந்து சிறு தெய்வ வழிபாடு வரை தொடரும் சில வழிப்பாட்டு கண்ணிகள் தான் இங்கே இந்துக்கள் என்று கோடிக்கணக்கானோரை இணைக்கிறது. இவை எல்லாவற்றிக்கும் மேலாக 'இந்தியா' என்ற ஐடியாலஜியின் மீது நின்று அரசியல் செய்கிறது பிராமணீயம். அது இந்துக்களை பிரியவோ, திரியவோ விடாது. இவற்றை எல்லாம் மீறி தான் குமரியில் அய்யாவழியினர், தங்களை தனி மதமாக அறிவிக்க கோருகிறார்கள். கர்நாடகா லிங்கத்தார் பெரும் போராட்டமே 'தனி மதத்திற்காக' நடத்தி வருகிறார்கள்.
கொஞ்சம் ஈழத்தை பாருங்கள். இதே வழிபாட்டு முறைகளை கொண்டுள்ள மக்கள் தங்களை 'சைவம்' என்று சொல்லிக்கொள்கிறார்கள், 'இந்து' என்றல்ல.
.............
ஆக, இங்கே ஒருவர் தன்னை 'இந்து' என்று அடையாளப்படுத்திக் கொள்பவர், தனக்கென்று எந்த தனித்த அடையாளத்தையும், வழிபாட்டு முறைகளையும் வைத்துக்கொள்ளலாம். அதனால் தான், இந்துக்கள் என தங்களை அறிவித்துக்கொள்பவர்களால் எளிதாக தர்க்காவில் போய் மந்திரித்து கட்டிக் கொள்ள முடிகிறது, மாதா கோயிலுக்கு நேர்ச்சை போட்டு மொட்டை போட்டுக்கொள்ள முடிகிறது. Yes, They don't have any rules.
இவர்களை தான் ஹச். ராஜாவும், எஸ்.வி.சேகரும் ஒரே குடைக்குள் கொண்டுவர முயல்கிறார்கள்.
"அவர்கள் கோயிலுக்கு போய் நீ சாப்பிடுகிறாய், உன் கோயிலுக்கு அவர்கள் வருவார்களா? அவர்கள் சாமியை நீ கும்பிடுகிறாய், உன் சாமியை அவர்கள் கும்பிடுவார்களா?" என கேள்வி எழுப்புகிறார்கள். தொன்ம அடையாளத்தின் தொடர்ச்சியை 'இந்து' என்று கட்டமைத்திருக்கும் அரசியல் ஹச்.ராசாவுக்கு நன்றாகவே தெரியும்.
ஒற்றை தெய்வ வழிபாட்டில் இருக்கும் கிறிஸ்தவ, இஸ்லாமிய வழிமுறைகளை கேள்விக்கு உட்படுத்துவதின் மூலம் தான் இங்கிருக்கும் சாமானியர்களை அவர்களுக்கு எதிராக திரட்ட முடியும் என்பதும் அவர்களுக்கு தெரியும்.
இந்த சாமானிய இந்துக்கள் மறந்து போகும் ஒரு சங்கதி ஒன்று இருக்கிறது. அது, இஸ்லாமிய சமூகத்திக்கு உள்ளேயே, 'தர்காக்களை இடிப்போம்' என்பவர்களும் உண்டு, "ரோமன் கத்தோலிக்கர்கள் பிசாசுகளை கும்பிடுகிறார்கள்" என சொல்லும் சீர்திருத்த, பெந்தெகொஸ்தே கிறிஸ்தவர்களும் உண்டு. இவர்களுக்கு ஒன்றும் செவிசாய்க்காமல் வருடாவருடம் சர்சுகளில் பொங்கல் இடுபவர்களும் இதே கத்தோலிக்கர்கள் தான்.
தர்க்காவுக்கு செல்லும் இஸ்லாமியரும், சர்ச்சில் பொங்கல் வைத்து கொண்டாடும் கிறிஸ்தவரும், குலசாமி வழிபாட்டில் தனது பண்பாட்டை தக்கவைத்திருக்கும் இந்துவும் ஒற்றுமையாக இங்கே இருப்பதால் தான் இந்த மண் இன்னும் கலவரபூமியாக மாறாமல் இருக்கிறது.
ஆக, இங்கே ஒற்றை கடவுளை மட்டுமே கொண்டாடும் செமிடிக் மதத்தவர் சிறுபான்மையிலும் சிறுப்பான்மை. அவர்கள் தவறுகளை சுட்டிக்காட்டுவதில், கண்டிப்பதில் தவறே இல்லை. ஆனால், அவன் என் கோயிலில் சமைத்ததை ஏன் சாப்பிடவில்லை எனக் கோருவது, 'ஒரு சாமானியர் சமைத்த மாட்டுக்கறியை இந்த அக்ரகாரத்து ஆள் ஏன் சாப்பிட மாட்டேங்குறார்?' என்று கதறுவது போன்றது.
முரண்பாடுகளை பேசிக் களைந்து, இது போல என்று இணைத்து செயல்படுவோம்.

https://www.facebook.com/stalin.felix.5/posts/10157327944337780

Saturday, October 28, 2017

தமிழிசை என்ற வெகுளியான எதிரி

இன்றைய தேதியில், சமூக வலைதளங்களில் அதிகமாக வசைப்பாடப்படும், விமர்சிக்கப்படும் அரசியல்வாதிகள் யாராக இருக்கும்..
1. தமிழிசை 2. ஹச்.ராஜா.............
தமிழிசை, தமிழ்நாடு பிஜேபியின் தலைவர் தான் ; ஆனால், அவர் உளரும் 'தத்து பித்துக்களை' மேலிடத்தில் போட்டுக் கொடுக்க ஆளே இல்லையா?. 'இவர்களை விட மிக கவனமாக மீடியாவுக்கு பூசி மெழுக ஆட்கள் இல்லையா?' இருக்கிறார்கள்.. பிறகு ஏன்?


தமிழக கட்சிகள் அனைத்தும் தனி தனியாக போட்டியிட்டால், இன்று பிஜேபி யின் இடம் எதுவாக இருக்கும்? ஐந்து/ஆறு/எழு..... பிறகு ஏன் மெர்சலுக்கு விஜய்யை, தோழர் திருமாவை என சம்மந்தமே இல்லாமல் இவர்கள் வம்புக்கு இழுக்க வேண்டும்?

எளிமையாக நான் கண்டறியும் முதல் காரணம்..
நாம் பேச வேண்டும், முழுமையாக அவர்களை பற்றி நாம் பேச வேண்டும்.. நாம் பேசி பேசி அவர்களை ஒதுக்க வேண்டும். முடிவில், நம்மை எதிர்ப்பவர்கள் அவர்களை ஆதரிக்க செய்யவேண்டும்.. அவ்வளவே. (இப்போது தமிழகத்தில், அவர்கள் இடம் எதுவாக அமையும் என யோசித்துப் பாருங்கள்).

குமரி மாவட்ட வேட்டை சமூகங்களுக்கு தெரிந்த (நிஜ)கதை தான் இது. காட்டு பன்றியை வேட்டையாட போகும் போது, கூடவே ஒரு சவலை பட்டியையும் (மெலிந்த நாய்) தூக்கிக்கொண்டு போவார்களாம். காட்டுபன்றியை துரத்தி ஒரு பாறை முடுக்கில் கொண்டு செல்லும்போது, முதன்முதலாக அவர்கள் தூக்கி வீசுவது, அந்த 'சவலை பட்டியை'தான்.. இனிமேல், மீளவே வழியில்லை என நினைக்கும் காட்டுப்பன்றி, முதலில் தன் முன்னிருக்கும் அந்த மெல்லிய நாயை தாக்க முயலும். அந்த நாயை, காட்டுப்பன்றி தாக்கும் தருணத்தில், அந்த பன்றியை வேட்டைக்காரர்கள் கொன்றிருப்பார்கள்.
இப்போது, நாம் விவாதிக்கும் தமிழக அரசியலோடு இந்த நிகழ்வுகளை தொடர்பு படுத்திப் பாருங்கள் விடை கிடைக்கும்.. ஏன் கே.டி ராகவன்கள், நாராயணன்கள், நிர்மலாக்கள் இது பற்றி பேசவே இல்லை என்பதும் புரியும்.

இன்னொன்று, கடந்த சட்டசபையில் (2011-2016) தமிழக அமைச்சர்கள் செய்த கூத்துக்கள் நியாபகம் இருக்கிறதா?. அன்று வெகுஜன மக்களிடையே பழக்கமாக இருந்த ஒரு வாக்கியம், 'இவங்க எப்படி இருந்தாலும், அவங்க(ஜெ) நல்ல கவர்னன்ஸ் தருவாங்க...' ; இது போன்ற ஒரு உத்தியை தான் நம்மிடையே மீண்டும் புகுத்த எத்தனிக்கிறது பிஜேபி.. அநேகமாக அந்த புதிய 'அவங்க' நிர்மலா சீத்தாராமனாக இருக்கலாம்.

...........
இந்த நிலையில், கடந்த 20 செப்டம்பர்'17 அன்று ஜூனியர் விகடனில் வெளிவந்த தமிழிசையின் பேட்டி மிக முக்கியமானது..
அது
//
“உங்கள் கட்சியைச் சேர்ந்த எஸ்.வி.சேகரும் கூட உங்கள் பேச்சை விமர்சிக்கிறாரே?”
“கட்சியைத் தாண்டி, சாதி ரீதியாக சிலர் யோசிப்பதால் வரக்கூடியப் பிரச்னை இது.”
//
கடந்த ஐம்பது ஆண்டுகளாக தமிழக அரசியல் எதை முன்வைத்து நகர்கிறதோ, அதை தெரிந்தோ தெரியாமலோ தன் வாய்வழி உதிர்த்திருக்கிறார் தமிழிசை.
<; font-family: inherit;">இப்போதைக்கு ஒன்றே ஒன்றை சொல்ல முடியும்; பிஜேபி கோட்டையிலிருந்து தமிழிசை போன்ற வெகுளியான எதிரி, நமக்கு இனி எப்போதும் கிடைக்கப்போவதில்லை..

https://www.facebook.com/stalin.felix.5/posts/10156069063197780

தமிழ் பெண்கள் அழகா Vs கேரளா பெண்கள் அழகா - நீயா நானா

எப்படியும் மெர்சலை ஓரம் கட்டிவிட்டு, இன்றைய நீயாநானா வில் சரணடையப்போகிறார்கள் நெட்டிசன்கள்...அதுக்கு முந்தி 'கேரளா அழகு' பத்தி என்னோட 2 சென்ட்ஸ்.. தனது டி.ஆர்.பி ரேட்டிங்கை தக்க வைக்க இப்பிடி ஒரு சர்ச்சையான தலைப்பை 'நீயா நானா' குழு வைத்திருக்கிறது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. 'அழகு' என அவர்கள் சுட்டுவது கூட நிறத்தை முன்வைத்தே என்று நினைக்கிறேன்.
...

கேரளாவில் யூதர்கள் குடியேறி சுமார் இரண்டாயிரம் வருடங்கள் ஆகிறது, யூதா மாப்பிளாக்கள் என அவர்கள் அழைக்கப்படுகிறார்கள். ஐரோப்பியாவின் கிழக்கு பகுதியில் இருந்து கிளம்பிய கிறிஸ்தவர்கள், இங்கிருந்தே பூர்வகுடிகளோடு கலந்து இன்று தோமா கிறிஸ்தவர்கள் என அழைக்கப்படுகிறார்கள். மாப்பிளாக்கள், வணிகம் செய்யவந்த தங்கள் 'அரேபிய' வேர்கள் தொடர்பான கதையாடல்களை மறுப்பதில்லை.

பத்தாம் நூற்றாண்டில் கேரளாவில் காலடிவைத்த ஆரிய நம்பூதிரிகளின் இனக்கலப்பு இன்னொரு புதிய ஒரு சமூகத்தை உருவாக்கி விட்டது. நம்பூதிரிகளுக்கு படுத்து சேவை செய்வது கடவுளுக்கே செய்வது என வரிகளை உருவாக்கி, அது மருமக்கதாயம், தறவாடு என இன்னொரு மோசமான கலாச்சார சூழ்நிலைக்கு அங்கிருந்த பெண்களை கொண்டு சென்றது (இது பற்றி விரிவாக பிறகு எழுதுகிறேன்).

பிறகு கேரளாவுக்கு வந்த, போர்சுகீசியர், டச்சுக்காரர்கள், ஆங்கிலேயர், பிரெஞ்சு காரார்கள்.... என்ன மூச்சு முட்டுதா? ;-)

ஆக மலைநாட்டு வெத்திலையோடு, சுண்ணாம்பு பாக்கு புகையிலை எல்லாம் போட்டு இடித்து சிவப்பாக்கி விட்டு, தமிழகத்தில் இருக்கும் கம்மாறு வெற்றிலை அழகில்லை என சொன்னால் நியாயமா நியாயம்மாரே..


https://www.facebook.com/stalin.felix.5/posts/10156053821267780

அசலூர்க்காரன் ஹச்.ராஜா சர்மாவுக்காக

அசலூர்க்காரன் ஹச்.ராஜா சர்மாவுக்காக..
.........
ஸ்டாலின் பெலிக்ஸ்' என்ற எனது பெயரின் இரண்டாவது பகுதியை வைத்தது எனது பெரியம்மா. அப்பா எனக்கு 'கார்ல் மார்க்ஸ்' என பெயர் வைக்க நினைத்தாராம், ஊர் கிழவிகள் அந்த பெயரை மென்று தின்று விடுவார்கள் என சொல்லி அம்மா கடுமையாக மறுக்க, பின் ஸ்டாலின் என வைத்திருக்கிறார்கள். சென்ற முறை விடுமுறைக்கு ஊருக்கு சென்றிருந்த போது, எனது தாய்மாமன் என்னிடம், 'ஸ்டாலின்' என எனக்கு பெயர் வைத்து, அதை பிறப்பு அலுவலகத்தில் பதிவு செய்தது அவர் தான் என்றார்.
பெரியவர்கள் செய்த தவறை நாம் செய்யக்கூடாது என்று கருதிய காலகட்டத்தில் ஈழம் நம் கையை விட்டு போயிருந்தது. அதற்க்குபின் பிறந்த மகளுக்கு 'எழில் ஓவியா' என்றும் மகனுக்கு 'இளஞ்சேரல்' என்றும் பெயர் சூட்டி மகிழ்தோம். 2012 ஆம் ஆண்டில் எனது பெயரையும் தூயதமிழில் மாற்றிக்கொள்ள முயன்றுக்கொண்டிருந்த சூழ்நிலையில் புலம் பெயர்ந்தேன்.
2014 லுக்கு பின் காவி பயங்கரவாதிகள், தமிழ்/செங்கிருந்த பெயர்களை தவிர்த்து மற்ற அனைத்து பெயர்களையும் 'எதிரி'களாக சித்தரிக்க துவங்கிய போது, நான் எனது பெயரை மாற்ற நினைத்தது தவறு என முதன்முதலாக உணர்ந்தேன்.
இப்போது பாம்பு வேறு வடிவில் காலை சுற்ற துவங்கி இருக்கிறது. யாரெல்லாம் இன உணர்வில் தங்கள் பெயர்களை தமிழ் பெயர்களாக மாற்றிக் கொண்டார்களே அவர்களை 'டார்கெட்' செய்து, பாருங்கள் தமிழ் பெயரில் ஒளிந்து இருக்கும் கிறிஸ்தவர்களை என பரப்புரை செய்துக்கொண்டு இருக்கிறார்கள்.இவர்களுடைய இந்த பரப்புரை எந்த பெரியபாதிப்பை உருவாக்கப் போவது இல்லை என்றாலும், 'ஒருவேளை அப்படி இருக்குமோ....'என்ற லேசான சந்தேக உணர்வை பொது நிலையினரிடம் தூண்டி விடுவதே இந்த 'காவி அடிமைகளின்' நோக்கம்.
...
இனி, எந்த சூழ்நிலையிலும் இந்த 'தண்ணீர் பாம்புகளுக்காக' நான் பெயர் மாற்றிக்கொள்ள போவதில்லை. பெயரை வைத்து, 'அசலான்' என வசைபாடும் ஹச்.ராசா சர்மா வாவை விட நாங்கள் கறுப்பர்கள். ஒரே மண்ணில் நீண்ட தலைமுறை தலைமுறையாக வாழும் ஒரு பாரம்பரிய மரபு எங்களுக்கு இருக்கிறது. எல்லாவற்றையும் விட, உங்களை விட அட்சர சுத்தமாக வள்ளுவ தமிழை நாங்கள் பேசுகிறோம். போடா டேய்..

https://www.facebook.com/stalin.felix.5/posts/10156052037127780

.........................................
அமெரிக்கா போன நம்மூர்...
கிருஷ்ணன்-கள் எப்படி Chris ஆனார்கள்?
கோபால்-கள் எப்படி Gops ஆனார்கள்?
சந்தனமூர்த்தி -கள் எப்படி Sandy ஆனார்கள்?
சரவணன் -கள் எப்படி Sarav ஆனார்கள்?
என்பதையும் ஆராய்ந்து சொல்லலாம் ஹச்.ராஜா சர்மா ஜி..
என்ன, அமெரிக்கக்காரன் இதெயெல்லாம் கண்டுக்காம விட்டிருவான். அவன் காலை நக்கி பிழைக்கும் உள்ளூர் நாய்கள் தான் குறைத்துக் கொண்டிருக்கிறது.

https://www.facebook.com/stalin.felix.5/posts/10156049092382780





மெர்சல் - பலமற்ற எதிரியை உருவாக்குகிறதா ரா?

தமிழிசையின் 'மெர்சல்' விஜய் தொடர்பான விமர்சனமும், அதற்க்கு 'நம்மவர்கள்' தரும் பதிலடியை பார்க்கும்போது சலிப்பாகவும், கொஞ்சம் அச்சமாகவும் இருக்கிறது. மீண்டும் மீண்டும் 'ரா'மையாக்களால் நாம் திசைத்திருப்பப்படுகிறோம்.
முதலில் நடிகர் விஜய் தொடர்பாக ஒரு டிஸ்க்கிளைமர்: என் வாலிபத்தின் ஆரம்பக் கட்ட நாட்களை முழுமையாக ஆக்கிரமித்தப் படம் 'பூவே உனக்காக'. கணக்குவழக்கே இல்லாமல் பார்த்தப்படம் அது. இன்றும் அந்த படத்தின் கிளைமாக்ஸ் வசனங்களை அப்படியே ஒப்புவிப்பேன். விஜயை எனக்கு பிடிக்கும் என வெறுமன சொன்னால், என் மகள் கோபித்துக்கொள்வாள்.. ஏனென்றால், அவளுக்கு விஜய், மிக மிக மிக பிடித்தமான நடிகர்.
இனி விசயத்துக்கு வருவோம்,
உலகமயமாக்கலின் உச்சத்தில் இருக்கும் இந்த நாட்களில் தான், தமிழ்நாட்டில் மட்டும் தீவிரமான மண் சார்ந்த போராட்டங்கள் நடந்து வருகிறது. தெற்கே 'இந்தியா' என்ற கற்பிதத்துக்கு இன்றளவும் சிம்ம சொற்பனமாக இருப்பது, இங்கிருக்கும் 'ஆரிய எதிர்ப்பு' கருத்தியல் தான். ஆக, 'இந்திய' 'பாரதிய' கருத்தியலை எதிர்க்காத, ஆனால் மண் சார்ந்த விசயங்களை பேசும் கட்சியோ, ஆட்களோ 'இராமையா'வுக்கு வேண்டும். அதற்கான தற்போதைய இரை தான் விஜய்.
திராவிட கருத்தியலும், தீவிர இடதுசாரி கருத்தியலும் கோலோச்சிய காலம் ஒன்று தமிழகத்தில் இருந்தது. இரண்டு கருத்தியலை ஒரு சேர அடித்து நொறுக்க ராமையாவுக்கு கிடைத்த ஆளுமை 'எம்ஜிஆர்'. தமிழ் மண்ணில் வளர்ந்த இடதுசாரி தத்துவங்களை நொறுக்க எம்ஜிஆரை, அமெரிக்காவின் சி.ஐ.எ அமைப்பு வரை உபயோகித்தது என்பதை நான் சொல்லவில்லை, காங்கிரசின் 'நவசக்தி' இதழ் ஏழுபதுகளின் பகுதியில் சொன்னது,எழுதியது.
இனி விஜய்க்கு வருவோம், 'ஆம், அவர் திரையில் கார்ப்பரேட்டுகளுக்கு எதிராக, வடநாடு அரசியல்வாதிகளுக்கு எதிராக' கருத்துகளை முன்வைக்கிறார். ஆனால், நிஜத்தில் அவர் எத்தனை முறை இதே அரசியலை பேசி இருக்கிறார்?. அவர் பேச மாட்டார். ஏனென்றால், அவருடைய களம் என்பது 'முதலமைச்சர்' அரசியல் கொள்கைகளே தவிர, எந்த தொண்டரையும் கார்பரேட்டுக்கு எதிராகவோ, நடுவண் அரசியலுக்கு எதிராகவோ வலுவாக உருவக்குவது அல்ல. எம்ஜிஆர் என்ற சினிமா பிம்பத்தை எந்த தத்துவமில்லாமல் ஆதரித்ததற்கான விலையை தான், நான்கு தசமங்கள் தாண்டியும், ஓபிஎஸ்-எபிஎஸ் என இன்றளவும் கொடுத்து வருகிறோம்.
ஆக, விஜய் என்ற ஒன்றை நபர், அடுக்கு மொழி வசனங்களை பேசி நடுவண் கட்சிகளுக்கு எதிராக பேசுவதும், அவரை ஒரு எதிரியாக தமிழகத்தில் உருவாக்குவதும், காட்டுவதும் இராமையாகளுக்கும் ஒரு இலகுவான இலக்காக போய் விடும். ஒரே ஒரு சிபிஐ ரெய்டில் எல்லா வீர ஆவேச பேச்சையும் அப்படியே சரணடைய செய்து விடுவார்கள். 'காங்கிரசோ' 'பிஜேபியோ' வேறு எந்த இந்திய கட்சியோ, 'இளைய தளபதியின்' ஒரே அறிக்கையிலே தம்பிகள் அடங்கிப் போய் விடுவார்கள், ஏனென்றால் தத்துவமில்லாத அரசியல் என்பது ஒரு முட்டுசுவர். தமிழகத்தில் தற்போது நடப்பதும் அது தான்.
ஆக, தோழர்களே/உறவுகளே/தம்பிகளே, 'அரசியல் கவனிப்போம்' 'அரசியல் பேசுவோம்' பின் 'அரசியல் செய்வோம்'.
பின்குறிப்பு> 'இராமையா' என்றால் என்னவென்று புரியாத புதியவர்களுக்கு, இந்திய உளவு அமைப்பான 'ரா' வுக்கு தமிழ் தோழர்கள் வழங்கிய கேலிப் பெயர்.

https://www.facebook.com/stalin.felix.5/posts/10156046111982780

கியூபாவை உலுக்கிய டெங்கு காய்ச்சல்


1980 ஆம் வருடம், அமெரிக்க ப்ளோரிடா மாகாணத்தில் இருந்து ஒரு கப்பல் கியூபா நோக்கி செல்கிறது. கியூபாவில் இருந்த சோவியத் ரஷ்ய படைகளுக்கு எதிராக உபயோகிக்க, 'கிருமி'களை அந்த கப்பலில் எடுத்துச் செல்கிறார் ஒமேகா 7 என்ற தீவிரவாத அமைப்பின் தலைவர் எட்வர்டு அரோசினா.
எட்வர்டு அரோசினா-வுக்கு இந்த கிருமிகளை கொடுத்தனுப்பிய சி.ஐ.எ வின் கணக்கோ வேறுமாதிரி இருந்தது. விளைவு, சுமார் மூன்று லட்சம் கியூபன் மக்களை இந்த டெங்கு காய்ச்சல் பாதிக்கிறது. கியூபா மருத்துவதுறையில் வெகு முன்னேறிய நிலையில் இருந்ததால், 154 மட்டுமே இந்த 'பயோ வார்' ஆல் கொல்லப்படுகின்றனர், இதில் 101 பேர் குழந்தைகள் என்பது கியூப வரலாற்றில் ஒரு பெருந்துயரம்.
.............................
இன்னும், இன்னும் எழுதி பீதியை உருவாக்க விரும்பவில்லை.. ஆனால், 'எல்லாவற்றையும் சந்தேகி' என்ற பேராசான் மார்க்ஸின் வார்த்தைகள் என்னை துரத்துகிறது.


https://www.facebook.com/stalin.felix.5/posts/10156024746812780

https://www.facebook.com/stalin.felix.5/posts/10156024746812780🙄


இரணியல் பாண்டியர் கோட்டை

1956, மலையாளி ஆதிக்கத்தை உடைத்து தாய் தமிழகத்துடன் தென் திருவாங்கூர்(கன்னியாக்குமரி) இணைவதற்கு சரியாக மூன்று மாதங்களுக்கு முன்பு, பாராளுமன்றத்தில் குமரி இணைப்பு தொடர்பாக ஒரு அனல் பறக்கும் விவாதம் நடந்துக்கொண்டிருந்தது. விவாதத்தில் குறுக்கிட்ட, ஸ்ரீ அச்சுதன் என்ற மலையாள எம்பி "குமரி தமிழகத்துடன் இணையும் போது அங்கிருக்கும் மலையாளிகளின் நிலை என்ன?" என ஐயா மார்ஷல் நேசமணியை நோக்கி கேட்கிறார்..
ஐயா நேசமணி, "நாங்கள் எதுவெல்லாம் எங்களுக்கு வேண்டும் என்கிறோமோ, அது எல்லாம் இங்கிருக்கும் மலையாளிகளுக்கும் பகிரப்படும். எங்கள் தாய்மொழி தமிழ் மொழியாக இருந்த போதும், சுமார் நான்கு வருடங்களுக்கு முன்பு வரை, நாங்கள் மலையாளத்தில் படிக்க நிர்பந்திக்கப்பட்டோம். ஆனால், குமரி-தமிழகம் இணைப்புக்கு பின் இங்கிருக்கும் மலையாளிகள் அவர்கள் தாய் மொழிகளில் படிப்பதை உறுதி செய்யும் விதத்தில் சட்டம் ஒன்று இயற்றப்பட வேண்டும்" என்றார். அவ்வளவு நூற்றாண்டு கால துயரத்துக்கு பின்னரும், மொழி சிறுபான்மையினரை நோக்கி யோசித்த உன்னதமான மனது , எங்கள் குமரி தந்தையின் மனது. இன்றளவும், குமரியில் மொழி சிறுபான்மையினருக்காக 'மலையாளம்' தனியாக கற்பிக்கப்படுகிறது.
............
இனி விசயத்துக்கு வருகிறேன்,
குமரி வீரத்தமிழர் முன்னணியை' சேர்ந்த நண்பர்கள் சிலர், சிதைந்த நிலையில் இருக்கும் இரணியல் அரண்மனைக்கும், பாண்டியருக்கும் உள்ள தொடர்பை கண்டறிகிறார்கள். அதற்கான ஆதாரத்தை திரட்டியதும், குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று கோட்டையை விரைவாக செப்பனிட கோரிக்கை வைக்கின்றனர். அவ்வளவு தான், இத்தனை நாள் 'இரணியல் கோட்டைக்கும், மலையாளிகளுக்கும்' முடிச்சுப்போட்டுக் கொண்டிருந்த 'குமரி' மலையாளிகளுக்கு கோபம் வர, அவர்கள் ஆற்றிய எதிர்வினை தான் கீழே உள்ள புகைப்படம்.
'இரணியல் பாண்டியர் கோட்டை' என நம்மவர்கள் முன்வைத்ததை 'இரணியல் "பாண்டி" பேலஸ்' எனவும், 'கண்டன் வீர நாராயண பாண்டிய' அரசன் என நம்மவர்கள் முன்வைத்ததை 'வீர நாராயண பாண்டிய' "கொத்தனார்" என நக்கல் அடித்து அவர்களது 'கன்னியாகுமரி மலையாளிகள்' முகநூல் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார்கள்.
.............
அன்பு மலையாளிகளே,
ஈழ போர் உச்சத்தில் இருந்தபோது, .போரை நிறுத்தக்கோரி கு முத்துக்குமார் என்ற தமிழ் சகோதரன், கடிதம் ஒன்றை எழுதி வைத்து விட்டு,தன் உடலையே தீக்கு இரையாக்கினான். அந்த கடிதத்தில் வரும் சில வரிகளை கீழே கொடுத்துள்ளோம்.
//
தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் வெளிமாநிலங்களைச் சேர்ந்த சகோதர்களே…
உங்கள் சொந்த மாநிலத்தில் கூட இல்லாத நிம்மதியோடும்,பாதுகாப்போடும் வாழக்கூடிய மாநிலம் தமிழ்நாடு தான் என்பது உங்களுக்கு அனுபவத்தால் தெரிந்திருக்கும் //
ஆம், நீங்கள், உங்கள் குழந்தைகள், உங்கள் பெண்கள் என அனைவரும் கேரளத்தில் வாழ்வதை விட குமரியில் அதிக பாதுகாப்புடனே வாழ்கிறீர்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.பாண்டியர் கோட்டை பற்றி உங்களுக்கு முரணான பார்வை இருந்திருந்தால், ஒரு நீண்ட உரையாடலுக்கு நண்பர்கள் தயாராகவே இருந்தார்கள், இருக்கிறார்கள். ஆனால், நீங்கள் வழக்கம் போல உங்கள் மேட்டிமையை காட்ட "பாண்டி" "கொத்தனார்" என கிண்டலடித்து, வன்மத்தோடு சிரித்துக் கொண்டு இருக்கின்றீர்கள்.
பாண்டியர்களை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?
நெடுஞ்சடையன் வேணாட்டை அதகளம் செய்து, நூற்றுகணக்கான யானைகளையும், குதிரைகளையும் பறித்து விழிஞத்தை நொறுக்கி எடுத்த கதை உங்களுக்கு தெரியுமா?
பரந்தக பாண்டியன் படையெடுத்து வந்து துவம்சம் செய்து, பின் அன்றைய அனந்தபுரம்(இன்றைய திருவனந்தபுரம்)தில் இருந்த கோயிலுக்கு தங்க விளக்கு வாங்கிக்கொடுத்த கதை தெரியுமா?
இன்னும் பல வரலாற்று கதைகள் உண்டு. நூற்றுக்கணக்கான கல்வெட்டுகளும், பட்டையங்களும் கேரளாவில் பாண்டியர் அடையாளங்களை சொல்கிறது. உங்கள் திருவனந்தபுரம் அருங்காட்சியகத்திலும் கொஞ்சம் உள்ளது, தேடி வரலாற்றை படியுங்கள்.
இறுதியாக,
நம்பூதிரிகளை, "குனிந்தும், படுத்தும்" கவனித்து, அரசவை மற்றும் அதிகார செல்வாக்கை உருவாக்கி, அந்த பலத்தில் தனக்கு கீழ் இருந்தவனை சவுட்டி 'யாமானே' என கதற வைத்த ஜென்மிகள் காலமில்லை இது. நீண்ட போராட்டங்களுக்கு பின், கடும் உழைப்பாலும், கல்வியாலும் முன்னேறி பொருளாதார தன்னிறைவை எட்டிய தமிழ் சமூகங்கள் தன் முன்னோர் வரலாறை மீள்வாசிப்பு செய்யும் காலம். அந்த சமூகங்கள் வசிக்கும் மண்ணில் இருந்து தான் இப்படி நக்கல் அடித்துக்கொண்டிருக்கிறீர்கள் என்று உணருங்கள்

கடந்தகால வரலாறுகள் தொடர்பாக உரையாட நாங்கள் எப்போதும் தயாராகவே உள்ளோம். இதை இப்படி வன்மத்தை தான் தொடர்வீர்கள் என்றால், இப்போது எழுதிக்கொண்டிருப்பது போல எப்போதும் எங்கள் பேனா முனை மட்டும் உங்களுக்கு பதில் சொல்லிக்கொண்டு இருக்காது.
இப்படிக்கு,
இலட்சக்கணக்கான குமரி தமிழர்களின் ஒருவன்
ஸ்டாலின் பெலிக்ஸ் ம

https://www.facebook.com/stalin.felix.5/posts/10155978231352780

.....................
இருபதாம் நூற்றாண்டு துவக்கத்தில் Rev. சாமுவேல் மீட்டீர் எழுதிய The Gospel of south india என்ற புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படம் இது.
திருவனந்தபுரம் கோட்டையில் இருந்த 'ஐந்து பாண்டியர்' சிலையில் ஒன்று என அந்த குறிப்பு சொல்கிறது. அப்படியென்றால், அந்த சிலை இப்போது எங்கே உள்ளது?
பாண்டியர் படம் திருவனந்தபுரம் கோட்டையில் இருக்கிறது என்றால், முந்தைய பாண்டியர் செல்வாக்கு எந்த அளவுக்கு இன்றைய கேரளாவில் இருந்தது என்பதெல்லாம் ஆய்வுக்கு உட்படுத்தப் பட வேண்டிய ஒன்று..
கண்டன் வீரநாராயண பாண்டிய கோட்டையை புதுப்பிக்க நண்பர்கள் கோரிக்கை வைத்ததும், அதை நக்கல் அடித்து 'இரணியல் பாண்டி அரண்மனை' என ஏழுதும் கன்னியாகுமரி மலையாளிகளுக்கு, திருவனந்தபுரத்தில் இருப்பதும் எங்கள் அடையாளமே என திருப்பி அடித்தால் தான் அடங்குவார்கள் போல..
https://www.facebook.com/shares/view?id=1979806868952694

ஜெர்மனி தேர்தல்2017

ஹிட்லரின் வீழ்ச்சிக்கு பின், சுமார் அறுபது ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக தீவிர வலதுசாரி கட்சி(AFD) ஒன்று ஜெர்மன் பாராளுமன்றத்தில் 'எதிர்க்கட்சி'யாக நுழைய இருக்கிறது.
தஞ்சம் புகுந்திருக்கும் இலட்சக்கணக்கான அகதிகளுக்கும், இஸ்லாமியர்களுக்கும் இது நல்ல செய்தி அல்ல..
#ஜெர்மனி_தேர்தல்2017
#Bundestagswahl17
#btw17

https://www.facebook.com/stalin.felix.5/posts/10155971856007780

.............................
ஜெர்மனியின் இரண்டாவது பெரிய கட்சியான SPD, மெர்கலின் CDU வோடு கூட்டணி ஆட்சி அமைக்கப்போவதில்லை என அறிவித்து இருக்கிறது.
இனி, CDU வோடு அணி சேர மிஞ்சி இருப்பது FDP (10%) யும், Green பார்ட்டியும்(9%) தான். இரண்டு கட்சிகளுமே கொள்கை அளவில் முரண்பாடுகளை கொண்ட கட்சிகள். இரண்டுமே, கூட்டணி ஆட்சிக்காக தங்கள் கொள்கைகளை தளர்த்திக் கொள்ளப்போவதில்லை என அறிவித்து இருக்கின்றன.
இடியப்ப சிக்கல் காத்திருக்கிறது முன்னாள் இயல்பியலாளரான மெர்க்கலுக்கு.. 
#ஜெர்மனி_தேர்தல்2017
#Bundestagswahl17
#btw17
#Jamaica_Coalition

https://www.facebook.com/stalin.felix.5/posts/10155972554402780
........................
ஜெர்மன் சுவர் வீழ்ந்து சுமார் இருபத்தி ஐந்து ஆண்டுகள் ஆகி விட்ட பிறகும், கிழக்கு ஜெர்மானியர்களுக்கும் மேற்கு ஜெர்மானியர்களுக்கும் இருக்கும் 'மன' இடைவெளி இந்த தேர்தலிலும் வெளிப்பட்டு இருக்கிறது.
நாஜிக்களின் வீழ்ச்சிக்கு பிறகு, கிழக்கு ஜெர்மனி சோவியத்தின் பக்கம் போய்விட, மேற்கை அமெரிக்காவும், பிரான்சும் பங்கிட்டுக் கொண்டன. சோவியத்தின் நிழல், ஸ்டேசி, ஸ்டாலினிசம் என இறுக்கமான ஒரு சூழல் கிழக்கில் இருக்க, மேற்கில் தாராளமயமும் வேலைவாய்ப்புகளும் நிரம்பி வழிகிறது. கியூபா, வியட்நாம் என ஒருசில அயலாரை கம்யூனிச கிழக்கு ஜெர்மனி 'guest'களாக கொண்டு வர, மேற்கிலோ துருக்கியில் இருந்தும், பிற ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் குவிய துவங்குகிறார்கள்.
கிழக்கும் மேற்கும் இணைத்த பிறகு, கிழக்கு ஜெர்மனியில் இருந்து ஆயிரக்கணக்கான ஜெர்மானியர்கள் மேற்கு நோக்கி இடம்பெயர்கிறார்கள். ஆயினும் ஜெர்மானியர்கள் தவிர, புதிய மனிதர்களை அவர்கள் மனம் ஏற்றுக்கொள்ள அவர்கள் வளர்ந்த சூழல் பெரும் தடையாக இருக்கிறது.
2015 ல் ஜெர்மனி நோக்கி அகதிகள் வருகை அதிகரிக்க, "முணுமுணுப்புகள்" அதிகம் கேட்டது கிழக்கு ஜெர்மனியர்களிடமிருந்தே. இந்த தேர்தலிலும் கிழக்கு ஜெர்மனியர்களின் எண்ணவோட்டம் ஓட்டுக்களில் பிரதிபலித்து இருக்கிறது. 2013 ல் துவங்கப்பட்ட தீவிர வலதுசாரி கட்சியான AFD க்கு மேற்கு ஜெர்மனியில் இருந்து 10 ஓட்டுகள் கிடைத்தால், 20 ஓட்டுக்கள் கிழக்கு ஜெர்மனியில் இருந்து கிடைத்திருக்கிறது. அதாவது 1:2 என்ற விகிதத்தில். நான்கே ஆண்டுகளில் ஜெர்மனியின் மூன்றாவது பெரிய கட்சியாகி, பாராளுமன்றத்தில் முதன்முதலாக நுழையப்போகிறார்கள் AFD யினர்.
அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு, ஜெர்மனிக்கும் ஐரோப்பாவுக்கும் நிறைய திருப்பங்களை தரக்கூடிய அரசியல் காத்திருக்கிறது என்பது மட்டும் திண்ணம்.

நடிகர் கமலின் அரசியல் பிரவேசம் குறித்து

"அப்பா, உங்களுக்கு எந்த நடிகரை பிடிக்கும்", - நான்.
"முன்னாடி சிவாஜி, இப்போ கமல்", -அப்பா.
இந்த உரையாடல் நடத்து சுமார் இருபத்தி ஐந்து வருடங்கள் இருக்கும். அன்றிலிருந்து இன்று வரை கமல் எனக்கு பிடித்தமான நடிகர் (கவனிக்க 'ஆதர்சமான' ஹீரோ அல்ல). நாயகன்-க்கு பிறகு கமலின் எந்த திரைப்படத்தையும் தவற விட்டதில்லை என்றே நினைக்கிறேன்.
சென்னை வந்த பிறகு, ஒரு ஞாயிற்றுக்கிழமை மதியம் 'பஞ்சதந்திரம்' படபிடிப்பு நடக்கிறது என்றதும், SRM கல்லூரி மதில் சுவர் தாண்டி, கமலை பார்த்தது எல்லாம் சுவாரசியமான நினைவுகள்.
புத்தக வாசிப்பு தொடர அவர் மீதான விமர்சனம் முதன்முதலாக என்னுள் எழுகிறது.
ஒருகாலத்தில் சிலாகித்து பார்த்த குருதிபுனல்-ல் இருந்து பின்பு வந்த 'உன்னை போல் ஒருவன்','விஸ்வரூபம்' வரைக்கும் கமலோடு முரண்படுகிறேன். ஈழ வீழ்ச்சிக்கு பின்னால் கமலில் சில நிலைப்பாடுகள்(குறிப்பாக IIFA பங்கேற்ப்பு தொடர்பாக) இந்த முரண்பாடுகளை இன்னும் கூர்மையாக்குகிறது.
இனி நிகழ்காலத்துக்கு..
நான் சிவப்பாக்கும் என சொல்லி விட்டே நான் கறுப்பாக்கும் என இன்னொரு பக்கம் கால் வைப்பது எல்லாம் அயோக்கியத்தனம் அல்ல; அவர் உள்வாங்கிய அரசியலில் உள்ள முரண். தேர்ந்த ஒரு வாசகரான கமல், தமிழ் சமூகத்தின் கடந்து வந்த காலத்தை பற்றி கற்று வைத்திருக்கிறார். ஆனால், சமூக உரையாடல் அற்றுப் போன ஒரு வட்டத்தை உருவாக்கி வைத்ததாலையே என்னவோ தான் "நீட்" என்றால் என்னவென்றே அறியாமல் அவரை ஒரு டிவிட் போட வைத்தது.
கருப்பு-சிவப்பு அரசியலை மட்டும்பேசிக்கொண்டிருப்பது ஓட்டு ஆகாது என்பது அவருக்கு புரிந்திருக்கிறது. 'ஊழல் ஒழிப்பேன்' 'காவியும் கருப்புக்குள் அடக்கம்' 'டிமானிடைசேசன்' 'யோகி' என அவர் உதிர்த்த கருத்துகள் எல்லாம் கறுப்புக்கும் சிவப்புக்கும் இடையே அவர் இட்ட "யார்க்கர்".
'முதுகெலும்பு அற்றவர்' 'எலும்பு சிகிச்சை நிபுணர்' என ஹச்.ராஜாவுடனான சர்ச்சைகளுக்கு பின் கமலின் சத்தம் குறைய ஆரம்பித்ததற்கு காரணம் பிஜேபி அல்ல, அது 'வேறொன்று'.சமூக பிரச்சனைகள் எதையும் பேசாமல் ஊழலை ஒழிப்பேன் என வெகுஜன மக்களை திசை திருப்புவதற்கும் அது தான் காரணம்.
........
நன்கு தெரிந்த ஐயங்கார் நண்பர் அவர். ஜெயலலிதா 69% இடஒதுக்கீடு நேரமும், சங்கராச்சாரியாரின் கைது நேரமும், ஜெயாவை கடுமையாக சாடியவர். ஆனால், ஜெயா மரிக்கும் வரை அவருக்கு தான் ஓட்டு இட்டார். காரணம் 'அது'.
உடனடியாக காவி ஆட்சி தமிழகத்தில் வந்திடாது. ஆனால், இந்தியா-தமிழ் இரண்டையும் சமநிலையில் கொண்டு போகும் ஆள் 'அதற்க்கு' தேவை. அதற்க்கான தற்போதைய துருப்பு சீட்டு தான் கமல்.
சரி அது என்ன 'அது' என கேட்கிறீர்களா? புத்தனையும், அம்பேத்கரையும், ஐயா வைகுண்டரையும் உள்வாங்கியிருக்கும் அதன் பெயர் 'பிராமணியம்'.
அது கமலையும் தின்று செரிக்கும்.
நாம், நாம் வழக்கம் போல சாதி மைதானத்தில் நடக்கும் போட்டியை வேடிக்கை பார்ப்போம்..
https://www.facebook.com/stalin.felix.5/posts/10155970919917780

Thursday, February 9, 2017

சசிகலா மீது ஏன் இந்த வெறுப்பு? - அந்த 8 காரணங்கள்

ஒப்பீட்டளவில் இன்றைய அதிமுக என்பது கருணாநிதி எதிர்ப்பின் ஒரு திரட்சியான வடிவமே. அம்மையாரின் மறைவுக்கு பிறகு தமிழகத்தில் நிகழ்ந்த அசாதாரண சூழ்நிலையில், தமிழக மக்களோ 'எரிகிற கொள்ளியில் எந்த கொள்ளி நல்லக்கொள்ளி' என தேர்ந்தெடுக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். அம்மையார் இடத்தில் யாரையுமே நினைத்துப்பார்க்க முடியாத அதிமுக தொண்டர்கள், ஓபிஎஸ் க்காக கொஞ்சம் இறங்கி வந்திருக்கிறார்கள். அம்மையாரின் ஒவ்வொரு அரசியல் அசைவிலும் முப்பத்தி மூன்று ஆண்டுகளாக உடனிருந்த சசிகலா மீது மக்களுக்கு ஏன் இந்த வெறுப்பு?

1) சாவை தொடரும் மர்மம்

 செப்டம்பர் 22 ம் தேதி மருத்துவமனையில்,'நீர் சத்து குறைவு' என அம்மையார் அனுமதிக்கப்பட்ட பிறகு நடந்த எல்லா விடயங்களுமே சாமானியனுக்கு மர்ம்மமாகவே இருக்கிறது. இடையிடையே இந்த சந்தேகங்களை சமூகவலைத்தளங்கள் வழி கேட்ட இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். அவர் இறந்ததாக அறிவிக்கப்பட்ட டிசம்பர் 5 ம் தேதி வரை, அவர் நன்றாக இருக்கிறார், உணவருத்துகிறார் என்றே மக்களுக்கு நம்பவைக்கப்பட்டது. அம்மையாரின் ஒரு புகைப்படம் கூட வெளியே வராமல் பார்த்துக்கொண்ட சசிகலாவை மக்கள் சந்தேக கண்ணோடு நோக்குவது இயல்பானதே.

2) சசிகலாவின் ஒப்பனை
தமிழர்களுக்கு ஒரு பொதுவான குணம் உண்டு. தனக்கு அபிமானமான நடிகரையோ, தலைவரையோ பிரதி எடுப்பவர்களை அவர்களுக்கு பிடிக்கவே பிடிக்காது. எம்ஜியாராக முயற்சி செய்து தோற்றுப்போன மு.க முத்து, இதற்கு சமகால உதாரணம். அம்மையார் மரணமடைந்த ஒரேவாரத்தில், புடவை-ஜாக்கெட்-கொண்டை- மேக்கப் என சசிகலா மாற்றிக் கொண்டதை யாரும் ரசிக்கவில்லை. கூடவே அம்மையார் போல பேச முயலும் மேனரிசமும் மக்களுக்கு எரிச்சலையே தந்தது.

3) ஊழல் குற்றச்சாட்டுகள்

சசியின் மீது இருக்கும் வழக்குகளுக்கு சம பங்கு அம்மையாருக்கு உண்டு என்றாலும் சாமர்த்தியமாக அது சசிக்காக மட்டுமே நடந்தது போன்ற உளவியல் தாக்குதலுக்கு மக்கள் ஆளாக்கப்பட்டார்கள். போதாததற்கு, 'எனக்கு யாருமே இல்லை, மக்களுக்காக நான்.. ' போன்ற வசனங்கள், ஜெயாவை 'யாருமற்றவர்' என்ற பிம்ப உருவாக்கத்துக்கு கொண்டு சென்றது. திமுக எதிர்ப்பு என்ற ஒரே காரணத்திற்க்காக, அம்மையாரை 'ஊழல் குற்றச்சாட்டில்' இருந்து மறைத்தவர்களின் கனிவு சசிகலாவுக்கு கிடைக்கவில்லை. ஊழல் குற்றச்சாட்டில் இருந்து வெளிய வந்துவிட்டு ஆட்சியில் அமர்ந்துக்கொள்ளலாம் என்ற பொறுமை சசிகலாவுக்கு இல்லாததால், அவர்மீதான வெறுப்பு, மக்களுக்கு இன்னும் அதிகமானது.



4) ஒன்று கூடிய மன்னார்குடி மாபியா

மன்னார்குடி கும்பலில், தினகரன் துவங்கி யாரையெல்லாம் அம்மையார் துரத்தி அடித்தாரோ, அவர்களை எல்லாம் அம்மையார் மரணம் அறிவிக்கப்பட்ட ஒரே இராப்பொழுதில் ஒன்று கூடினார்கள். அதுவும் ஜெயாவின் உடல்வைக்கபட்டிருந்த மேடை முழுவதையும் ஆக்கிரமித்ததை பார்த்த மக்கள் கோபத்தின் உச்சிக்கே போனார்கள்.

5) சசி VS ஜெயலலிதா - ஆளுமை

பொதுசெயலாளராக அறிவிக்கப்பட்ட பின், இந்தியா டுடே நிகழ்வில் கலந்துக்கொண்ட சசி அங்கேயே அம்பலப்பட்டுப்போனார். 'தமிழில் இந்தியா டுடே வருவது மகிழ்ச்சியான விஷயம்' என அவர் அளித்த முதல் பேட்டி, மக்களுக்கு ஷாக் அடித்தால்போல் ஆயிற்று. வேட்பாளர்கள் தேர்வில் சசிகலா கும்பலில் தலையீடு இருந்தது என்பது முதலமைச்சர் பதவில் உட்காரும் தகுதி ஆகாது என்பதில் மக்கள் தெளிவாகவே இருக்கிறார்கள். கலைஞர் ஆட்சியில், அதிமுக உறுப்பினர்கள் ஒட்டுமொத்தமாக சஸ்பெண்ட் செய்யப்பட்ட போது, தனிநபராக சட்டமன்றத்துக்கு வந்தது எல்லாம், அம்மையார் கிரவுண்டுக்கு வெளியே அடித்த சிக்சர்கள். அதையெல்லாம் பார்த்து வளர்ந்த தலைமுறைக்கு சசிகலா வேப்பங்காயாக தெரிவது வியப்பல்ல.

6) தேர்தலை சந்திக்காத முகம்

குறைந்தபட்சம் ஒரு கவுன்சிலராக கூட மக்களால் தெரிந்தெடுக்கப்படாத ஒருவர், எப்படி முதலமைச்சர் ஆகலாம் என்ற மக்களின் ஆதங்கம் வெகு இயல்பான ஒன்றே. தமிழக அரசியலில் சாதித்தவர்கள் அனைவருமே மக்கள் பணி செய்து வந்தவர்களே. ஏன், கடந்த சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராக இருந்த விஜயகாந்த் கூட, பல உதவிகள் செய்து கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மனதில் இடம்பிடித்து அரசியலுக்கு வந்தவர் தான். அரசியலுக்கு சம்மந்தமே இல்லாத புதிய முகங்களை ஏற்றுகொள்ள தயங்கும் மக்கள் உளவியலை இதன் மூலம் நாம் புரிந்துக்கொள்ளலாம்.


7) விசிறி அடிக்கப்பட்ட ஓபிஎஸ்

ஏற்கனவே இரண்டு முறை முதலமைச்சராக இருந்த அனுபவம், சாந்தமான முகம், அடக்கமான பேச்சு, பத்திரிக்கையாளர்களுடன் அவரது இணக்கமான போக்கு எல்லாம், அவரது மைனசை(ஜல்லிக்கட்டு விவகாரம்,ரெட்டியுடனான நட்பு)தாண்டி மக்கள் மனதில் ஸ்கோர் செய்ய வைத்தது. அம்மையாரால் இரண்டுமுறை சுட்டிக்காட்டப்பட்ட ஓபிஎஸ் ஐ, இரண்டே மாதத்தில் தூக்கி அடித்ததை மக்கள் கொஞ்சமும் ரசிக்கவில்லை. 



8) ஜெயலலிதா

ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம், அதுவும் உண்மை. தொண்ணூறுகளுக்கு பிறகு, கலைஞரையும், அம்மையாரையும் வேறு வழியே இல்லாமல் தான் மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். இருவருக்குமே நொறுங்கிய தோல்விகளையும் பரிசாக தந்தார்கள். இருவரும் புனிதர்கள் அல்ல என்பது மக்கள் மனதில் தொடர்ந்து ஓடிக் கொண்டிருந்தது. இவரை விட்டால் அவர், அவரை விட்டால் இவர் என வேறு வழியில்லாமல் சகித்துக்கொண்டிருந்த மக்கள், அம்மையாரின் மறைவுக்கு பிறகு,சசிகலா அதிகாரத்துக்கு வந்தால், இன்னொரு ஜெயலலிதாவாகி இன்னும் இருபது வருடம் நம்மை படுத்தி எடுத்து விடுவார் என்ற இயல்பான அச்சம் கூட இந்த எதிர்ப்புக்கு ஒரு காரணமே..

பிறகு: இது என்னுடைய பார்வை மட்டுமே, உங்களுடைய பார்வையை பின்னூட்டத்தில் எழுதுங்கள். 

Sunday, December 28, 2014

தமிழகத்தில் பிஜேபியை தள்ளி வைக்கும் 10 விஷயங்கள்



(1) தமிழர் பிரச்சனைகள்:
 தமிழ்நாட்டில் இன்றளவும் மிக முக்கியமான பிரச்சனைகளாக இருக்கும் கூடங்குளம், மீத்தேன், முல்லைப்பிரச்சனை,காவேரி போன்றவைகளில் திடமாக தமிழ் மக்களோடு கைகோர்த்து நிற்கும் அளவில் தமிழ்நாடு பிஜெபி இல்லை. அண்டை மாநில பிஜேபியினர் இதுபோன்ற பிரச்சனைகளில் தமது மாநில நன்மையை முன்வைத்தே பேசுகிறார்கள் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும் (உதா: அணுவுலை, அணுக்கழிவு பிரச்சனை).
(2) திராவிட கட்சிகளின் இந்துமத சமரசம்: அதிமுக தனது கட்சியின் பெயரில் 'திராவிடத்தை' கொண்டிருந்தாலும் கால்நூற்றாண்டுக்கு மேலாக 'அரை-பிஜேபி' யாக தான் ஆண்டு வருகிறது. ஆக, நடுத்தர மற்றும் அடித்தட்டு தமிழ் சாமானிய இந்து மக்கள் 'திராவிட கட்சிகள்' தங்கள் மதத்தை அழிக்காது என்பதை தெளிவாய் புரிந்துவைத்திருக்கிறார்கள்.
(3) ஆளுமை பற்றாக்குறை: காங்கிரஸ் இவ்வளவு காலம் தமிழ்நாட்டில் தாக்குப்பிடித்ததற்கு மிக முக்கியமான காரணம் காமராசர் என்ற ஆளுமை. அவருக்கு பிறகு வந்த ஒருசில காங்கிரஸ் தலைவர்களும் ஓரளவுக்கு தமிழ்நாட்டை மத்தியில் பிரதிநிதித்துவப்படுத்தினார்கள். தமிழ்நாட்டை முன்னிலைப்படுத்தும் பிஜேபி ஆளுமை தமிழ்நாட்டில்\டெல்லியில் யார் இருக்கிறார்கள் சொல்லுங்கள்?
(4) வட மொழி திணித்தல்: ஹிந்தியை கற்றால் மட்டுமே வட மாநிலங்களுக்கு போய் வேலை பார்க்க முடியும் என்ற காலகட்டம் ஒன்று இருந்தது. உலகமயமாக்கலுக்கு பிறகு, அனைத்து தேசிய இனங்களின் மக்களும் ஆங்கில மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவது இயல்பாக நடந்தேறி வருகிறது. இச்சூழ்நிலையில் தமிழ்நாட்டில் ஹிந்தியை வலுக்கட்டாயமாக திணிக்கும் போக்குக்கு இயல்பாகவே முகசுழிப்பும், எதிர்ப்புணர்வும் பரவி வருகிறது என்பது தான் நிதர்சனம். 

(5) கல்வியறிவு: பிஜேபி பலமாக இருக்கும் பல மாநிலங்களை விட தமிழ்நாடு கல்வியறிவில் மிகச்சிறந்த இடத்தில் உள்ளது. இந்துக்களாக தங்களை பதிவு செய்துகொண்டாலும், திராவிட கோட்பாட்டின் மீதான பற்றை அக்கல்வி அவர்களுக்கு கொடுத்துள்ளது. (இடஒதுக்கீட்டு விஷயத்தில் பிஜேபியின் கடந்தகால அணுகுமுறைகளை தமிழர் மனங்களில் இருந்து அவ்வளவு எளிதில் அழித்து விட முடியாது).


(6) பண்பாட்டு ரீதியான வேறுபாடு: நடுகல் மற்றும் குலசாமி வழிபாடு மரபு, தமிழர் இரத்தத்தில் ஊறிப்போய் கிடக்கிறது. கோயிலில் ஆடு\கோழி வெட்டக்கூடாது என்ற போது கிளர்ந்து எழுந்த சமூகம் இது. அச்சமூகத்தின் மீதான 'சமிஸ்கிருதமாக்கல்' போன்ற பண்பாட்டு ரீதியான திணித்தலுக்கு பின்னால் இருக்கும், 'நாம்-அவர்கள்' என்ற இடைவெளியை தமிழர்கள் நன்கு புரிந்து வைத்துள்ளார்கள். ஆக, 'இந்துநாடு' என்ற கோஷம் தமிழகத்தில் எடுபடாமலே இருக்கிறது.


(7) கும்பல் அரசியல் மற்றும் கேட்பாட்டு ரீதியான அரசியலின் தேவையின்மை :  தங்களை இந்துக்களின் பாதுகாவலர்களாக காட்டிக்கொண்டிருக்கும் சில இயக்கங்களின் 'அடாவடி' அணுகுமுறைகள் வெகுஜனங்களை எந்த அளவிலும் திருப்திப்படுத்தவில்லை என்பதே உண்மை. சிறுபான்மையினர் சரிக்கு சமமாக இருக்கும் பகுதிகள் மற்றும் கேரளாவோடு ஒட்டி இருக்கும் மாவட்டங்களை தவிர்த்து பிஜேபி தமிழ்நாட்டில் அரசியல் பேச எந்த காரணமும் இல்லாமல் இருப்பது. 

(8) ரசிக மனோபாவமும், தனிமனித வழிபாடும்: காங்கிரஸ், திமுக, அதிமுக போன்ற கட்சிகளின் வாக்குவங்கிக்கு பின்னால்,  'காமராசர்', 'கலைஞர்', 'எம்ஜிஆர்' என்ற பிம்ப வழிபாடுகள் பெரும்பங்கு வகிக்கிறது . ரஜினியை எப்படியாவது பிஜேபியில் இழுத்து விட வேண்டுமென்ற  பிஜேபின் தந்திரமும் இது தான்.ரஜினி தனிப்பட்டமுறையில் தமிழர்களுக்கு எந்த நன்மையையும் செய்தவரில்லை என்பதை தமிழக மக்கள் புரிந்து வைத்துள்ளார்கள், அரசியலில் களத்தில் அவரை நிராகரிப்பார்கள் என்பது தான் நிதர்சனமான உண்மை.


(9) அதீத காழ்ப்புணர்ச்சி அரசியல்: பிஜேபி மற்றும் அதன் தாய் இயக்கமான ஆர்.எஸ்.எஸ் போன்றவை, சிறுபான்மையினரை ஒரு மனிதகுல விரோதி போல கற்பிக்க துவங்குகின்றன. நடைமுறையில் ஒரு சாமானிய கிறிஸ்தவனையோ\இஸ்லாமியனையோ ஆர்.எஸ்.எஸ்\பிஜேபி கருத்துருவாக்கத்தால் வளர்க்கப்பட்டவர்கள் எதிர்க்கொள்ளும் போது, தமக்கு கற்பிக்கப்பட்டதில் எத்தனை சதவீதம் உண்மை\பொய் இருக்கிறது என்பதை அவர்களே பகுத்தறிந்து, அந்த இயக்கங்களின் சித்தாந்தங்களில் இருந்து 'பெரும்பாலானோர்' வெளியே வருகின்றனர். RSS இயக்கம் துவங்கி ஏறக்குறைய 90ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், ஹிந்துக்கள் பெரும்பான்மையானோர் வாழும் நாட்டில் இன்றளவிலும் பல்வேறு பகுதிகளில் இவர்களால் ஊடுருவ முடியாததற்கு காரணம் இவர்களின் அதீத காழ்புணர்ச்சி அரசியலை தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?.

(10) சாதி ரீதியான ஓட்டுக்கள்: இரட்டைக்குவளை, தடுப்புச்சுவர்கள் என சாதி ரீதியான அடக்குமுறைகளை எதிர்த்து எந்த குரலையும் கொடுக்காமல் மற்ற கட்சிகளை போலவே அந்தந்தப்பகுதி ஆதிக்க சாதியினருக்கு பின்னால் மற்ற கட்சிகளைப் போல ஒளிந்துக்கொள்கிறார்கள். கோயில் நுழைவு, அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் உரிமை போன்ற முக்கியமான பிரச்சனைகளில் தமிழக பிஜேபி யின் நிலைப்பாடு என்ன என்பது கமலாலயத்துக்கே வெளிச்சம்.

Saturday, December 28, 2013

டி.ஆரும் இன்றைய தலைப்பு செய்தியும்

சந்தேகமே இல்லாமல் தமிழர்களுக்கு சினிமாத் துறை வழியாக கிடைத்த ஆளுமைகளில் ஒருவர் டி.ராஜேந்தர்.. மொழு மொழு கன்னங்களோடு ஹீரோக்கள் வலம்வந்த காலகட்டத்தில் அரை தாடியோடும், தனக்கான பிரத்யேக உடல்மொழி மற்றும் வசனங்களோடு சாமானிய தமிழர்களுக்குள் டி.ஆர் ஊடுருவி ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு மேல்  ஆயிற்று...கொஞ்சம் யோசித்து பாருங்கள், தமிழ்நாட்டில் அடுக்குமொழி என்றால் உங்களுக்கு யார் நினைவுக்கு வருவார்கள் என்பதை?!!?

'இளமையில் வறுமை கொடிது' என்பார்கள்; சிறுவயதில் இருந்தே வறுமையில் உழன்று, தன் முயற்சியால் பட்டம் படித்து, உச்சத்தை தொட்டதாலோ என்னவோ டி.ஆருக்கு எப்பவுமே 'தான்' என்ற அகங்காரம் கூடவே இருந்துவந்துள்ளது.. ஒருவகையில் அவரது பலமும், பலவீனமும் அவரது வாய் தான்...

உலகமயமாக்கலின் தாக்கத்தில் காணாமல் போனதில் டி.ஆரும் ஒருவர். உலகின் போக்கை, மக்களின் ரசிப்புத் தன்மையைப் பற்றி உணராது, தன்னை பற்றிய மிகை பிம்பத்தை தானே கட்டமைத்துக் கொண்டதின் விளைவு தான் இன்று சமூக வலைத்தளங்களிலும், அச்சு மற்றும் காட்சி ஊடங்களிலும் அவர் சராமாரியாக கிண்டலடிக்கப்படுவது.ஆனால், கண்டிப்பாக அவர் தமிழ்சூழலில் நிராகரிக்கப்பட வேண்டியவர்அல்ல.. நான் இங்கே அவரை ஆதரிக்க\விரும்ப அவர் ஒரு 'தமிழுணர்வுள்ள தமிழன் ' என்பதே எனக்கு போதுமானதாக இருக்கிறது...

ஸ்டாலின் இளைஞரணி தலைவரான போது 'அப்போ நாங்க என்ன கிழவன் அணியா?' என்று கேட்ட துணிச்சல் இன்றும் மறக்க இயலாதது. 1996 தேர்தலில் ரஜினி தொலைகாட்சி வழியாக ஆதரவு தெரிவித்து ஒதுங்க, டி.ஆர். தமிழகத்தின் ஓவ்வொரு கிராமத்தின் மூலைமுடுக்கிலும் சென்று ஜெயாவுக்கு எதிராக பிரச்சாரம் செய்தார்; 1998,2001 என்று அது தொடரவே செய்தது.

ஆனாலும், தன்னை பற்றிய அவரே உருவாக்கி கொண்ட மிகைபிம்பம் திமுகவில் கலைஞரை தவிர வேறு யாரையும் முழு மனதோடு ஏற்றுக் கொள்ளும் சூழ்நிலைக்கு அவரை கொண்டுச் செல்லவில்லை; ஏறக்குறைய வைகோ அவர்களுக்கு ஏற்பட்ட நிலைமை போல்..இதில் தான் திமுகவில் இருந்து வெளியேறுவதும், உள்ளே நுழைவதுமாக அவர் அரசியலை பகையாக்கும் நிலைக்கு கொண்டு சென்றிருக்கிறது..

ஓட்டரசியலில் ஏறக்குறைய கையறு நிலையில் இருக்கும் திமுகவுக்கு இந்த நாடாளுமன்ற தேர்தல் ஒரு முக்கியமான தேர்தல்; ஏறக்குறைய கலைஞர் தனது ஒட்டு மொத்த வீரியத்துடன் போராடும் இறுதி நாடளுமன்ற தேர்தல். இந்தியாவின் நவீன போக்கும், தமிழகத்தின் மாற்று அரசியலும் வேறு திசையில் செல்வதை அவதானித்த திமுக தனது தொண்டர்களை, பேச்சாளர்களை, முன்னாள்களை தக்கவைக்கவேண்டிய நெருக்கடியில் இருக்கிறது.  திமுக அவருக்கு எம்.பி சீட் தரும் என்று உள்ளும், வெளியிலும் பேசிக்கொண்டாலும், டி.ஆர் எம்.பி ஆனாலும் 'தான்' என்ற ஆளுமை குணம் திமுகவில் கலைஞரை தவிர வேறு யாரையும் தலைமையாக ஏற்றுக்கொள்ள போவதில்லை.. ஏறக்குறைய கலைஞருக்கு பிறகான ஜமீன்தாரி திமுகவும் இவருக்கு ஈடு கொடுக்கப்போவதில்லை..

2014 க்கு பிறகு நாடாளுமன்ற உறுப்பினராகாத நிலையில்,  டி.ஆரின் நிலைமை என்பது உண்மையில் சங்கடகரமானது; ஆனாலும், டி.ஆரை அரசியலில் நெடுநாட்களாக அவதானித்தவன் என்ற நிலையில் ஒன்றே ஒன்றை சொல்லிக் கொள்ள தோன்றுகிறது "அன்பு டி.ஆர். சார், அரசியலில் உங்கள் கடைசி ஓட்டப்பந்தயத்தில் கலந்துக் கொள்ள தயாராகிக்கொண்டிருக்கிறீர்கள்.. வாழ்த்துக்கள்.. "

Tuesday, October 29, 2013

நினைவுகளிலிருந்து அழியாத ஒரு வரலாற்று துயரம் : வெள்ளியோடு பேருந்து எரிப்பு சம்பவம்


மதம் மற்றும் சாதியின் பின்னால் ஒளிந்து நின்று அரசியல் பேசும் இன்றைய குமரிமாவட்ட காங்கிரஸ் தலைமுறைக்கு ஞாபகப்படுத்த இதை பதிவு செய்யவேண்டியது கட்டாயமாகிறது....
சுதந்திரத்திற்கு பின், காங்கிரஸ் கட்சி முதன் முதலாக மொராஜி தேசாய் தலைமையிலான ஜனதா கட்சியின் கூட்டணியினரிடம் வீழ்கின்றனர். ஆட்சிக்கு வந்த ஜனதா அரசு பல்வேறு குற்றச்சாட்டுகளில் பேரில் இந்திராகாந்தியை கைது செய்கின்றார். முதன்முதலாக காங்கிரசின் வீழ்ச்சியையும், இந்திராவின் கைதையும் சகித்துக் கொள்ள இயலாத இந்திரா காங்கிரஸ் தொ(கு)ண்டர்கள் நாடு முழுவதும் கலவரத்தில் ஈடுபடுகின்றனர்.
டிசம்பர் 20, 1978 இரவு, நாகர்கோவிலில் இருந்து மார்த்தாண்டம் நோக்கி சென்றுக் கொண்டிருந்த 'கட்டபொம்மன் போக்குவரத்து கழக பேருந்து' ஒன்று வெள்ளியோடு அருகே இரவு வழிமறிக்கப்பட்டு பெட்ரோல் ஊற்றப்படுகிறது. மூன்று பெண்கள்(ஒரு கர்ப்பிணி பெண்) உட்பட ஒன்பது ஏழை உயிர்களை பலி கொண்ட இந்த சம்பவத்தில், ஏழு பேர் அதே பேருந்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழகின்றனர். இதில் மூன்று உடல்களை(எலும்புகளை) யார் என்றே உறவினர்களால் அடையாளம் காட்டமுடியாத நிலையில், போலீசாராலேயே பின்னர் அடக்கம் செய்யப்பட்டனர்.
சம்பவத்தில் சூத்திரவாதியாக கருதப்பட்ட, இன்றளவும் 'தீக்கொழுத்தி' என்று மக்களால் வன்மத்தோடு விளிக்கப்படும் மருத்துவர் ஒருவர் கைது செய்யப்படுகிறார். வழக்கு நடைபெற்று வந்த வேளையில் மொராஜி தேசாய் அரசு கவிழ்ந்து மீண்டும் இந்திரா ஆட்சியை பிடிக்கிறார் மத்திய, மாநில அரசின் உறவுநிலை பின் நெருக்கமாக இந்த தீக்கொழுத்தியோ வெளியே வருகிறார். கட்சி இவருக்கான 'சேவை'யை பாராட்டி 1989-ஆம் வருட சட்டமன்ற தேர்தலில் வேட்பாளராக்குகிறது. நல்லவேளையாக அந்த கரும்புள்ளியை தனது முதுகில் வாங்கிக்கொள்ள விரும்பாத பத்மனாபுரம் தொகுதி மக்கள் இவரை தோற்கடிக்கின்றனர்.
........
........
இச்சம்பவம் நடந்து சுமார் முப்பத்தி ஐந்து வருடம் ஆகிறது.கட்சியின் ஏகோபித்த ஆசி மற்றும் சட்டத்தின் ஓட்டையை பயன்படுத்தி  'தீக்கொழுத்தி' போல பெரும்பாலானோர் தப்பித்து விட்டாலும், அன்று காங்கிரஸ் தொண்டர்கள் என்ற பெயரில் இவர்கள் நடத்திய வெறியாட்டம் இன்றும் ஊர் மூப்பர்களால் நினைவுகூரப்பட்டு தான் வருகிறது.






இன்று தங்கள் அரசியல் லாபத்துக்காக மதம் மற்றும் சாதியின் வாலை பிடித்துக் கொண்டு, வெளிஅலங்காரத்துக்காக மட்டும் வெள்ளை உடை தரித்து, அகிம்சையை மேடையில் மட்டுமே பேசிக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளுக்கும் அவர்கள் அடிபொடிகளுக்கும் ஒன்றே ஒன்றை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்..


"எழுதப்படவில்லை என்பதற்காக அராஜவாதிகளின் வரலாறு புனிதமாகி விடாது.. அந்த அராஜகங்களினால் பாதிக்கப்பட்டவர்களால், தலைமுறை தலைமுறையாக அவ்வலி கடத்தப்பட்டுக் கொண்டு தான் இருக்கும்"