Thursday, January 14, 2010

ஒரு கோப்பைத் தேனீரும் சில நட்பும்..... - உரையாடல் போட்டிக்கவிதை

கற்பாறையின் மேல்
அடிக்கப்படும் துணி
போல் அலசி எடுக்கப்படுகிறது
எனது உணர்வுகள்
அவரவர் விருப்பப்படி

மூங்கிலைப் போல்
பலம் கொண்ட
என் சொற்கள்
முழுமை பெரும் முன்னே
வெட்டி வீழ்த்தப்படுகிறது

யார் என்னோடு
பேச வேண்டும் என்பதை
அரசின் காகிதங்களே
தீர்மானிக்கின்றன..

அதிகார நாற்காலிகளை
தற்காத்துக் கொள்ள
எனது இருப்புத் தொடர்ந்து
நிர்மூலமாக்கப்படுகிறது

இருப்பினும்
வாழ்க்கையைக் கொண்டாட
எப்போதும் மிச்சமிருக்கிறது
ஒரு கோப்பைத் தேனீரும்
சில நட்பும்.....

( உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு நடத்தும்
உரையாடல் கவிதைப் போட்டிக்காக' எழுதியது. )