Showing posts with label திரை விமர்சனம். Show all posts
Showing posts with label திரை விமர்சனம். Show all posts

Saturday, July 11, 2015

பாபநாசம், திரிஷ்யம் மற்றும் இன்னும் பிறவும்..

தமிழக-கேரள எல்லையோர மாவட்டக்காரன் என்பதால், எண்பதுகளின் பிற்பாதியில் துவங்கி  இரண்டாயிரத்தி ஐந்து வரை வந்த பெருவாரியான மலையாள சினிமாக்களை தொலைகாட்சி மற்றும் திரையரங்குகள் வழியாக காணும் வாய்ப்பை பெற்றவன் நான். இன்றளவும் ஒரு மலையாள சினிமாவை தமிழில் 'ரீமேக்' செய்கிறார்கள் என்றாலே லேசான பதட்டத்தோடு தான் பார்க்க வேண்டி இருக்கிறது; நம்முடைய ரீமேக் படங்களின் வரலாறு அப்பிடி..

80'களில் துவங்கி இன்றளவும் மலையாளத்திலிருந்து ரீமேக் செய்யப்பட்ட படங்களில் எனக்கு பிடித்தமானவை என்று பட்டியலிட்டால், 'பூவே பூச்சூடவா,வருஷம் 16, என் பொம்மு குட்டி அம்மாவுக்கு' போன்ற ஒரு சில படங்களே நினைவில் நிற்கின்றது. 'பிரண்ட்ஸ்' ஐ வடிவேலின் உடல் மொழிக்காக பிடிக்கும். 'காதலுக்கு மரியாதை' யை ஊரே கொண்டாடிய போதும், பாசில் விஜய் ரசிகர்களுக்காக செய்துக்கொண்ட சில சமரசத்தால் என்னால் முழு ஈடுபாட்டோடு படத்தை பார்க்க முடியவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஒரு மூலப்படத்தின் ஆன்மாவை ஒட்டுமொத்தமாக சிதைத்த படங்கள் எனப் பார்த்தால் குசேலன், திண்டுக்கல் சாரதி, கிரீடம், பிரியாத வரம் வேண்டும் என ஒரு பெரும் பட்டியலே போடலாம், அதும் 'குசேலன்' படத்தில் கிராமப்பின்னணியில் டால்பினை துள்ள விட்ட சவுந்தரியாவையும், வாசுவையும் மன்னிக்கவே முடியாது. ;-) 

சரி, பாபநாசம்-திரிஷ்யத்துக்கு வருவோம்.திரிஷ்யத்தை மூன்று முறை பார்த்தும் கொஞ்சமும் சலிக்கவே இல்லை. கேரளாவின் எதோ ஒரு மூலையில் வசிக்கும் மலையாளியின் வீட்டிலும் இதுபோன்ற ஒரு எளிய குடும்பம் இருக்கும், இதுபோன்ற ஒரு சம்பவங்கள் நடக்கலாம் என்ற எதார்த்த உலகை அவர்களருகில் திரிஷ்யம் கொண்டுவந்ததாலோ என்னவோ ஒட்டுமொத்த கேரளாவுமே படத்தை கொண்டாடி தள்ளி விட்டது. இன்னொன்று கடைசி நிமிடம் வரை என்ன நடக்கும் என்று திகைப்போடு காத்திருக்க வைத்த திரைக்கதை.  திரிஷ்யம் தமிழில் வரப் போகிறது, 'உலக நாயகன்' நடிக்கப்போகிறார் என்ற செய்தி வெளியானதுமே அந்த ஆரம்பகால பதட்டங்கள் எனக்குள்ளும் இருந்தது. ஜெயமோகனும்-சுகாவும் இருப்பதால் டிங்கரின் பார்த்து ஓரளவுக்கு தமிழுக்கானதை போல இழுத்துக் கொண்டு வருவார்கள் என்று நம்பினேன். ஜெ-சுகா-ஜீ ஜோசப்-கமல் கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது என்று தான் சொல்வேன். ஆச்சரியமாக, எனக்கும் 'பாபநாசம்' பிடித்திருந்தது.

பாபநாசத்தில் முற்றிலும் எரிச்சலை தந்த ஒரு விஷயம் ஆஷா சரத்தின் குரல். திரிஷ்யத்தை போலவே பாபநாசத்திலும் நடிப்பில் அசத்தில் இருந்தாலும், தமிழில் அவரது சொந்தகுரல் ஒருவிதத்தில் சவ்வு போல இழுக்கிறது. காணாமல் போன மகனை நினைத்து பரிதவித்து தனது கணவனிடம் அவர் புலம்பும் காட்சியை தமிழிலும் மலையாளத்திலும் ஒப்பிட்டு பாருங்கள், மலையாளத்தில் ஒரு 'நடிப்பு ராட்சஷியாய்' தெரியும் அவர்,  ஒரு சாதாரண மேடை நாடக நட்சத்திரத்தின் அனுபவத்தையே பாபநாசத்தில் நமக்கு தருகிறார்.

த்ரிஷ்யத்தில் கிடைக்காது பாபநாசத்தில் கிடைத்த ஒரு நல்ல அனுபவம் என்று பார்த்தால் சுலைமான் பாய் -யாக வரும் M.S.பாஸ்கரின் கதாப்பாத்திரம். தினமும் தொழும் இஸ்லாமியர்களின் தலை நெற்றியில் கோடு விழும் என்ற அளவில் நுணுக்கமாக அணுகி இருக்கும் திரைகுழுவினருக்கு பாராட்டுக்கள்..

சுறா, புறா, இறா என வெளியிட்டு தமிழ் சினிமா இரசிகர்களை வதைக்கும் படங்களுக்கிடையில் பாபநாசம் ஒரு நல்ல விஷுவல் ட்ரீட். மூலப் படத்தின் ஆன்மாவை சிதைக்காமல் தமிழில் கொண்டு வந்ததிற்காக திரைகுழுவினருக்கு எமது அன்பும், வாழ்த்தும்.

டிஸ்கி: 'அஞ்சான் ஆகஸ்ட் 15 தான் வெளியானது, ஆனால் ஆகஸ்ட் 2 அன்று தென்காசி செல்வதாக சுயம்புலிங்கத்தின் குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர், இதை வைத்து அவர்களை கைது செய்யலாம்' என ஒரு 'சினிமா ஆர்வலர்' முகநூலில் கருத்து தெரிவித்திருந்தார். உண்மையில் It's a good catch, unfortunately it was a no ball. 'பாபநாசத்தை' சினிமாவாக புறத்தில் இருந்தது பார்க்கும் போது இது முற்றிலும் சரியே, அசிஸ்டென்ட் டைரக்டர்ஸ் சொதப்பின இடம் அது. ஆனால், சினிமாவுக்கு உள்ளிருந்து பார்க்கும் போது, திரைஅரங்கின் உள்ளிலும் அஞ்சான் திரைப்படத்தின் காட்சியே காட்டப்படுகிறது. Good luck next time. ;-)


புகைப்படங்கள் நன்றி : கூகுள்

Sunday, August 3, 2014

1983 - ஒரு கிராமத்து கிரிக்கெட் காதலனின் கதை

1983 - திரைப்படத்தின் கதையை முதலில் கேட்ட போது,  இது ஒரு தோற்றுப் போனவனின் கதை என்று தான் நினைத்திருந்தேன். இந்திய கிராமங்களில் கிரிக்கெட் விளையாடும் லட்சோப லட்சம் சாமானியர்களில் ஒருவனின் கதை இது என்று படத்தைப் பார்த்து முடித்த போது தான் தோன்றுகிறது.  

சச்சின் தனது 200-ஆவது டெஸ்ட் போட்டியை நிறைவு செய்து உரையாற்றும் காட்சியிலிருந்து படம் துவங்குகிறது. 'இனி தெய்வம் கிரீசுக்குள் இல்லை; அதை நம்பவும் முடியவில்லை, சங்கடத்தை தாங்கவும் முடியவில்லை...' என்று தனக்குத்தானே விசனப்படும் நாற்பது வயது ரமேஷின் பால்யத்தை நோக்கி திரைக்கதை நகர்கிறது.














1983-ஆம் ஆண்டு லார்ட்ஸில்  வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான உலககோப்பையை இறுதிப்பொட்டியை தூர்தர்சன் வழி, விழி அகலாமல் பார்த்துக்கொண்டிருக்கும் பத்து வயது ரமேசும் அவனுடைய நண்பர்களும்,  இந்திய அணி கோப்பையை வென்றதும் பட்டாசு வெடித்து கொண்டாடித் தீர்க்கிறார்கள். மோட்டார் மெக்கானிக்கான கோபி ஆசான், தனது மகன் ரமேஷை எப்படியாகிலும் மெக்கானிகல் எஞ்சினியர் ஆக்கி விட வேண்டுமென ஆசைப்படுகிறார். படிப்பில் ரமேஷ் சுட்டி என்றாலும் கிரிக்கெட் விளையாடுவதையே பெரும் பொழுதுபோக்காக கொண்டிருக்கிறான். படிப்பின் வாசனை கொஞ்சம் கொஞ்சமாக வடிந்து, பத்தாம் வகுப்பை தட்டி தடுமாறி கடக்கும் ரமேஷ், ப்ரீ டிகிரியில் தோற்றுப்போகிறான். மகனை குறித்து கனவுகளில் இருந்த கோபி ஆசான் உடைந்து போகிறார், ரமேஷின் பேட்டை வெட்டி எறிகிறார். ஆனாலும், அன்றும்  வீட்டாரின் கண் தப்பித்து  நண்பர்களோடு டோர்னமென்ட் விளையாடப் போகிறான் ரமேஷ்.


வேலைக்கு ஏதும் செல்லாமல் கிரிக்கெட் விளையாடுவதையே சுவாசமாக கொண்டு நடக்கும் ரமேஷின் மீதான நம்பிக்கை போக அவனது காதலி மஞ்சுளாவும் ஒருகட்டத்தில் அவனை பிரிகிறாள். தந்தை வழி கற்ற மெக்கானிக்கல் பணியை தொடரும் ரமேஷ், நண்பர்களின் வற்புறுத்தலின் பெயரில் திருமணம் செய்துக்கொள்கிறான். முதலிரவு அன்று, சுவரில் ஒட்டி இருக்கும் சச்சினின் புகைப்படத்தை பார்த்து 'யார் இது?' என கேட்டு ரமேஷை அதிர்ச்சிக்குள்ளக்குகிறாள் அவனது மனைவி.   

காலம் உருண்டோடுகிறது; ரமேசின் தனது மகனுக்குள் இருக்கும் கிரிக்கெட் ஆர்வத்தை பார்த்து பேட் ஒன்றை வாங்கிக்கொடுக்கிறான். இந்தியா மீண்டும் உலகக்கோப்பையை கைப்பற்றுகிறது. ரமேஷ் அப்போதும் கிரிக்கெட் விளையாடிக்கொண்டு இருக்கிறான். ரமேசின் ஆட்டத்தை பார்த்து பிரமித்துப் போன முன்னாள் கேரளா கிரிக்கெட் கேப்டன் விஜய் மேனன் வழியாக, அவருடைய அக்காடமியில் மகனை கிரிக்கெட் பயிற்சிக்கு அனுப்புகிறான். ரமேஷின் மகன் 'Under-14' மாவட்ட அணிக்காக தேர்வு செய்யப்படுவதோடு படம் நிறைவு பெறுகிறது.


ரமேஷாக நிவின் பவுலி, விஜய் மேனனாக அனூப் மேனன், கோபி ஆசானாக ஜோய் மத்யூ என ஒவ்வொருவரும் அவரவரது கதாப்பாத்திரத்தை நிறைவாகவே  செய்திருக்கிறார்கள். கதை, திரைக்கதை, இயக்கம் அப்ரிட் ஷைன். ரமேஷ் கதாப்பாத்திரத்தை மிக அழகாக செதுக்கிஇருக்கிறார்;  இந்திய அணிக்காக விளையாட வேண்டுமென்ற கனவோடு விளையாடி தோற்று போனதாக சித்தரித்திருக்க முடியும்..  ப்ரி டிக்ரி தோற்று போனதோ, காதல் கைகூடாமல் போனதோ, சரியான வேலையில்லாமல் இருப்பது குறித்தோ, கிரிக்கெட்டில் பெரிய இடத்தை பிடிக்க முடியாது போனது குறித்தோ ரமேஷ் எப்போதும் கவலைப்படவே இல்லை. கிரிக்கெட் விளையாடுவது ஒரு வெறியாக மாறி, அதையே பொழுதுக்கும் செய்து கல்வியிலும், வாழ்க்கையிலும் சில கணங்களை ரமேஷ் தவற விடுகிறான்..பின்னர், மகனுடைய கிரிக்கெட் ஆசைக்கு உடன்பட்டு, அவனை வழிநடத்துகிறான் என்பதையே படம் பேசுகிறது.

1983 துவங்கி, இந்திய கிரிக்கெட் அணியின் முக்கியமான சில கணங்களை படம் நெடுக்க பதிவு செய்திருக்கிறார்கள். அன்றைய வளைகுடாவின் அரசியல் சூழ்நிலையையும், வெவ்வேறு கால இடைவெளிகளில் நண்பர்கள் பொருள் தேடி ஓடினாலும், கிரிக்கெட்டும்- சச்சினும் அவர்களுடைய வாழ்க்கையில் ஒரு கண்ணியாக தொடர்வதை அற்புதமாக திரைக்கதையாக்கி இருக்கிறார்கள்.















ஏறக்குறைய கிராமங்களில் கிரிக்கெட் விளையாடிய ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு ரமேஷ் ஒளித்து இருக்கிறான். யோசித்துப் பாருங்கள், கிரிக்கெட் விளையாடுவதை தவிர, கிரிக்கெட் குறித்து வேறு என்ன ஆசைகள் அன்று நமக்குள் இருந்திருக்க முடியும்? ரமேஷை போல சச்சினை எப்பிடி நேசிக்க துவங்கினோம்? சச்சினுடைய குழந்தைகளை தொலைக்காட்சிகளில் காணும் போது, நமக்கு நம் வீட்டு குழந்தைகள்  போல ஏன் மனம் குதூகலிக்கிறது? சச்சினுடைய இருநூறாவது டெஸ்டின் இறுதிநாள் உரையை கேட்கும் போது ஏன் நம்மை அறியாமல் கண்கள் பனிக்கிறது?
ஆம், நாம் சச்சினோடு வளர்ந்தோம்.. ஆகவே, சச்சினை அளவு கடந்து நேசிக்கிறோம்.

நீங்கள், எண்பதுகளில் கிரிக்கெட் விளையாட துவங்கியவராக இருந்தால், இப்படத்தின் மூலம் சில நல்ல நினைவுகளை கண்டிப்பாக அசை போட்டு வரலாம். Don't miss it. 

Sunday, January 26, 2014

101 சோத்யங்கள் (101 கேள்விகள்) : 101 Chodyangal

நான்: லேய் மக்கா, அவங்க உனக்க அம்மையில்லியா?
குமார்: இல்ல மக்கா, அவங்க எனக்க பெரியம்ம.. அவங்க தான் எங்கள சின்ன வயசுல இருந்து வளக்கிறாங்க..


நான்: உனக்க அம்மையை உனக்கு ஓர்ம இருக்கா?


குமார்: ம்ம்.. ஆனா, ரெண்டு தங்கச்சிமாருக்கும் ஓர்ம இருக்குமான்னு தெரியல..

நான்: எப்பிடி இறந்தாங்க?
குமார்: தெரியாது?

நான்: நீ அழுதியா?
குமார்: இல்ல அழல்ல.. எல்லாரும் சொன்னாங்க 'மக்களே கொம்ம செத்து பெய்ட்டா... அழுலன்னு' எனக்கு அழுகையே வரல்ல.. ஏன் நான் அழல்லன்னு இன்னும் தெரியல?!?!


--------------------------------------------------------------


ஒரு சாதாரண அடிமட்ட தொழிலாளியாக, தான் பணிபுரிந்துவரும் ஆலையை விட பெரிய ஆலையை தன் மகன் கட்ட வேண்டும் என்றஆசையோடு, இந்தியாவின் தொழிற்சாலை நகரமான 'பொக்காரோ' வை தன்மகனுக்குப் பெயராக வைத்து, பெரும் கனவுகளோடு வாழும் சிவானந்தன், தொழில்சாலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டார் என்ற காரணத்திற்காக பணிநீக்கம் செய்யப்படுகிறார். அரசு ஆரம்பப்பள்ளியில் ஐந்தாவது வகுப்பில் படிக்கும் மூத்த மகன் அனில்குமார் பொக்காரோ, புத்தி சுவாதீனமற்ற  இளையமகள், குடும்பத்தை நடத்த அரசின் வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தின் கீழ் சாலை சீரமைப்பு வேலைக்கு செல்லும் மனைவி என கஷ்டமான குடும்பச்  சூழ்நிலை.




அனில்குமார் படிக்கும் அரசுப்பள்ளியில் புதிய ஆசிரியராக வரும் முகுந்தன், ஆசிரியர் பணி அல்லாது நாடகங்கள், சமூக சேவை, சிறுபுத்தகங்கள் எழுதுவது என பல்வேறு விஷயங்களில் ஆர்வம் காட்டுகிறார். அனில்குமாரின் குடும்பச்சூழ்நிலையை தெரிந்துக்கொண்டு, அவனிடம் தன்னிடம் வந்த புத்தக வேலையின் ஒரு பகுதியை செய்யச்சொல்கிறார். ஆம், பதில் கிடைக்கக்கூடிய 101 கேள்விகளை உருவாக்கச்சொல்கிறார். ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு ரூபாய் வீதம் நூற்றியொரு ரூபாய் அவனுக்கு தருவதாக ஒப்புக்கொள்கிறார். கேள்விகளை தேடி அனில்குமார் அலைகிறான்.

இதனிடையே, ஆலையில் இருந்து நீக்கப்பட்ட தனக்கு எப்படியும் வேலை கிடைத்துவிடும் என தொழிற்சங்கவாதிகளுக்கு பின்னாலும்,  அரசியல்வாதிகளுக்கு பின்னாலும் நடையாய் நடக்கிறார் சிவானந்தன். அனில்குமாரின் குடும்பச்சூழ்நிலை மோசமாக, அவன் எழுதி வைத்திருந்த அறுபது கேள்விகளுக்கான பணத்தை முகுந்தன் அவனுக்கு கொடுத்து மீண்டும் நாற்பத்தி ஒரு  கேள்விகளை தேடிச்செல்லுமாறு சொல்கிறார்.அந்த அறுபது ரூபாயில் அன்று சிவானந்தன் வீட்டு உலை கொதிக்கிறது.


நூறு கேள்விகளை தேடித்தேடி அனில் கண்டுப்பிடிக்கிறான். உற்சாகத்தோடு வீட்டுக்கு வரும் வழியில், தந்தை விழுந்து கிடப்பதை பார்க்கிறான்.. ஆம், சிவானந்தன் இறந்து கிடக்கிறார். அனில்குமாரின் தந்தை இறந்துவிட்டதை அறிந்து தொழிற்சங்கவாதிகளும், அனிலின் சக பள்ளி மாணவர்களும் வருகிறார்கள்.. முகுந்தனும்..




மரணவீட்டில் முகுந்தனை பார்த்த அனில்குமார், நூறு கேள்விகள் எழுதிய நோட்டுப்புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு கேட்கிறான் "சார், இதில நூறு கேள்வி இருக்கு.... எனக்கு தோணுறதை தவிர, இந்த கேள்விகளுக்கு சரியான விடை எனக்கு தெரியாது. எனக்கு தெரிந்துக் கொள்ளவும் ஆசை இல்லை. ஆனா, சார் எனக்கு என்னோட நூற்றி ஒண்ணாவது கேள்விக்கு பதில் தரணும்.. எனக்கு என்னோட அப்பாவை ரொம்ப பிடிக்கும். அப்பாவுக்கும் என்னை ரொம்ப பிடிக்கும். அம்மாவும் சொல்லுவாங்க, எனக்கும் தெரியும் அப்பா இறந்தால் குழந்தைகள் அழணுமுன்னு..ஆனா, சாரே எனக்கு மட்டும் ஏன் அழுகை வரல்ல?". ஆசிரியர்களும், சுற்றி இருந்தவர்களும் விக்கித்து நிற்க விடையில்லாத அந்த கேள்வியோடு படம் நிறைவடைகிறது.



----------------------------------------



படத்தைப் பார்த்து முடித்த போது எனக்கு குமாருடைய விடையில்லாத குமுறல் தான் நினைவுக்கு வந்தது. மரணம் வெகுசூனியமானது... நமக்கு பிடிக்கவில்லை என்றாலும் அது ஒருநாள் நம்மை அடைந்தே தீரும். நெருக்கமான ஒருவருடைய மரணம் நமக்கு அழுகையை கொண்டுவருகிறது  என்பதற்கு எண்ணற்ற காரணங்கள் இருக்கலாம். ஆனால் நெருக்கமான ஒருவருடைய மரணத்தில் அழுகை வரவில்லையென்றால் அதற்கு என்ன காரணம் இருக்க முடியும்?.


அந்த 101 ஆவது கேள்விக்கு பதில் தெரிந்தால் சொல்லுங்களேன்..அப்பதிலை அனில்குமாரிடம் என்னால் சொல்ல முடியாது... ஆனாலும், குமாரிடம் என்னால் சொல்ல முடியும்.





புகைப்படங்கள் உதவி: பல்வேறு இணையதளங்கள்.

Wednesday, December 22, 2010

அம்பேத்கரை கண்டேன்




சென்னை மினி உதயம் திரைரங்கில் அம்பேத்கர் திரைப்படம் 11 மணி காட்சிக்காக நுழைவு சீட்டு வாங்கி கொண்டு 11:02 - க்கு உள்ளே நுழைந்தால் பேரதிர்ச்சி. என்னை தவிர வேறு யாருமே இல்லை. வெளியே வந்து நுழைவு காவலரிடம் கேட்ட போது "எல்லாரும் 11:30 மணி ஷோ-ன்னு நினச்சிட்டு வருவாங்க சார். எப்படியும் முன்னூறு பேர் வருவாங்க" என்றார். லேசாக பெருமூச்சு விட்டு விட்டு, உள்ளே நுழைந்து எனது இருக்கையில் அமர்ந்தேன். பத்து நிமிடத்துக்குள் சுமார் இருநூறு பேர் வந்து அமர, மனம் ஆறுதல் அடைந்தது.

இந்திய சுதந்திரத்தை முன்வைத்து லஜபதி ராயோடு அம்பேத்கர் கொண்டமுரண் அரசியலோடு கதை துவங்குகிறது. காட்சிகள் விரிய, விரிய அம்பேத்கர் என்ற பிரமாண்டம் எனது உடல் முழுவதும் வியாபிக்க துவங்கினார். வறுமையினாலும், தீராத வியாதியினாலும் தனது மனைவி,நான்கு குழந்தைகள் என எல்லாவற்றையும் பறி கொடுத்தும், வாழ்க்கையின் கடைசி காலகட்டம் வரை புறக்கணிக்கப்பட்ட மக்களுக்காக போராடிய இந்த மனிதனின் வாழ்க்கை கதையை திரையில் கண்ட போது, ஒரு மகானின் வாழ்க்கையை கண்டதாவே உணர்ந்தேன். 1956-ம் வருடம் அம்பேத்கர் இறந்தார் என்ற வரிகளோடு திரைப்படம் முடியும் போது மனம் கொஞ்சம் உணர்ச்சிவசப்படவே செய்தது.

திரையில் அம்பேத்கராக வாழ்ந்து காட்டிய மம்மூட்டியை எத்தனை பாராட்டினாலும் தகும். இந்தியாவின் மிக முக்கியமான தலைவர் வேடத்தில் ஒருவர் நடித்து, அனைத்து தரப்பு மக்களையும் கவர்வது லேசான காரியம் அல்ல, மம்மூக்கா அருமையாய் வாழ்ந்து காட்டி இருக்கிறார். அம்பேத்கர் பேரை கேட்டாலே ஓட்டம் பிடிக்கும் நமது நடிகர்கள் மத்தியில், ஒரு சவாலான கதாப்பத்திரத்தை ஏற்று, அதை கனக் கச்சிதமாய் செய்து முடித்திருக்கும் மம்மூக்காவின் மேல் மரியாதை இன்னும் கூடுகிறது.

திரையில் என்னை கவர்ந்த இன்னொரு மனிதர் காந்தியாக நடித்தவர். அதுவும் அவருடைய உடல்மொழி இருக்கிறதே அப்பப்பா.... அட்டகாசம்... காந்தி பேசும் பல காட்சிகளிலும், 'அம்பேத்கர் ஒழிக' என முழக்கம் கேட்கும் பல காட்சிகளிலும் திரைரங்கு முழுவதும் சன்னமான சிரிப்பொலி எழும்புகிறது.

படம் பார்த்து வெளியே வந்த போது ஏதாவது நண்பர்களை சந்தித்து விட மாட்டேனா, அவர்களிடம் ஒரு இருபது நிமிடம் அம்பேத்கர் பற்றியும், இந்த திரைப்படம் பற்றியும் பேச வேண்டும் போல் இருந்தது.

'சினிமா' பற்றி ஒவ்வருவருக்கும் மாறுபட்ட கருத்து இருக்கும். என்னை பொறுத்தவரையில் 'சினிமா' பொழுதுபோக்குக்கான ஊடகம் மட்டும் அல்ல.அது ஒரு நவீன கலையின் வடிவம். அந்த நவீன கலை ஊடகத்தின் வழியாக இது போன்ற நல்ல திரைப்படங்கள் வருவதே சமூகத்தை செம்மைபடுத்த உதவும்.

'அம்பேத்கர்' திரைப்படம் இன்னும் விளம்பரப்படுத்தப்பட்டிருந்தால் இந்த வரலாற்று நாயகனுடைய குரல் இன்னும் பல மக்களுக்கு போய் சேர்ந்திருக்குமே என்ற ஆதங்கம் எழாமல் இல்லை. அரிவாளுடனும், பரட்டை தலையுடனும் திரியும் கதாநாயகர்களையும், அதன் இயக்குனர்களையும் கட்டி பிடித்து பாராட்டி மகிழும் நமது சூப்பர் ஆக்டர்களுக்கோ, ஸ்டார்களுக்கோ அது பற்றிய அக்கறையே இல்லை. ஒருவேளை அப்படி செய்தால் தானும் தீண்டத்தகாதவன் ஆகி விடுவோம் என்ற பயம் காரணமாய் இருக்கும் !.

அம்பேத்கரை தலித்துகளின் குறியீடாக இன்று காண்பது துரதிஷ்டவசமானது, அது ஒரு சமூக மன நோயும் கூட... உண்மையில் அம்பேத்கர் நவீன இந்தியாவில் புறக்கணிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கான குறியீடு.
வரலாற்றை நமக்கு சொல்லி தர மறந்த முந்தைய தலைமுறையும், வரலாற்றை கற்று கொள்ள போகும் நாளைய தலைமுறையையும் அம்பேத்கர் திரைப்படம் வெளியிடப்பட்டுள்ள திரைரங்குக்கு கூட்டி செல்லுங்கள். உண்மையான ஒரு சமூக போராளியின் வரலாறு அனைவருக்கும் சென்றடைய உதவுங்கள்.

அம்பேத்கர் திரைப்படம் குறித்து சக பதிவர்களின் பதிவுகள்


நன்றி : கீற்று