Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Saturday, October 28, 2017

கற்றது தமிழ் - 10 ஆண்டுகள்

'கற்றது தமிழ்' திரைப்படம் வெளியான போதும் ஐ.டி துறையில் தான் இருந்தேன். உதயம் திரையரங்கில், பத்துமணி காட்சியை பார்த்து விட்டு, அந்த நடுநிசி பனியில், கண்ணீரோடு அறைக்கு சென்றது இன்றும் நினைவில் உறைந்து போய் இருக்கிறது.
ஐ.டி துறையினரை படம் கடுமையாக சாடுகிறது என பரவலான விமர்சனங்கள் வந்த போதும், ஒருதடவை, இரண்டு தடவை, மூன்று தடவை.. என கணக்கே இல்லாமல் அந்த படத்தை மீண்டும் மீண்டும் பார்த்தேன், பார்க்கிறேன். இன்றளவும் 'கற்றது தமிழ்' எனது All time favourite.
சரி, 'கற்றது தமிழ்' எதைப் பேசுகிறது?
காதலையா? ஆம்.
உலகமயமாக்கலையா? ஆம்
தாய் மொழி கல்வி, சொந்த மண்ணில் அகதி ஆக்கப்பட்டதையா? ஆம்
கார்பரேட் உலகம் உருவாக்கிய தனி மனித சிக்கலையா? ஆம்.
ஆம், அமெரிக்காவில் ஒரு வங்கி வீழ்ந்தால், அம்பத்தூரில் கல்யாணம் நின்று போய் விடும் இன்றைய வாழ்க்கை சூழலை பத்து வருடங்களுக்கு முன்பே அந்த படம் பேசியது.

ஜீவா, அஞ்சலி என எத்தனையோபேருக்கு வாழ்வளித்த இந்தப் படம் முன்வைத்த அரசியலை, தமிழ் சினிமா இதற்க்கு முன்னரும் பேசியதே இல்லை, இதற்க்கு பிறகும் பேசவில்லை. இனிமேலும் யாராவது பேசுவார்களா என்பதும் சந்தேகமே..
எங்கையோ இருந்து ஒருவன் நமது வாழ்க்கையை, மொழியை, பண்டிகையை, கலாச்சாரத்தை தீர்மானிக்கும் வரை 'கற்றது தமிழ்' தமிழ் சமூகத்தில் பேசப்பட்டுக் கொண்டே இருக்கும்..பேசப்படும்.



இன்றோடு 'கற்றது தமிழ்' திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவுறுகிறது. இத்திரைப்பட உருவாக்கத்தில் பங்கேற்ற அனைத்து படைப்பாளிகளுக்கும் எமது அன்பும், வாழ்த்துகளும்.
Katrathu Tamil

https://www.facebook.com/stalin.felix.5/posts/10156009305897780

Friday, March 30, 2012

இயக்குனர் விக்ரமன் - என்னை கவர்ந்த திரைக் கலைஞன்



இரண்டு வாரங்களுக்கு முன் 'சூர்யவம்சம்' திரைப்படத்தில் இருந்து 'ரோசாப்பூ...சின்ன ரோசாப்பூ' பாடலை கேட்டுக்கொண்டிருந்தேன். அருகில் இருந்த நண்பர்கள் தாறுமாறாக கிண்டலடித்தாலும் பாட்டு முடியும் வரை நான் நிறுத்தவே இல்லை. ஆம், இன்றைய பப் கலாச்சார இளைஞர்களுக்கு முன்னால் நான் இயக்குனர் விக்ரமனின் ரசிகன் என சொன்னால் 'லாலாலா' என பாடி கேலிக்கு உள்ளாக்கப்படலாம்.ஆனாலும் முழு மனதுடன் எந்த சங்கோஜமும் இன்றி சொல்வேன் என் பால்யத்தை பாதித்த இயக்குனர்களின் மிக முக்கியமானவர் விக்ரமன்.



விக்ரமனை பள்ளி நாட்களில் அதிகம் சிலாகித்ததாலே நெருங்கிய நண்பர்கள் இன்றும் என்னை 'சென்டிமெண்ட் ராசா' என அழைப்பது உண்டு. 'புது வசந்தம்' திரைப்படம் வெளிவந்த காலகட்டங்களில் இயக்குனர் யார் என பார்க்கும் மனோபாவமோ, வயதோ எனக்கு இல்லை. ஆனாலும் அந்த படமும், பாடல்களும் மனதுக்குள் ஏற்படுத்திய குதூகலம் கொஞ்சம் நஞ்சமல்ல. ஐந்தாம் வகுப்பில் பள்ளி ஆண்டு விழாவிற்கு 'போடு தாளம் போடு...' என்ற பாடலில் நடனம் ஆட நான் தகுதி பெற முடியாத வருத்தம் எனக்கு பல வருடங்கள் இருந்ததற்கு அந்த பாடலும் ஒரு முக்கியமான காரணம். அப்போது அறிமுகமான சித்தாரா இன்றளவும் எனக்கு பிடித்தமான நடிகை.

விக்ரமன் என்ற இயக்குனரை உற்று பார்க்க துவங்கியது 'கோகுலம்' மற்றும் 'நான் பேச நினைப்பதெல்லாம்' திரைப்படங்கள் வெளிவந்த காலகட்டங்கள் தான். புரட்சி கலைஞரும் ஆக்சன் கிங்-உம் தீவிரவாதிகளுக்கு எதிராக யுத்தம் நடத்திக்கொண்டிருந்த போது நாம் வாழவே முடியாத ஆனால் வாழ விரும்பும் வாழ்க்கை பக்கத்து ஊரிலே இருப்பது போல கண்களுக்கு முன்பாகவே காட்டினார். அப்படங்களும்,பாடல்களும் மக்களின் ஏகோபித்த ஆதரவை பெற்றது.

நாகர்கோவிலில் அதிக நாட்கள் ஓடிய திரைப்படங்களில் முக்கியமான ஒன்று 'பூவே உனக்காக'. எத்தனை தடவை பார்த்தேன் என்று கணக்கு வழக்கே இல்லாமல் பார்த்திருக்கிறேன். என்னுடைய 'all time favourite' லிஸ்டில் 'பூவே உனக்காக' கண்டிப்பாக உண்டு. விஜய் என்ற நடிகரை தமிழ் உலகிற்கு அடையாளம் காட்டிய முக்கியமான படம். அத்திரைப்படத்தின் க்ளைமாக்ஸ் வசனங்களை மனப்பாடம் செய்து எழுதி வைத்து பள்ளி இடைவேளைகளில் நண்பர்களுக்கு வாசித்து காட்டியது இன்றளவும் நெகிழ்ச்சியாக நினைவில் உள்ளது.

'பூவே உனக்காக' திரைப்படத்தின் பின் வந்த 'சூரிய வம்சம்', 'உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்', 'வானத்தை போல' மூன்றுமே அவரின் உச்சம் என்பேன். தமிழக மற்றும் இந்திய அரசின் விருதுகளை அவருக்கு பெற்று தந்த படங்கள். இத்திரைப்படங்கள் வெளிவந்த காலகட்டங்களில் அவரை நான் மிகவும் நேசிக்க துவங்கி இருந்தேன். வெகுஜன இதழ்களில் வெளிவந்த அவரது பேட்டிகளை தேடி தேடித் படித்திருக்கிறேன்.சாமானிய மக்களுக்காக படம் எடுக்க கூடிய ஒரு படைப்பாளி என தீர்க்கமாக நம்பினேன். எனது நம்பிக்கையை எந்த வகையிலும் இயக்குனர் குலைக்கவே இல்லை.

திரையரங்கு போய் அதிகபட்சமாய் பார்த்த ஒரு திரைப்படம் 'வானத்தை போல'-வாக தான் இருக்க முடியும். ஞாயிற்றுகிழமை என்றாலே சுவாமியார்மடம் 'அஜய் டாக்கீஸ்'-ல் கூடி விடுவோம். ஊர் நண்பர்களோடு முறுக்கு சாப்பிட்டவாறு படம் பார்த்த அந்த நாட்களில் கிடைத்த சந்தோஷம் மல்டி ப்ளக்ஸ்களில் உச்ச நடிகர்களின் திரைப்படங்களை முதல் நாள் பார்க்கும் போது கூட கிடைக்கவில்லை.

'உன்னை நினைத்து' மற்றும் அதற்கு பிறகான திரைப்படங்கள் முழுக்க கிராம சாயலில் இருந்து விலகி நகர்புற வாழ்வியலை பின்னணியாக கொண்டவை. இதை விக்கிரமனின் சறுக்கலாக பிறர் சொன்னாலும் என்னை பொறுத்தவரை அப்படி ஒரு நிலைக்கு அவரை தள்ளி விட்டோம் என்றே தோன்றுகிறது.சுழலும் உலகமயமாக்கலுக்கு தன்னை உட்படுத்தி வேகமாய் ஓடி தன்னை வடிவமைத்து கொண்ட தமிழ் சமூகங்களுக்கு விக்கிரமனின் எளிமையான திரைமொழி சலித்து போனதில் ஆச்சரியம் இல்லை.

விக்கிரமன் படத்தை குடும்பத்தோடு பார்க்கலாம் என்ற மக்கள் மனதில் இருக்கும் நம்பிக்கையை இத்தனை வருட திரைவாழ்வில் அவர் எப்போதுமே உடைக்கவே இல்லை. கோடி கோடியாய் கொட்டி கொடுத்தாலும் குடும்பத்தோடு பார்க்க கூடிய படத்தை மட்டுமே எடுப்பேன் என்ற அவரது உறுதியில் அவர் மாறவே இல்லை நாம் தான் நம்முடைய ரசனையை வெகுவாய் மாற்றிக் கொண்டோம்.

இன்று(மார்ச் 30) பிறந்தநாள் கொண்டாடும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவிப்பதோடு விரைவில் வெளிவர இருக்கும் அவரது 'இளமை நாட்கள்' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற மனதார பிரார்த்திக்கிறேன்.

டிஸ்கி:
நான் நேசித்த,நேசிக்கும் ஒரு படைப்பாளியை என் நேசிப்பினூடே அணுகி இருக்கிறேன். எனவே இது நடுநிலையான பதிவா என நண்பர்கள் என் மீது பாய வேண்டாம். நன்றி.

Wednesday, February 24, 2010

அஜித்குமார் என்ற ஆண்மகன்

இந்த பதிவை எழுதுவதால், நான் அஜித்தின் தீவிர ரசிகன் என்றோ, அவருடைய மன்றத்தின் ஆயுட்கால உறுப்பினன் என்றோ தவறாக எண்ணி விட வேண்டாம். அஜித்தின் ஒரு சில திரைப்படங்களை மட்டும் பார்த்திருக்கிறேன், அதுவும் நன்றாக இருக்கிறது என நண்பர்கள் சொன்னால் மட்டும்.... இருப்பினும் கடந்த சில வாரங்களாக அஜித்தை மையம் கொண்டு சுழலும் சர்ச்சைகளே இந்த பதிவினை எழுத தூண்டியது...

'தமிழ்நாடு மன்னராட்சி காலத்தில் தான் இருக்கிறதா ?' என சில நேரம் தோன்றி விடுகிறது. ஏனென்றால் மன்னராட்சி காலத்தில் தான் பெரும்பாலும் கருத்துரிமை பறிக்கப்பட்டிருக்கும்.. அரசனை சுற்றி இருக்கும் மங்குணி அமைச்சர்கள் எடுபிடியாகவே இருப்பார்கள்.... அரசனுக்கு அசதி ஏற்ப்பட்டால் அதை போக்க அரசவை கவிஞர்கள் வேறு....இன்னும் எக்ஸட்ரா எக்ஸட்ரா....( இந்த எக்ஸட்ரா எக்ஸட்ரா-வில் அந்தபுரம் உண்டா என கேட்காதீர்கள் )

இந்த 2010 ஆண்டில் 700 கோடி மக்கள் தொகையை தாண்டி உலகம் எங்கோ சென்று கொண்டிருக்கிறது...இன்றும் தமிழகத்தில் தனது பதவியை தக்க வைத்து கொள்ள அரசர் காலத்தை விட மோசமான சுயநல அரசியல் நடந்து கொண்டு இருக்கிறது... தன் இன மக்கள் சுமார் 10 மைல்களுக்கு அப்பால் கொல்லப்பட்ட வேளையில் அறிக்கை மட்டுமே விட்டு விட்டு குளுகுளு இடங்களில் ஓய்வும், மாலை நேரங்களில் சினிமா பதுமைகளின் நடனமும் மட்டுமே இந்த அதிகார மையங்களுக்கு தேவைப்பட்டது..இனத்திற்காக தங்களும் ஏதோ செய்தோம் என்று காட்ட உண்ணாவிரத நாடகங்களும் அரங்கேற்றப்பட்டன....

ஒரு நாட்டை ஆளும் முதல் குடிமகன் எப்படி இருக்க வேண்டும்??? அதுவும் வயதை கடந்த ஒரு முதியவரிடம் எப்படிப்பட்ட பக்குவத்தை நாம் எதிர்பார்ப்போம்..இந்த நாட்டின் எல்லா விருதுகளும், புகழ் மாலைகளும் தனக்கு அப்பாற்பட்டது என்று எண்ணும் குறைந்த பட்ச தகுதி.... ஆனால் தமிழகத்தை ஆளுபவர்களுக்கோ மாதத்திற்கு மூன்று விருதுகள் கிடைக்கவில்லை என்றால் தானாகவே நடுக்கம் வந்து விடுகிறது போலும்....இதை தவிர்த்து எல்லோரும் தன்னை புகழ்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்ற நப்பாசை வேறு...

இப்படி சினிமா உலகம் நடத்திய பாராட்டு விழாவில் தான் ஒரே ஒரு குரல் வெளிப்படையாக தன்னுடைய கருத்தினை தமிழகத்தின் முதல் குடிமகனுக்கு முன்னால் பதிவு செய்தது. அதுவும் அவருக்கு எதிராக அல்ல, சினிமா முதலாளிகளுக்கு எதிராக... அந்த குரலுக்கு சொந்தகாரர் திரைப்பட நடிகர் அஜித்.. "பெரும்பாலான விழாக்களுக்கு தங்கள் விருப்பம் இல்லாமல் மிரட்டியே அழைக்கப்படுகிறோம், அரசியல்வாதிகளை பொது பிரச்சச்சனைகளை பார்த்து கொள்ள சொல்லுங்கள், நாங்கள் எங்கள் தொழிலை மட்டும் பார்க்கிறோம்" என்பதே அவருடைய பேச்சின் சாராம்சம்..


மாற்று கருத்து உடையவராக இருந்தாலும், அந்த நபருக்கான கருத்து உரிமைக்கு முக்கியத்துவம் கொடுத்தவர் பெரியார்..... பெரியாரின் பெயரை சொல்லி பதவிக்கு வந்த இந்த போலி பகுத்தறிவாளர்களுகோ பயம் ஏற்பட்டு விட்டது.சம்மந்தப்படவர்களை என்னவென்று விசாரித்து நடந்து கொண்டிருக்கும் 'மிரட்டல்' பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயலாமல் 'வேறு ஒருவரையே சொன்னாலும், தனக்கு முன் எப்படி சொல்லலாம்' என்ற பாசிச சிந்தனையுடன் பிரச்னையை அணைத்து விட பார்க்காமல் தொடர்ந்து குளிர் காய்ந்து கொண்டிருக்கிறார்கள்.... அதன் தொடர்ச்சியே ஜாகுவார் தங்கம் முதல் திருமா வரை விடும் அறிக்கைகள்....

இது போதாது என்று இனம் மற்றும் ஜாதி பிரச்சனைகளை கொண்டு அஜித்தின் மேல் சேறு வாரி இறைக்கிறார்கள், போதாததற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியிருக்கிறது பெப்சி. "மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது, வேண்டுமென்றால் நடிப்பதை விட்டு விடுகிறேன்" என ஒரு பேட்டியில் தெரிவித்து உள்ளார் அல்டிமேட் ஸ்டார்... அது தான் அஜித். இந்த கலககுரல், இந்த கம்பீரம் தான் இன்று என்னை போன்ற ரசிகன் அல்லாத சினிமா பார்வையாளன் மனதில் அஜித்தை நிரந்தர இடம் பெற செய்திருக்கிறது..

விழா அரங்கிலையே எழுந்து நின்று கைதட்டி தனது பேராதரவை தெரிவித்தார் ரஜினி. 1996 ஆண்டு தேர்தலுக்கு முன்னிருந்தே அவர் என்ன பேசினாலும் சர்ச்சைகள் உருவாவதை தவிர்க்க முடிவதில்லை.... சூழ்நிலைகளின் கைதி போல் கொந்தளிப்பான மனநிலையில் இருந்த ரஜினி தான் பேச முடியாததை அஜித் பேசியதால் விழா மேடையிலேயே எழுந்து கைதட்டினார்..
ஆனால் அவருக்கும் ஒரு கண்டனத்தை தெரிவித்தது பெப்சி..நடிகர்களுக்கு சமூக அக்கறை வேண்டாமா ? எனபது மட்டுமே எதிர் கோஷ்டியினர் கேட்கும் ஒரே கேள்வி... சமுக அக்கறை என்பது மேடையில் மட்டுமே வீர வசனம் பேசி கைதட்டல் வாங்கி விடுவது என இந்த அறிவிலிகள் நினைத்திருக்கிறார்கள் போலும்..



தொழில் முறையில் சக போட்டியாளராக இருந்தாலும் விஜய் தனது ஆதரவை அஜித்துக்கு தெரிவித்திருப்பது ஆறுதல் அளிக்கிறது.அறிக்கை விடாமல் இருந்தாலும் சக நடிகர்கள் பலர் தங்களுடைய ஆதரவை அஜித்துக்கு தெரிவித்து உள்ளனர்... நடந்ததும், நடந்து கொண்டிருப்பதும் மொழி, இன பிரச்னை அல்ல.... தன்மான பிரச்சனை... பெப்சிக்கு தம் அமைப்புக்கு எதிராக ஒரு முன்னணி நடிகர் பேசி விட்டாரே என்று.......... முதல்வருக்கோ தன் பாராட்டு விழாவில் ஒரு எதிர் குரல் கேட்டு விட்டதே என்று..

அஜித் கிளப்பிய பொறி இந்த அதிகார மையங்கள் திருந்தி கொள்ள ஒரு வாய்ப்பாக அமையட்டும்... இல்லையேல் காலம் இவர்களுக்கு எல்லாவற்றையும் கற்று கொடுக்கும்...

புயலாக வந்து எல்லோருடைய மவுனங்களையும் உடைத்த நடிகர் அஜித்துக்கு ஒரு ராயல் சல்யுட்


Wednesday, September 30, 2009

டமிலக அரசு விருதுகள்- எதற்காக ???


டமிலக அரசின் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட, விருது பெற்றவர்களோ தனக்கு எதற்காக விருது வழங்கப்பட்டது என முழித்து கொண்டு இருக்கிறார்கள். அவர்கள் செய்த "சாதனை" அவரவர் வீட்டிலே தொலைபேசி வழியாய் ஒலிக்கிறது. சிலரது வீட்டில் நாமும் ஒட்டு கேட்டதில்...

கஜினி காந்த்: அன்பு கஜினியே, இளைஞர்களின் இதய துடிப்பே.....அரசியலுக்கு இப்போது வருவேன், அப்போது வருவேன் என அலம்பு காட்டி அலுவா கொடுத்தவனே, தேர்தலில் எனக்காய் "வாய்ஸ்" தந்தவனே, சின்ன பையன் 'சாகுல் காந்தி' அரசியலுக்கு அழைத்த போது கூட என் கண் அசைவுக்கு காத்திருந்தவனே... இதோ பிடி உனக்கான விருதை..

ஜமல ஹாசன்: தம்பியே என் தங்க கம்பியே... ஒவ்வரு மேடையிலும் என் புகழ் படுபவனே... எனக்கு கேமராவில் மட்டும் நடிக்க வராது என புரிந்து 'துசவதரத்தில்' என்னை போன்ற ஒரு டூப்பை நடிக்க வைத்தவனே, 'தன்னை போல் ஒருவனில்' என் குரலையும், என் வீட்டையும் பதினெட்டு திக்கும் பரப்பியவனே... இதோ பிடி உனக்கான விருதை

கிரிஷா: அழகிய கிரிஷவே உன் அழகை கண்டேனம்மா "லூசா லூசா "- வில் இருந்தே. 'சுருவி'-யில் நீ ஆடிய ஆட்டதுக்க்காகவே பாதி கோடம்பாக்கத்தை உனக்கு எழுதி வைக்க எண்ணி இருந்தேன். இடையில் ஈழ தமிழர் சோகம் என்னை கவ்வியத்தால் ஒத்தி வைத்தேன். 'வலைமாமணி' கிரிஷவே இதோ உனக்கான விருது.

சுடிவேலு

மதுரை காந்துடன் ஒன் டூ ஒன் ஆடியவனே. ஐயா ஐயா என விளித்து, ஆயிரம் தடவை காலில் விழுந்த உன் அலப்பறை தாங்காமல் தருகிறேன் உனக்கும் ஒரு விருது.

பைரமுத்து: இனிய பைரமுத்துவே ...மாதத்திற்கு ஒருமுறையாவது மேடையில் 'ஐஸ்' மழையை பொழிந்து என்னை ஜலதோஷம் கொள்ள செய்பவனே... அடுத்து நீ எழுத போகும் கோபாலபுரத்து காவியத்திற்காகவே இப்போதே தருகிறேன் ஓர் விருது.

சிறந்த வரைநடை ஆசிரியர்: ................................................(வெக்கம், மானம், சூடு, சொரணை உள்ள தமிழனாக எம்மை கருதுவதால் இதோடு நிறுத்தி கொள்கிறோம்.)

பின் குறிப்பு: இந்த பதிவு யாரையும் புண் படுத்த அல்ல. எங்கையாவது புண் ஆகி இருந்தால் சொந்த செலவில் மருந்து வாங்கி போட்டு கொள்ளவும்.

Friday, August 7, 2009

தோழர் முரளி ( 25.05.1954 - 6.08.2009)


மலையாள திரை உலகின் இன்னொரு குறிஞ்சிப் பூவும் உதிர்ந்திருக்கிறது. குணசித்திர வேடங்களில் தனித்துவமான கதாப்பாத்திரங்களில் வாழ்ந்து மறைந்திருக்கிறது ஒரு துருவ நட்சத்திரம். அவர் தோழர் முரளி.

1954- ம் ஆண்டு கேரள மாநிலம் கொல்லத்தில் பிறந்து, மாணவப் பருவத்தில் எஸ்.எஃப்.ஐ -ன் உறுப்பினராக தீவிரமாய் பங்கேற்று, சட்டம் பயின்று, கேரள அரசு ஊழியராகி, "சிதம்பரம்" என்ற சினிமாவில் அறிமுகமாகி, "நெய்த்துகாரன்" திரைப் படத்திற்காக இந்திய அரசின் சிறந்த நடிகருக்கான விருதை பெற்று மலையாளம், தமிழ் என சுமார் 300 திரைப்படங்களில் நடித்து மார்க்ஸிஸ்ட் கட்சியின் பெரும் ஆதரவாளராய் இருந்து பெருமை மிகு கேரள சங்கீத நாடக அகாடமியின் தலைவராகவும் இருந்து ஒய்ந்திருக்கிறான் இந்த கலைஞன்..

எந்த வேடமானாலும் தன் உடல் அசைவுகளாலும், முகப் பாவங்களாலும் சாதாரண சினிமா பார்வையாளனையும் கட்டி போட்டவர் முரளி. கதையின் நாயகனாக அவர் நடித்த "ஆகாச தூது" திரைப்படம் மலையாள திரை உலகின் முக்கியமான திரைப்படம். "நெய்த்துகாரன்" அவருடைய கலைப் பயணத்தில் ஒரு மைல்கல்.

தமிழ் திரை உலகில் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் வெற்றி மாறன் (பொல்லாதவன்), சரண்(ஜெமினி) போன்றோர் மட்டுமே இவரை சிறப்பாய் பயன் படுத்தினர்.

ஏராளமான மாநில அரசு விருதுகளையும், மத்திய அரசு விருதினையும் பெற்ற முரளியின் மரணம் மலையாள கலை உலகிற்க்கும், மார்க்ஸிஸ்ட் காட்சிக்கும் பெரும் இழப்பே.

பூதவுடல் மறைந்தாலும் புகழுடல் மறையாத கலைஞனுக்கு கண்ணீர் அஞ்சலி.